Jul 14, 2012

காமத் துளிசரவணனை ஆரம்பத்தில் ‘கெழடு’ என்றார்கள். ஆரம்பம் என்பது பள்ளிப்பருவம். பொலவக்காளிபாளையம் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது அவனை அப்படி அழைத்தார்கள். அதுவே காலப்போக்கில் கெல்டு ஆகி இப்பொழுது கெல்ஸ் என்றாகிவிட்டது. 

கெல்ஸ் படித்துக் கொண்டிருந்த போது அவனது அப்பா சென்னையில் இருந்தார். சென்னையில் என்ன செய்கிறார் என்று யார் கேட்டாலும் ‘பிஸினஸ் செய்யறார்’ என்பான் ‘என்ன பிஸினஸ்?’ என்றால் பேந்த பேந்த முழிப்பான். அதற்கு மேலாக கேட்காமல் விட்டுவிடுவார்கள்.

கெல்ஸ் யாருடனும் அதிகம் பழக மாட்டான். ரங்கநாதன், பிரகாஷ் போன்ற சிலரோடு மட்டும் பேசுவான். இவர்களை மட்டும் வீட்டுக்கும் அழைத்து போவான். ரங்குவும் பிரகாஷூம் சரவணனின் வீட்டில் பம்முவார்கள். கெல்ஸின் அம்மா ரொம்ப கடுசு என பிரகாஷ் சொல்லியிருக்கிறான். வீட்டில் எதை எடுத்தாலும் திட்டுவாராம், சரவணனை அடிப்பாராம்.  

கெல்ஸ் பத்தாம் வகுப்பு படித்த வருடம் ஊரில் வறட்சி தாண்டவமாடியது. மழை பொய்த்து குடிநீருக்கே லாட்டரி அடிக்கத் துவங்கியதால் தேர்வு எழுதிய கையுடன் ஆளாளுக்கு ஒரு வேலைக்கு போய்விட்டார்கள். பிரகாஷ் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் சேர்ந்து கொண்டான். ரங்கநாதன் நம்பியூர் துணிக்கடையில் கணக்கு எழுத போய் வர ஆரம்பித்திருந்தான். சரவணனை அவனது அப்பா சென்னைக்கு அழைத்துக் கொண்டார்.

கெல்ஸ் ஒவ்வொரு முறை சென்னையிலிருந்து ஊருக்கு வரும் போதும் மெருகு கூடிக் கொண்டேயிருந்தான். மோதிரம், செயின், பிரேஸ்லெட் என்று தினுசு தினுசான நகைகள் பெருத்துக் கிடந்த அவனது பாடியில் சேர்ந்து கொண்டிருந்தன. ”மெட்ராஸ்ல என்ன மச்சி செய்யறே” என்றால் அட்சர சுத்தமாக “பிஸினஸ் செய்யறேன்”என்பான். ஃபாரின் செண்ட் எல்லாம் அடித்துக் கொள்வான் போலிருக்கிறது. பக்கத்தில் நிற்பதற்கே அத்தனை சுகந்தமாக இருக்கும்.

ஊருக்குள் முப்பது வயது, முப்பத்தைந்து வயதைத் தாண்டிய முதிர்கண்ணன்கள் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காமல் தர்மபுரி பக்கத்திலிருந்தும் கேரளா பக்கத்திலிருந்தும்  கிடைத்த பெண்களை கட்டிக் கொண்டு வந்த சமயம் கெல்ஸ்க்கு இருபத்திரண்டு வயதிலேயே பெண் பார்க்கத் துவங்கிவிட்டார்கள். கட்டிக்கப்போகிறவளுக்கு ஏழு பவுனில் தாலி செய்து போடுவதாகவும் முத்துமஹால் கல்யாண மண்டபத்தில்தான் திருமணத்தை நடத்த வேண்டும் என்றும் அவனது அம்மா சில கண்டிஷன்கள் போட்டிருந்தார். 

நூறு பவுனும் ஒரு காரும் இல்லையென்றால் பெண்ணின் ஜாதகத்தை கையில் கூட வாங்குவதில்லை என்ற அவரது பிடிவாதம் ஊருக்குள் பிரசித்தம் பெறத் துவங்கியது. கிடைக்கிற ஜாதகத்தையெல்லாம் தட்டிக் கழித்த போதும் நூறு பவுனோடும் ஒரு காரோடும் பெண் அமைந்தபாடில்லை. இரண்டு மூன்று வருடங்கள் ஓடிவிட்டது. பிறகு ஒரு முடிவுக்கு வந்தார்கள். நூறு பவுனையும், காரையும் இவர்களே வாங்கிக் கொள்வது ஆனால் பெண்வீட்டார் வாங்கித் தந்ததாக வெளியில் சொல்லிக் கொள்வது. 

எப்படியோ சாமியப்பனின் பெண்ணை பிடித்துவிட்டார்கள். ஆரம்பத்தில் சாமியப்பன் பெரிய இடத்துக்கு பெண் தர தயங்கினாலும் புரோக்கர் நல்லசிவம் சம்மதிக்க வைத்துவிட்டார். முத்துமஹாலில் நடக்கும் கல்யாணச் செலவுக்கு தன்னால் பணம் தர முடியாது என்று சாமியப்பன் கை விரித்துவிட்டதால் அந்தச் செலவும் கெல்ஸ் வீட்டார் தலையிலேயே விடிந்தது. சாமியப்பனின் மகள் குங்குமப்பூ நிறத்தில் இருந்தாள். சுண்டினால் ரத்தம் தெறிக்கும். அதற்காகவே கெல்ஸ் வீட்டில் ஒத்துக் கொண்டார்கள் என்றுதான் பேசிக் கொண்டார்கள்.

திருமணச் செலவுக்காக ரெண்டு லட்ச ரூபாயை மாமானாரிடம் கெல்ஸ் கொடுத்துவிட்டான் என்று அவனைப் பற்றிய பெருமை ஊருக்குள் றெக்கை கட்டி பறக்கத் துவங்கியது. சாமியப்பன் வாய் இருக்க மாட்டாமல் “மாப்பிள்ளை மெட்ராஸ்ல என்ன செய்யறாப்ல” என்று கேட்டுவிட்டான். கெல்ஸ் வழக்கம் போலவே “பிஸினஸ் செய்யறேன்” என்று முடித்துக் கொண்டான். பிஸினஸ் என்பது பெரிய வேலை போலிருக்கிறது என்று சாமியப்பன் நினைத்துக் கொண்டு அதற்கு மேல் கேட்கவில்லை.

கல்யாணத்தன்று சாமியப்பனும் அவனது மனைவியும் கேவிக் கேவி அழுதார்கள். அதில் ஆனந்த கண்ணீர்தான் அதிகம் என்று பார்த்தவர்களுக்குத் தோன்றியது. திருமணத்திற்கு பிறகாக கெல்ஸ் தன் மனைவியோடு ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் சென்னைக்கு ரயிலேறிய போதும் சாமியப்பனும் அவனது மனைவியும் கேவினார்கள். அப்பொழுது ஆனந்தத்தைவிடவும் அதிகமாக பிரிவுத் துயரத்தை ‘ப்ரொஜக்ட்’ செய்தார்கள்.

சென்னை போன இரண்டாவது நாளில் சாமியப்பனுக்கு போன் வந்தது. அவனது மகளுக்கு வயிற்றிலும் வாயிலும் நிற்காமல் போகிறது என்றார்கள். சாமியப்பனும் அவனது மனைவியும் பதறிப்போனார்கள். கெல்ஸின் அம்மா தனது காரிலேயே சென்னைக்கு போய்விடலாம் என்றார். காரில் யாரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அழுது கொண்டிருக்கும் தன் மனைவியை அதட்டுவதற்காக மட்டும் அவ்வப்போது சாமியப்பன் வாய் திறந்தான். துக்கம் தாளமாட்டாமல் அவனும் அவ்வப்போது அழுதான்.

மருத்துவமனையை அடைந்த போது சாமியப்பனின் மகளை ஐ.சி.யூவுக்கு எடுத்துச் சென்றிருந்தார்கள். கெல்ஸிடம் சாமியப்பன் விசாரித்தான். கடையில் சாப்பிட்ட கொத்து புரோட்டா ஒத்துக் கொள்ளவில்லை போலிருக்கிறது என்றான். மருத்துவமனையில் இருந்த அரை மணி நேரமும் கெல்ஸூக்கு போன் வந்து கொண்டேயிருந்தது. ஜன்னலோரமாக நின்று பேசிக் கொண்டேயிருந்தான்.

ஐ.சி.யூ வார்டிலிருந்து டாக்டர் வெளியே வந்தததைப் பார்த்த சாமியப்பன் வாய் பொத்தி அழுதான். உடல் முழுவதுமாக விஷம் பரவியிருப்பதாக டாக்டர் சொன்னார். இரண்டு நாட்கள் கழித்துதான் நிலவரம் சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

டாக்டர் சொன்னதையெல்லாம் கெல்ஸிடம் சொல்ல சாமியப்பன் ஓடினான். “அவ ரொம்ப பிஸி. ஷூட்டிங்குக்கு மாலத்தீவு போயிருக்கா. வந்தா சொல்லுறேன். ஹவர்லி பேஸிஸ் தான். ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம் வரைக்கும் சார்ஜ் பண்ணுறா” என்று கெல்ஸ் யாரிடமோ போனில் சொல்லிக் கொண்டிருந்தான். சாமியப்பனுக்கு அரை குறையாக புரிந்தது. தன் அத்தனை பலத்தையும் ஒன்று திரட்டி ”எங்களையெல்லாம் விட்டுட்டு போக எந்த விஷத்தை குடிச்சே....என் தங்கமே” என்று கதறினான். மருத்துவமனை அதிர்ந்தது. சரவணன் அந்த இடத்திலிருந்து காணாமல் போயிருந்தான்.