சில வருடங்களுக்கு முன்பாக அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு கிளம்பும் போது ஒரு நண்பர் “நாளைக்கு நம்ம கம்பெனியிலிருந்து ஆயிரம் பேரை ஃபயர் பண்ணப் போறாங்களாமே?” என்றார். இது வதந்தியா உண்மையா என்று தெரியவில்லை ஆனால் கேள்விப்பட்டேன் என்ற ’பிட்’டையும் போட்டுவிட்டார். இவர் கேட்காமல் இருந்திருந்தால் நிம்மதியாக வீடு சேர்ந்திருக்கலாம். அவர் சொன்னதையே நினைத்துக் கொண்டு பைக் ஓட்டியதில் ஒரு ஜீன்ஸ் மங்கையின் பைக் மீது மோதத் திரிந்தேன். அவள் என்னை நோக்கி எதையோ சொல்லிச் சென்றாள். அது நான்கெழுத்து ஆங்கிலக் கெட்டவார்த்தையாக கேட்டது. பின்னால் துரத்திச் சென்று ”என்ன சொன்னீங்க” என்ற போது அவள் ஹெல்மெட்டை கழற்றினாள். அறுபதுக்கும் குறைவாக ஐம்பத்தைந்துக்கும் அதிகமாக இருக்கும். “இடியட்” என்றேன் என்றாள். “ஐம்பது என்ன சொல்லியிருந்தால் எனக்கென்ன” என்று நினைத்துக் கொண்டு எண்ணங்களை மீண்டும் அலுவலகத்திற்கு திருப்பிவிட்டேன். அன்றிரவு உண்ட உணவு, பேசிய வார்த்தைகள் என எதுவும் ஞாபகத்தில் இல்லை.
அடுத்த நாள் வழக்கத்திற்கு மாறாக ஊரில் இருக்கும் எல்லா கடவுளரையும் என் பைக்கில் ஏற்றிக் கொண்டு அலுவலகம் வந்தேன். அவர்கள் என் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டார்கள். மதியம் ஒரு மணி வரைக்கும் எந்தச் செய்தியும் இல்லை. உடன் வேலை செய்யும் பெண்ணொருத்தி ஸ்வீட் கொடுத்தாள். கறுவிக்கொண்டு வாயில் போட்டேன். காரணம் எதுவும் கேட்கவில்லை. கேட்கும் மனநிலையும் இல்லை. அவளாகவேதான் ஆரம்பித்தாள். எனக்கு நான்கு நாட்களுக்கு முன்பாக பிறந்தநாள் வந்து போனது அதற்காக இன்று மதியம் வெளியே சாப்பிட போகலாம் என்றாள். நீங்கள் நினைப்பது போல நானும் அவளும் மட்டும் தனியாக இல்லை. டீம்மோடுதான்.
பெங்களூர் இந்திரா நகரில் ஒரு ரெஸ்டாரண்ட். இந்திரா நகர் ரெஸ்டாரண்ட்காரர்கள் தலையில் மிளகாய் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த மசாலாவே அரைப்பார்கள் என்பதால் எனக்கு அவர்கள் மீது மரியாதை இல்லாத பயம் உண்டு. சரி எப்படியும் அவள்தானே பணம் கொடுக்கப் போகிறாள் என தொண்டை வரை நிரப்பியதில் மூக்கில் இரண்டு பருக்கை எட்டிப்பார்ப்பது மட்டும்தான் பாக்கியாக இருந்தது. பில் வரட்டும் என்று காத்திருந்தோம். பில்லை அந்தப் பெண் வாங்கவில்லை. வேறொருவன் வாங்கி தனது கிரெடிட் கார்டை நீட்டினான். ’இவர்களின் கதை அப்படியிருக்குமோ’ என்று நினைத்துக் கொண்டே கொடுத்த சோம்பை அள்ளி வாயில் போட்டுக்கொண்டு வெளியேறினேன்.
வெளியில் ஒரு குழுவாகக் கூடினார்கள். பில் ஐந்தாயிரத்துச் சொச்சம் ஆகியிருக்கிறது. ஆளுக்கு ஐநூற்றைம்பது ரூபாய் “ஷேர்” செய்து கொள்ளலாம் என்றார்கள். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. கடையில் நூறு ரூபாய் பில் ஆனாலே தின்ன சோறு செரிக்காது. என்னிடம் ஐந்நூற்றைம்பது கேட்டால்? வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த பாகற்காய் குழம்போடு சோலியை முடித்திருக்கலாம். ஏமாந்துவிட்டேன்.
அத்தனை சாமிகளையும் கூட்டி வந்தது தப்பாகிப் போனது. ’ஃபயரிங்’ என்ற குண்டை மறைக்க ’ஷேரிங்’ என்ற இன்னொரு குண்டை எறிந்துவிட்டார்கள் போலிருக்கிறது. அந்தக் கணத்திலிருந்து அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு தின்னதும் சரி பேசியதும் சரி, சுத்தமாக ஞாபகத்தில் இல்லை.
***
கல்கியில் எழுதிக் கொண்டிருக்கும் ரோபோஜாலம் தொடருக்காக நிறைய வாசிக்க வேண்டியிருக்கிறது. ரோபோடிக்ஸ் வடிவமைப்பு பற்றி மட்டும் எழுதினால் கல்கிக்காரர்கள் ஒதுக்கித் தந்திருக்கும் மூன்று நான்கு பக்கங்கள் பாலைவனம் ஆகிவிடக் கூடும் என்பதால் ரோபோ பற்றிய சுவாரசிய தகவல்களை தேடுவது வாடிக்கையாகிவிட்டது. இன்று ரோபோ குறித்த ஜோக்குகளை தேடிக் கொண்டிருந்தேன். ஜோக்குகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் பெரும்பாலானவை அசைவ ஜோக்குகள். மிகக் குறைவாகவே கிடைக்கும் சைவ ஜோக்குகளில் அத்தனையுமே மொக்கையானவை.
ஒரு சாம்பிள் ஜோக்.
கோயிந்து தன் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சர்ப்ரைசாக ஒரு ரோபோ வாங்கி வந்தார். அது ஒரு தில்லாலங்கடி ரோபோ. யாராவது பொய் சொன்னால் கண்டுபிடித்துவிடும். அதோடு நின்றால் பரவாயில்லை ‘சப்’பென்று அறைந்தும் விடும். அதனால் ’பதினாறு வயதினிலே’ ஸ்ரீதேவியின் பரம ரசிகரான நம்ம கோயிந்து ரோபோவிற்கு சப்பாணி என்று பெயர் வைத்துவிட்டார்.
அன்றைய தினம் கோயிந்துவின் மகன் சுப்பிணி கல்லூரி முடித்து மிக தாமதமாக வந்தான். வீட்டில் ரோபோ இருப்பதை பார்த்தவன் அதன் அருகில் நின்றபடியே கோயிந்து கேட்ட சில கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான். “ஏன் இவ்வளவு லேட்?” என்ற போது ரோபோ பற்றித் தெரியாத சுப்பிணி “ஸ்பெஷல் க்ளாஸ்ப்பா” என்றான். ’சப்’ விட்டது சப்பாணி.
அதன் பிறகுதான் “இந்த ரோபோ பொய் சொன்னால் அறைந்துவிடும்” என்று கோயிந்து விளக்கினார். அலெர்ட் ஆகிய சுப்பிணி ”இல்லப்பா சினிமாவுக்கு போனேன்” என்று உண்மையை ஒத்துக் கொண்டான்.
“சரி விடு நான் எல்லாம் படிக்கிற காலத்தில் வீடு, வீடுவிட்டா காலேஜ்ன்னு இருந்தேன்” என்று கோயிந்து அளக்கத் துவங்கினார் அவரும் ’சப்’ வாங்கிக் கட்டிக் கொண்டார். சுப்பிணி நக்கலாக சிரித்தான். கோயிந்துக்கு அவமானாகிப் போனது. மகனிடம் எகிற ஆரம்பித்தார்.
சமையலறைக்குள்ளிருந்து வெளியே வந்த கோயிந்துவின் மனைவி அவரை சமாதானப்படுத்தும் விதமாக “விடுங்க, உங்க மகன் தானே” என்று சொல்லி முடிக்கவில்லை. “பளார்” என்ற சத்தம் கேட்டது.
5 எதிர் சப்தங்கள்:
:)
முன்பெல்லாம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும்போது அப்பா,அம்மா தாத்தா பாட்டி ஆவியுருவில்
தெரிவார்கள். ஒரு முறை தகப்பனாருக்கு பதில் பக்கத்து வீட்டுக்காரனின் ஆவி வந்ததால் குழப்பம் ஏற்பட்டு அதில் இருந்து கண்ணுக்கு தெரியாமல் வரசொல்லி, மக்கள் வேண்ட இப்போதெல்லாம் தெரிவதில்லையாம்...இந்த கதைய ஷர்ட் பண்ணி புதுசா சொல்ற மாதிரி.....கற்பனை வறட்சி ...
ஆமாம் சார்..இந்த இங்கிலீஷ்கார பசங்க நம்ம ஆளுங்களோட திதி மேட்டரை காப்பி அடிச்சிட்டாங்க பாருங்க..அவங்களை வார்ன் பண்ணிடலாம்...விடுங்க :)
Nice joke :)
Joke excellent
Post a Comment