Mar 26, 2013

மதுபாபுவின் வாழ்வில் சிம்புவும் நயனும் கொட்டிய கும்மி


மதுபாபுவுக்கு மார்ச் 12 ஆம் தேதி பெரிய கண்டம் இருந்தது என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அது ஒரு அஜால்குஜால் படம் மூலமாக வந்து சேர்ந்தது. படம் என்றால் சலனப்படம் இல்லை. நிழற்படம்தான்.

2006 அல்லது 2007 ஆம் ஆண்டு என்று ஞாபகம். சிம்புவும் நயன்தாராவும் உதட்டோடு உதடு முத்தமிட்டுக் கொண்ட படங்கள் பரபரப்பாக மின்னஞ்சலில் Forward ஆகிக் கொண்டிருந்தன. அந்த சமயத்தில் நான் ஹைதராபாத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அது ஒரு டார்ச்சரான நிறுவனம். மொத்தமாக ஐம்பதுக்கும் குறைவான ஆட்களுக்குத்தான் இணைய இணைப்பு  கொடுத்திருந்தார்கள். சிஸ்டம் அட்மினாக சரிதா என்ற பெண்மணி இருந்தார். அவருக்கு வேலையே ஐம்பது பேரும் என்ன பார்க்கிறார்கள் என்று கண்காணிப்பதுதான். கண்காணித்தால் தொலைகிறது என்று விட்டுவிடலாம். அப்பொழுதே அழைத்து “இப்பொழுது என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்பார். இதே கேள்வியை ஆண் கேட்டிருந்தால் ஏதாவது சொல்லி சமாளிக்கலாம். பெண்ணிடம் சொல்வதற்கு தயக்கமாக இருக்குமல்லவா? “பெப்பேப்பெபே” என்று உளறும் போது இதை ஸ்கீரின்ஷாட் எடுத்து சேர்மேனுக்கு அனுப்பட்டுமா என்று மிரட்டல்விடுவார். 

அப்பொழுது “பேசலாம்” என்ற பெயரில் இந்த வலைத்தளம் இருந்தது. தளத்திற்காக சில நடிகைகளின் படத்தை டவுன்லோட் செய்து கொண்டிருந்தபோது வசமாக சிக்கிக் கொண்டேன். போனில் அழைத்தவர் “இது ரொம்ப அவசியமா?” என்றார். அதே “பெப்பேப்பேப்பே”தான் என்னிடமிருந்து வந்தது. சேர்மேனிடம் புகார் அளிக்கப்போகிறேன் என்றான். என்ன கெஞ்சினேன் என்று தெளிவாக ஞாபகமில்லை ஆனால் படு பயங்கரமாக கெஞ்சினேன் என்று ஞாபகமிருக்கிறது. “தொலைந்து போ” என்றுவிட்டுவிட்டார்.

அதற்கு பிறகாக அலுவலகத்தில் அவ்வளவு தைரியமாக எந்தப்படத்தையும் திறந்து பார்க்க மாட்டேன். உமாநாத் என்ற நண்பரிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது அவர் சி-ந வின் பரபரப்பான படங்களை பார்த்துவிட்டதாகச் சொன்னார். ‘எப்படியாவது’ பார்த்துவிட வேண்டும் என்று மனது துடித்தது. அடுத்தவன் முத்தம் கொடுப்பதை பார்ப்பது அழுக்கான செயல் என்றெல்லாம் ‘பிட்’ ஓட்டலாம் என்றாலும் After all மனித மனம்தானே?

“அனுப்பி வைக்கட்டுமா?” என்றார்.

“அலுவலகத்தில் பார்க்க முடியாது” என்றேன். 

“அனுப்பி வைக்கிறேன், ப்ரவுசிங் செண்டரில் பாருங்கள்” என்றார். அதுவும் நல்ல ஐடியாவாக இருந்தது. அந்தப் படங்களை “நவீன கவிதைகள்” என்ற பெயரில் ஃபார்வேர்ட் செய்து வைத்தார். அந்த நாள் மாலையிலேயே ப்ரவுசிங் செண்டருக்குச் சென்று ஜென்ம சாபல்யம் அடைந்தது ஞாபகத்திலிருக்கிறது. இந்தக் கதை எதற்கு மதுபாவுவின் கதைக்குள் வருகிறது என்றுதானே யோசிக்கிறீர்கள். மதுபாபு மாட்டிக் கொண்டதும் அதே சி-ந படத்தினால்தான். ஆனால் இது நடந்தது சரிதாவின் நிறுவனத்தில் இல்லை. நான் வேலைக்குச் சேர்ந்த அடுத்த நிறுவனத்தில்.

அப்பொழுது ஸ்விட்சர்லாந்து நாட்டு நிறுவனத்திற்காக எங்கள் டீமில் இருந்தவர்கள் மாடாய் உழைத்துக் கொண்டிருந்தோம். அந்த நாட்டைச் சேர்ந்த ஸ்டீபானியா என்ற ஒருத்தியிடம்தான் சாட்டை இருக்கும். அங்கிருந்தே அதை அவள் சுழற்றுவாள். அவள் சுழற்றுவதில் எங்கள் முதுகு பழுத்துக் கிடக்கும். எங்கள் நிறுவனத்திற்கு என்ன வேலைகளை ஒதுக்க வேண்டும் என்பதை அவள்தான் முடிவு செய்வாள். ஒரு வேலையை நாங்கள் முடிப்பதற்குள்ளாகவே இன்னும் இரண்டு புதிய வேலைகளை அனுப்பி வைத்து பெண்டு நிமிர்த்தினாள்.

எங்கள் டீமில் இருந்த எல்லோராலும் அவளிடம் பேச முடியாது. அனுமதிக்கவும் மாட்டாள். அவளுடன் பேசுவதற்கென்று ஒருவனை நியமித்தார்கள். அந்த ஒருவன்தான் மதுபாபு. எங்கள் டீமைச் சார்ந்தவர்கள் ஒவ்வொரு நாளும் என்னென்ன வேலை செய்தார்கள் என்பதை பட்டியலிட்டு ஸ்டீபானியாவுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பு மதுபாபுவுக்கு வந்து சேர்ந்தது. க்ளையண்ட்டுடன் நேரடித் தொடர்பில் இருப்பது ‘கெத்தான மேட்டர்’என்பதால் அவனுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. மாலை ஐந்தரை மணி ஆனால் நாங்கள் ஒவ்வொருவரும் செய்த வேலைகளை அவனிடம் பட்டியல் வாசிக்க வேண்டும். அவன் குறித்துக் கொள்வான். இந்த தெனாவெட்டான வேலையின் காரணமாக பந்தா காட்டிக் கொண்டிருந்தான்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த அவனது பொழப்பில்தான் சி-ந சேர்ந்து கும்மியடித்தார்கள். மதுபாவுவின் மின்னஞ்சலுக்கு அவனது நண்பர்கள் யாரோ இந்த நிழற்படத்தை அனுப்பி வைத்துவிட்டார்கள். சொறி வந்தவன் கை எதையாவது சொறிவது போலத்தான் தனக்கு வந்த மின்னஞ்சலை ஃபார்வேர்ட் செய்வது என்பதும். ஒருமுறை பழகிக் கொண்டால் பிறகு தவிர்க்க முடியாது. மதுபாபுவும் அப்படி சொறிபிடித்தவன் போலிருக்கிறது.  தனக்கு வந்த படத்தை ஸ்டிபானியாவுக்கு அனுப்பி தொலைத்து விட்டான். தெரிந்து அனுப்பினானோ அல்லது தெரியாத்தனமாக அனுப்பினானோ- ஆனால் அவளுக்கு போய்ச் சேர்ந்துவிட்டது. சிம்புவும் நயன்தாராவும் முத்தமிட்டுக் கொண்டால் நமக்கு வேண்டுமானால் கிளுகிளுப்பாக இருக்கக் கூடும். ஸ்டீபானியாவுக்கு என்ன வந்தது? அவர்கள் பார்க்காத முத்தங்களையா நாம் பார்த்துவிட்டோம்?

அடுத்த சில வினாடிகளில் அதே மின்னஞ்சலை மேனேஜர், டைரக்டர் என பெருந்தலைகளுக்கு Forward செய்து "What the F*** is happening there?" என்று காறித் துப்பிவிட்டாள். அவ்வளவுதான். அடுத்த ஐந்து நிமிடங்களில்  ‘டீமே’ அல்லோகலப்பட்டுவிட்டது.

மதுபாபுவை மேனேஜர் அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குள் செல்கிறார். அரை மணி நேரம் பேசுகிறார்கள். பிறகு டைரக்டரும் அதே அறைக்குள் போகிறார். முக்கால் மணி நேரம் பேசுகிறார்கள். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் என்னமோ பெரிதாக நடக்கப் போகிறது என்று தெரியும். அவன் தெரியாத்தனமாக செய்துவிட்டதாகவும், மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும் சொன்னானாம். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இல்லை. அடுத்த சில நிமிடங்களில் HRலிருந்து சில காகிதங்களைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அதே அறைக்குள் போனார்கள். பத்து நிமிடங்கள் பேசினார்கள். பிறகு அவர்கள் வெளியேறிவிட்டார்கள். 

அடுத்த சில வினாடிகளில் மதுபாபுவும் மேனேஜரும் அறையிலிருந்து வெளியேறினார்கள். அவனிடம் பேசுவதற்கு எங்களை அனுமதிக்கவில்லை. மேனேஜர் அவனை ஆறுதலாக தட்டிக் கொடுத்தார். தனது இடத்திற்கு வந்தவன் டிபன் பாக்ஸ் உள்ளிட்ட உடைமைகளை எடுத்துக் கொண்டான். பிறகு வீங்கிய முகத்தோடு அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறினான். அதுதான் அந்த அலுவலகத்தில் அவனது கடைசி நாளாக இருந்தது.