'உன்னையோட ஒரு புராணமா போச்சுடா' என்பதே அம்மா தன் வாழ்நாளில் அதிகபட்சமாக உபயோகப்படுத்திய வசனம் ஆகிவிடும் போலிருக்கிறது. காரணங்களை பட்டியலிடச் சொன்னால் அது வெகு நீளமாக இருக்கக் கூடும். குத்துமதிப்பாகச் சொன்னால் கூட ‘கோபப்படுகிறான், மற்றவர்கள் மீது ‘வள், வள்’ என விழுகிறான், எங்கோ இருக்கும் எரிச்சலை எல்லாம் வீட்டில் கொண்டு வந்து கொட்டுகிறான்’ etc.,etc.என்று தொடரக் கூடும்.
‘நாய்க்கு வாழ்க்கைப்பட்டால் குரைத்துத்தானே ஆக வேண்டும்’ என்பது போல என்னைப் பெற்றால் அனுபவித்துத்தானே ஆக வேண்டும் என்று அசால்ட்டாக விட முடிவதில்லை. வீட்டில் இருப்பவர்களைப் பார்ப்பதற்கு பாவமாக இருக்கிறது. ஒரு ஆராய்ச்சிக்கு பிறகு கோபத்திற்கான முக்கியமான காரணத்தை கண்டுபிடித்திருக்கிறேன். பசியோடு வீட்டிற்கு போனால் ஏதாவது ஒரு சில்லி காரணத்திற்காக கோபம் வந்துவிடுகிறது. அதே மாலையில் ரோட்டுக்கடையில் பஜ்ஜி, போண்டா என்று வயிற்றை நிரப்பிவிட்டு போனால் அன்றைய தினம் பெரும்பாலும் ஸ்மூத்தாகவே முடிகிறது. ஒரு பெரிய பிரச்சினை சின்ன முட்டை போண்டாவுக்குள் முடிந்துவிடுகிறது என ஆராய்ச்சியை முடிப்பதற்கு குதூகலமாக இருக்கிறது.
ஓகே. சுயபுராணம் படிப்பதற்காக இதை எழுத ஆரம்பிக்கவில்லை. இது வேறொரு புராணம்- பெரிய புராணம்.
திடீரென்று பெரியபுராணத்தின் மீது நினைப்பு வரக் காரணம் சமீபத்தில் வாசித்த ‘கீ பார்ட்டி’ பற்றிய செய்தி. கீ பார்ட்டி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே? அது இன்னொரு புராணம். கணவர்களும் மனைவிகளுமாக பார்ட்டியில் கலந்து கொண்டு கும்மாளம் அடிப்பார்கள். பார்ட்டியின் இறுதியில் ஆண்கள் தங்கள் கார் செயின்களை போட்டு குலுக்குவார்கள். குலுக்கப்பட்ட கீசெயின்களிலிருந்து ஒவ்வொரு பெண்ணும் தலா ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தான் தேர்ந்தெடுத்த செயினுக்குரியவனுடன் அன்றைய தினத்தை அந்தப் பெண் கழிப்பார்.
கல்லூரி காலத்திலேயே இதை கேள்விப்பட்டதுண்டு. இப்பொழுதுதான் செய்தித்தாளில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்தவனுடன் தன் மனைவியை அனுப்பி வைக்கும் இப்படியான விவகாரங்கள் நமக்கு ஒன்றும் புதிதானதில்லை. நமது ஆட்கள் பன்னெடுங்காலத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டார்கள். தேடிப்பிடித்தால் பெரிய புராணத்தில் இருக்கிறது.
இயற்பகையார் என்றொரு நாயன்மார். அறுபத்து மூன்று பேர்களில் இவரும் ஒருவர். சிவனடியார் ஒருவர் தனது மனைவியைக் கேட்டார் என்று ‘தாராளமாக எடுத்துக்கோ’ என்று அனுப்பி வைத்திருக்கிறார். இந்தக் கூத்தை வேடிக்கை பார்த்த சொந்தக்காரர் ஒருவர் ‘அடப்பாவி, இதெல்லாம் அடுக்குமா?’ என்று கேட்க, ‘நீ யாருடா அதைக் கேட்க?’ என்று அவரையும் ஒரே அடியாக அடித்துக் கொன்றுவிட்டார். இப்படி இயற்கைக்கு மாறாக ‘பிம்ப்’ வேலையும், கொலையும் செய்ததால் அவருக்கு ‘இயற்பகையார்’ என்று பெயரிட்டு நாயன்மாரும் ஆக்கிவிட்டார்கள். தனக்கு மனைவியாகிவிட்டாள் என்பதற்காகவே எவனுக்கு வேண்டுமானாலும் அனுப்பி வைக்கும் உரிமை இருக்கிறது என்பது எத்தனை பெரிய ஆணாதிக்கம்?
இந்தக் காலத்தில் சிவன் கோவில்களில் சிலைகளாக மாறிவிட்ட நாயன்மார்களின் கதைகளை வாசித்தால் ‘பகீர்’கதைகள் இருக்கின்றன. சிவனடியார் கேட்டார் என்பதற்காக தனது குழந்தையை அறுத்து சமையல் செய்தது, லிங்கத்தில் ரத்தம் வழிகிறது என கண்களை தோண்டி வைத்தது, எலும்பு தேய சந்தனம் தேய்த்தது, சாமிக்கு போட்ட பூவை முகர்ந்து பார்த்ததால் தனது மனைவியின் மூக்கை அறிந்தது என சேக்கிழார் எழுதி வைத்திருக்கும் நாயன்மார்களின் புராணத்தின் கதைகளை சென்சார் செய்தால் ஏகப்பட்ட கதைகள் ‘A' சர்டிபிகேட் வாங்கும். அத்தனை வன்முறை.
இந்தக் கதைகள் எல்லாம் நடப்பதற்கு சாத்தியமானவைதான். சிவனடியார் வேஷம் போட்டு வந்தவன் மனைவியைக் கேட்க அந்த நாயன்மார் ‘எடுத்துக்கோ’ என்று சொல்லியிருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதோடு கதையை முடித்தால் ‘தெய்வாம்சம்’ இல்லாமல் போய்விடக் கூடும் என்பதற்காக பைனல் டச்சாக ‘சிவனடியார் வேடத்தில் வந்தது வேறு யாருமில்லை; சிவனேதான்’ என்று ஒவ்வொரு கதையிலும் எழுதி வைத்துவிட்டார்கள்.
இதெல்லாம் கூட பரவாயில்லை. ஏனாதிநாதர் என்றொருவர் இருந்திருக்கிறார். அவரது எதிரி அதிசூரன். திருநீறு அணிந்து வந்தான் என்பதற்காகவே “என்னை கொன்று கொள்” என தனது எதிரிக்கு அனுமதி அளித்தாராம். அதே போலத்தான் மெய்ப்பொருள் நாயனாரை சிவனடியார் வேடம் போட்டு வந்தவன் கொன்றிருக்கிறான். திருநீறு அணிந்தவன் என்பதற்காக நம்புவதாக இருந்தால் இந்தக் காலத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்பவனும், கந்துவட்டிக்காரனும்தான் மங்களகரமாக இருக்கிறார்கள்.
மற்ற பிரிவுகளை மட்டம் தட்டுவதற்காக சைவத்தினருக்கு ஹீரோயிஸக் கதைகள் தேவைப்பட்டிருக்கின்றன. அதை நாயன்மார்களின் கதைகளாகவும், திருத்தொண்டர்களின் புராணமாகவும், சிவனடியார்களின் அதி அற்புதங்களாகவும் எழுதி வைத்திருக்கிறார்கள். நம்மவர்களும் காலங்காலமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அந்தக்காலத்தின் வாழ்முறைகளையும், சமூக நிலவரங்களையும் புரிந்துகொள்ள இந்தக் கதைகளையெல்லாம் விட்டால் நமக்கு வேறு நாதி கிடையாது. எப்படியோ போகட்டும்.
சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்தால் என் பிழைப்பு நாறிவிடும்.
தென்னாடு உடைய சிவனே போற்றி! எல்லோருக்கும் இறைவா போற்றி!!