Nov 7, 2012

ஆடை விலகிக் கிடக்கும் பைத்தியம்
அலுவலகத்திற்கு செல்லும் வழியில் தினமும் ஒரு மனிதனைப் பார்ப்பதுண்டு. நீண்ட உருவம், தாடி, கிழிந்த மேலாடை, கூடவே சுமந்து கொண்டிருக்கும் ஒரு மூட்டை.

அந்த மனிதனுக்கு என்ன வயதிருக்கும் என்று கணிக்க முடிந்ததில்லை. தோராயமாக நாற்பது இருக்கலாம். மூட்டையில் கிழிந்த துணிகள் பிதுங்கிக் கொண்டிருக்கும். கால் பாதங்களில் துணியைச் சுற்றியிருப்பார். அதுதான் அவருக்கு செருப்பு போலிருக்கிறது. 

காலை நேரத்தில் சாலையோரமாக இருக்கும் ட்ரான்ஸ்பார்மரின் கீழே இருப்பார். அருகில் ஒன்றிரண்டு தெரு நாய்கள் இருக்கும். அவர் என்ன சாப்பிடுகிறார், யார் தருகிறார்கள், அங்கேயே உறங்குகிறாரா என்பதைப்பற்றியெல்லாம் யோசித்ததில்லை. 

ஒருவேளை மனநிலை பிறழ்ந்தவராக இருக்கக் கூடும். அவரது ஆடை அப்படித்தான் இருக்கும். தனது அந்தரங்கம் பற்றிய எந்தக் கவலையுமில்லாமல் படுத்துக் கிடக்கும் மனிதனை அப்படித்தான் கருதியிருந்தேன். விலகிக் கிடக்கும் தனது ஆடை பற்றிய பிரக்ஞையில்லாமல் படுத்துக் கிடப்பதை பல முறை பார்த்திருக்கிறேன். பணிக்கு வரும் காலை நேர அவசரத்தில் அந்த சில வினாடி 'காட்சி'யை கடந்துவருவது வாடிக்கையாகிவிட்டது. பெரும்பாலும் அந்த நேரத்தில் தூங்கிக் கொண்டிருப்பார்.

ஐ.டி நிறுவனத்தில் பணி புரியும் பெண்களும், அருகில் இருக்கும் பனியன் கம்பெனி ஊழியர்களும் நடந்து செல்லும் அந்தப்பாதையில் அப்படிக் கிடப்பவரை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை அல்லது கண்டுகொள்ளாதவாறு நடித்திருக்கலாம். ஆடை கிழிந்த பல பைத்தியகாரப் பெண்மணிகளை வன்புணர்ந்த தேசம் இந்த சுதந்திர மனிதனை மட்டும் அனாதரவாக விட்டு வைத்திருந்தது. 

நேற்று மாலை வீடு திரும்பும்போது அந்தச் சாலையில் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. தசரா கொண்டாட்டம் முடியாத இந்த ஊரில் சாலையின் முனையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் சில பெண்கள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். பைக்கை நிறுத்திவிட்டு இறங்கினேன். இரண்டு ஆட்டம் பார்த்துவிட்டு வீட்டிற்கு கிளம்புவது என திட்டமிட்டிருந்தேன். அப்பொழுது அந்த பெரியவரின் ஞாபகம் வந்தது. அவரது ட்ரான்ஸ்பார்மரைச் சுற்றிலும் விளக்குகளை அமைத்திருந்தார்கள்.  அவரைக் காணவில்லை. பெங்களூரில் இந்தக் கொண்டாட்டங்களுக்கான மின்சாரம் எப்படி கிடைக்கிறது என்று தெரியவில்லை. கிலோ மீட்டர் கணக்கில் வண்ண விளக்குகளால் சாலைகளை ஜொலிக்கச் செய்கிறார்கள்.

அந்த ட்ரான்ஸ்பர்மரை ஒட்டிய பெட்டிக்கடையில் ஒரு மாஸா வாங்கிக் கொண்டு ஆட்டத்தைப் பார்த்தேன். ஆட்டம் முடிந்தபிறகு மேடையேறிய ஒரு பெண்மணி மைக்கில் கன்னடத்தில் அறுத்துக் கொண்டிருந்தாள். கடைக்காரரிடம் அந்த பைத்திய மனிதனைப் பற்றி விசாரித்தேன்.

"உனக்கு தெரியாதா?" என்றார். 

"நான் இந்த ஏரியா இல்லை" என்றேன். 

"அவரை எங்கோ அனுப்பிவிட்டார்கள்" என்றார். எனக்கு அதிர்ச்சி எதுவுமில்லை. 

அதோடு நிறுத்தியிருக்கலாம். "எப்படி?" என்றேன். 

சாலையில் போகிற பெண்களிடம் தனது விலகிய ஆடையின் வழியாக சேட்டை செய்தாராம். அவர் செய்திருப்பார் என எனக்கு நம்பிக்கையில்லை. கடைக்காரரேதான் தொடர்ந்தார். அந்த ஏரியாக்காரர்கள் அடித்ததில் மயக்கம் அடைந்துவிட்டாராம். குப்பை வண்டியில் தூக்கிக் கொண்டு போய் ஏரிக்கரையோரம் போட்டுவிட்டார்கள் என்று சர்வசாதாரணமாகச் சொன்னார். 'ஒரு செத்த நாயை வீசிவிட்டு வந்தார்கள்' என்ற தொனியிருந்தது அந்தப் பேச்சில்.

இப்பொழுதுதான் அதிர்ச்சியாகியிருந்தேன். "மயக்கமா?இறந்துவிட்டாரா?" என்று கேட்டேன்.

ஒரு மார்க்கமாக பார்த்தார். 

'போலீஸ் கேஸ் எதுவுமில்லையா?' என்று கேட்க நினைத்தேன். வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டன. அடுத்த பாடலுக்காக மேடையில் நடனப்பெண்மணிகள் வந்து நின்றார்கள். மாஸாவுக்கான காசை கொடுத்துவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தேன். "இன்னொரு ஆட்டம் பாருங்க" என்றார் கடைக்காரர். நான் திரும்பிப்பார்க்காமல் கிளம்பினேன். பாடல் சத்தம் காதைக் கிழித்தது.

6 எதிர் சப்தங்கள்:

அகல்விளக்கு said...

:-(

Unknown said...

இப்படி பட்ட மனிதர்களை காணும் பொழுது மனம் கணக்கும், செய்வது அறியாது மௌனமாய் போவேன்... வேதனையான நிகழ்வு

Anonymous said...

:(((

மனிதாபிமானி said...

அந்த மனிதன் அதே நகரத்தில் வேறு ஏதேனும் பகுதியில் உயிரோடு இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.

சேக்காளி said...

//ஆடை கிழிந்த பல பைத்தியகாரப் பெண்மணிகளை வன்புணர்ந்த தேசம் இந்த சுதந்திர மனிதனை மட்டும் அனாதரவாக விட்டு வைத்திருந்தது//
இந்த வரிகளை முடித்த போது "இந்த மனிதனை மட்டும் சுதந்திரமாக விட்டு வைத்திருந்தது" என்றல்லவா எழுதியிருக்க வேண்டும் என நினைத்தேன்.ஆனால் முடிவில் அனாதரவாக கூட விட்டு வைக்கவில்லையே.

Uma said...

மனதை பிசையும் நிகழ்வு..என் சிறு வயதில் கண்டிருக்கிறேன் 18 வயதுப்பெண்னொருத்தி அரைகுறை ஆடையோடு வலம் வருவாள் எங்கள் ஊரில். வீட்டினர் அனைவரும் மேலோகம் சென்றுவிட ஒரு அக்கா மட்டுமே சென்னையில் இருப்பதாக கேள்வி.. என் அம்மாவும் சித்தியும் அடிக்கடி பாவாடையும் சட்டையும் மாட்டி விடுவார்கள் மிருகங்களின் கொடூரத்தினால் பாதிக்கப்பட்டு வாந்தி ம்யக்கம் என அவதிப்படும் போது அப்பபோ ஒரு மனிதாபிமானமிக்க ஒரு டாக்டர் உதவுவார்.3,4 முறை கருகலைக்கப்பட்டது.. 10,12 வருடங்கள் கழிந்து ஒருநாள் கீழே விழுந்து மயங்கி சுய நினைவு வந்த்போது பூரண குணமாகி விட்டிருந்தாள் அந்த அக்கா. நான் உட்பட நிறைய பெண்கள் ஆனந்தகண்ணீருடன் சென்னைக்கு அவளது அக்காவுடன் வழியனுப்பிவைத்தோம்.


எல்லா மனிதர்களுக்கும் உலகில் வாழ பூரண உரிமை உண்டு அதை தட்டிப்பறிப்பது எந்தவிதத்தில் நியாயம்?