கமல்ஹாசனோடு இரண்டு படங்களில் நடித்தவர், விளையாட்டில் பிஸ்து, நடனங்களில் கில்லாடி- இப்படியான ஒரு மனிதரை எனக்குத் தெரியும். விருமாண்டி படம் பார்த்திருந்தால் உங்களுக்கும் அவரைத் தெரிந்திருக்கும்......
எட்டாவது படிக்கும் போது என்.சி.சியில் ஆள் எடுக்கப்போவதாக அறிவித்தார்கள். அப்பொழுது எட்டாம் வகுப்பைத்தான் என்.சி.சியில் சேர்வதற்கான அடிப்படையான வகுப்பாக வைத்திருந்தார்கள். ஆறாம் வகுப்பில் சேர்ந்தவுடனேயே என்.சி.சி பற்றிய எதிர்பார்ப்பு உருவாகிவிடும்.
என்.சி.சியில் சேர்ந்தால் போலீஸிலும் இராணுவத்திலும் எந்த ‘டெஸ்ட்டும்’ இல்லாமல் சேர்த்துக் கொள்வார்கள் என்று யாரோ கிளப்பிவிட்டிருந்தார்கள். துப்பாக்கி ஒன்று சொந்தமாகத் தருவார்கள் என்பதில் ஆரம்பித்து சனிக்கிழமை ப்ராக்டீஸ் முடிந்தவுடன் புரோட்டா தருவார்கள் என்பது வரை ஆயிரத்தெட்டு கனவுகளுக்கு தீனி போட்டிருந்தார்கள். அவை எல்லாவற்றையும் விட என்.சி.சி மாணவர்களுக்கு அவ்வப்போது வகுப்பிலிருந்து ‘கட்’ அடிக்க பர்மிஷன் கிடைக்கும்.
கிட்டத்தட்ட முக்கால்வாசி எட்டாம் வகுப்பு மாணவர்கள் என்.சி.சியில் சேர்ந்துவிடுவது என முடிவு செய்தார்கள். ஆனால் அது அத்தனை சுலபமில்லை. இந்த மாதிரி சமயங்களில் ‘திமுதிமு’வென வருபவர்களை வடிகட்ட என்.சி.சி வாத்தியார் வைத்திருந்த உத்தி சுலபமானது. ஆடுகளத்தை ஒரு ரவுண்ட் அடிக்க சொல்வார். முதலில் வரும் கொஞ்சம் பேரை மட்டும் அடுத்த சுற்றுக்கு அனுப்புவார்கள். எங்களுடைய க்ரவுண்டை ஒரு சுற்று வந்தால் நானூறு மீட்டர் கணக்காகி விடும். வாத்தியார் விதிமுறைகளைச் சொல்லி விசில் ஊதியவுடன் வெறித்தனமாக ஓட ஆரம்பிப்பார்கள். ஆனால் நூறு மீட்டரில், இருநூறு மீட்டரில், முந்நூறு மீட்டரில் என தெம்புக்கு ஏற்றபடி சாரை சாரையாக சொங்கிவிடுவார்கள்.
இதையெல்லாம் கமாலுதீன் முன்பே தெரிந்து வைத்திருந்தான். ஒரு வாரத்திற்கு பராக்டீஸ் செய்து கொண்டால் இது பெரிய பிரச்சினையே இல்லை என்றான். அவன் சொல்லியதும் வாஸ்தவமாகத் தெரிந்தது. அடுத்த நாளிலிருந்து காலை ஏழு மணிக்கு வந்துவிடுவது என்று முடிவு செய்து கொண்டோம். பையை வகுப்பிற்குள் வைத்தவுடன் ஆடுகளத்திற்கு ஓடிவிடுவோம்.
ஏழு மணிக்கு வந்தாலும் சரி அல்லது ஆறு மணிக்கு வந்தாலும் சரி ஒரு மாணவர் ஓடிக் கொண்டிருப்பார். அவர் பெயர் மீரான். மீரானின் ஓட்டம் சாதாரண ஓட்டமாகத் தெரியாது. வெறித்தனமான ஓட்டம். சட்டையை வாய்க்குள் திணித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருப்பார். ஓடும் போது வாய் வழியாக மூச்சு விடுவதை தவிர்ப்பதற்காக சட்டையைக் கடித்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார். மீரான் எங்களை விட சீனியர்- சூப்பர் சீனியர். மாநில அளவிலான விளையாட்டு வீரர். பயிற்சி எடுப்பதற்காக தினமும் வந்து கொண்டிருந்தார்.
பள்ளி, மாவட்ட அல்லது மண்டல அளவில் கூட மீரானுக்கு போட்டியே இருக்காது. அவர் கலந்து கொண்டால் போதும்- வகைதொகையில்லாமல் பரிசுகளை அள்ளியெடுத்து ‘சாம்பியன்’ஆக வருவார். அந்தக் காலத்தில் அவருக்கு முறையான பயிற்சியோ, பயிற்சியாளரோ கிடையாது. அவராக ஓடுவதுதான் பயிற்சி. வியர்வை சொட்ட ஓடிக் கொண்டேயிருப்பார். அவ்வளவுதான்.
நாங்கள் க்ரவுண்டுக்கு வந்ததற்கான காரணத்தை தெரிந்து கொண்டு ஓடுவதற்கான சில டிப்ஸ்களைச் சொல்லித் தந்தார் ஆனால் கமாலுதீனுக்கும் எனக்கும் ஒரு ரவுண்ட் அடிப்பது கூட பெரிய சிரமமாக இருந்தது. முடிந்தவரைக்கும் ஓடிவிட்டு ‘இன்னைக்கு இது போதும்’என்று ஓரமாக அமர்ந்து மீரானை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். இருபது, இருபத்தைந்து என்று அவரது சுற்றுகளின் எண்ணிக்கைத்தான் அதிகமாகிக் கொண்டிருக்கும். ஆனால் அதே வேகத்தில்தான் ஓடிக் கொண்டிருப்பார். இந்தச் சமயங்களில் மீரானிடம் நிறைய பழகுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என்.சி.சியில் சேர்வதற்கான உடற்தகுதிதான் கிடைக்கவில்லை.
அடுத்தடுத்த வருடங்களில் மீரான் நெருப்பு நடனம் ஆட பழகிக் கொண்டார். பள்ளி ஆண்டு விழாக்களில் மீரானின் ‘ஃபயர் டான்ஸ்’ உச்சகட்ட கொண்டாட்டமாக மாறத் துவங்கியது. இருபது நிமிடங்களுக்கு மேலாக பின்ணனியில் ‘பாப்’ பாடல் ஒலிக்க கூட்டத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் வித்தையை தெரிந்து வைத்திருந்தார். பள்ளிகளில் மட்டுமில்லாது சுற்றுவட்டாரங்களிலும் மீரானின் நடனம் பிரபலமானது. திருவிழாக்களில் நடனமாடுவதற்கு மீரானை அழைக்கத் துவங்கியிருந்தார்கள். மீரான் அதோடு திருப்தியடைந்துவிடவில்லை.
அடுத்து பாம்புகளுடன் நடனமாடத் துவங்கினார். ஃபேண்ட்டுக்குள்ளிருந்தும், அடர்ந்த தலைமுடிக்குள்ளிருந்தும் குட்டிப்பாம்புகளை வெளியெடுத்து கூட்டத்தினருக்கு திகில் ஊட்டினார். பாம்புக்கு முத்தமிடுவதும், பாம்பை விட்டு தன் நாக்கை தீண்டச் செய்வதுமாக அவரது அட்டகாசங்கள் அவரை இன்னமும் பிரபலமாக்கியிருந்தது. வெளியூர்களுக்கு பயணம் செய்யத் துவங்கினார். ஒவ்வொரு கூட்டத்திலும் பாம்பு நடனமும் நெருப்பு நடனமுமாக கலக்கிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவரது விளையாட்டும், கல்வியும் என்ன ஆனது என்று தெரியவில்லை.
சில வருடங்களாக மீரானின் பெயரைக் கேள்விப்படவில்லை. கிட்டத்தட்ட மறந்திருந்தேன்.
ஆனால் விருமாண்டி படம் வந்த போது திடீரென மீண்டும் மீரான் வெளிச்சத்துக்கு வந்தார். கமலஹாசனோடு சுற்றும் நான்கைந்து வாலிபர்களில் மீரானும் இடம் பிடித்தார். எங்கள் ஊர் தியேட்டரில் கமலுக்கு இணையாக மீரானுக்கும் பேனர் கட்டினார்கள். ஒரு அதிர்ஷ்டத்தில் வாய்ப்பு வாங்கிவிட்டான் என்றவர்களுக்கு ‘ஜெர்க்’ கொடுக்கும் விதமாக வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்ஸிலும் கமலின் அல்லக்கை கோஷ்டியில் இடம்பிடித்திருந்தார். இரண்டு படங்களிலுமே மீரானின் திறமைக்கு எந்தவிதமான இடம் இல்லையென்றாலும் படம் நெடுக இடம் பிடித்திருந்தார். இனி அவரால் தமிழ் சினிமாவில் இடம் பிடித்துவிட முடியும் என்று தோன்றியது.
ஆனால் நாம் எதிர்பார்ப்பது எல்லாம் நடந்துவிடுவதில்லை அல்லவா? அதன் பிறகு மீரானை எந்த சினிமாவிலும் பார்க்க முடியவில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்பாக மீரானை ஈரோட்டிலிருந்து கோபி வரும் பேருந்தில் பார்த்த போது வழக்கமான விசாரிப்புகளுக்கு பிறகு “சினிமா என்னாச்சுன்னா?”என்றேன்.
“அதெல்லாம் சரிப்பட்டு வரவில்லை” என்றார். ஆள் இன்னமும் வாட்டசாட்டமாக அதே மாதிரிதான் இருந்தார்.
‘இப்போ என்ன செய்யறீங்க’ என்று கேட்கத் தோன்றியது. ஆனால் அது அவரை சங்கடப்படுத்திவிடக் கூடும் என்று அமைதியாகிவிட்டேன். அவர் என்னைப் பற்றி மிகுந்த ஆர்வமாக விசாரித்தார். சொன்னவுடன் சந்தோஷப்பட்டுக் கொண்டார். ஊருக்கு வரும் போதெல்லாம் பேசச் சொல்லி போன் நெம்பரைக் கொடுத்திருந்தார். ஆனால் அவரிடம் ஒரு முறை கூட பேசவில்லை.
சென்ற முறை ஊருக்கு போயிருந்த போது யதேச்சையாக மீரானை பார்த்தேன். நான் தான் அவரைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்க்கவில்லை. மளிகைக்கடையில் இருந்தார். அவரது அப்பாவின் மளிகைக் கடை அது. கடையில் தனியாகத்தான் அமர்ந்திருந்தார். ஆனால் பக்கத்தில் போக வேண்டும் என்று தோன்றவில்லை.
விளையாட்டு வீரராக, நெருப்பு நடனமாடுபவராக, பாம்போடு கலக்குபவராக, சினிமா நடிகனாக என எப்படி பார்த்த போதும் ஒவ்வொரு காலகட்டத்தில் மீரான் எனக்கு ஹீரோவாகவே தெரிந்திருக்கிறார். அவரது உழைப்பு எப்பவுமே ஆச்சரியமடையச் செய்திகிறது. இப்பொழுது அதிர்ஷ்டம், திறமை, உழைப்பு எந்த வார்த்தையைச் சுண்டிவிட்டாலும் பயனில்லை. அவர் சாமானியனாக பொட்டலம் கட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு ஹீரோவை சாமானியனாக பார்க்க விரும்பாத எளிய மனநிலைதான் நம்முடையது. ஆனால் பெரும்பாலான சமயங்களில் யதார்த்தத்தை வெல்ல முடிவதில்லை. பாலா படம் பார்த்துவிட்டு வருவது போல கசப்போடு ஏற்றுக் கொள்கிறோம்.
வீட்டிற்கு திரும்பிய போது எங்கள் பள்ளி கிரவுண்டைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். என்னையுமறியாமல் கண்கள் அதை நோட்டமிட்டது. அப்பொழுதும் யாரோ சிலர் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
உழைப்பாளர் தின வாழ்த்துகள்!