Sep 15, 2012

மனோன்மணிதமிழில் வரும் சிற்றிதழ்களின் பட்டியலை யாராவது கேட்டால் "புது எழுத்து" என்ற பெயர் முதலில் நினைவுக்கு வந்துவிடுகிறது. அதற்காக தமிழில் வேறு நல்ல சிற்றிதழ்களே இல்லை என்றெல்லாம் அர்த்தம் இல்லை. மனதுக்குள் 'புது எழுத்து'தான் பதிந்து இருக்கிறது.

சிற்றிதழ் என்பதற்கு எத்தனை நியதிகள் வேண்டுமானாலும் இருக்கலாம். என்னளவில் 'காம்ப்ரமைஸ்' செய்துகொள்ளாத தன்மைதான் சிற்றிதழுக்கு அவசியமான தகுதி. "புது எழுத்து" அப்படியான ஒரு இதழ். மனோன்மணி அப்படியான ஒரு ஆசிரியர். 

கடந்த பதின்மூன்று வருடங்களாக 'புது எழுத்து' ஒரு இயக்கமாகவே நடைபெறுகிறது. யாராவது விழா நடத்தி பணமுடிப்பு கொடுத்தால் கிடைத்த பணத்திற்கு சில புத்தகங்களை பதிப்பித்துவிடுகிறார். நல்ல படைப்பை அனுப்பி "புத்தகமாக கொண்டு வர முடியுமா" என்றால் "இந்த மாதச் சம்பளம் புது எழுத்து இதழ் வேலைகளுக்கு சரியாக போய்விட்டது அடுத்த இரண்டு மாதச் சம்பளத்தை சேர்த்து உங்கள் புத்தகத்தை கொண்டு வந்துவிடுகிறேன்" என்கிறாராம். 

மனோன்மணி கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் இருக்கும் தொல்லியல் சின்னங்களையும் குகை ஓவியங்களையும் தேடித் தேடி அலைகிறார். அவை பாலிஷ் போடப்பட்ட கிரானைட் பலகைகளாக லாரிகளில் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மனோன்மணி கவிதைகள் எழுதுவார்- எழுதியிருக்கிறார் என்பதுதான் சரியான பதம். இப்பொழுது எழுதுவதில்லை. அவருடைய கவிதைகள் 'கலவரம்' என்ற பெயரில் தொகுப்பாக வந்திருக்கிறது. அது 1998 ஆம் ஆண்டில். இதுதான் அவரின் முதல் தொகுதி. அதன் பிறகாக வேறு ஏதேனும் தொகுப்பு வந்திருக்கிறதா என்றும் இப்பொழுது இந்தத் தொகுப்பு கிடைக்குமா என்றும் தெரியவில்லை. 

நேற்றிரவும் இன்று பகல் முழுவதுமாக இந்தக் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்க முடிந்தது. தொகுப்பில் சில கவிதைகள் பிடித்திருக்கின்றன. சில கவிதைகள் பிடிக்கவில்லை. பிடிக்காத கவிதைகள் ஒவ்வொரு தொகுப்பிலும் இருக்கத்தான் செய்யும். அதுதான் இயல்பும் கூட. பிடித்த கவிதைகளில் இரண்டு.

                                                                      ***

                                                            1) வலி

தூக்கி வந்தேன் பெரிய பலாவொன்றை
தோள்பட்டை வலிக்க வில்லை
உரியவர் முன் கை வீச
இடம் சேர்த்து பெற்ற காசில்
ஒரு சுளை தேடி வாங்கி மென்றேன்
ராத்தூக்கத்தை புரட்டி அதே
பலாப்பழம் மணத்தது
தோளில் குத்துவதாய் உயிர்த்தது
சுமக்க போகவில்லை மறுநாள்


யாரோ ஒருவருக்காக பலாப்பழத்தை தூக்கி வருகிறார். பெரிய சிரமம் எதுவும் இல்லை. பழத்தை கொண்டு வந்து கொடுத்துவிட்டு அதற்கான காசை வாங்கிக் கொள்கிறார். கிடைத்த காசுக்கு ஒரு சுளையை வாங்கித் தின்கிறார். இரவில் அந்தப்பழத்தின் வாசனை தூக்கத்தை கெடுக்கிறது. அப்பொழுது தோளில் வலியெடுக்கிறது.

பழத்தை எடுத்துக் கொண்டு போகும் போது ஏன் வலிக்கவில்லை, காசு கொடுத்து ஒரு சுளை வாங்கித் தின்றுவிட்டு தூங்கும் போது ஏன் வலிக்க்கிறது? இந்த இரண்டு கேள்விகளுக்கான பதிலை கண்டுபிடிப்பதில்தான் கவிதையின் சூட்சுமம் ஒளிந்திருக்கிறது.

                                                                ***

                                               2) ஒரு கவிதை

பாதையில் நடந்து கொண்டிருந்தேன்
யாருமென்னை சட்டை 
செய்யவில்லை

இடித்துக் கொண்டவர்கள்
முணுமுணுக்கவில்லை
கோபிக்கவில்லை

எதையும் காட்டவில்லை
அந்த முகங்கள்

ஓரிருவரை
நானே தட்டியும் 
நிறுத்தியும் கேட்டேன்

தாமே
பேசிக் கொள்வதாய்
அபிப்பிராயப்பட்டு
நகர்ந்து போனார்கள்

நான் 
வேகமாய் இடித்து
நடந்து கொண்டிருக்கிறேன்


சாலையில் நடந்து கொண்டிருக்கிறார். யாருமே கண்டுகொள்ளவில்லை. யார் மீதாவது இடித்தாலும் கூட அவரை யாரும் அலட்சியம் செய்வதில்லை. "அட ஏன் யாருமே கண்டு கொள்ள மாட்டேங்குறீங்க?" எனக் கேட்கிறார். அப்பொழுதும் யாரும் பதில் அளிக்கவில்லை "தனியாக பேசிட்டு இருக்கான்" என அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். 

ஏன் இவரை யாருமே கண்டுகொள்வதில்லை? பரிதாபமான ஜீவனாகத் தெரியலாம், பைத்தியமாகத் தெரியலாம்.வேறு ஏதேனும் காரணமாகக் கூட இருக்கலாம். இந்த காரணத்தை யோசிக்க ஆரம்பிக்கிறோம் அல்லவா? அதுதான் கவிதையின் தொடக்கப்புள்ளி. இந்த இடத்திலிருந்துதான் கவிதை விரிவடைகிறது.
                     
                                                                   ***

கவிஞனை பற்றி எந்த நினைவும் இல்லாமல் இந்தக் கவிதைகளை வாசித்திருக்க வேண்டும். அப்பொழுது வேறொரு அனுபவம் கிடைத்திருக்கும். எனக்கு அது சாத்தியமாகவில்லை. உருகி ஓடும் கவிதையிலிருந்து மனோன்மணி என்ற எழுத்தாளன், கவிஞன், தனது அத்தனை சுகதுக்கங்களையும் இலக்கியத்துக்காக கேள்விக்குள்ளாக்கும் ஒரு ஆளுமை - பிம்பமாக எழுகிறான். அதை ரசிக்கவும் செய்கிறேன். எந்தச் சங்கடமும் இல்லாமல்.

1 எதிர் சப்தங்கள்:

பொன். வாசுதேவன் said...

கலவரம் தொகுப்பு பற்றிய பார்வை பிடித்திருக்கிறது. பகிர்வுக்கு நன்றி மணி.