Jan 2, 2013

Self Promotion - ரஜினிகாந்த் முதல் தவிட்டுக்குருவி வரை


“ப்ரோமோட் செஞ்சுக்கணும் சார்..அப்பத்தான் ஜெயிக்க முடியும்”

முன்பெல்லாம் இப்படி யாராவது சொன்னால்  “தேவையில்லை” என்று நினைத்ததுண்டு. ஆனால் இப்பொழுது ப்ரோமோஷனில் தவறில்லை என்று தோன்றுகிறது. சோப்பு டப்பாவிலிருந்து, மென்பொருள் வரைக்கும் அத்தனைக்கும் இங்கு ப்ரோமோஷன் தேவையாயிருக்கிறது. பூக்கடையிலிருந்து புத்தகங்கள் வரைக்கும் அத்தனைக்கும் விளம்பரம் அவசியம். உயிரற்ற அஃறிணைகளுக்கே விளம்பரம் தேவையாக இருக்கும் போது மனிதர்களுக்கு சொல்லவா வேண்டும்?

எளிமையாக இருப்பதாக காட்டிக் கொள்வதில் ஆரம்பித்து தனக்கு விளம்பரமே பிடிக்காது என பிரகடனப்படுத்திக் கொண்டு விளம்பரம் செய்வது வரைக்கும் ஏகப்பட்ட Strategy இருக்கின்றன. ஆளாளுக்கு ஒரு வழியை பின்பற்றுகிறார்கள். உதாரணமாக ரஜினிக்கு அவரது படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் அவருக்கு அரசியல் ஆசை எட்டிப்பார்க்கும். இப்பொழுதும் அப்படித்தான். “அரசியலுக்கு வந்தால் அது தனி வழியாக இருக்கும்” என பேசியிருக்கிறார். கோச்சடையான் படம் வெளிவரும் வரை இப்படி பற்ற வைப்பார். படம் வெளியான பிறகு அடுத்த படம் வரும் வரைக்கும் “கலைஞர்ஜி, மேடம்” ஆகியோரின் பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டு புன்னகைப்பார். இது அவருடைய விளம்பர முறை. 

நரேந்திர மோடியின் குஜராத் வெற்றி அவருக்கான விளம்பரமாகிவிட்டது. தனது பிரதமர் கனவில் மோடி மண் எடுத்து போடுவதை விரும்பாத ஜெ. பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் இருந்து முகம் சிவக்க வெளியேறி தன்னை இந்தியாவின் இரும்புப்பெண்மணி என விளம்பரம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. சினிமா, அரசியல் எல்லாம்  பூக்கடைகள். அவைகளே ‘விளம்பரம் இல்லையென்றால் வியாபாரமாகாது’ என்ற நிலையில் இருக்கின்றன.

இலக்கியம் எம்மாத்திரம்? ராயல்டி வரவில்லை என எழுத்தாளர்கள் புலம்பினால், புத்தகமே விற்கவில்லை என்று பதிப்பாளர் எகிறுகிறார். இரண்டு தரப்பிலுமே ஐம்பது சதவீத உண்மை இருக்கத்தான் செய்கிறது. இலக்கியத்தில் விளம்பரம் தேவையா என்றால் என்னிடம் இருக்கும் பதில் “அடுத்தவனை கடுப்பேற்றாமல் செய்யலாம்”. இந்த பதிலில் ஆளாளுக்கு மாறுபாடு இருக்கலாம். ஆனால் விளம்பரம் செய்யப்படாத பல்லாயிரம் தரமான எழுத்துக்கள் சீந்துவார் இல்லாமல் கிடக்கின்றன. ஒவ்வொரு வருடமும் வெளிவரும் விளம்பரமில்லாத புத்தகங்களுக்கு எந்தவிதமான விமர்சனமும் வருவதில்லை என்பதுதான் நிதர்சனம். விமர்சனத்தை விடுங்கள்- குறைந்தபட்சம் நண்பர்களுக்கிடையே கூட அந்தப் புத்தகம் பற்றிய உரையாடல் நிகழ்வதில்லை.

விர்ச்சுவல் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். செருப்பில் ஆரம்பித்து சகலத்தையும் இருந்த இடத்தில் இருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பும் உலகம் உருப்பெற்றிருக்கிறது. இந்த உலகத்தின் கவனத்தை சற்றேனும் திரும்பச் செய்ய வேண்டுமானால் விளம்பரம் அவசியமாகத் தெரிகிறது. வருடம் முழுவதுமாக எழுதி, பதிப்பாளரை பிடித்து அவர்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து அச்சடித்து புத்தகமாகக் கொண்டு வந்த பிறகு வருடத்தில் நான்கைந்து பிரதிகள் மட்டுமே விற்க முடிகிறது என்றால் இந்த புத்தகங்கள் உருவாக்கக் கூடிய சலனம் என்ன என்பதை யோசிக்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் புத்தகக் கண்காட்சிக்கு மட்டும் குறைந்தபட்சம்  ஐந்தாயிரம் தலைப்புகளில் புத்தகங்கள் வெளிவரக் கூடும். புத்தக மழை இது. இதில் சமையல், அழகுக்குறிப்புகள் தாண்டி தரமான புத்தகங்கள் குறைந்தபட்சம் ஆயிரமாவது இருக்கக் கூடும். இவற்றின் விற்பனைகள் அத்தனை திருப்தியாக இருக்கிறதா? எந்த பதிப்பாளரும் கவிதைத் தொகுப்பை புன்னகையுடன் பதிப்பதில்லை. பல பதிப்பாளர்கள் அறிமுக எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளி கொண்டுவருவதில்லை. பதிப்பாளர்களின் தயக்கத்திற்கு காரணம் இருக்கிறது. அந்த புத்தகம் குறைந்தபட்சம் பதிப்பிக்கும் தொகையையாவது பெற்றுத்தருமா என்று அவர்கள் யோசிப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

2004 அல்லது 2005 ஆம் ஆண்டுகளில் உயிர்மை பதிப்பகத்தின் சென்னை புத்தகக் கண்காட்சி ஸ்டால்களில் நின்றிருக்கிறேன். புத்தகம் வாங்க வருபவர்களை கவனிப்பது சுவாரசியமான நிகழ்வு. வருபவர்களில் எண்பது சதவீதம் பேர் ஏற்கனவே சில டைட்டில்களை முடிவு செய்திருப்பார்கள். நேரடியாக அந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு பில் போடுவதற்காகச் சென்றுவிடுவார்கள். வேறு எந்த புத்தகங்களையும் கண்களால் கூட சீண்ட மாட்டார்கள். மீதமுள்ள இருபது சதவீத பேர்களுக்கு தேர்ந்தெடுக்க எத்தனையோ புத்தகங்கள் இருக்கும் போது இளம் எழுத்தாளர்களின் புத்தகங்களை தேடி எடுப்பார்கள் என்பதெல்லாம் ஒருவித மூட நம்பிக்கை.

விற்பனை, ராயல்டி என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். ஒரு புத்தகத்துக்காக உழைக்கும் படைப்பாளியின் உழைப்பு, பதிப்பாளரின் முதலீடு போன்றவற்றிற்கு உண்மையில் என்ன பதிலாகக் கிடைக்கிறது என்பதுதான் முக்கியம். பெரும்பாலும் பூஜ்ஜியம்தான் பதில். கவிப்பேரரசுகளும், மக்கள் கவிஞர்களும் ஆயிரக்கணக்கான பிரதிகளை விற்று வி.ஐ.பிக்களாக வலம் வரும் போது, திறனூக்கம் மிகுந்த படைப்பாளிகள் ஏன் தொடர்ந்து விற்பனை ரீதியில் தோல்வியுற வேண்டும்? சங்கோஜமில்லாமல், அடுத்தவனை சங்கடப்படுத்தாமல் விளம்பரம் செய்வதில் தவறில்லை என நம்புகிறேன்.

7 எதிர் சப்தங்கள்:

Unknown said...

நல்ல கருத்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

புத்தகம் மட்டுமில்லை பதிவுகளுக்கும் விளம்பரம் தேவை போலிருக்கிறது.

manuneedhi said...

பேசாமல் ரஜினியையே இதற்கும் brand ambassador ஆகப் போட்டு விடலாம்

பாலு said...

நல்ல புத்தகங்களைத் தேடிப் பிடித்து வாங்குகின்றனர். காவல் கோட்டம் மாதிரியான புத்தகங்கள் 2,3 மாதங்களை முழுதாகத் தின்று விடுகின்றன. இருப்பினும், புத்தகங்களை வாங்கி வீட்டில் குவித்து வைத்துக் கொண்டு, எல்லாம் வல்ல இறைவன் எனக்கும் ஏதாவது உதவி புரிந்து எல்லா புத்தகங்களையும் படிக்க வைத்து விடுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்பது போல் எழுத்து சிறப்பாக இருப்பின் விளம்பரம் தேவை இருக்காது என்பது எனது தாழ்மையான எண்ணம். ஊக்குவிக்க வெகுஜனப் பத்திரிக்கைகள் இருக்கின்றன. Manikandan sir! you dont worry about those things. You will succeed..

Uma said...

வருபவர்களில் எண்பது சதவீதம் பேர் ஏற்கனவே சில டைட்டில்களை முடிவு செய்திருப்பார்கள். நேரடியாக அந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு பில் போடுவதற்காகச் சென்றுவிடுவார்கள். வேறு எந்த புத்தகங்களையும் கண்களால் கூட சீண்ட மாட்டார்கள்.
-----உண்மைதான்! இணைய அறிமுகமும் ஓரளவு விளம்பரம்தானே! உங்கள் படைப்பின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் !

பாலகிருஷ்ணன் said...

கரெக்ட்டா செஈன்னீங்க!

ஜீவ கரிகாலன் said...

ஆம் பிரமோஷன் பண்ணலாம் தான்