ஏதோ தட்டும் சத்தம் கேட்டது. அப்பொழுது சந்தானம் மாடியில் இருக்கும் தனது அறையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு தாண்டியிருந்தது. அநேகமாக இரண்டு மணியாக இருக்கக் கூடும். மொட்டை மாடியில் இருந்து வீட்டிற்குள் வருவதற்கான கதவில் இருந்துதான் சத்தம் வந்தது. பூனையாக இருக்கும் என்றுதான் சந்தானம் முதலில் நினைத்தார். தொடர்ந்து சத்தம் கேட்டதில்தான் அவரது தூக்கம் கலைந்தது. விபரீதம் நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் முன்பாகவே தட்டுவதன் வேகமும் சத்தமும் அதிகமானது. தட்டுவது என்பதை விடவும் உடைப்பது என்ற சொல்தான் பொருத்தமானதாக இருக்கும்.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “யார்றா அது” என்றார். வெளியே இருந்து கதவை உடைத்து கொண்டிருப்பவர்களுக்கு இவரின் குரல் நிச்சயம் கேட்டிருக்கும். ஆனாலும் கதவு உடைபடுவது நிற்கவில்லை. என்ன ஆனாலும் வீட்டிற்குள் நுழைந்துவிடுவது என்ற முடிவோடுதான் உடைக்கிறார்கள் போலிருக்கிறது. சந்தானம் கதவுக்கு அருகில் சென்று பார்த்த போது அது கிட்டத்தட்ட பிளக்கும் நிலையில் இருந்தது. சற்று குரலை உயர்த்தியவாறே உள்ளுக்குள் இருந்தபடியே கதவு திறந்துவிடாமல் அழுத்தினார்.
சந்தானம் திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்திருக்கிறார். கோடிகளில் புரளாத ஆனால் இலட்சங்களுக்கு குறைவில்லாத பனியன் கம்பெனி. வீடு திருப்பூரில் இல்லை. பல்லடம் பக்கத்தில் இருக்கும் மங்கலத்தில். வீட்டிற்கும் கம்பெனிக்கும் இருபது கிலோமீட்டர் இருக்கும். தினமும் ஸ்கார்ப்பியோ காரில் போய் வந்துவிடுகிறார். ஸ்கார்ப்பியோ ஓட்டும் அளவிற்கு இளம் வயது இல்லையென்றாலும் ஆள் முறுக்கமாகத்தான் இருப்பார்.
வீட்டின் கீழ் தளத்தில் அவரது மனைவியும், மகளும், மகளின் குழந்தையும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைக்கு ஒரு வயது கூட முடிந்திருக்கவில்லை. குழந்தை பிறப்பிற்கு பிறகாக தாய் வீட்டிற்கு வந்த சந்தானத்தின் மகள் அடுத்த வாரம்தான் கணவன் வீட்டிற்கு போவதாக இருக்கிறாள். இந்தச் சமயத்தில்தான் கதவை உடைக்க முயற்சிக்கிறார்கள். வீட்டிற்குள் வந்துவிட்டால் குழந்தையை வைத்துக் கூட மிரட்டுவது அவர்களின் திட்டமாக இருக்க கூடும் என்று சந்தானம் பயந்தார்.
திருடர்கள் ஒரு வாரமாகவே இந்த இடத்தை நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சந்தானத்தின் வீடு மட்டும் அந்தப் பகுதியில் தனித்து இருக்கிறது. சத்தமிட்டாலும் கூட அருகில் யாருக்கும் காது கேட்கப்போவதில்லை. அதுமட்டுமில்லாமல் பெரிய பங்களாவாகவும் இருக்கிறது. அதனால்தான் இந்த வீட்டை முடிவு செய்து கொண்டார்கள்.
இரவு பன்னிரெண்டு மணிக்கெல்லாம் ஆம்னி வேனிலும் ஒரு பைக்கிலும் வந்துவிட்டார்கள். ஆம்னியை சற்று தள்ளி நிறுத்திவிட்டு பைக்கை காம்பவுண்ட் சுவர் ஓரமாக நிறுத்தினார்கள். முதலில் இரண்டு பேர் மட்டும் காம்பவுண்ட் ஏறி குதிப்பது என்று முடிவு செய்து கொண்டார்கள். மற்றவர்கள் ஆம்னி வேனிலேயே இருந்து கொண்டார்கள். வீட்டிற்குள் குதித்த இருவரில் ஒருவன் வீட்டின் மேல் நின்று கொள்வது. இன்னொருவன் மொட்டைமாடியில் இருக்கும் கதவைத் தட்டி உடைப்பது என்பது முன்பே திட்டமிடப்பட்டிருந்ததுதான். அதை அச்சு பிசகாமல் செயல்படுத்தத் துவங்கினார்கள்.
கதவை உடைத்து உள்ளே சென்றுவிட்டால் மொத்தக் கட்டுப்பாட்டையும் அவர்களால் எடுத்துக் கொள்ள முடியும். பிறகு செல்போனில் தகவல் கொடுத்தால் ஆம்னி வேனில் இருப்பவர்களும் உள்ளே நுழைந்துவிடுவார்கள். முடிந்தவரை வீட்டில் இருப்பவர்களை மிரட்டிப் பறிப்பது, தேவைப்பட்டால் கொலையும் செய்வது என்று யோசித்திருந்தார்கள். ஆனால் உள்ளே குழந்தை இருப்பது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
இப்பொழுது தங்களது திட்டத்தில் நாற்பது சதவீதத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். சந்தானத்தின் சத்தமும் கதவு உடைபடும் ஓசையும் கீழே உறங்கிக் கொண்டிருந்த சந்தானத்தின் மனைவிக்கு கேட்டிருக்கிறது. ஓடிச்சென்று வெளிக்கதவை திறக்க முயன்றபோது அது வெளிப்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. யாரும் வீட்டிற்குள்ளிருந்து வெளியே சென்றுவிடாமல் தடுக்க திருட வந்தவர்கள்தான் தாழிட்டு வைத்திருக்கிறார்கள். தூக்கம் கலைந்தும் கலையாமலும் சந்தானத்தின் மனைவி வேகமாக மாடிக்கு ஓடி வந்த போது படியில் இருக்கும் ஜன்னல் வழியாக வீட்டீன் மேல் ஒருவன் நின்று கொண்டிருப்பதை பார்த்துவிட்டார். கையில் கடப்பாரையுடன் ஆஜானுபாகுவான தோற்றத்தில் நின்று கொண்டிருந்தான். சந்தானத்தின் மனைவிக்கு ஒருகணம் உடல் சில்லிட்டது.
கதவிடுக்கு வழியாக விட்டு நெம்புவதற்கும் தேவைப்பட்டால் கதவை உடைப்பதற்கும் தோதான வகையில் நீண்ட கடப்பாரை போன்ற கம்பியின் இரண்டு பக்கமும் வளைத்து வைத்திருக்கிறார்கள். சந்தானத்தின் மனைவி மேலே வந்து சேர்ந்தபோது கம்பியின் ஒரு முனை கதவிடுக்கின் வழியாக உள்ளே வந்துவிட்டது. சந்தானம் போராடிக் கொண்டிருந்தார். இனி தனது கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் என்று சந்தானம் பயந்தபோது குழந்தையின் முகம் நினைவில் வந்துபோனது.
அவசரகதியில் மாடிக்கு வந்துசேர்ந்த சந்தானத்தின் மனைவி செல்போனில் கொஞ்சம் தள்ளிக் குடியிருக்கும் முருகேசனை அழைத்தார். முதல் அழைப்பிலேயே முருகேசன் ஃபோனை எடுத்துவிட்டார். சந்தானத்தின் மனைவி பதட்டத்தில் அரைகுறையாக உளறினார். முருகேசன் தூக்கக் கலக்கத்தில் அரைகுறையாகக் கேட்டார். முருகேசன் தனது வீட்டிலிருந்து வெளியே எட்டிப்பார்த்தாலும் கூட போதும். இவர்கள் வீட்டை உடைத்துக் கொண்டிருப்பது தெரிந்துவிடும். ஆனால் முருகேசனுக்கு அவ்வளவு சீக்கிரமாக புரியவில்லை.
இன்னும் ஒரே அடியில் கதவு உடைந்துவிடும் என்ற நிலைமை வந்திருந்தது. அறைக்குள் சென்று தாழிட்டுக் கொள்ளுங்கள் என்று சந்தானம் தனது மனைவியிடம் சொன்னார். தன்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று சொன்ன போது சந்தானத்தின் குரல் உடைந்திருந்தது. இன்னும் சில வினாடிகளுக்குள் கதவை உடைத்துவிடுவார்கள் என்று தோன்றியது.
மேலே நின்று கொண்டிருந்தவன் கதவை உடைப்பவனிடம் ஓங்கி அடி என்ற உத்தரவைக் கொடுக்கவும் முருகேசன் தனது வீட்டின் விளக்குகளை போட்டுவிட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது. சந்தானத்தின் வீட்டுக்கதவை யாரோ உடைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த முருகேசன் பேயறைந்ததைப்போல ஆகிவிட்டார். மேலே நிற்பவன் முருகேசனை பார்த்துவிட்டான். சுதாரித்துக் கொண்ட முருகேசன் ”திருடன் திருடன்” என்று கத்தத் துவங்கினார். இப்பொழுது நிலைமை தங்களின் கட்டுப்பாட்டை இழப்பதை உணர்ந்த திருடர்கள் கடப்பாரையை விட்டுவிட்டு மொட்டை மாடியிலிருந்து பைப் வழியாக இறங்கினார்கள். கீழே வருபவர்களில் ஒருவனையாவது பிடித்துவிடலாம் என்று முருகேசன் முன்னேறினார். இரண்டு பேருமே பெரும் உருவமாக இருந்தார்கள். இருட்டில் முகம் சரியாகத் தெரியவில்லை. முருகேசன் ஒருவனை நெருங்கியபோது போது “கன் இருக்கு. ஷூட் பண்ணிடுவேன்” என்றான். பிள்ளை குட்டிகளோடு இருக்கும் தனக்கு எதுக்கு வம்பு என முருகேசன் ஒதுங்கிக் கொண்டார்.
பெரும் உருவத்துடன் நகர்ந்தவன் திரும்பி மேலே பார்த்தான் அப்பொழுது ஜன்னல் வழியாக சந்தானம் அவர்களை பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். எச்சரிக்கை செய்யும் விதமாக ஆள்காட்டி விரலை அசைத்துக் கொண்டே சென்றவன் ஆம்னி வேனில் ஏறிக் கொண்டான். அந்த விரலசைவு திருடுவது என் உரிமை என்று பிரகடனப்படுத்துவதாக இருந்தது. சந்தானம் வியர்வையில் நனைந்திருந்தார்.
குறிப்பு:
(கடைசியாக எழுதப்பட்ட திருடர்களின் க்ளாசிக் காலம், களவும் கற்று மற்றும் திருட்டுப்பசங்க ஆகிய கதைகள் களவின் மூன்று காலகட்டத்தை சித்திரமாக்கும் முயற்சி. முயற்சியின் வெற்றி தோல்வியை வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். நன்றி)
8 எதிர் சப்தங்கள்:
கதை நல்ல விறுவிறுப்பு.
நன்றி... (த.ம. 1)
இது உண்மைச் சம்பவமா? முழுக் கற்பனையா?
எதுவாக இருந்தாலும், படிப்பவர் மனதில் பதியும்படியாக ஒரு சம்பவத்தைப் படம்பிடித்துக் காட்டுவதோடு படைப்பாளனின் பணி முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? க இந்தக் கதைக்கு ‘முடிவு’ தேவை இல்லையா?
விரும்பினால் விளக்கம் தாருங்கள் நீலகண்டன்.
பொதுவாக,மீண்டும் அசை போடத் தூண்டும் சித்திரம்தான்.
பாராட்டுகள்.
நீங்கள் நீலகண்டனிடம் கேள்வி கேட்டிருப்பதால், சிவபெருமான் உங்களுக்கான பதிலை அளிக்கக் கடவது :)
பாராட்டுக்களுக்கு நன்றி.
ஒரே வரியில் முடிவைக் கொண்டு வர ஆரம்பத்தில் விரும்பினேன். ஆனால் கதை எழுதிக் கொண்டிருக்கும் போதுதான் இந்தக்கதை ஒரு சித்திரத்தை உருவாக்கினால் மட்டுமே கூட போதுமானது என்று தோன்றியது. அதனால் இந்தக் கதையில் ‘நறுக்’ முடிவு இல்லை.
சிறுகதைகளில் எப்போதுமே துல்லியமான முடிவு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு முயற்சிதானே?
மற்றபடி திருட்டு நடக்கவில்லை என்பதே கூட ஒரு முடிவுதான் என்று எடுத்துக் கொள்ளலாம் :)
நன்றி.
மன்னியுங்கள் மணிகண்டன்.
கவனக் குறைவால் உங்களை நீலகண்டன் ஆக்கிவிட்டேன்.
தவறுக்கு வருந்துகிறேன்.
அருமை. நிகழ்வை மனக்கண்ணில் கொண்டு வந்து விட்டீர்கள்.
சீட்டின் நுனியில் உட்கார வைத்துவிட்டீர்கள். நல்ல விறுவிறுப்பு. இறுதியில் திருடர்கள் உரிமைப் பிரகடனம் செய்துவிட்டுச் செல்வது அருமை.
களவு கதைகள் மூன்றையுமே வாசித்துவிட்டேன், அதிலும் அம்மிணி யம்மாள் வரும் அந்த கிராமத்துக் களவு கதை இன்னும் பிடித்திருந்தது, அந்தப் பகுதியில் வளர்ந்தவராகையால் நீங்கள் தர முயன்ற சித்திரத்தை நேரடியாக உணர்ந்தது போல இருந்தது (தகவலுக்கு: நான், துலுக்கன் கதையில் உங்களிடம் நீண்ட நேரம் வாதாடிய அதே அனானி :-) )
மூன்று கதைகளையும் ஒன்றாக நிறுத்திப் பார்த்தோமானால், களவின் பரிமாண வளர்ச்சியில், இந்தக் கதையில் வரும் திருடர்கள் தங்களது தொழிலுக்கான அறம் என்ற ஒன்றையே முற்றிலுமாக தொலைத்துவிட்டு, தேவைப்பட்டால் கொலையும் செய்யலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். நிதர்சனத்தில், மிரட்டிப் பறித்துகொண்ட பின்னர் தேவையே இல்லாது கொல்பவர்களும் உண்டு, ஏன் முதியவர்களை முதலில் கொன்றுவிட்டு அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை எடுத்துச் செல்பவர்களும் கூட உண்டு.
அடுத்ததாக திருடர்கள் கை ஓங்கிக்கொண்டே வருவதும் சாமானியர்களின் அச்சம் அதிகரித்துக்கொண்டே வருவதும். ஒரு காரணமாக திருடர்களிடம் இருக்கும் நவீனரக மற்றும் கனரக ஆயுதங்கள். சாமானியர்கள் ஆயுதங்களிடம் இருந்து தங்களை விலக்கிக் கொண்டே போகின்றனர். கிராமத்து வீடுகளில் புழக்கத்தில் இருக்கும் வீச்சருவா கம்பு போன்ற ஆயுதங்கள் கூட இன்றைய தலைமுறையினரது வீட்டில் காண்பது அரிதுதான். படிப்பு வேலை என்று ஓடும் பொழுது வீரம் மற்றும் அதற்கான பயிற்சிகளுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது.
மற்றொரு காரணமாக, திருடர்களிடம் அதிகரித்திருக்கும் குழுமனப்பான்மையும், சாமானியர்களிடத்தில் அது குறைந்து கொண்டே வருவதையும் காணலாம். நடுத்தர அளவில் அடுத்தடுத்து வசித்திருந்த வீடுகள் போய், தேவைப்பட்டால் எல்லாரும் திரண்டு சென்று திருடனை, திருடர்களைப் பிடித்த காலம் போய், பெரிய தனித்த வீடுகள், அச்சத்துடன் எட்டி மட்டும் பார்க்கும் மனிதர்கள் மட்டுமே இன்று மிச்சம்.
திருடன் ஆட்காட்டி விலைக்காட்டி வீட்டு ஓனரை மிரட்டினானா???!!!
யு எஸ்ல நெறைய ஸ்டேட்ல சட்டம் என்னனா, ஒரு "தெரியாத ஆள்" உங்க ப்ராப்பர்ட்டிக்குள்ளே வந்தாலே நீங்க அவனை சுட்டுக் கொல்லலாம்!
அந்த "திருடன்" கத்தியோ, துப்பாக்கியோ வச்சிருக்கனும்னு அவசியம் இல்லை! உங்க இடத்தில் நுழைய அவனுக்கு உரிமை கெடையாது. நீங்க அவனை சுட்டுக்கொல்லலாம்!
law enforcement:
Backyard intruder shot, killed in Summerlin, Metro reports
***The homeowner told detectives he fired shots at the male, who he believed was trying to break into his home through the backyard, Cassell said.
Gunfire struck the intruder in the backyard, where he died, Cassell said. Police have not determined how many shots were fired from the homeowner's handgun.
Detectives were interviewing the homeowner about the circumstances and the perceived threat, Cassell said. It's unclear whether the intruder was armed.
At this point, police believe the intruder had no right to be in the yard and did not know the homeowner, Cassell said. The homeowner, whom police did not identify, was not injured.
The Clark County Coroner’s Office will release the intruder’s identity pending notification of his family.
Homicide detectives are investigating and will forward their report to the District Attorney’s Office to decide whether to pursue charges against the homeowner, Cassell said. The homeowner has not been arrested.
Metro spokesman Jay Rivera said use of force is considered reasonable — both for citizens and police — when a person feels an action must be taken to protect his life or others’ from serious injury or death.***
மேலே கொடுத்து உள்ளது இங்கே நடந்தது.
திருடனுக்கு எந்த ரைட்ஸும் கெடையாதுங்க. உண்மையான சிட்டிசனுக்கு எல்லா ரைட்ஸும் உண்டு!
களவு மட்டுமல்ல எந்த தவறு செய்தாலும் மாட்டிக்கொள்ளாதவ்ரை வெற்றிதான்.கள்வும் கற்று பார்த்தி தோற்றதுதானே உண்மை.
3கதைகளிலும் பரிமாணவளர்ச்சியடைந்த களவு பயமுறுத்துகிறது.குலத்தொழிலாக களவை கற்ற முத்தானை ’பரவாயில்லையே தப்பிச்சுட்டான்’ என கொண்டாடிய மனம், தேவைப்பட்டால் கொலையும் செய்வது என்று யோசித்திருந்த திருட்டுப்பசங்களை கண்டு ஆடி விட்டது
Post a Comment