வாழ்க்கை மிக எளிமையாக இருக்கிறது. Simpler than simplest. நாம்தான் அதனை சிக்கலானதாக்கிக் கொள்கிறோம். போதை பொருளின் அறிமுகம் என்பது கிட்டத்தட்ட எல்லோருக்குமே ஒரே முறையில்தான் உண்டாகிறது. பெரும்பாலும் விடலை பருவத்தில் நண்பர்களின் தூண்டுதலால் தொட்டுப் பார்ப்பதில் தொடங்குகிறது இதன் பரிச்சயம். ஆனால் போதைக்கு அடிமையாவதும், அலேக்காக தாண்டி வருவதும் ஒவ்வொரு தனிமனிதனையும் பொறுத்திருக்கிறது. எதற்கு இந்த 'தத்துவம்ஸ்'?. மேட்டருக்கு ஜம்ப் அடிக்கலாம்.
நடிகர் சந்திரபாபு பெத்தடின் ஊசிக்கு அடிமையாக இருந்தார் என்ற குறிப்பினை ஏதோ ஒரு கட்டுரையில் சாரு நிவேதிதா குறிப்பிட்டிருந்தார். தமிழ் சினிமாவில் போதையினால் வீழ்ச்சியடைந்தவர்களின் பட்டியல் மிகப் பெரியது. தமிழ் சினிமாவில் மட்டுமில்லை உலகம் முழுவதுமாகவே போதைப் பொருட்களில் தங்களின் தொழிலையும் வாழ்வையும் தொலைத்தவர்களின் எண்ணிக்கை தாறுமாறானதாக இருக்கிறது.
சென்னையில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியில் சந்தோஷ் படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது நான் கல்லூரியின் இறுதி ஆண்டு படிப்பை முடிக்கும் சமயம். நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை ஒன்றை தேடியாக வேண்டிய பதட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்தேன். சந்தோஷுடன் பேசிக் கொண்டிருந்த போது ”நீங்கள் புகழ்பெற்ற கல்லூரியில் படிக்கிறீர்கள். வேலை தேட வேண்டும் என்ற கவலை எல்லாம் உங்களுக்கு தேவை இல்லை, அது தானாக தேடி வரும்” என்று உசுப்பேற்றிக் கொண்டிருந்தேன். அவசரமாக குறுக்கிட்டவர் "அப்படி எல்லாம் இல்லை...வேலையும் பணமும் மட்டுமே வாழ்க்கை இல்லை” என்றவர் சிறிது நிறுத்தி ஆழ்ந்த பெருமூச்சுக்கு பிறகு “என்னால் Drug அடிக்காவிட்டால் தேர்வு கூட எழுத முடியாது. பத்தாம் வகுப்பிலிருந்து இந்தப் பழக்கம்" என்றார். இந்த உலகப்புகழ் வாய்ந்த கல்லூரியில் தம், தண்ணி என்ற எந்தப் பழக்கமும் இல்லாமல் படிப்பும் புக்குமாகச் சுற்றும் பழங்களுக்கு மட்டுமே ஸீட் கிடைக்கும் என்று அதுவரையிலும் நம்பியிருந்தில் பெரும் கல்லை போட்டு அமுக்கினார்.
விஷயம் ரொம்ப சிம்பிள். ஒன்பதாம் வகுப்பிலிருந்தே ’அந்த’க் கல்லூரியில்தான் சந்தோஷ் பி.டெக் படிக்க வேண்டும் என்ற கனவை பெற்றவர்கள் விதைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்பொழுதிலிருந்தே இரவு பகலாக படிக்க ஆரம்பித்தவர், முதலில் தூக்கம் வராமல் இருப்பதற்கான மாத்திரைகளை விழுங்கிக் கொண்டாராம். இதற்கு பெற்றோர்கள் எதுவும் மறுப்பு தெரிவிக்கவில்லை. முதலில் மாத்திரைகளை சந்தோஷ் விழுங்கியிருக்கிறார். பிறகு மாத்திரைகள் சந்தோஷை விழுங்க ஆரம்பித்திருக்கின்றன. கொஞ்ச நாட்களில் ஏதோ ஒரு புண்ணியவான் வேறு சில போதை ஐட்டங்களையும் அறிமுகப்படுத்த அவை எல்லாமே சந்தோஷ்க்கு"உற்சாக வஸ்து"களாகிவிட்டன. பின்னர் "அது"வின்றி ஒரு வரியும் மண்டைக்குள் ஏறாது என்று முடிவுகட்டி இன்று வரைக்கும் "டோப்"அடித்துவிட்டுத்தான் தேர்வுக்கு படிக்கிறாராம். உடலில் பலம் வேண்டும் என்று அடிக்கடி ஸ்டீராய்ட் ஊசியும் போட்டுக் கொள்வது வழக்கமாகியிருக்கிறது.
இந்த ஸ்டீராய்ட் ஒரு உட்டாலக்கடி வஸ்து. கொஞ்சம் விரிவாகவே பார்த்துவிடலாம். ஸ்டீராய்டை பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்துகிறார்கள். விளையாட்டு வீரர்களில் ஓட்டப்பந்தயம், எடைதூக்குதல், மல்யுத்தம், நீச்சல், ஈருளி பந்தய வீரர்கள் (ஈருளி என்பது நம்ம சைக்கிள்தான்) அதிகமாக ஸ்டீராய்ட் உட்கொள்கிறார்கள். இது அவர்களுக்குள் வேகத்தையும் வெறியையும் அதிகமாக்கிவிடுகிறது. ஆனால் விளையாட்டுப் போட்டிகளில் ஸ்டீராய்ட் பயன்படுத்தப்படுவது தடை செய்துவிட்டார்கள். மீறி பயன்படுத்தி மாட்டிக் கொண்டால் அந்த விளையாட்டு வீரரின் வாழ்க்கையே தொலைந்துவிடும்.
இந்த ஸ்டீராய்டின் விளைவுகள் பற்றி ஏகப்பட்ட தகவல்கள் குட்டிச்சாத்தான்களைப் போல திரிந்து கொண்டிருக்கின்றன. எதற்கு இந்த இழவு எல்லாம் என்று முடிவு செய்து உலக அளவில் மொத்தமாக தடை செய்துவிட்டார்கள். ஆனால் அனைத்து ஸ்டீராய்ட்களும் தடை செய்யப்பட்ட பிரிவில் வருவதில்லை. அனபாலிக் ஸ்டீராய்ட்கள்தான் தடை செய்யப்பட்டவை. இவை வேதியியல் ரீதியாக டெஸ்டோஸ்டீரோனோடு நேரடியாக தொடர்பு கொண்டவை. (டெஸ்டோஸ்டீரோன் ஆணின் உடலில் சுரக்கும் ஹார்மோன்). ஆண்களில் இந்த ஹார்மோன்தான் உடலின் கட்டமைப்புக்கும், ஆணிய தன்மைக்கும் அடிப்படை. ஆக ஸ்டீராய்டை உட்கொள்ளும் போது அது டெஸ்டோஸ்டிரானுடன் வினைபுரிந்து ஆளை ‘கட்டுமஸ்தானாக’ மாற்றிவிடுகிறது.
ஸ்டீராய்ட் பற்றி நிறைய பேச்சு இங்கே இருக்கிறது. ஷாருக்கானோ, கமல்ஹாசனோ ஒரு படத்தில் சட்டையைக் கழற்றி உடலைக் காட்டினால் அது ஸ்டீராய்டால் ஏற்றப்பட்ட உடல் என்ற பேச்சு தலைகாட்டும். நடிகர்கள் மட்டுமில்லை நடிகைகளின் மார்பகங்கள் சிகிச்சையின் மூலமாக பெரிதாக்கப்பட்டதாக கிசுகிசு வெளிப்படும் போதும் ஸ்டீராய்டின் பெயர் எட்டிப்பார்க்கும். ஸ்டீராய்கள் பல வடிவங்களில் கிடைக்கின்றன. பெரும்பாலானவை தடை செய்யப்பட்டவை என்றாலும் போனால் போகட்டும் என்று குறைந்த அளவில் சில அனபாலிக் ஸ்டீராய்ட்களுக்கு மருத்துவ அனுமதி உண்டு. ஆண்களில் உண்டாகும் சில பாலியல் குறைபாடுகளுக்கும், மார்பகப் புற்று நோய்க்கும் சில கால்நடைகள் சம்பந்தமான மருத்துவத்திலும் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக கால்நடைகளில் ரோமம் அதிகமாக வளர்வதற்கு ஸ்டீராய்ட் பயன்படுத்துகிறது.
ஸ்டீராய்டை வாய்வழியாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது தசைகளுக்கு இடையில் ஊசி மூலம் செலுத்திக் கொள்ளலாம். சரியான கால இடைவெளியில்(period அல்லது cycle) சரியான அளவில் உட்கொள்ள வேண்டும். அதே சமயம் உடற்பயிற்சியும், நல்ல உணவும் தேவை. இத்தனை இருந்தாலும் கூட பக்க விளைவுகள் ஏகப்பட்டதாக இருக்கும். ஒரு சைக்கிள் என்பது 6 முதல் 14 வாரங்கள். இந்த கால அளவுக்கு பிறகு கொஞ்ச நாள் இடைவெளி தரவேண்டும். இந்த முறையில் ஸ்டீராய்டை எடுத்துக் கொள்வதற்கு சைக்கிளிங் என்று பெயர்.
இன்னொரு முறையும் இருக்கிறது. அதற்கு 'அடுக்குதல்'(ஸ்டாக்கிங்) என்று பெயர். பல்வேறு ஸ்டீராய்டுகளை தொடர்ச்சியாக உட்கொள்வது. ஸ்டீராய்டை எடுத்துக் கொள்வதில் மூன்றாவது முறையும்(Method) இருக்கிறது. அது "பிரமிட்" முறை முதலில் குறைந்த அளவு உட்கொள்ளத் துவங்கி இந்த அளவினை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்துவார்கள். உச்சகட்ட அளவிற்கு பிறகு படிப்படியாக குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.
இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ஸ்டீராய்ட் எடுத்துக் கொள்வதால் வரும் பின் விளைவுகள் பற்றி உறுதியான தகவல்கள் இல்லை. ஆனால் பக்க விளைவுகளை(Side effect) உடனடியாக தெரிந்து கொள்ளலாம். ரத்த அழுத்தம், கொழுப்பு அளவு அதிகரித்தல், வழுக்கை, உடலுறவு பிரச்சினைகள் ஆகியவை பொதுவான பிரச்சினைகள். இவை தவிர்த்து வேறு சில காமெடியான டிராஜடிகளையும் ஸ்டீராய்ட் உருவாக்கும். பெண்களில் மார்பளவினை சிறியதாக்கலாம், ஆண்களில் தாறுமாறான மார்பளவு வளர்ச்சியை உருவாக்கலாம். பெண்களுக்கு குரல் முரட்டுத்தனமாக மாறிவிடலாம், சகட்டுமேனிக்கு ரோமம் முளைப்பதும் கூட நிகழலாம். சிலர் கோபமும் காமமும் மிக்க முரட்டு ஆசாமிகளாக மாறவும் ஸ்டீராய்ட் விதை விதைக்கும்.
அது கிடக்கட்டும். மிடில் கிளாஸ் மாதவன்களுக்கு எல்லாம் இது பற்றிய பெரிய கவலை எல்லாம் எதற்கு? இருக்கிற உடலமைப்பு போதாதா. சிக்ஸ்பேக் டெவலப் செய்து ஜாக்கிசான் உடன் சண்டைக்கு போகப் போகிறோமோ அல்லது ஏஞ்சலினா ஜோலியை பிக்கப் செய்யப் போகிறோமா?
3 எதிர் சப்தங்கள்:
முடிவிலே நல்லாச் சொன்னீங்க... நன்றி...
தொடர வாழ்த்துக்கள்... (TM 1)
பல சப்ஜெக்ட்களை கலந்து கட்டி அடிக்கறீங்க..தினமும் நிசப்தம் படிக்கிறேன். வெரி இண்ட்ரஸ்டிங்.
தெரியாத பல தகவல்களைத் தெரிந்து கொண்டோம்
பயன்படுத்தப் போவதில்லை என்றாலும் இது போன்ற
தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்வதுதான்
நல்லது எனப் படுகிறது எனக்கு
பயனுள்ள பதிவு
பகிர்வுக்கு நன்றி
Post a Comment