May 15, 2013

பையனுக்கு எதில் இண்ட்ரெஸ்ட்?


ஒரு போன். 

அது போதும் நம்மை கொஞ்ச நேரம் ஜெர்க் ஆக்குவதற்கு. அப்படி ஒரு போன் இன்று காலையில் வந்தது.

“பொண்ணு ஆயிரத்து நூறுக்கு மேல மார்க் வாங்கியிருக்கா...ஆனால் மெடிக்கல் வேண்டாம்; இஞ்ஜினியரிங் வேண்டாம்; பி.எஸ்.சி அக்ரி வேண்டாம்; டீச்சிங் வேண்டாம்; ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் வேண்டாம்ங்கிறா ...வேற என்ன படிக்கிறதுக்கு இருக்கு?”

இது உண்மையிலேயே டக்கரான கேள்வி. கிட்டத்தட்ட 99% சதவீத பாடப்பிரிவுகளை அந்தப் பெண் நிராகரித்துவிட்டாள். இனி மிச்சம் இருக்கும் பாடத்திட்டங்களைப் பற்றி யோசிக்க வேண்டும். வேறு என்ன பாடங்கள் இருக்கின்றன? இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை பார்க்கலாம். 

அதற்கு முன்...

இப்படி மெடிக்கல், பொறியியல் போன்ற முக்கியமான பாடத்திட்டங்களை நிராகரிப்பதை ‘என்கரேஜ்’ செய்வதாக புரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஒரே பாடத்தையே இலட்சக்கணக்கானவர்கள் படிப்பதும், வேறு வழியே இல்லை என்ற பட்சத்தில் மட்டுமே பிற பாடங்களை தேர்ந்தெடுப்பதும் நீண்டகால நோக்கில் பார்க்கும் போது சமூகத்தில் மிகப் பெரிய பின்விளைவை உருவாக்கியிருக்கும். 

இப்படி யோசிக்கலாம்- இன்றைக்கு பொறியியல், மருத்துவம் தவிர்த்து பிற துறைகளில் படிக்கும் மாணவர்களில் எத்தனை சதவீதத்தினர் ‘இந்த பாடத்தைதான் படிக்க வேண்டும்’ என்ற ஆர்வத்தில் சேர்ந்திருப்பார்கள்? ஐம்பது சதவீதம்? முப்பது சதவீதம்? இருபது? ம்ஹூம். குத்துமதிப்பாக கணித்தாலும் கூட பத்து சதவீதம் கூட தேறாது. இந்த நிலை இன்னும் இருபது வருடங்களுக்குத் தொடர்கிறது என வைத்துக் கொள்வோம். அப்பொழுது ‘வேறு வழியே இல்லாமல்’ ஆர்ட்ஸ் படித்தவர்கள்தான் ஆசிரியர்களாக பெஞ்ச்சை தேய்ப்பார்கள். ‘வேறு வழியே இல்லாமல்’ தமிழும், ஆங்கிலமும் படித்தவர்கள்தான் தமிழ், ஆங்கில பாடத்திட்டத்தை உருவாக்குவாக்குவார்கள். அறிவியலின் அடிப்படையான இயற்பியலை ஆர்வத்தோடு படித்தவர்கள் ஆராய்ச்சி கூடங்களுக்கு கிடைக்க மாட்டார்கள். ‘வேறு வழியே இல்லாமல்’ வேதியியல் படித்தவர்கள்தான் உரத் தொழிற்சாலைகளிலும், மருந்துத் தொழிற்சாலையிலும் பணியில் இருப்பார்கள். 

அது சரி. சமூகம், விளக்கெண்ணெய் என்று பார்த்து ஒன்றுக்கும் உருப்படியில்லாத கோர்ஸில் படித்து என் மகன்/மகளின் எதிர்காலத்தை வீணடிக்க வேண்டுமா? இப்படி யாராவது கேட்டால் அது அந்தப் பெண் கேட்டதை விட முக்கியமான கேள்வி.  ‘வித்தியாசமான பாடத்தை படிக்கிறேன் பேர்வழி’ என்று குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்வதை போல முடிவெடுக்க வேண்டியதில்லை. உதாரணமாக ரோபோடிக்ஸ் படிக்க பையன் விரும்புகிறான் என்று வைத்துக் கொள்வோம். அட! வித்தியாசமாக இருக்கிறதே என்று நாமும் சேர்த்துவிடுகிறோம். அதற்கு இந்தியாவில் வேலை வாய்ப்பு இருக்கிறதா என்றால் சத்தியமாக இல்லை. இந்தியாவில்தான் வேலை இல்லையே தவிர வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கும்.

அதே போலத்தான் பயோ டெக்னாலஜி பாடமும். கல்லூரிக்கு கல்லூரி பயோ-டெக்னாலஜி பாடங்களைத் துவங்கியிருக்கிறார்கள். உண்மையில் இத்தனை பேருக்கு வேலை கொடுக்குமளவுக்கு இந்தியாவில் பயோ-டெக்னாலஜி ஆய்வுகள் நடப்பதில்லை. ஆய்வகங்களும் இல்லை. ஆனால் வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கும்.

இப்படியான சில பாடத்திட்டங்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்னால், படித்து முடித்துவிட்டு இந்தியாவில் வேலை செய்யப் போகிறோமா அல்லது வெளிநாடு செல்ல விரும்புகிறோமா? வெளிநாடு செல்வதென்றால் மேற்படிப்பு படிப்பதற்கான குடும்பச் சூழல் இருக்கிறதா? வெளிநாட்டு கல்லூரிகளில் அட்மிஷன் பெறுமளவிற்கு உழைப்பும் திறமையும் நம்மிடம் இருக்கிறதா என்பதையெல்லாம் நமக்கு நாமே கேட்டுக் கொள்ளலாம். 

இருக்கும் பாடங்களை எல்லாம் list செய்வது, மேற்சொன்ன கேள்விகளும் கிட்டத்தட்ட என்ன பாடத்தை தேர்ந்தெடுப்பது என்ற தெளிவை கொடுத்துவிடும். ஒருவேளை தெளிவு கிடைக்காத பட்சத்தில், ‘தகுதியானவர்களின்’ ஆலோசனையை நாடலாம்.

‘மாணவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப பாடத்தை தேர்ந்தெடுக்கட்டும். பெற்றோர்கள் அவர்களை வதைக்க வேண்டாம்’ என்று நேற்று சொன்னதற்கு ஆளாளுக்கு சண்டைக்கு வருகிறார்கள். ‘ப்ராக்டிகலாக பார்த்தால் மாணவர்களுக்கு பாடத்தை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு தெளிவு இல்லை’ என்றார்கள். அவர்கள் சொல்வதை 100% ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இங்கு பல ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமுமே கூட தெளிவு இல்லைதான். பிறகு மாணவர்களிடம் எப்படி தெளிவை எதிர்பார்க்க முடியும்?

மாணவர்கள் பாடத்தை தேர்ந்தெடுக்கட்டும் என்றால் முழுமையாக அவர்களாவே முடிவு செய்யட்டும் என்பதில்லை. அவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான அத்தனை வழிவகைகளையும் உருவாக்கிக் கொடுப்போம் என்று அர்த்தம். கணிதமே பிடிக்காத மாணவனிடம் ‘நீ கணித ஆசிரியர்தான் ஆக வேண்டும்’ என்று அழுத்த வேண்டாம் என்று அர்த்தம். மற்றபடி, அவர்கள் மட்டுமே முடிவு செய்யட்டும்; நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம் என்று அர்த்தம் இல்லை.

மூன்றாம் வகுப்பிலிருந்து மைனாக்களின் பின்னால் சுற்றிக் கொண்டிருப்பவனிடம், பறவையியல் பற்றி படிப்பதற்கான பாடத்திட்டம் இருக்கிறது என்று அறிமுகம் கொடுக்கலாம். சைக்காலஜி பற்றி பேசும் பெண்ணிடம் கல்லூரிகளில் சைக்காலஜி தனிப் பாடமாகவே இருக்கிறது என்று தெரியப்படுத்தலாம். தொல்பொருள் பற்றிய விருப்பம் உடையவனுக்கு Institute of Archaeology என்ற கல்வி நிறுவனத்தை பற்றி தெரியச் செய்யலாம். இவை போன்ற பாடத்திட்டங்கள் யாவுமே வேலை வாய்ப்பை உடையன; படித்து முடித்த பிறகு என்ன செய்வது என்று புலம்ப வைக்காதவை. 

நம் மகனும், மகளும் பதினேழு அல்லது பதினெட்டு வருடங்களாக நம்மோடுதானே இருக்கிறார்கள்? அவர்களின் ஆர்வம் நமக்குத் தெரியாதா என்ன? என் மகனின் ஆர்வம் என்னவென்று தெரியாது என்று யாராவது சொன்னால் ‘அப்படின்னா...அவன் என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் யோக்கிதையும் உங்களுக்கு இல்லை’ என்று தைரியமாகச் சொல்லிவிடலாம்.