Dec 17, 2012

நித்யானந்தா என்னும் க்ளோஸ்-அப் விளம்பரக்காரன்


நேற்று பெங்களூர் புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். கண்காட்சியில் நுழைந்தவுடன் முதல் வரிசையிலேயே நித்யானந்தா ஆசிரமத்துக்காரர்கள் கடை விரித்திருந்தார்கள். கடையில் பார்வையாளர்கள் யாரையும் காணவில்லை. எனக்கென்னமோ நித்யானந்தாவின் படத்தை பார்த்தவுடன் தெறித்து ஓடுகிறார்கள் என்றுதான் தோன்றியது. ஆனால் ஆசிரமத்துக்காரர்கள் நிறைய இருந்தார்கள். அழகான பெண்களும் உண்டு.

காலச்சுவடு, உயிர்மை, கிழக்கு என்று சுற்றிவிட்டு கடைசியாக நித்தியிடம் வந்தேன். கடை ஜொலித்தது. சீரியல் செட் கட்டி, பெரிய புகைப்படங்களில் க்ளோஸ் அப் விளம்பரக்காரனைப் போல சிரித்துக் கொண்டிருந்தார் சுவாமிகள். எனக்கு நித்தியைப் பார்க்கும் போதெல்லாம் “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் ரொம்பப நல்லவன்ன்ன்ன்” என்ற டயலாக் ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. நித்தியின் கதையை தமிழில் படமாக எடுத்தால் அதில் வடிவேலுவை நடிக்க வைக்க வேண்டும். அந்த பாடி லேங்குவேஜ்ஜில் வடிவேலு மட்டுமே பட்டையைக் கிளப்புவார்.

கடைக்கு அருகில் சென்றதும் அழகான பெண் தான் அருகில் வந்தாள்.

“கன்னடமா” என்றாள். ஆமாம் என்று சொல்லியிருந்தால் அவளே என்னிடம் பேசியிருக்கக் கூடும்.

“இல்லை, தமிழ்” என்று சொல்லிவிட்டேன். வேறு ஒரு பெண்ணைக் கோர்த்துவிட்டாள். கோர்த்துவிடப்பட்டவள் சேலத்துப் பெண். சேலம் வைசியா கல்லூரியில் படித்தாளாம்.

“நீங்க என்னவா இருக்கீங்க” என்றேன்.  

“சந்நியாசி ஆகிவிட்டேன். எம்.எஸ்.சி பயோ கெமிஸ்ட்ரி முடிச்சிருக்கேன்” என்றாள். அவள் படிப்பைப் பற்றி நான் கேட்கவில்லை. அவளாகவே சொன்னவிதத்தில் கர்வம் இருந்தது. சந்நியாசிகளுக்கு கர்வம் இருக்கக் கூடாது என்று சாமியார் சொல்லித்தரவில்லை போலிருக்கிறது.

‘ஜீவன்முக்தி’ என்ற ஒரு புத்தகத்தை கொடுத்து “சாமிகள் சொன்னது, சொல்லிக் கொண்டிருப்பது, சொல்லவிரும்புவது என சகலமும் இருக்கிறது” என்றாள். ரஞ்சிதா என்ற பெயர் என் தொண்டைக்குள் முட்டிக் கொண்டிருந்தது. அடக்கி வைத்திருந்தேன்.

“முந்நூறு ரூபாய்தான். வாங்கிப்படியுங்கள்” என்றாள். 

பெங்களூரில் ஒரு பயிற்சி வகுப்பு நடக்கிறதாம். சுவாமிகளே நடத்துகிறார் என்றாள். என்ன வகுப்பு என்று கேட்கவில்லை. பயிற்சிக்கட்டணம், தங்கும் வசதி பற்றிய தகவல்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். அசுவராசியமாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

“சுவாமிகளின் சத்சங் கேட்டிருக்கீங்களா?” என்றாள்

“ம்ம்” என்றேன்

“யூடியூப்பில் சுவாமியை பார்த்திருக்கீங்களா?” இந்த கேள்வியை எதிர்பார்த்து கிடந்தவன் போல அவள் கேட்டவுடன் மிகுந்த உற்சாகமாகிவிட்டேன்.  

“ஊரே பார்த்துச்சே” என்றுதான் சொல்ல விரும்பினேன். ஆனால் “ம்ம்ம்..பார்த்திருக்கேன்” என்றேன்.

“என்ன லேங்குவேஜ்ல பார்த்தீங்க” 

இவள் வேண்டுமென்றே கேட்கிறாள் போலிருக்கிறது. இனியும் இதை கட் செய்யாவிட்டால் என்னை பைத்தியகாரனாக்கிவிடுவாள்.

சில கேரக்டர்கள் நாம் கலாய்ப்பதற்கென்றே பிறப்பெடுத்து வந்திருக்கின்றன. நித்யானந்தா  அப்படியான ஒரு கேரக்டர். சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் ஓட்டிவிட வேண்டும்.

“சின்னவீடு” படத்தில் வரும்  ‘நாகிரதனா...மியூஸிக்தான் பேக்ரவுண்டல் ஓடுச்சு” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன். அவளுக்கு புரிந்திருக்குமா என்று தெரியவில்லை. இணையத்தில் ‘நக்கீரன்’ பதிவேற்றிய க்ளிப்பிங்ஸை பார்த்த அத்தனை பேருக்கும் புரியக்கூடும்.


13 எதிர் சப்தங்கள்:

அருண் இராமசாமி said...

Sir, அந்த பிகர் நம்பர் கிடைக்குமா ?

Vaa.Manikandan said...

அருண், நல்லா வருவீங்க தம்பீ :)

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

நாகிர்தனா.. நானும் அதே மியூசிகில் தான் கேட்டேன். :)

Anonymous said...

நாகிர்தனா....lolzzzz...

ரகு said...

//நாகிர்தனா.. நானும் அதே மியூசிகில் தான் கேட்டேன். :)//

கேட்டீங்களா? பார்த்தீங்களா?

Jayadev Das said...

பெங்களூர்ல கடை விரிக்கக் கூடாது, தமிழகத்தில் ஆதீனம் பிரச்சினை, ஆள் அண்டர் கிரவுன்டுல போயிட்டான்னு சொன்னாங்களே!!

Vaa.Manikandan said...

நன்றி விஜி,

ரகு, விஜி பதில் சொல்வாங்க :)

ஜெயதேவ்,
நான் சொன்னேன்ல...எவ்வளவு அடிச்சாலும் தாங்குற நல்லவன்னு...

Unknown said...

வா மணிகண்டன் நீங்க அவர் சிஷ்யரா சேந்துடுங்க. நல்லா வருவீங்க

Kathiravan Rathinavel said...

நித்தி மட்டுமில்லை, அவர் கூட இருக்கவங்களும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க போல

OOthari said...

Please give me the details about the exhibition

Vaa.Manikandan said...

பேலஸ் க்ரவுண்ட்.

Ananth Sozhan said...

OOthari, That girl is not in duty paa, dn't try ;-)

Uma said...

நாகிரதனா BGM comparison super!
நான் நித்தியின் புத்தகங்களை வாங்கியதில்லை எனினும் வாரபத்திரிக்கையில் அவர் எழுதிய தொடர்கள் படித்திருக்கிறேன் நன்றாகவே எழுதியிருந்தார்.(இதில் யாருக்கும் மறுப்பு இருக்காது என நினைக்கிறேன்) பின்னே,,, கொஞசமாவது திறமையிருந்தால்தானே ஏதாவது ஒருவகையில் பிரபலமாகமுடியும்