May 10, 2013

அவர்களை ஏன் சாவடிக்கிறீங்க?


பதினேழு அல்லது பதினெட்டு வயதில் இத்தனை பதற்றம் தேவையில்லை. ஆனால் நாம் சொல்லி யார் கேட்கப் போகிறார்கள்? நேற்று அந்தக் கொடுமையை நேரில் பார்க்க வேண்டியிருந்தது. நேற்றுதானே +2 ரிசல்ட் வந்திருந்தது?

மாணவர்கள்தான் மதிப்பெண்களின் பிரிண்ட் அவுட்டை கையில் வைத்துக் கொண்டு கொத்து புரோட்டா போடுகிறார்கள் என்றால் அவர்களை பெற்றவர்களின் ரவுசு அதைவிடவும் அதிகம். தங்களது செல்போனில் இருக்கும் நெம்பரையெல்லாம் அழைத்து ‘இந்தக் கட்-ஆஃப்புக்கு அந்தக் காலேஜ் கிடைக்குமா?’  ‘கம்ப்யூட்டர் சயின்ஸா? சிவில் இஞ்சினியரிங்கா?’ என்று அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கிறார்கள். எதிர்முனையில் பேசிக் கொண்டிருப்பவரின் மகனோ மகளோ சென்ற வருடங்களில் பொறியியல் சேர்ந்திருக்கக் கூடும். ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பது போல ஓரிருவரை இஞ்ஜினியரிங் சேர்த்தவர்கள் இப்பொழுது கவுன்சிலிங் கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ‘ஆட்டோமொபைலுக்குத்தான் செம ஃப்யூச்சர்’ ‘ட்ரிப்பிள் ஈயா? அதெல்லாம் வேண்டாம்’ என்று முழம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி அளப்பவர்களில் முக்கால்வாசிப்பேர் கவுண்டமணியாரின் பாணியில் புண்ணாக்கு விற்பவனும், பருத்திக்கொட்டை விற்பவனும்தான். இந்த மாதிரி ஆட்களை நேரில் பார்த்தால் முதல் வேலையாக கீழே போட்டு கொரவலியைக் கடிக்க வேண்டும்.

பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு ரிசல்ட் வந்ததும் நாம் ஒவ்வொருவருமே ஏதாவதொரு விதத்தில் அக்கிரமம் செய்கிறோம் என நினைக்கிறேன். மாணவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ‘ப்ரஷர்’ ஏற்றிவிடுகிறோம். 

ஒவொருவருடமும் குறைந்தபட்சம் மூன்று லட்சம் பேர் சிவில் சர்வீஸ் தேர்வின் ஆரம்பகட்ட தேர்வை (prelims) எழுதுகிறார்கள். அவர்களில் எத்தனை பேருக்கு நாம் அட்வைஸ் செய்கிறோம்? ஆனால் அதே சமயம் +2 மாணவன் ஒவ்வொருவனுக்கும் குறைந்தபட்சம் ஐம்பது பேராவது அட்வைஸ் செய்து சாவடித்துவிடுகிறார்கள். இதையெல்லாம் வினாவாக்கினா சிம்பிளாகச் சொல்லிவிடுவார்கள். ‘சிவில் சர்வீஸ் மாணவர்களுக்கு அட்வைஸ் செய்ய நமக்கு தகுதி இல்லை’என்று. நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள். +2 மாணவர்களுக்கு அறிவுரை சொல்வதற்கு நம்மில் எத்தனை பேருக்கு தகுதி இருக்கிறது?

தடியெடுத்தவன் எல்லாம் தண்டக்காரன் என்ற கணக்காக ஆளாளுக்கு கிளம்பியிருப்பதனால்தான் 1100க்கு மேலான மதிப்பெண்ணை வாங்கிய பெண்ணும் மூக்கைச் சிந்திக் கொண்டிருக்கிறாள். 850 வாங்கியவளும் கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கிறாள்.

இவர்கள் இப்படியென்றால் மீடியாக்காரர்களின் லோலாயம் த்ரீ மச். மாநிலம், மாவட்டம், மண்டலம், பள்ளி என்று எந்த அளவில் மதிப்பெண் வாங்கியிருந்தாலும் வீடு தேடிப் போய் வாய்க்குள் மைக்கை விட்டுவிடுகிறார்கள். ஃபுல் மேக்கப்பில் இருக்கும் அம்மாவோ அப்போவோ வாய் நிறைய பற்கள் தெரிய தங்களது பிள்ளைக்கு லட்டு ஊட்ட அதை படம் எடுத்து பக்கத்திற்கு பக்கம் நிரப்பி வைத்துவிடுகிறார்கள். குறைந்த மதிப்பெண் வாங்கியவர்களை இதைவிட இன்சல்ட் செய்ய முடியாது. நம்மை விட வேறு யாரும் மதிப்பெண்களை இந்த அளவுக்கு புனிதப்படுத்த முடியாது என நினைக்கிறேன். படையல் போட்டு, பூஜை நடத்துகிறோம்.

ரிசல்ட் வந்த அடுத்த நாளில் பத்திரிக்கைகளின் பக்கம் முழுவதும் ‘ஆத்தா ஈஸ்வரி ஹைடெக் பொறியியல் கல்லூரி’யை நடத்திக் கொண்டிருக்கும் முன்னாள் கசாப்புக்கடைக்காரர்களும் இந்நாள் கல்வித்தந்தைகளுமான மீசைக்கார ஆசாமிகள் தங்களது கல்லூரியின் ஆஃபர்களை பற்றி விலாவாரியாக பேட்டியாக கொடுக்கிறார்கள். இன்றைக்கு இஞ்ஜினியரிங் கல்லூரி நடத்துபவர்களில் பாதிக்குமேல் சிலை திருடியவனும், சங்கிலி பறித்தவனுமாக இருப்பது நம் தொழில்நுட்ப-அரசியல் புணர்ச்சியின்...ச்சீ...புரட்சியின் சாபக்கேடு. இந்த ஜிங்கிலிஸ்தான் செய்தித்தாள்களில் பக்கத்திற்கு பக்கம் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்.

தொலையட்டும் விடுங்கள். மார்க் கலாச்சாரம், அட்மிஷன் சில்லரைத் தனங்கள், ப்ராய்லர் கோழி வளர்ப்பு முறையை நகல் எடுத்து மாணவர்களை வளர்க்கும் நாமக்கல் பள்ளிகள் ஆகியனவற்றை கலாய்க்க இன்று சரியான நாள் இல்லை. அப்பன் சொல்வதை கேட்பதா? ஆத்தாவின் ப்ரெண்ட் சொல்வதைக் கேட்பதா? அந்தக் கல்லூரியா? இந்தக் கல்லூரியா? எந்தப் பாடம் என ‘மெர்சல்’ ஆகிக் கிடக்கும் மாணவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. 

மார்க், கட்-ஆஃப், கோர்ஸ் போன்ற சொற்கள் பூதங்களாக மாறி நிற்கும் காலகட்டத்தில் துரதிருஷ்டவசமாக ப்ளஸ் டூ எழுதித் தொலைத்துவிட்டார்கள்.  ‘ஆனது ஆகியாச்சு..இனி அடுத்தது என்ன’ என்று தெளிவாகச் சொல்வதற்கான ஆட்கள் இங்கே ரொம்பக் குறைவு. ‘எங்க பெரியக்காவோட மச்சான் பையன் ஒருத்தன் கட் ஆஃப் 197 வாங்கியிருக்கான்’ என்று சம்பந்தமில்லாத ஒருவனை அந்த வினாடிக்கான எதிரியாக்குவதில்தான் குறியாக இருப்பார்கள். ஓசியில் அட்வைஸ் செய்பவர்களுக்கும், அசால்ட்டாக ஐடியா கொடுப்பவர்களுக்கும் தெரிந்த பாடங்கள் நான்கைந்து மட்டுமே. ஆனால் அத்தினியூண்டு மேட்டரை வைத்துக் கொண்டிருந்தாலும் ‘இவன் சொல்வது ஒருவேளை சரியாக இருக்குமோ?’ என்று சந்தேகம் வரும்படியாக பேசி குழப்பிவிட்டுவிடுவார்கள். முடிந்தவரை அட்வைஸ் அரை மண்டையர்களிடம் மாட்டிக் கொள்ளாதபடி தங்களையும் தங்களது பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. 

இவர்களையெல்லாம் தாண்டி அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதை மாணவர்கள் பார்க்கட்டும். மதிப்பெண்கள் குறைந்ததாக நினைக்கும் பாடங்களின் விடைத்தாள் நகல்களை வாங்குவதற்கான முஸ்தீபுகளில் இறங்கிவிடுவது நல்லது. ஒரு தாளுக்கு ரூ.275 கட்டணம் என நினைக்கிறேன். நல்லதோ கெட்டதோ- அத்தனை தாள்களையும் வாங்கி வைத்துக் கொண்டால் பிற்காலத்தில் நமது நினைவுச்சின்னமாகிவிடும் வாய்ப்பிருக்கிறது. நகல்களை வாங்கிப்பார்த்தால் ஒரு மதிப்பெண் கூடுதலாக வரக்கூடும் என்ற சந்தேகம் வந்தால் கூட மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்துவிடலாம்.

மறுமதிப்பீடு, ரேங்க் பட்டியல் என்பதெல்லாம் இன்னொரு பக்கம் இருக்கட்டும்.

பெற்றவர்களும் கூட மேம்போக்கான அட்வைஸ்களுடன் மாணவர்களை அவர்களின் போக்கில் விட்டுவிடுவதுதான் அவர்கள் செய்யும் ஒரே உபகாரமாக இருக்கக் கூடும். மாணவர்களும் எடுத்தவுடனே ‘எனது கட்-ஆஃப்புக்கு எந்த காலேஜ்’ கிடைக்கும் என களமாட வேண்டியதில்லை. முதலில், என்னென்ன பாடங்கள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்கட்டும். அதற்காக அலையட்டும். எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு சொலவடை சொல்வார்கள். ‘அழுதழுது புள்ளை பெத்தாலும் அவதான பெத்தாகோணும்’ என்று. பன்னிரெண்டு வருடம் செக்கிழுக்க வைத்துவிட்டோம். இன்னும் ஒரு வாரம்தானே! கல்லூரியில் இருக்கும் ஒவ்வொரு பாடத்திலும் என்ன இருக்கிறது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும். எதைப் படித்தால் என்ன வேலை கிடைக்கும்? எந்தவிதமான தொழில் தொடங்கலாம் என்பதை அவர்களாகவே புரிந்து கொள்வது அவசியம். அதன் பிறகு அவர்களாக முடிவு செய்யட்டும். நான்கைந்து நாட்களுக்கு பிறகு மாணவர்களின் குழப்பம் அதிகமாகியிருப்பதாகத் தோன்றினாலோ அல்லது மிகவும் தவறான முடிவை எடுத்திருப்பதாகத் தோன்றினாலோ மட்டுமே ‘உண்மையிலேயே அனுபவம்’ உள்ளவர்களின் ஒத்தாசையைத் தேடலாம். அதுவரை மாணவர்களாகவே முடிவு செய்வதுதான் உசிதம். 

சத்தியம் கூட செய்ய முடியும்! நீங்களும் நானும்தான் சொதப்புவோம். சரியான புரிதலை உருவாக்கிவிட்டால் தொண்ணூற்றைந்து சதவீத மாணவர்கள் மிகத் தெளிவான முடிவை எடுத்துவிடுவார்கள்.