கடந்த வியாழக்கிழமை பின்னிரவு 2.30 மணிக்கு அலைபேசி மணியடித்தது. பதறியடித்து எடுத்தால் உறவினர் ஒருவருக்கு விபத்து நிகழ்ந்ததை துக்கத்தோடு அறிவித்தார்கள். சீரியஸாக இருப்பதாகவும் சொன்னார்கள். மற்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
நானும் தம்பியும் காரில் கிளம்பினோம். வழியில் உறவுக்கார பையன் ஒருவனும் ஏறிக் கொண்டான். கிருஷ்ணகிரியைத் தாண்டிய போது வெளிச்சம் வந்திருந்தது. பின்புறமாக வந்த கார்க்கார புண்ணியவான் ஒருவர் தொடர்ந்து ஹார்ன் அடித்துக் கொண்டிருந்தார். விலகி வழி விட வேண்டுமாம். அடுத்த ட்ராக்கில் பெரிய லாரி ஒன்று திணறிக் கொண்டிருந்தது. என்னை முந்திக்கொள்ளுங்கள் கார்க்காரரிடம் கை காட்டினேன். மிக வேகமாக முந்தியவன் எனது காருக்கு முன்பாக கிட்டத்தில் வந்து ப்ரேக் அடித்தான். ’திக்’ என்றாகியது. பிறகு ஜன்னலை திறந்துவிட்டு கையை மேலே உயர்த்தி பாம்புவிரலைக் காட்டினான். எனக்கு சொறிந்துவிட்டது போல் ஆனது.
கர்நாடக ரெஜிஸ்ட்ரேஷன் வண்டி அது. அந்தக் காரில் குழந்தைகளும் பெண்களும் இருந்தார்கள். முடிந்தால் அவனை மிரட்டி பார்க்கலாம் என்று வேகமாக அழுத்தினேன். அடுத்த சுங்க கேட்டில் நின்று கொண்டிருந்தான். கூட்டம் அதிகமில்லை. மூவரும் வேகமாக இறங்கிச் சென்றோம். அப்பொழுது அவன் சற்று பதட்டமானதை உணர முடிந்தது. தம்பி மிகுந்த கோபம் அடைந்திருந்தான்.
"கர்நாடக ரெஜிஸ்ட்ரேஷன் காரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் ரகளை பண்ணுறியா” என்ற கேள்வியை தம்பி தவிர்த்திருக்கலாம் அல்லது அவன் வேறு ஏதேனும் பதில் சொல்லியிருக்கலாம். “தமிழ்நாட்டில் என்ன புடுங்குவீர்களா?“ என்று அரைகுறைத் தமிழில் கேட்டான். கண் மூடி விழிப்பதற்குள் என் உறவுக்கார பையன் ‘சப்’பென்று அறைந்திருந்தான். அதன் பிறகாக அவன் எதுவும் பேசவில்லை. அவனை காரை எடுக்கச் சொல்லி அருகிலிருந்த பெண்மணி அவசரப்படுத்தினாள்.
"கர்நாடக ரெஜிஸ்ட்ரேஷன் காரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் ரகளை பண்ணுறியா” என்ற கேள்வியை தம்பி தவிர்த்திருக்கலாம் அல்லது அவன் வேறு ஏதேனும் பதில் சொல்லியிருக்கலாம். “தமிழ்நாட்டில் என்ன புடுங்குவீர்களா?“ என்று அரைகுறைத் தமிழில் கேட்டான். கண் மூடி விழிப்பதற்குள் என் உறவுக்கார பையன் ‘சப்’பென்று அறைந்திருந்தான். அதன் பிறகாக அவன் எதுவும் பேசவில்லை. அவனை காரை எடுக்கச் சொல்லி அருகிலிருந்த பெண்மணி அவசரப்படுத்தினாள்.
என்னோடு வந்திருந்த இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்குள் பெரிய சிரமமாகிவிட்டது. கார் எடுக்கும் கணத்தில் ”சேலம் வழியாகத்தானே வருவீர்கள் கவனித்துக் கொள்கிறேன்” என்றான். நாங்கள் சேலம் போக வேண்டியதிருக்கவில்லை. தொப்பூரிலிருந்து மேட்டூர் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.
***
ஊருக்கு வந்து சேர்ந்த போது உறவுக்காரர் இறந்திருந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டது.துக்கமாக இருந்தது. மார்ச்சுவரிக்கு முன்பாக என்னையும் அறியாமல் அழுது கொண்டிருந்தேன். போஸ்ட்மார்ட்டம் முடிந்து உடலை வாங்கி வர மதியம் ஆகியிருந்தது. இறந்தவரின் குழந்தை அதுவரைக்கும் எதுவும் உண்ணாமல் பசியோடு மணலில் விளையாடிக் கொண்டிருந்தது. ஏதாவது சாப்பிடலாம் என்று அழைத்துச் சென்றேன்.
உணவை முடித்துக் கொண்டு திரும்பி வரும் போது காரை ரிவர்ஸ் எடுக்க வேண்டியிருந்தது. பின்புறமாக நின்றிருந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் அது கீழே விழுந்துவிட்டது. அந்த வண்டியிலிருந்த பெட்ரோல் கிட்டத்தட்ட முழுவதுமாக கொட்டிப் போனது.
வண்டிக்காரர் மிக வேகமாக நடந்துவந்தார். முழுத்தவறும் என்னுடையதுதான். மன்னிப்புக் கேட்கத் தயாராகினேன். அடிக்க வந்தால் தடுப்பதற்கும் தயாராகியிருந்தேன். வண்டியை எடுத்து நிறுத்தினார். நான் பேச்சை ஆரம்பித்தேன். “அட உடுங்க தம்பி, தெரிஞ்சா இடிப்பீங்க..எல்லாம் இருக்கிறதுதான்” என்றார். என்ன சொல்வதென்று தெரியவில்லை. ”பெட்ரோலுக்கு பணம்...” என்று இழுத்தேன். “போங்க போங்க சொத்தா அழிஞ்சு போச்சு நான் பாத்துக்கிறேன் போங்க” என்றார்.
துக்கத்தையும் மீறிய ஆறுதலாக இருந்ததன அந்த வார்த்தைகள்.
5 எதிர் சப்தங்கள்:
அந்தப் பிஞ்சுக் குழந்தையை நினைத்தால் மனசு சங்கடப்படுது:(
தங்களுக்கு மிகப் பெரிய கொள்முதல் நடந்து விட்டதே.
காரில் வந்தவரை கையால் அடித்தீர்கள்.
ஆனால் இருசக்கிர வண்டிக்காரர் உங்களை அடிக்காமல் அடித்து விட்டார்
முதலில் குறிப்பிட்டிருப்பதைப் போல
நானும் நண்பர்களுடன் செல்லுகையில்
பலமுறை நேர்ந்திருக்கிறது
நீங்கள் இரண்டாவது முறை
சந்தித்த நிகழ்வினைப்போல் ஒருமுறை நேர
இப்போதெல்லாம் அவர்கள் சைடில்
தவறு இருந்தால் கூட நான் மன்னிப்பு கேட்டுப் போகிறேன்
அது சரியாகத்தான் படுகிறது
பல நினைவுகளைத் கிளறிப் போனது பதிவு
மனம் கவர்ந்தபதிவு.வாழ்த்துக்கள்
நன்றி துளசி கோபால். ஆம் குழந்தைகளின் துக்கம் பெருந்துக்கம்.
நன்றி தேவதாஸ், ரமணி.
சரியான புரிதலும் பொறுமையும் இருப்பின் இனியெல்லாம் சுகமே....
Post a Comment