அலுவலகம் முடிந்து மாலையில் வீட்டிற்கு வரும் போது ஒவ்வொரு நாளும் புதுப்புது வழித்தடங்களை தேர்ந்தெடுத்துக் கொள்வது வழக்கமாகியிருக்கிறது. ஆனால் காலை நேரத்தில் அப்படியில்லை. நினைத்த பாதையில் எல்லாம் போக முடியாது. அதற்கு நேரமும் இருக்காது. எப்பொழுதும் ஒரே தடம்தான்- குறைவான நேரம் பிடிக்கும் தடம்.
காலை நேரத்தில் அடித்துபிடித்து போக வேண்டியிருக்கும் என்பதால் வேலையைத் தவிர பிறவற்றை யோசிப்பதற்கு வாய்ப்பிருக்காது. மீறி யோசித்தால் முன்னால் போகும் கார் மீது இடித்துவிடக் கூடாது என்பதும் சைடில் இருக்கும் குழிக்குள் வண்டியை இறக்கி விடக்கூடாது என்பதும்தான் அநேகமான நினைப்பாக இருக்கும். ஆனால் இந்த மாதிரி நேரத்தில்தான் ஜீன்ஸ் மங்கைகளும், டீ சர்ட் தேவதைகளுக்கும் ஒரு அசைப்பு காட்டி பழி வாங்குவார்கள். நாமும் புத்தன்தான் என்று நமக்கு நாமே நிரூபித்துக் கொள்ள படாத பாடுபட்டு அவஸ்தைக்குள்ளாகி..ஸ்ஸ்ப்பா! விடுங்கள்.
அத்தனை சிரமங்களையும அலேக்காகத் தாண்டி அலுவலகம் சென்றால் அது எப்பொழுதுமே கரும்பு அரவை இயந்திரமாக வாயைத் திறந்து கொண்டு நிற்கிறது. உள்ளே நுழைந்தும் நுழையாததுமாக‘வாடா ராசா’ என்று அள்ளி யெடுத்து தனக்குள் போட்டுக் கொண்டு அந்த நாள் முழுவதும் அரைத்து நெகிழ்த்திக் கொண்டிருக்கும். ஒரு கட்டத்திற்கு பிறகு ‘இனிமேல் எடுப்பதற்கு சாறு இல்லை’ என்றானவுடன் மாலை நேரத்தில் வெளியே துப்பும். அதை மாலை என்று சொல்ல முடியாது- இரவு. இப்பொழுதெல்லாம் எட்டரை மணிக்கு முன்பாக அலுவலகம் முடிவதேயில்லை. மாலை நேரத்து சூரியனை வார நாட்களில் பார்த்து வருடக் கணக்கில் ஆகிறது. இதையெல்லாம் புலம்புவதற்காக இந்த பத்தியை எழுதவில்லை. காசு கொடுக்கிறார்கள் என்பதற்காக மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டு இப்படி புலம்புவது ‘self sympathy'க்கு மட்டும்தான் பயன்படும். காசுக்கு ஏத்த பணியாரம்; சிரமத்திற்கு ஏத்த சம்பளம்.
காலையில்தான் இப்படியெல்லாம். மாலை நேரத்தில் அப்படியில்லை. அந்தப் பயணம் எனக்கே எனக்கானது. ஒவ்வொரு நாளும் மாலையில் வீட்டிற்கு போகும் போது தாறுமாறாக யோசனைகள் ஓடிக் கொண்டிருக்கும். அதற்கு தீனி போடும் விதமாக வண்டியும் வெவ்வேறு பாதைகளில் ஓடத் துவங்கும். ‘அலுவலக்த்திற்கு பின்னாடியே வீடு இருக்கு’ என்று யாராவது பெருமையாகச் சொன்னால் எனக்கு சிரிப்பு வந்துவிடும் - வீடு விட்டால் அலுவலகம், அலுவலகம் விட்டால் வீடு என்றிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது? குண்டுச்சட்டி குதிரைகள்.
என் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையில் இருபது கிலோமீட்டர் தூரம் என்பதை அவ்வளவு அனுபவிக்கிறேன். ஊர் ஊராகச் சுற்றும் கோணங்கியும், ஒரு காலத்தில் அப்படிச் சுற்றிக் கொண்டிருந்த எஸ்.ராமகிருஷ்ணனும், ஜெயமோகனும் அத்தனை கொடுத்து வைத்தவர்கள். முப்பது வயதிலும் முப்பத்தி ஐந்து வயதிலும் பக்கம் பக்கமாக எழுதுவது சிரமமே இல்லை. ஏதோவொரு வகையில் நாம் நிரப்பட்டிருக்கிறோம். நிரம்பியிருப்பதை வெளியில் கொட்டினால் போதும். ஆனால் நாற்பதுகளில் அப்படியில்லை. அனுபவமும், வாழ்க்கையும் அதற்கான பசுந்தன்மையை இழந்திருக்கும். அதனால் நாற்பத்தைந்து வயதிலும் ஐம்பத்தைந்து வயதிலும் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுவதுதான் சிரமம். அந்த விதத்தில் ஜெயமோகனும், எஸ்.ராவும், சாருவும் எப்பவுமே என் மதிப்பிற்குரியவர்கள். அவர்களது வயதில்- அவர்கள் எழுதிக் கொண்டிருக்கும் அளவில் பத்தில் ஒரு பங்கு எழுதுவதற்கான மனநிலை வாய்க்குமானாலும் கூட அவன் நிச்சயம் அதிர்ஷ்டசாலியாகத்தான் இருக்க முடியும்.
ஊர் சுற்றாத மனிதர்களால் ஐம்பதுகளில் எழுதித் தள்ளுவதற்கு சாத்தியமே இல்லை என நம்புகிறேன். குடும்பச் சூழல், பணிச்சுமை என்று ஆயிரத்தெட்டு காரணங்களைச் சொல்லி எனது பயணங்களை குறைத்துக் கொள்கிறேன் என்பதால் குறைந்தபட்சம் பெங்களூரையாவது சுற்றலாம் என்பதற்குத்தான் இப்படி ஒவ்வொரு நாளும் வேறு வேறு தடங்களை விரும்புகிறேன் என நினைக்கிறேன். தெருவில் சுற்றும் நாய்க்கு பல வீட்டு ருசி பழகியிருக்கும் என்பதால் அதற்கு ஒரு வீட்டுச் சோறு சில நாட்களில் போரடித்துவிடுமாம். அதே போல இப்பொழுதெல்லாம் மூன்று நாட்களுக்கு மேலாக ஒரே தடத்தில் சென்றால் எனக்கு போரடிக்கத் துவங்கி விடுகிறது. இப்படி மாறி மாறி தேர்ந்தெடுக்கும் தடங்களில் குறைந்தபட்ச தூரம் என்பது ஐம்பது நிமிட பயணம். அதிகபட்சமாக இரண்டு மணி நேரம் கூட ஆகிறது.
என்னதான் புதிய பாதையாக இருந்தாலும் மெயின்ரோட்டில் பயணிப்பதில் பெரிய சுவாரசியம் இல்லை. ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ட்ராபிக்கில் சிக்க வேண்டும்; அருகில் நிற்கும் பைக்களும் கார்களும்தான் அதிகபட்ச எண்டெர்டெயின்மெண்ட் ஆக இருக்கும். விதவிதமான மனிதர்களின் முகத்தை பார்ப்பதில் சுவாரசியம் இருக்கிறதுதான். ஆனால் பெங்களூர் போன்ற நகரங்களில் அதற்கு சாத்தியம் இல்லை. பைக் மனிதர்கள் யாவருமே முகமூடி மனிதர்கள்தான். ஹெல்மெட் அல்லது துப்பட்டாவினால் - பாலினத்திற்கு ஏற்ப மறைத்துக் கொள்கிறார்கள்.
பைக், கார்களைத் தவிர்த்தால் சிக்னலில் நிற்கும் போது பெரிய ப்ளக்ஸ் பேனர் விளம்பரங்களில் இருப்பவர்கள் சில மைக்ரோ செகண்ட்களுக்கு நம்மை உற்சாகமூட்டக் கூடும். நேற்றைய பாதையில் பிரியங்கா சோப்ரா வெற்று முதுகில் ‘கூல் பிக்ஸ்’ என்ற கேமராவை சுமந்து சூடேற்றினார். கேமரா இத்தினியூண்டுதான் இருக்கிறது. அதற்கு எதற்கு இடுப்பை 45 டிகிரிக்கு வளைத்து இத்தனை காஸ்ட்லி முதுகை காட்டுகிறார் என்று தெரியவில்லை. அவர் இடுப்பு; அவர் முதுகு. நமக்கேன் வம்பு?
மெயின் ரோட்டைத் தவிர்த்து சிறு சாலைகளிலும், வீடுகள் இருக்கும் வீதிகளிலும், மாடுகள் சுற்றும் பாதைகளிலும் வண்டியை வளைத்து நெளிப்பதில் ஒரு த்ரில் இருக்கிறது. குறுக்கே வரும் குழந்தையைத் திட்டாமலும், நைட்டி அணிந்த பெண்மணிகளை விலகியும், பூங்கிழம் ஒன்றை தாண்டியும் வீடு வந்து சேர்வது வாழ்க்கையை துள்ளலாக வைத்துக் கொள்கிறது. வெளவால்கள் கூட்டமாக பறப்பதை கவனிப்பதிலும், நகரத்தின் மொத்த வெளிச்சமும் ஏரி நீரில் விழுவதை பார்ப்பதையும், தூரத்தில் செல்லும் வாகனங்களை Mute செய்து பார்ப்பதிலும் நகர வாழ்வின் அத்தனை சுவாரசியங்களும் இருப்பதாக நம்புகிறேன்.
இன்றைக்கு அரலூர் வழியாக வீட்டிற்கு வந்தேன். அது ஹரலூர். அந்த ஏரியாவில் ஒரு மிலிட்டரி காம்பவுண்ட் இருக்கிறது. ஏகப்பட்ட மரங்கள். அந்தச் சாலையின் இன்னொரு பக்கத்தில் அபார்ட்மெண்ட் கட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும் மிலிட்டரி காம்பவுண்டில் இருக்கும் மரங்களின் காரணமாக இருள் ஒரு இன்ச் அதிகமாக இருக்கும். குளிரும் ஒரு துளி தூக்கலாகத்தான் இருக்கும். யாருமே இல்லாத அந்த சாலையில் ஒன்பது மணிக்கு வந்து கொண்டிருந்த போது என்னையும் அறியாமல் பாடிக் கொண்டிருந்தேன். முப்பதைத் தாண்டாத பைக்கின் வேகத்தைக் குறைக்க பிரேக்கை மிக வேகமாக அழுத்த வேண்டியிருந்தது. ஒரு மைனாக்குஞ்சு கீழே விழுந்திருந்தது. அது மைனாதான் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அரைகுறை வெளிச்சத்தில் அப்படித்தான் தெரிந்தது. அருகிலேயே தாய்ப்பறவையும். கூட்டிலிருந்து கீழே விழுந்திருக்கக் கூடும். ஆனால் கூட்டை கண்டுபிடிப்பது அத்தனை சுலபமில்லை. சாலையில் கிடந்தால் ஏதாவது வண்டிக்காரன் தேய்த்துவிடக் கூடும் என்பதால் எடுத்து காம்பவுண்ட் சுவருக்கு அந்தப் பக்கம் விட்டுவிடலாம் என்று தோன்றியது. வண்டியை நிறுத்திவிட்டு அருகில் சென்ற போது தாய்ப்பறவை சற்று விலகி அமர்ந்தது. அது ஒருவிதமான ஒலியெழுப்பியது. “விட்டுவிடுடா..ப்ளீஸ்” என்றிருக்கலாம் அல்லது “நாசமா போய்டுவ” என்றிருக்கலாம். குஞ்சுப்பறவை தத்தி நகர்ந்தது. மிக அருகில் சென்றுவிட்டேன். குஞ்சுப்பறவையை தொடுவதற்கு ஒரு கணம் தான் இருக்கும். ‘வ்ர்ர்ர்ர்ர்ர்ர்’.அவ்வளவுதான். பறந்துவிட்டது. அடுத்த வினாடியே கூச்சலிட்டபடி தாய்ப்பறவையும் பறந்துவிட்டது. சில வினாடிகள் திகைப்பு அப்படியே இருந்தது.
எதற்காக அந்தப்பறவைகள் அந்த நேரத்தில் அங்கிருந்தன? நான் அருகே செல்லும் வரைக்கும் எதற்காக காத்திருந்தன? அதைத் தொடும் கணத்தில் ஏன் பறந்து போயின? ஒருவேளை இப்பொழுதுதான் முதன் முதலாக பறக்கிறதா?
என்னிடம் ஏகப்பட்ட கேள்விகள் இருக்கின்றன. ஆனால் இதைவிடவும் ரசனையான கணம் வேறொன்று இருக்க முடியுமா என்ன?