Feb 19, 2013

அதிர்ச்சி


அலுவலகத்தில் மதியம் சாப்பிட போகும் போது முடிந்தவரை தனியாகப் போவதுதான் வழக்கம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது காரணம் சாப்பிடும் போது பேச விரும்பாதது, இரண்டாவது காரணம் அந்த நேரத்தில் கேண்டீனில் டிவி ஓடிக் கொண்டிருக்கும். அன்றைய தினத்தின் அதிகாலையில் யாரையெல்லாம் தூக்கில் தொங்கவிட்டார்கள் போன்ற செய்திகளைத் தெரிந்துகொள்ள அதுதான் சரியான நேரம். இப்படியே போனால் ஜனாதிபதியைத் தவிர அத்தனை பேரையும் தொங்கவிட்டுவிடுவார்கள் போலிருக்கிறது. தேவைப்பட்டால் தானே சிறைச்சாலைக்கு வந்து தூக்கு கயிறை இழுக்கவும் தயங்காத ஜனாதிபதியை பெற்றிருக்கிறோம். ‘என்ன தவம் செய்தனை’ என்று தாராளமாக பாடலாம். 

கருணை மனுவை நிராகரிப்பது என்பது ஜனாதிபதியின் தனிப்பட்ட நடவடிக்கை இல்லையாம். அமைச்சரவையின் பரிந்துரையின் அடிப்படையில் ஜனாதிபதி ரப்பர் ஸ்டாம்ப்பை குத்துவாராம். மத்திய அமைச்சரவைக்கும், ஜனாதிபதிக்கும் ‘கருணை மனு’க்களை ரத்து செய்வது மட்டும்தான் வேலையாக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது. பாலியல் வன்முறைகள், ஊழல்கள், சரியும் பொருளாதார வளர்ச்சி, ஏறும் விலைவாசி என்று ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்க அத்தனை செய்திகளையும் பின்னால் தள்ளிவிடும் வேலையை மட்டுமே செய்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

முப்பது வருடங்களுக்கு முன்னால் பீரங்கி வாங்கியதிலிருந்து இன்றைக்கு வாங்கிய ஹெலிகாப்டர் வரைக்கும் எல்லாவற்றிலும் ‘கை சுத்தமான’ அரசாங்கமாகவே அமைந்துவிடுவது நமது அதிர்ஷ்டம்தான். ஆனால் பாருங்கள், பல லட்சம் கோடியாக இருந்தாலும் சரி பல்லாயிரம் கோடியாக இருந்தாலும் சரி. மூன்று மாதங்களுக்குத்தான் மீடியாக்கள் குதிக்கின்றன. அதன்பிறகு என்ன மாய மந்திரம் நடக்கிறதோ தெரியவில்லை. ‘கப்சிப்’ ஆகிவிடுறார்கள்.

ஆதர்ஷ் வீட்டுவசதி திட்டத்தில் ஆட்டையை போட்டது, ஸ்பெக்டரத்தில் அமுக்கியது, காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், தாத்ரா வண்டிகள் வாங்கியதில் நடந்த பதுக்கல், ஹெலிக்காப்டர் வாங்கியதில் கசமுசா என லிஸ்ட் போட்டால் பெரும்பாலானவற்றை நாம் மறந்திருப்போம் அல்லது மறக்கடிக்கப்பட்டிருக்கிறோம். நமக்கும் சில நாட்களுக்குப் பிறகாக பின் தொடர்வதற்கு சின்மயி அல்லது குஷ்பூ சிக்கிவிடுகிறார்கள்.

இப்பொழுது நடந்த ஹெலிக்காப்டர் ஊழலில் என்ன நடந்தது என்றே தனக்கு தெரியாது என்று பிரதமர் சொல்கிறார். உண்மையில் இந்த திட்டத்தை மத்திய அமைச்சவரவையுடன் சேர்ந்து பிரதமரும் அனுமதித்திருக்கிறார். தனக்கு ஒன்றுமே தெரியாது என்று சொல்வதை டகால்ட்டி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ராணுவ அமைச்சர் அந்தோணி பிரதமரை விட சின்னக்குழந்தை போலிருக்கிறது. வாயில் நிப்பிளுடன் சுற்றும் பாப்பா போல நடிக்க முயற்சிக்கிறார். இந்த திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துவிட்டார். கற்பழித்தவனை கிராமப்பஞ்சாயத்தில் நிறுத்தி தண்டனையாக ஐந்து வெடக்கோழியை கொடுத்துவிடச் சொல்லும் உத்தரவு போலத்தான் இது. இத்தாலி அரசாங்கம் அந்த நிறுவன அதிபரை கைது செய்யும் வரை இவர்களுக்கெல்லாம் என்ன நடந்தது என்றே தெரியாதாம். சரி விடுங்கள்.

காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமல் முகநூலைத் திறப்பதில் பெரிய சிரமங்கள் வந்து சேர்ந்துவிடுகின்றன. எழுத்தாளர் இரா.முருகன் முகநூலில் எழுதியிருந்த குறிப்பை வாசித்துவிட்டு ஹிந்து நாளிதழின் தளத்தைத் திறந்தால் இன்றைய தினத்துக்கான அதிர்ச்சி காத்திருந்தது. இன்றைய தினத்திற்கு மட்டுமில்லை இன்னும் பல வருடங்களுக்கு நினைவில்   வந்து போகக் கூடிய படங்கள் இவை. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் இறப்பதற்கு சில வினாடிகளுக்கு முன் எடுக்கப்பட்ட படங்கள். இதைப்பற்றி எதுவும் எழுத வேண்டியத்தில்லை.  நிழற்படங்களே அத்தனை வலிகளையும் சொல்லிவிடுகிறது. 

இலங்கையை ஆளும் அரசு, நம்மை ஆளும் அரசு, தமிழகத்தை ஆண்ட அரசு, வேடிக்கை பார்த்த வல்லரசுகள், அமைதியாக இருந்த இந்திய ஊடகங்கள் அத்தனை பேருக்கும் இந்த பிஞ்சுச் சிறுவனின் கண்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இருக்கிறது. ஆனால் யாருக்குமே பதில் சொல்லும் திராணியும் மனசாட்சியும்தான் இல்லை.

6 எதிர் சப்தங்கள்:

Kodees said...

Cruel!, ஒரு குழந்தையை!!! தாங்கமுடியவில்லை.

மணிகண்டன் - ஒரு வேண்டுகோள், உங்கள் வலைப்பக்கத்திற்கு வந்துதான் படிக்க முடிகிறது, என் போல் மொபைலில் (ரீடரில்) படிப்பவர்களுக்குச் சற்று சிரமமாக உள்ளது. நேரடியாகப் படிக்கும்படி செய்தால் என்ன?

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

கடவுளே.. அழுகையே வருது..

Anonymous said...

intha maathiri puligalum ilangayil appaavigalai konrathu thaaney.

காரிகன் said...

ஒரு தனி மனிதனை பழிவாங்க எத்தனை சிறு உயிர்கள் இழந்துள்ளன என்பதை என்னும் போது இத்தாலியின் மீது கோபம் வருகிறது.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

இங்கு இருக்கும் தமிழன் நிலையே தூக்கு கயிருக்கு போராடி கொண்டு இருக்கும்போது இந்த காட்சிகள் வேறு மனதை பிழிகிறது .

Uma said...

மனதின் வலியை எழுத வார்த்தையில்லை