Aug 3, 2012

சிந்துபாத்தின் கடற்பயணம்
"சிறுகதை நாவல்னா பிரச்சினையில்லை ஆனால் கவிதை புத்தகம் விக்கறதில்லை சார்” இப்படிச் சொல்லாத ஒரு பதிப்பாளரையாவது பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருந்தால் நீங்கள் பாக்கியவான். 

தமிழகத்தில் மிக அதிக அளவில் Manufacturing செய்யப்படும் வஸ்தாக கவிதைதான் இருக்கிறது அதே சமயம் மிகக் குறைந்த அளவில் விற்பனையாகும் வஸ்தாகவும் இருக்கிறது. கவிதை எழுதுபவர்களில் பத்து சதவீதம் பேர் தலா ஒரு பிரதி வாங்கினாலும் கூட பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்க வேண்டும். பிறகு ஏன் கவிதை புத்தகம் விற்பனையாவதில்லை என்ற கேள்வியைக் கேட்டால் அனேகமாக ”கவிதைகள் புரிவதில்லை” என்பதுதான் பதிலாக வரும். 

கவிதைகள் உண்மையிலேயே புரிவதில்லையா?

கொஞ்சம் சங்கடமான கேள்விதான். கவிதை வாசிப்பதற்கு ஆரம்பத்தில் கொஞ்சம் உழைப்பு தேவைப்படுகிறது. வானியல் படிப்பையோ அல்லது ராக்கெட் டெக்னாலஜியையோ கற்றுக்கொள்வதற்கு தேவைப்படும் அளவிற்கான உழைப்பு அவசியம் இல்லை என்றாலும் கூட பத்தாம் வகுப்பு மாணவன் தனது கணித பாடத்திற்கு செலுத்தும் அளவிற்கான உழைப்பு அவசியம். அதுவும் கூட முதல் பத்து அல்லது பதினைந்து கவிதைகளுக்குத்தான். பத்து கவிதைகளை வரிசையாக புரிந்து கொள்ள பழகிவிட்டால் அப்புறம் கவிதையும் வாசிப்பிற்கு எளிமையானதாகிவிடுகிறது. 

புரியாமல் இருந்தால்தான் கவிதை என்று யாரோ கிளப்பிவிட்ட புரளியை நம்பிக்கொண்டு கவிதையின் பக்கமே தலை வைத்துப்படுக்காதவர்கள் இருக்கிறார்கள். அல்லது நான் எழுதும் கவிதையையே நானூறு தடவை வாசித்துவிடுகிறேன் அப்புறம் எதற்கு வேறொருவரின் கவிதையை வாசிக்க வேண்டும் என்று முடிவு செய்தவர்கள் ஒரு வகை. இவற்றையெல்லாம் தாண்டி கவிதைக்குள் என்னதான் இருக்கிறது என்று துணிந்து எட்டிப் பார்க்கும் வாசகர்களின் கழுத்தை கடித்து துப்பும் கவிதைகள் அனேகம். கவிஞர்கள் விட்டு வைத்தாலும் கூட விமர்சகர்கள் உள்ளொளி, தரிசனம் என்று பொடனி அடியாக அடிக்கிறார்கள். கவிதைகளைப் பற்றி சீரியஸான கட்டுரைகள் எழுதுவது தவறானதில்லை. ஆனால் சீரியஸான கட்டுரைகள் மட்டுமே தேவை என்ற சூழல் இருப்பதுதான் பிரச்சினை.

கவிதை சீரியஸான விஷயம் என்பதும் அதை சீரியஸான முகத்துடன் தான் அணுக வேண்டும் என்பதெல்லாம் பில்ட் அப். கவிதை ஒரு விளையாட்டுச் சாமானம். சிறு குழந்தைகள் பரமபதம் விளையாடுவதை எப்படி அனுபவிக்கிறார்களோ அப்படி கவிதையையும் அனுபவிக்கலாம். ஒரே பிரச்சினை பரமபதம் எப்படி விளையாட வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மொத்தமாக ஐந்நூறு சொற்களில்தான் தமிழ் கவிதைகளில் திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படுகிறது என்பது ஒரு குறை என்றால் எழுதப்படும் கவிதை விமர்சனத்தில் ஏழுநூற்றைம்பது சொற்கள்தான் திரும்பத் திரும்ப வருகின்றன. பிறகு எப்படி வாசகனுக்கு கவிதையும், விமர்சனமும் போரடிக்காமல் இருக்கும்? விமர்சனம் எழுதப்படும் முறைகளில் நிறைய மாறுதல் வருமெனில் அது கவிதைக்கு நல்லதாக அமையும் என நம்புகிறேன். இறுக்கமான மொழியை விடுத்து கவிதையை வாசகன் Approach செய்வதற்கும் Attack செய்வதற்குமான வழிவகைகளை உருவாக்குவதான எளிய விமர்சனங்களும் கவிதை குறித்தான கட்டுரைகளும் தேவைப்படுகிறது.

கவிதை என்பது கவிஞனின் அனுபவம். அதை வெளிப்படுத்த அவனுக்கு ஒரு வடிவம் தேவைப்படுகிறது. இந்த வடிவம் அவனுக்கு தொடர்ச்சியான பயிற்சியின் மூலமாக கிடைக்கிறது. சில கவிஞர்கள் தங்கள் மொழிக்கான வடிவத்தை எளிதில் கண்டுபிடித்து விடுகிறார்கள். சிலர் திணறுகிறார்கள். வாசகனுக்கு கவிதையின் வடிவம் ஒரு புறக்காரணி. அதை பற்றி அவ்வளவாக கவலைப்பட வேண்டியதில்லை. ஆரம்ப நிலை வாசகனால் கவிதையின் உட்பொருள் (content) ஐ புரிந்து கொள்ள முடியுமானால்- அதை அனுபவிக்க முடியுமானால் அதுதான் முதல் வெற்றி. கவிதையின் வடிவம், வெளிப்படுதன்மை எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ராவை பிறகு பார்த்துக் கொள்ளலாம். 
                                                        ***

சுகுமாரனின் “சிந்துபாத்தின் கடற்பயணம்” என்ற கவிதை அவரின் சமீபத்திய தொகுப்பான “நீருக்குக் கதவுகள் இல்லை” என்னும் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. புரிவதற்கு எந்தச் சிக்கலும் இல்லாத கவிதை இது.

முற்றத்து கையகலக் குழியில் நெளியும்
மழை மிச்சத்தில்
ஏதோ செய்து கொண்டிருந்தான் சிறுவன்

நீர்மேல் ஒரு காகிதத் துணுக்கு
அதன் மேல் ஓர் எறும்பு

கேட்டதற்குச் சொன்னான்:
’கன்னித் தீவுக்கு
சிந்துபாத்தின் கப்பலை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்’

குழிக்கடலில் அப்போது
சீறிப் புரண்டது
ஒரு பேரலை

முற்றத்தில் ஒரு குழி இருக்கிறது. அந்தக் குழி மிகச் சிறியது. உள்ளங்கையின் அகலம் தான். மழை பெய்து முடிந்திருக்கிறது. முற்றத்தில் இருக்கும் அந்த கையகலக் குழிக்குள் கொஞ்சம் மழை நீர் தேங்கி இருக்கிறது. தண்ணீருக்குள் ஒரு காகிதத் துண்டு கிடக்கிறது அதன் மீது ஒரு எறும்பு இருக்கிறது. குழிக்கு அருகில் ஒரு சிறுவன் இருக்கிறான். அந்தச் சிறுவனிடம் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்கும் போது “கன்னித் தீவுக்கு சிந்துபாத்தின் கப்பலை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்” என்கிறான். 

இப்பொழுது அந்த குழி கடலாகத் தெரிகிறது. ஒரு பேரலை வருகிறது. -இதுதான் கவிதை. 

1) ஒரு குழியை கடலாக உருவகிக்கும் சிறுவனின் மனநிலை (அல்லது) 
2) கடலுக்குள் கப்பலில் பயணம் செய்யும் எறும்பின் மனநிலை (அல்லது) 
3) சிறுவனை கேள்வி கேட்டு தானும் அவனைப்போலவே சிறு குழியை கடலாக உருவகிக்கும் பெரியவனின் மனநிலை 

இந்த மூன்று அனுபவத்தை யோசிப்பதற்கான மனநிலையை  கவிதை முதல் வாசிப்பில் தருகிறது. மூன்று அனுபவங்களிலிருந்தும் நம்மால் ஒவ்வொரு சிறுகதையை கற்பனை செய்து கொள்ள முடியும். வாசகன் யோசிப்பதற்கு கிடைக்கும் இத்தகைய இடங்கள் கவிதையில் மிக முக்கியமானது.

கவிதையை வாசித்துவிட்டு கொஞ்ச நேரம் சிறுவன் ஆகிறோம். அப்பொழுது சிறுவனின் மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம். கொஞ்ச நேரம் எறும்பு ஆகிறோம். அப்பொழுது எறும்பின் பயத்தை, துக்கத்தை அனுபவிக்கிறோம். இன்னும் கொஞ்ச நேரம் பெரியவனின் மனநிலையில் நாம் அந்தச் சூழலில் என்ன செய்திருப்போம் என்று யோசிக்கலாம். 

இவற்றை தவிர வேறு எதை வேண்டுமானாலும் இந்தக் கவிதையிலிருந்து யோசிக்க வாசகனுக்கு சுதந்திரம் இருக்கிறது.

ஆனால் சிறுவன், எறும்பு, பெரியவனின் ஆகியோரின் மனநிலையை இந்தக் கவிதையிலிருந்து பெறும் core experience ஆகக் கருதலாம். Core experience ஐ கவிதையில் இருந்து புரிந்து கொள்ளுதலை கவிதை வாசிப்பின் முதல்படி என்று சொல்லலாம்.

11 எதிர் சப்தங்கள்:

அகல்விளக்கு said...

எளிய விளக்கம்...

அருமை... அருமை...

க ரா said...

ஆனால் சிறுவன், எறும்பு, பெரியவனின் ஆகியோரின் மனநிலையை இந்தக் கவிதையிலிருந்து பெறும் core experience ஆகக் கருதலாம். Core experience ஐ கவிதையில் இருந்து புரிந்து கொள்ளுதலை கவிதை வாசிப்பின் முதல்படி என்று சொல்லலாம்.
--

அப்படின்னா அடுத்தடுத்த படியெல்லாம் விளக்குவீங்க இல்லையா ? :)

Uma said...

so,,,நான் கவிதை வாசிப்பின் முதல்படியில் நிற்கிறேன்

Vaa.Manikandan said...

நன்றி அகல்விளக்கு, உமா.

இராமசாமி கண்ணன் -

ஆமாம்.அப்படித்தான் யோசித்திருக்கிறேன்.

நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான விளக்கத்துடன் நல்ல அலசல்....

நன்றி…
(த.ம. 2)

rvelkannan said...

கவிதை குறித்த அனுபவ பகிர்தலாக இதை எடுத்து கொள்கிறேன். சேலத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது இதை நீங்கள் சொன்னிர்கள் மணி,
வெளிபடுத்தும் தன்மை முக்கியமானது என்று - அப்படி பார்க்கையில் மிக சிறப்பான வெளிப்படல் இது. நன்றி

Vaa.Manikandan said...

நன்றி கண்ணன். ஆமாம். சேலம் உரையாடல்தான் கட்டுரைக்கான தொடக்கப்புள்ளி. உரையாடலாக இருக்கட்டுமே என்ற முயற்சி. பார்க்கலாம்.

வித்யாஷ‌ங்கர் said...

nalla anupava vilkkam

Prakash said...

நீங்க வாத்தியாரா ஆகலாம்னு நினைக்கிறேன்..... அருமை...

சித்திரவீதிக்காரன் said...

சில கவிதைகளை பிறர் விளக்கிச்சொல்லும் போதுதான் அதன் கவித்துவம் வெளிப்படுகிறது.

சிந்துபாத்தின் கடற்பயணம்' அருமையான கவிதை. தங்கள் விளக்கமும் அருமை.

Php Mute said...

கண்டிப்பாய் தேவையான பதிவுதான்!
கவிதை,ஓவியம் ரெண்டும் கொஞ்சம் புரிதல் சிக்கலான படைப்புகள்.
கஷ்டமானதல்ல படிப்பவர் நோக்கு வேறு ரசிப்பவர்(பார்ப்பவர்) பரிமாணம் வேறு இது தான் இந்த கவிதை தொகுப்புகள் அதிகம் வில்லாமல் இருப்பதற்கு !
இன்னொரு விடயம் கவிதைய பலர் வாசிக்கும் போது அனுபவிக்கும் இன்பத்தை விட அதை எழுதும் போது எதை கோடி இன்பம் காண்பது மறுக்க முடியா உண்மை தானே!
எடுத்து விளக்க பட்ட கவிதை பிரமாதம் !இந்த கவியை வாசிக்கும் போது கூட கவி அழகாய் விட அதை எழுதியவர் கற்பனை தானே ரசிக்க தோனுகிறது !