Nov 22, 2012

செத்தாண்டா கசாப்


ஒரு மனிதனை தூக்கிலிட்டு கொன்றிருப்பது ஒட்டுமொத்த சமூகத்தையும் குதூகலிக்கச் செய்திருக்கிறது. பட்டாசுகளும் கொண்டாட்டங்களும் டிவிக்களிலும், செய்தித்தாள்களிலும் முக்கியமான இடத்தை பிடித்துவிட்டன. பெருநகரங்களின் வீதிகளில் இனிப்பை வாரி வழங்கியிருக்கிறார்கள். ஒரு அசுரன் அழிக்கப்பட்டதாக மக்கள் கொண்டாடி களைத்திருக்கிறார்கள்.

இன்றைய இந்தியாவின் குல்லா போட்ட குட்டி காந்தியார் அண்ணா ஹசாரே அவர்கள் கசாப்பை பொது இடத்தில் தூக்கிலிட்டிருக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். குட்டி காந்தியாக உலவினாலும் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், இரத்தத்துக்கு ரத்தம் என்பதில் உறுதியாக இருக்கிறார். நல்லவேளையாக அரசே கசாப்பை தூக்கில் போட்டுவிட்டது. இவரிடம் கொடுத்திருந்தால் தனது பற்களால் அவனது நெஞ்சைப் பிளந்திருப்பார் போலிருக்கிறது. இத்தகைய ஆவேசத்தினாலும் தேசப்பற்றினாலும்தான் இந்தியாவிலிருந்து ஊழலை முற்றுமாக ஒழித்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களின் தேசப்பற்றை அணைந்துவிடாமல் காக்கும் அரசுதான் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியம். ஆனால் நமது ஆட்சியாளர்கள் ஒரு படி மேலே போய் அணைந்து கொண்டிருந்த தேசப்பற்றை ஊதிவிட்டிருக்கிறார்கள். இப்பொழுது அது கொழுந்துவிட்டு எரிகிறது. மக்களுக்கு கிளம்பியிருக்கும் வெறியைப் பார்த்தால் ஆளுக்கு ஒரு கருங்கல்லை தூக்கிக் கொண்டு பாகிஸ்தான் மீது போருக்குச் செல்லத் தயாராக இருப்பார்கள் போலிருக்கிறது. நேற்று ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் மூவர்ணத்தில் புகை வந்து கொண்டிருந்தது. இவ்வளவு உணர்ச்சிகரமான தேசப்பற்று எப்பொழுதாவதுதான் வெளியில் தெரிகிறது. குறிப்பாகச் சொன்னால் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியில் வெளிப்படுகிறது அல்லது  பாகிஸ்தான் தீவிரவாதியை தூக்கில் போடும் போது வீதியில் பெருக்கெடுக்கிறது.

பெரும்பாலான அல்லது கிட்டத்தட்ட அத்தனை அரசியல் கட்சிகளும் அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றிருக்கின்றன. இந்த வரவேற்பில் வாக்கு வங்கி அரசியல் பிரதான இடம் பிடித்திருக்கிறது என்று யாராவது சொன்னால் அவரை அழைத்து வாருங்கள். அவரது முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட வேண்டும். இந்தத் தண்டனையை எதிர்த்து பேசும் கயவாளிகள், கருங்காலிகளையெல்லாம் வரிசையாக நிறுத்தி வைத்துச் சுட்டுவிடலாம்.  ஒரு தேசத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதைவிடவும் ஆட்சியாளர்களுக்கு வேறு என்ன பெருமை கிடைத்துவிடப் போகிறது? அதைத்தான் இப்பொழுது செய்திருக்கிறார்கள். Sweet surprise.

பால்தாக்கரே மரணம், அதற்கான பந்த், பெருகும் வேலையில்லாத்திண்டாட்டம், சரியும் பொருளாதாரம் என இந்த தேசமே சோகங்களிலும் சிக்கல்களிலும் தத்தளித்து கொண்டிருக்க, குஜராத் தேர்தல் வேறு கழுத்தை நெரிக்கத் துவங்கியிருக்கிறது. இது அத்தனையிலிருந்தும் மக்களுக்கு சரியான நேரத்தில் Relaxation கொடுத்திருக்கும் அரசுக்கான முழு ஆதரவாளனாக மாறிவிட விரும்புகிறேன்.

கசாப்பை ஏவிவிட்டவர்கள் இந்த தூக்குதண்டனையின் காரணமாக பயத்தில் காலோடு சிறுநீர் கழித்திருப்பார்கள் என நம்பலாம். இனிமேல் அடங்கி ஒடுங்கிக் கிடப்பார்கள். நம்மால் கசாப் அநியாயமாக செத்துவிட்டானே என மனசாட்சி உறுத்த சயனைடு குப்பியைக் கடித்தோ அல்லது தூக்கு மாட்டிக் கொண்டோ அவர்கள் செத்துப்போனால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

எல்லை தாண்டிய பயங்கரவாதிகளும், இந்தியாவிற்குள் ஊடுருவியிருக்கும் தீவிரவாதிகளும் துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் தூக்கி வீசிவிட்டு பெட்டிக்கடை வைப்பதற்கும்,  புரோட்டா மாவு பிசையும் வேலைக்கும் போய்விடுவார்கள். இனி எந்த ஒரு தீவிரவாதியையும் யாராலும் மூளைச்சலவை செய்துவிட முடியாது. காலத்தால் அழிக்க முடியாத காவியமாக இடம்பெற்றுவிட்ட இந்த தண்டனை ஒவ்வொரு தீவிரவாதிக்கும் ஒரு பாடமாக இருக்கும். ஏ.கே 47 இல்லை சாதாரண தண்ணீர் துப்பாக்கியைக் கூட இனி தொட மாட்டார்கள். இனி குண்டு வெடிப்பில்லாத, தீவிரவாதிகள் இல்லாத, சாந்தி நிலவும் ஒரு நாட்டில் வாழப்போகிறேன் என்பதை நினைத்து ஆனந்தக் கூத்தாடுகிறேன்.

கசாப்பால் சுடப்பட்ட மனிதர்களின் குடும்பத்தாருக்கு நீதி வழங்கப்பட்டுவிட்டது என ஒபாமாவின் வார்த்தைகளை ப.சிதம்பரம் ரிபீட் அடித்திருக்கிறார். இந்தியாவில் இன்றைக்கு இருக்கும் மிகச் சிறந்த அறிவாளிகளில் ஒருவரான ப.சி சொல்வதற்கு எதிர்பேச்சு பேசும் அருகதை யாருக்கும் இல்லை என நம்புகிறேன். இனி அந்தக் குடும்பங்களின் அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். அவர்களின் பொருளாதாரப்பிரச்சினைகள், அன்பிற்குரியவனை இழந்ததற்கான பதிலீடு என அத்தனைக்கும் இந்த ஒரு மரண தண்டனை பதிலளித்திருக்கிறது.

இந்த தூக்கு தண்டனைக்கு எதிரான எந்தக்கருத்தையும் நான் முன் வைக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும். பெரும்பாலானாவர்களின் விருப்பம் என்னவோ அதுவேதான் என் விருப்பமும். இந்த தேசமக்கள் எதற்காக குரல் கொடுக்கிறார்களோ அதை ஏற்றுக் கொள்கிறேன். தேசத் துரோகியாகவோ அல்லது இந்திய இறையாண்மைக்கு எதிரானவனாகவோ ஒரு போதும் இருக்கவிரும்பவில்லை.

ஜெய்ஹிந்த்!

7 எதிர் சப்தங்கள்:

Seeni said...

ethume sollala neenga....

nallaave sollideenga...

Anonymous said...

//இந்தியாவில் இன்றைக்கு இருக்கும் மிகச் சிறந்த அறிவாளிகளில் ஒருவரான ப.சி சொல்வதற்கு எதிர்பேச்சு பேசும் அருகதை யாருக்கும் இல்லை என நம்புகிறேன்//

Boss idhu nakaal thaney....
Vijay

Anonymous said...

boss neenga nallavara kettavara?

avvvvvvvvv

MSP.Raj

ஜீவ கரிகாலன் said...

இன்னொரு so called intellectual கூட்டம் தேசியம், ஜெய் ஹிந்த் போன்றவற்ரை கட்டம் கட்டி நக்கலடித்து, சமதர்மம், மனிதம், அறம் என்றெல்லாம் தன்னை பிரபஞ்சவாதியாக காட்டிக் கொள்கிறதே!! அதுவும் கொடுமை தான்....

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

இரண்டு பயங்கரவாத அரக்கர்கள் அடுத்தடுத்து ஒரே மாநிலத்தில் ஒரே வாரத்தில்... சாவு..! ஆக மொத்தம் மக்களுக்கு நவம்பரில் மூணு தீபாவளி வந்துச்சுன்னு சொல்லுங்க..!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

என்ன செய்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?

கசாப்பை இன்னும் இருபது ஆண்டுகள் சிறையில் வைத்திருந்து பராமரிக்க வேண்டுமா? அல்லது நீ திருந்தி அன்பு வடிவமாக மாறி விட்டாய்;அனைத்து பாகிஸ்தானியர்களையும் போய்த் திருத்து என்று பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டுமா?

பெருவாரியான சிந்தனைக்கு எதிராக கருத்துரைக்கும் 'ஒளிவட்ட சிந்தனையாளர் மாஸ்க்'கின் விளைவா இந்தப் பதிவு?

இந்தப் பத்தியைப் படிக்கவும்..இதுவே சரியான பார்வை.

பாபு said...

அறிவன் ஐயா சொல்வது நிரம்பவும் சரி.

கசாப் போன்ற கொடூர பயங்கரவாதிகளுக்கு உடனடியாகத் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

பாகிஸ்தான்காரன் திராணியற்றுப் போய் சரப்ஜித்சிங்கை தூக்கிலிட வக்கின்றி 21 ஆண்டுகள் பிரியாணி போட்டு பாதுகாப்பது அவனுடைய கையாலாகாத் தனம். அதனுடன் ஒப்பிட்டு கசாபை தூக்கிலிடாமல் காலந்தாழ்வு செய்யாத வரை சரி