Jan 17, 2013

பவர்ஸ்டாரும், சாரு நிவேதிதாவும் பின்னே ஞானும்


“நீ இல்லன்னா குடியா முழுகிப் போயிடும்” இதைத்தான் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது நினைத்துக் கொண்டிருந்தேன். நம்மை நாமே டூமீலாகவும், அப்பாடக்கராகவும் நினைத்துக் கொள்வதைவிடவும் பெரிய பரிதாபம் எதுவும் இருக்க முடியாது.  அப்படி நினைத்துக் கொள்வது எல்லோருக்கும் சாத்தியமும் இல்லை. ஆனால் சாரு நிவேதிதாவுக்கு அது சாத்தியம். நம்பிக்கை இல்லாதவர்கள் நேற்றைய தினமலரை வாசிக்கலாம். கூடங்குளம் போராட்டம் குறித்து குதித்து குதித்து விமர்சனம் செய்திருக்கிறார். உதயகுமார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று சொல்ல மாட்டேன். ஆனால் உதயகுமாரையும், அணு உலை எதிர்ப்பு போராட்டத்தையும் விமர்சனம் செய்ய சாருவுக்கு என்ன அருகதை இருக்கிறது என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். 

சாரு எப்படியோ போகட்டும். என் பிரச்சினைக்கு வருகிறேன். நானும் என்னை ‘பெரியவனாக’ நினைத்துக் கொள்வேனோ என்று அவ்வப்பொழுது பயம் தொற்றிக் கொள்கிறது. அதுவும் நிசப்தத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் சில மாதங்களாக இந்த பயம் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஆனால் இது வெறும் ‘பில்ட் அப்’தான் என்பதை சுயமாக நிரூபித்துக் கொள்ள வேண்டாமா? ஒரு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்ததிலிருந்து எட்டு நாட்களுக்கு திடீர் ப்ரேக். வெறும் எட்டு நாட்கள்தான். ஆனால் என்னையும் அறியாமல் உருவாகியிருந்த வெற்றுப் பெருமையை இந்த நாட்களில் சோதித்துக் கொள்ள முடிந்தது. எழுதவில்லையென்றால் சீந்த நாதி இல்லை என்பதுதான் உண்மை. ஒருவர் மட்டும் ‘ஏன் எழுதவில்லை’ என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்கும் பதில் அனுப்பவில்லை. இந்நேரம் அந்த ஒரே ஒருவரும் ‘எப்படியோ நாசமா போ’ என சபித்திருப்பார்.

எதற்காக எழுதவில்லை? ஆயிரம் சாக்கு போக்குகளை சொல்ல முடியும். ஆனால் உண்மையான காரணம் மனசு சரியில்லை. மனசு சரியில்லாமல் போவதற்கு ‘லவ் ஃபெயிலியர்’ மட்டுமே காரணமாக இருக்க வேண்டியதில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அலுவலகத்தின் அதிகப்படியான ஆணிகளிலிருந்து, எக்கச்சக்கமாக கொட்டு உதிரம் வரைக்கும் எது வேண்டுமானாலும் மனசை சரியில்லாமல் ஆக்கக் கூடும். ஒரு வாரமாக எழுதக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். வலிந்து எடுத்த முடிவு. சில நேரங்களில் கை அரித்தது. ஆனால் எழுதக் கூடாது என்ற வைராக்கியம் தொடர்ந்து கொண்டிருந்தது. எழுதுகிற நாட்களில் தூங்குவதற்கு இரவு இரண்டு மணி கூட ஆகும் அல்லது சீக்கிரமாகத் தூங்கினால் விடிந்தும் விடியாமலும் லேப்டாப்பை திறந்து வைத்துக் கொள்வேன். நாள் முழுவதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எதையாவது யோசித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கும். ஆனால் அதுவும் சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆயிரம் பேராவது ஒவ்வொரு நாளும் வாசிக்கிறார்கள் என்பது உற்சாகமளிப்பதாக இருந்தது. அந்த உற்சாகம்தான் சென்ற வாரத்தில் ஒரு நாள் உடைந்து போயிருந்தது. ஆனாலும் இந்த ஒரு வாரமாக ஒன்பது மணிக்குத் தூங்கி காலையில் ஏழு மணிக்குத்தான் எழுந்தேன். ஒரு விதமான சுதந்திரம் அது. தூங்கிய பத்து மணி நேரங்களும் ஒரு கவிதையைப் போல எனது கைகளுக்குள் சுருண்டு மகன் தூங்கிக் கொண்டிருந்தான். ஒரு விதமான வரம் இது. இதற்கு இன்னொரு பெயரும் உண்டு- சோம்பேறித்தனம்.

சுய பரிசோதனை, மனசு சரியில்லை என்று என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் நான் ஒரு அன்றாட காய்ச்சி என்பதை சுய பரிசோதனை நிருபித்துவிட்டது. எழுதினால் மட்டுமே கவனிக்கப்படுவேன் என்று உணர்ந்து கொண்ட பிறகு இன்னமும் வேகமாக எழுத வேண்டும் என்று விருப்பம் தலையெடுக்கிறது.

இந்த அன்றாட காய்ச்சியின் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்காவிட்டாலும் 
ஏதோ ஒரு மூலையிலிருந்து யாரோ ஒருவர் வாசிக்கிறார் என்பதே கால்களுக்கு நடனத்தைச் சொல்லித் தந்துவிடுகிறது. அப்படித்தான் மின்னஞ்சலில் வந்த இந்த நிழற்படமும்.  Dial For Books இல் ஆர்டர் செய்து புத்தகத்தை வாங்கி அந்த படத்தை அனுப்பி வைத்திருக்கிறார். இதெல்லாம் அவ்வளவு பெரிய விஷயமா? என்று யாராவது கேட்கலாம்.  எனக்கு பெரிய விஷயம்தான். முகம் தெரியாத ஒரு மனிதருக்கு எனது புத்தகத்தை வாங்கி அதை நிழற்படம் எடுத்து அனுப்பி என்னை உற்சாகப்படுத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை. ஆனால் செய்திருக்கிறார்.  இந்த உற்சாகத்தில்தான் எழுதுவதன் கியரை மாற்றிக் கொண்டிருக்கிறேன்.  இந்த சுயகதை வண்டியை தற்சமயத்திற்கு ‘பார்க்கிங்கில்’ நிறுத்துகிறேன்.


முதல் பத்தியில் சாரு எப்படியோ போகட்டும் என்று சொல்லிவிட்டாலும் அவ்வளவு ஈஸியாக விட்டுவிட முடியவில்லை. சாரு உண்மையிலேயே பரிதாபகரமான ஜீவனாகத்தான் தெரிகிறார். அவரது எந்த அரசியலும் அவரை காமெடியனாக மாற்றிவிடுகிறது. சின்மயிக்கு ஆதரவு, உதயகுமாருக்கு எதிர்ப்பு, நித்யானந்தாவுக்கு ஜால்ரா என சாரு எதைக் கையில் எடுத்தாலும் அது கடைசியில் பல்லிளித்துவிடும். கவனித்து பார்த்தால் சாருவுக்கு சமூகம் சார்ந்த எந்த நிலைப்பாடும் கிடையாது. எந்த விவகாரம் தனக்கு அதிகபட்ச விளம்பரத்தை தேடித்தருமோ அந்த விவகாரத்தை கையில் எடுப்பார். அவ்வளவுதான். அந்த விவகாரத்தில் எப்படி பேசினால் பலரும் சாணியடிப்பார்களோ அப்படி பேசுவார். இதுதான் சாரு. சாரு எழுதத் தெரிந்த எழுத்தாளன். ஆனால் எழுத்தாளன் என்ற பிம்பத்தை கைவிட்டு தன்னை காமெடியனாக வடிவமைத்துக் கொள்கிறார். தமிழ் சினிமாவுக்கு பவர்ஸ்டார் போலத்தான் நவீன இலக்கியத்துக்கு சாரு நிவேதிதா. தன்னை காமெடியனாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள் என்பதை பவர் ஸ்டார் தெளிவாக உணர்ந்து வைத்திருக்கிறார். அது அவரின் பலமாக இருக்கிறது. ஆனால் சாரு தன்னை ஒரு நாயகனாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அதுதான் இவருடைய பலவீனமாக இருக்கிறது.

9 எதிர் சப்தங்கள்:

சுந்தரம் சின்னுசாமி said...

ஒரு எழுத்தாளனுக்கு எழுதுவதற்கான சூழல் எவ்வளவு முக்கியமோ அவ்வாறே ஒரு வாசகனுக்கும் வாசிப்பதற்கான சூழல் முக்கியம். பாழாய் போன இந்த வாழ்க்கை போராட்டத்தில் நாங்கள் இழந்தவற்றுள் முக்கியமானது வாசிப்பு. இப்போது ஒரு புத்தகம் வாங்க செலவாகிறதே என்ற கவலையில்லை. உங்கள் கருத்தை உள்வாங்கும் மன நிலை இல்லையே என்பதுதான் கவலை. கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வர முயற்சிக்கிறேன் மணிகண்டன். (உங்களுக்கு அந்த புகைப் படத்தை அனுப்பியது நான் தான் - sundaram chinnusamy - உங்கள் facebook நட்பு) என்னுடைய இந்த செயலால் உங்கள் மனம் உற்சாகமடைந்திருக்கிறது என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

Anonymous said...

நீங்கள் படித்தீர்க​ளோ இல்​லை​யோ ​தெரியவில்​லை. ஜனவரி 13, 2013 ​​அன்​றைய சாருநி​வேதிதாவின் வ​லைப்பக்கத்தில் அவர் "மதுவும் தனிமையும்" என்ற த​லைப்பில் ஒரு பதி​வை ​வெளியிட்டார். அதன் முதல்வரிகள் இப்படித் துவங்குகின்றன. "வாசகர் வட்டம் ரொம்ப டல் அடிக்கிறது. நானே போஸ்ட் போட்டாலும் எதிர்வினைகள் கம்மியாக உள்ளன. ஏன் என்று தெரியவில்லை.". அ​தைத் ​தொடர்ந்​தே கூடங்குளம் ​போராட்டம் துவங்கி ஒரு வருடத்திற்கும் ​மேலாகி இப்​பொழுது அது குறித்து தினமலரில் இக்கட்டு​ரை எழுதியிருக்கிறார். ​மே​லே ​சொன்ன வரிகளுக்கும் இக்கட்டு​ரைக்கும் ​தொடர்பிருப்பதாக​வேபடுகிறது. ​தெரிந்​தோ ​தெரியாம​லோ அ​னைவரும் அவரின் இலக்கிற்கு இலக்காகி​றோம் என்று ​தோன்றுகிறது.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

சில மேதைகள் கோமாளிகளாக சித்தரிக்கப்படுவது புதிதல்லவே...

சேக்காளி said...

யாருக்காகவும் இல்லாமல் உங்களுக்காக எழுதுங்கள்.அது எங்களுக்கும் பயன்படும் போது அதனால் உங்களுக்கு கிடைக்கும் சந்தோசம் எதற்கும் ஈடு இல்லாமல் இருக்கும்.

mathuran said...

//சில மேதைகள் கோமாளிகளாக சித்தரிக்கப்படுவது புதிதல்லவே... //

அதுக்காக இந்த காரியக் கிறுக்கனை மேதை என்கிறீர்களா? கவனமுங்க!!!
அடுத்தவர் தன்னைக் கவனிக்க வேண்டுமென்பதற்காக ,இவர் மெரினாவில் நிர்வாணமாகவும் ஓடுவார்.
அது தப்பில்லையெனவும் தப்பாமல் கூறுவார்.
மீண்டும் சொல்கிறேன் - இவருடன் மிகக் கவனமுங்க!

முல்லை மயூரன் said...

Who ,power star?

Mathi said...

Who ,Charu?

Anonymous said...

வெறி குட்டியின் தினமல பத்திரிக்கை கட்டுரையை விமர்சித்து ஒரு பதிவை வா.மணிகண்டன் போட்டார். அந்த பதிவின் சாராம்சத்தை புரியாத வெறி குட்டியின் ஜால்றாக்களில் ஒருவரான "ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி " என்பவர்
"சில மேதைகள் கோமாளிகளாக சித்தரிக்கப்படுவது புதிதல்லவே..." என்று பின்னூட்டம் இட்டிருக்கின்றார்.
அக்கா/ஆண்டி ,உங்கள் நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லையா.

அக்கா உங்கள் தல க்கு வேணும் என்றால் காவடி எடுங்கள், ஜால்ரா அடியுங்கள் யார் வேண்டாம் என்றார்கள். அதுக்கு முதல் பின்னூடம் இட முன் அந்த பதிவின் புதைந்துள்ள கருத்தை அறிய முற்படுங்கள்.
(அது சரி வெறி குட்டிக்கு இந்த மாச காசு அனுப்பி விட்டீர்களா? அனுப்பவில்லை உடன் அனுப்பவும். ஓசி ஆதரவுகள் வெறி குட்டிக்கு தேவையில்லை)

Uma said...

ஒருவார இடைவெளி உங்களுக்கு தேவைதான் எனில் விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் எழுதுவது கண்டிப்பாக அயர்ச்சி அளிப்பதாக வேண்டாம். எழுத்து என்பது ஒரு வரம்! நானெல்லாம் வீட்டில் விருந்தினர், குழந்தையின் தேர்வு, விடுமுறை பயணம் என பிஸியாகி 10 நாட்கள் வாசிக்கமுடியாம்ல் போனாலும் ஓய்வு கிடைத்தபின் உட்கார்ந்து எல்லா பதிவுகளையும் வாசிக்கிறேன், நிறைவாக உள்ளது!