Dec 7, 2012

மீன் மார்கெட் வியாபாரிகள்- Come on Ladies One Pound Fish


“இவர் ஒரு பயங்கரமான கம்யூனிஸ்ட்”  என்றுதான் அறிமுகப்படுத்தினார்கள். அந்த  ‘பயங்கர’த்தில் ஒரு அழுத்தம் இருந்தது. இயக்கம் நடத்தும் போராட்டங்களுக்கு நோட்டீஸ் கொடுப்பாராம், இண்டர்நெட்டில் ஏகப்பட்டது எழுதித்தள்ளுவாராம், கம்யூனிஸ்ட் கூட்டங்களில் முதல் வரிசையில் நிற்பாராம். மீடியாக்களில் கூட பாப்புலர் என்று சொல்லி முடித்த போது ‘பயங்கர கம்யூனிஸ்டி’ன் முகத்தைப் பார்த்தேன். அதில் ஒரு மிதப்பான வெற்றிப் புன்னகை தவழ்ந்தது. 

“எங்கு வேலை செய்கிறீர்கள்?”என்றேன்.

ஒரு வழிசலுக்குப் பிறகு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்வதாகச் சொன்னார். முதலாளித்துவ, அந்நிய முதலீட்டுடன் நடத்தப்படும் பன்னாட்டு நிறுவனத்தில் பயங்கர கம்யூனிஸ்டால் வேலை செய்ய முடியுமா என்று தெரியவில்லை. நாம் செய்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு Justification வைத்திருப்போம் அல்லவா? அவரும் வைத்திருந்தார்  “அது கொள்கை, இது பிழைப்பு” என்றார். அதோடு நிறுத்திக் கொள்வதுதான் உசிதம். நிறுத்திக் கொண்டேன். இதற்கு மேல் கேள்வி கேட்டால் அவருக்கும் சங்கடம் அவரை எனக்கு அறிமுகப்படுத்தியவருக்கும் சங்கடம்.

பிழைப்பும் கொள்கையும் வேறு வேறு என்று எந்த லாஜிக் மூலமாகவும் சமாதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை. கொள்கை முக்கியம் என்றால் பிழைப்பை பற்றி அதிகம் கவலைப்படக் கூடாது. பிழைப்புதான் முக்கியம் என்றால் எதற்காக தன்னை எதற்கு கம்யூனிஸ்ட் என்று பிரகடனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று புரியவில்லை.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் சிம்பிள் கான்செப்டாகத்தான் தெரிகிறது. தன்னை இடதுசாரி கொள்கை பிடிப்புள்ளவர் என்று சொல்லிக் கொள்பவர்கள் பலர் முதலாளித்துவ நிறுவனங்களை நடத்துவதில்லையா? பெரியாரியம் பேசும் பலர் பார்ப்பானிடம் வேலை செய்வதில்லையா? அப்படித்தான் இதுவும். 

கம்யூனிஸ்ட், இலக்கியவாதி போன்ற அடைமொழிகள் சமூகத்தில் தன் இமேஜை நிலை நிறுத்திக் கொள்ளும் ஒரு பட்டம். அவ்வளவுதான். ஆனால் பிழைப்புக்காக தன்னுடைய அடைமொழிக்கு முற்றும் வேறானதைச் செய்யலாம். அப்படிச் செய்பவர்களிடம் நமக்கு ஏதாவது தேவை இருக்குமானால் அமைதியாக போய்விட வேண்டும். அவரது வாழ்க்கை முறைதான் யதார்த்தம் என்று நம்மை நாமே சமாதானம் செய்தும் கொள்ளலாம். அந்த  மனிதருக்கும் நமக்கும் சம்பந்தேமேயில்லை என்றாலோ அல்லது அந்த மனிதரால் நமக்கு எந்த விதத்திலும் தீங்கு விளைவிக்க முடியாது என்று நம்பினாலோ தைரியமாக ஒரு அறச்சீற்றத்தைக் காட்டிவிடலாம்.

உதாரணத்திற்கு எஸ்.ராமகிருஷ்ணனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. அவரை இப்பொழுது விமர்சனம் செய்து விட முடியும். உலக சினிமாவைப் பற்றி சக்கைப்போடு போடும் எஸ்.ராமகிருஷ்ணன்தான் பாபாவுக்கு வசனகர்த்தா. சண்டைக்கோழியில் “குட்டி ரேவதி துப்பட்டாவை எடுத்துச் சுற்றுவதை” வசனமாக்கியவரும் அவர்தான். உலக சினிமாவை வரிக்கு வரி பிரித்து மேயும் உங்களின் பங்களிப்பு என தமிழ் சினிமாவின் சாமானிய ரசிகனுக்கு எதைக் குறிப்பிடுவீர்கள் என்று கூட கேள்வி கேட்கலாம். 

குற்றம் கண்டுபிடித்தால் எல்லாவற்றிலும் கண்டுபிடிக்கலாம். ஒருவனை நோக்கி கை நீட்ட வேண்டுமானால் அதற்கு நிச்சயம் ஒரு காரணம் கிடைத்துவிடும். நம் கொள்கைகள் பெரும்பாலானவை போலியானவை. அந்த கொள்கைகளை பிரகடனப்படுத்தி அடுத்தவர்களை ஏமாற்றுகிறோம். துரதிர்ஷ்டவசமாக பல நேரங்களில் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். அடிப்படையில் நாம் பிழைப்புவாதிகள். நம் ஒவ்வொருவருக்குள்ளும் மினியேச்சரைஸ்ட் அரசியல்வாதி இருக்கிறான் என்பதுதான் நிதர்சனம்.

‘நாம்’ என்று ஏன் பொதுமைப்படுத்துகிறாய் என கேள்வி கேட்க வாய்ப்பிருப்பதால், ‘நம்மில் பெரும்பாலானோர் பிழைப்புவாதிகள்’ என்று  தப்பித்துக் கொள்ள விரும்புகிறேன். பிழைப்பதற்காக ஒவ்வொருவரும் வேறு யாரிடமாவது வழிந்து கொண்டுதான் இருக்கிறோம். இதில் கொள்கையெல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. நான் கொள்கையோடு இருக்கிறேன் என்றும் அதைத்தான் வாழ்க்கையிலும் கடைபிடிக்கிறேன் என்று யாராவது சொன்னால் சந்தோஷம். உண்மையில் அப்படியான ஆளை இதுவரைக்கும் நான் பார்க்கவில்லை என்பதற்காக வருத்தப்படுகிறேன்.

பெரிய மீன் மார்கெட் இது. ஆளாளுக்கு மீன்களை வைத்து கூவிக் கொண்டிருக்கிறோம். விற்பனைக்கு கொஞ்சம் பில்ட் அப் தேவை. நான் ‘இன்னைக்கு பிடித்த Fresh மீன்’ என்கிறேன். நீங்கள்  ‘முள்ளே இல்லாத மீன்’ என்கிறீர்கள். இன்னொருத்தர் ‘செம டேஸ்ட் மீன்’ என்கிறார். 

எந்த மீன் விலை போகும் என்று யாருக்கு தெரியும்? சரி விடுங்கள். 

இந்த ஷாகித் நாசிரைப் பார்க்கலாம். இவரும் ஒரு மீன் வியாபாரிதான். பாகிஸ்தானில் இருந்து வந்து லண்டன் குயின் மார்க்கெட்டில் மீன் கடை நடத்துகிறார். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக "come on ladies..come on ladies one pound fish” என்ற பாடலை பாடுவது வழக்கம். அந்தப்பாடலைப் படம் பிடித்து யாரோ யூடியூப்பில் போட்டுவிட்டார்கள். வீடியோ செம ஹிட்டடித்துவிட்டது. இந்த இரண்டரை நிமிட பாடல் 31 வயதான இவரது வாழ்க்கையும் ஒட்டு மொத்தமாக மாற்றி போட்டிருக்கிறது.


4 எதிர் சப்தங்கள்:

அகல்விளக்கு said...

:)))

semmalai akash said...

கொள்கை முக்கியம் என்றால் பிழைப்பை பற்றி அதிகம் கவலைப்படக் கூடாது. பிழைப்புதான் முக்கியம் என்றால் எதற்காக தன்னை எதற்கு கம்யூனிஸ்ட் என்று பிரகடனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று புரியவில்லை.உண்மைதான்,சகோ! அருமையான பகிர்வு.

சுந்தரம் சின்னுசாமி said...

Fantastic

சர்வோத்தமன் சடகோபன் said...

நீங்கள் ஒரு முறை சி.எஸ் பற்றி எழுதியதை வாசித்திருக்கிறேன்.