Dec 16, 2012

துப்பாக்கி

துப்பாக்கி- அவ்வப்போது இது அலற வைத்துவிடுகிறது. சில சமயங்களில் தூக்கத்தையும் கெடுத்துவிடுகிறது.

அமெரிக்காவில் கனெக்டிக்கெட் என்ற இடத்தில் 27 குழந்தைகளை சுட்டுக் கொன்ற நிகழ்வு பற்றிய செய்திகளை வாசித்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ கனவு முழுவதும் துப்பாக்கிச் சூடாகவே இருந்தது.  

ஆதம் லான்ஸா என்ற நபர்தான் சுட்டுக் கொன்றிருக்கிறார். ஆனால் ஏகப்பட்ட செய்திகளில் ரியான் லான்ஸா என்பவரின் படத்தைப் போட்டு ‘இவர்தான் குற்றவாளி’ என்று செய்தி போட்டுவிட்டார்கள். ஃபேஸ்புக்கில் ரியான் லான்ஸாவை மக்கள் கதறடித்துவிட்டார்கள். செய்யாத குற்றத்திற்காக லட்சக்கணக்கானவர்களின் வசவுகளையும் சாபங்களையும் தாண்டுவது எத்தனை சங்கடமாக இருக்கும் என்பதை நினைத்தாலே அலறுகிறது. இப்பொழுது தனது முகநூல் அக்கவுண்டையே அழித்துவிட்டார் போலிருக்கிறது.


இந்த நிகழ்விற்கு பிறகு அமெரிக்காவில் துப்பாக்கி புழக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து விவாதத்தை தொடங்க வேண்டும் என ஒபாமா பேசியிருக்கிறார். அமெரிக்காவில் துப்பாக்கியை கட்டுப்படுத்துவது பற்றி அவர்கள் முடிவெடுக்கட்டும். ஆனால் அதைவிட முக்கியமான  ‘வஸ்து’ ஒன்றின் புழக்கத்தை கட்டுப்படுத்தும் கடமை தமிழக ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது - அது டாஸ்மாக். 

பதினான்கு வயது சிறுவன் கூட சர்வசாதாரணமாக சரக்கு அடிக்கிறான். இப்பொழுது வியாபாரத்திற்காக டாஸ்மாக்கை ஊக்குவிக்கும் தமிழகமும் அதன் அரசும் இதற்கான பெரும் விலையை அடுத்த தலைமுறையில் கொடுக்க வேண்டியிருக்கும். தமிழக அரசு தூங்குகிறதா அல்லது தூங்குவது போல நடிக்கிறதா என்று தெரியவில்லை. 
                                   
                                                                ***

கனவுகளில் வந்த அமெரிக்கக் குழந்தைகளின் முகம் இந்த நாள் முழுவதற்குமான சோகத்தை கவ்விவிடச் செய்யும் பலம் வாய்ந்தவை. ஒரு நாளை சோகமாக முடித்துக் கொள்ள விருப்பமில்லை. வெளியே சென்றுவர விரும்புகிறேன். புத்தகக் கண்காட்சிக்கு செல்லலாம் என்றிருக்கிறேன்.
    
பெங்களூரில் புத்தகத் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. டிசம்பர் 14 இல் ஆரம்பித்து 23 வரைக்குமான பத்து நாள் கண்காட்சி. கிட்டத்தட்ட 200 கடைகள் கண்காட்சியில் கலந்து கொள்கின்றனவாம். தமிழில் இருந்து எந்தப் பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன என்று தெரியவில்லை. உயிர்மை, கிழக்கு கலந்து கொள்வதாக Facebook-ல் யாரோ எழுதியிருந்தார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பெங்களூர் கே.ஆர் புரத்தில் தங்கியிருந்த போது - என்னிடம் பைக் இல்லாத காலம் அது- பேருந்து பிடித்து கண்காட்சியை பார்க்கச் சென்றிருந்தேன். புத்தகக் கண்காட்சி என்றாலே சென்னைப் புத்தகக் கண்காட்சிதான் ஞாபகத்திற்கு வந்து கொண்டிருந்தது. அந்தத் திருவிழாக் கூட்டமும், ஆரவாரமும், கொண்டாட்ட மனநிலையும் பெங்களூரிலும் இருக்கும் என நம்பிக் கொண்டிருந்தேன்.

ஆனால் உள்ளே நுழைந்ததும் உண்மை பல்லிளித்தது. வாழும் கலை, நித்யானந்தா ஆஸ்ரமம் என ஆளாளுக்கு இடம் பிடித்திருந்தார்கள். ஓரிரண்டு தமிழ் புத்தகக் கடைகள் பாவமாக முழித்துக் கொண்டிருந்தன. கன்னடப் புத்தகங்களுக்கும் இதே கதிதான். மொத்தக் கண்காட்சியும் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது. ஆனால் வாசகனுக்கு அந்த சோம்பல் தன்மை ஒருவிதத்தில் நல்லது. அவசியமும் கூட. 

இருக்கும் மிகக் குறைவான கடைகளில் தேவையான புத்தகங்களை அலசி வாங்க முடிகிறது. நாசியில் புழுதி நெடி ஏறுவதில்லை. ஒரு புத்தகத்தை எடுத்து பக்கங்களை புரட்டிக் கொண்டிருக்கும் போது இன்னொருவர் நமது பின்னால் வந்து உரசிக் கொண்டிருக்க மாட்டார். பில் போடும் இடத்தில் “என்கிட்ட முதலில் வாங்கிக் கொண்டு என்னை அனுப்பி விடுங்க” என்று கடைக்காரரை நச்சரித்து நம்மை சங்கடப்படுத்த மாட்டார்கள். பசி வந்து கேண்டீனை நோக்கி மனம் ஓடுவதில்லை.

என்னதான் இருந்தாலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் குழந்தையை சலூனுக்கு கூட்டிபோவது, மீன் வாங்கித்தருவது, மார்கெட்டில் காய்கறிகளை வாங்கிவருவது என்று செம பிஸியாகி விடுவது வழக்கமாகியிருக்கிறது. அத்தனையும் முடித்துவிட்டு மதியம் சாப்பிடும் போது மணி இரண்டாகியிருக்கும். கொஞ்சம் நேரம் கண்ணயர்ந்தால் தேவலாம் போலிருக்கிறது என்று கால் நீட்டினால் மாலை ஆகிவிடும். அதன் பிறகு ஒரு வாக், கொஞ்ச நேரம் டிவி என்று முடித்துவிட்டு தூங்கி எழுந்தால் திங்கட்கிழமை தனது அகோர பசிக்கு நம்மை இரையாக்கிக் கொள்கிறது. இதற்கு நம் அகராதியில் ‘Rest’ அல்லது ‘Relaxation' என்று பெயர். ஆனால் மதியம் தூங்காதவர்கள் இப்படியானவர்களை சோம்பேறிகள் என்பார்கள். 

பெங்களூரில் இருப்பவர்களிடம் இந்த சோம்பேறித்தனம் இருக்கும். அதுவும் மார்கழியின் குளிர்ந்த காற்று மயக்கி படுக்கையில் தள்ளிவிடும். விதிவிலக்காக, இன்றைய சுறுசுறுப்பாக இருந்தாலோ அல்லது சோம்பேறித்தனத்தை இந்த வாரம் ‘கேன்சல்’ செய்வதாகவோ இருந்தால் பேலஸ் கிரவுண்ட்ஸ் வரைக்கும் ஒரு நடை போய் வரலாம்.  

1 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

மக்களின் நல்வாழ்வா, மக்களை வைத்து வியாபாரமா என்பதில் அரசுகள் கவனம் கொள்ள வேண்டும்.. பணத்துக்காக ஆயுதம், வஸ்துக்கள், மதி மயக்கும் மதவாதங்கள் என பலவற்றை அனுமதித்தால் பின்விளைவுகள் மோசமானவையாக இருக்கும்.