Jun 22, 2012

சமூகத்தின் மொன்னைத் தன்மையும் ஒரே மாதிரிக் கவிதைகளும்


நேற்று ஆறுமுகம் முருகேசன் என்ற நண்பர் வந்திருந்தார். பகல் நேரம் என்பதால் நேராக அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள் என்று வழியைச் சொல்லியிருந்தேன். தனது நண்பருடன் வந்திருந்தார். இதற்கு முன்பாக அவரிடம் நேரடி அறிமுகம் கிடையாது. ஓரிரு மின்னஞ்சல்களை அனுப்பியிருப்பதாகச் சொன்னார். உண்மையிலேயே அதுபற்றி எனக்கு மறந்துவிட்டது. அவரை முகநூலில் கவனித்திருக்கிறேன். இதுவரை நான்கைந்து நாடுகளில் பணியாற்றியிருக்கிறாராம். அடுத்ததாக ஈராக் போகிறார். அதற்கு முன்பாக கொஞ்ச நாட்கள் உள்ளூர் விசிட். விசிட்டின் ஒரு பகுதியாக எனக்காக இரண்டு மணி நேரங்களை ஒதுக்கியிருந்தார். 

இரண்டு மணி நேரத்தில் கவிதைகளைப் பற்றியும் பொதுவாகவும் பேசிக் கொண்டிருந்தோம். அதைப் பற்றியே இரவும் யோசிக்கத் தோன்றியது.

                                                                        ***

ஒவ்வொரு காலகட்டத்திலும் நவீன கவிதை ஏதாவதொரு சித்தாந்தத்தில் அல்லது இயக்கத்தில் தன்னை பிணைத்துக் கொண்டிருக்கிறது. அது இடதுசாரி தத்துவமாகவோ, தலித்திய அல்லது பெண்ணிய இயக்கமாகவோ, தனிமனித இருப்பு சார்ந்ததாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றுமாகவோ இருந்திருக்கிறது.

கடந்த பத்து அல்லது பன்னிரெண்டு ஆண்டுகளை கவனித்துப் பார்த்தால் கவிதை எந்தவிதமான பிணைப்பும் அற்றதாக இருந்து கொண்டிருப்பதாக உணர முடிகிறது. இது கவிதைக்கு பலமா பலவீனமா என்று உறுதியாகக் குறிப்பிட முடியவில்லை. ஆனால் என்னளவில் இது பலவீனம் தான். கவிதை ஒரு இயக்கமாக பெற வேண்டிய இடத்தை சமூகத்தில் இழந்து கொண்டிருக்கிறது.

பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்த காலகட்டத்தோடு ஒப்பிடும் போது இன்றைக்கு தனிமனிதனும் சமூகமும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் சிக்கல்களும் குறைந்த மாதிரி இல்லை. மாறாக அதிகரித்திருக்கின்றன. தொழில்நுட்பத்தின் பிரமாண்டத்தில் சிக்கல்கள் வேறொரு பரிமாணத்தை அடைந்திருக்கின்றன. ஆனால் இந்த நெருக்கடிகளில் இருந்து மீளும் விதமாகவோ அல்லது இந்தச் சிக்கல்களை எதிர்த்தோ எந்த இயக்கமும் வலுப்பெறாதது கவனிக்கத்தக்கது. யோகா சொல்லித்தருகிறேன், வாழும் முறைகளைக் கற்றுத்தருகிறேன் என்ற போலி ஆன்மிகம் மட்டுமே பேரியக்கமாக வளர்ந்திருக்கிறது.

இயக்கங்கள் வலுப்பெறாமைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. நம் மீது நிகழ்த்தப்படும் பண்பாட்டு மற்றும் பொருளியல் சார்ந்த பல்வேறு தாக்குதல்களினால் மொன்னைத் தன்மை அடைந்து வருகிறோம் அல்லது மொன்னையாக்கப்பட்டிருக்கிறோம் என்பது முக்கியமான காரணம். போராட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் போது கூட நமக்கு எந்தவிதமான ஆபத்தையும் விளைவிக்காத போராட்ட வழிமுறைகளை எடுத்துக் கொள்கிறோம். போராட்டம் என்றால் அரசாங்கத்தை எதிர்த்தோ அல்லது ஆதிக்க சக்திகளை எதிர்த்தோ நிகழ்த்தப்படும் போராட்டங்கள் மட்டும் இல்லை. சாதாரணமாக அலுவலகத்தில் அல்லது பொது இடங்களில் கூட குரலை உயர்த்தாத மழுங்கடிக்கப்பட்ட தன்மையை பெற்றிருக்கிறோம். கவிதைகள் சமூகத்தை அல்லது தனிமனிதனை பிரதிந்திவப்படுத்துபவை. இந்த மொன்னைத் தன்மையான சூழலிலிருந்து என்னவிதமான கவிதைகளை எதிர்பார்க்க முடியும்? 

கவிதைக்கு மொழியும் அனுபவமும் இரண்டு முக்கியமான அம்சங்கள் எனச் சொல்லலாம். மொழியை வசப்படுத்துவது எளிது. தொடர்ச்சியாக முப்பது கவிதைகளை சிரத்தையாக எழுதும் போது முப்பத்தொன்றாவது கவிதையில் மொழி வசப்பட்டுவிடும். அனுபவம் அப்படியானது இல்லை. தனிமனித அனுபவங்களைக் கூட அனைவரும் ஒரே மாதிரியானதாக பெறுவதற்கான சூழலை அமைத்துக் கொண்டிருக்கிறோமோ எனத் தோன்றுகிறது. மேலோட்டமாக அல்லது லெளகீகமாகப் பார்த்தால் அப்படி இல்லை என்றுதான் தோன்றும். ஆனால் நான் குறிப்பிடுவது Inner Experience. தற்பொழுது உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான கவிதைகள் ஒரே மாதிரியானவையாக இருப்பதன் அடிப்படையை யோசித்தால் இதுதான் காரணமாக இருக்கலாம் என்று நம்புகிறேன்.
***

எழுதுவதன் மூலமாக கிடைக்கும் நட்புகள் நெகிழச் செய்வதாக இருக்கின்றன. அறிமுகமே இல்லாத ஒரு நபருடன் எழுத்துக்களின் மூலமாக மட்டுமே உருவாகும் நட்பும் உறவும் ஆச்சரியமளிப்பதாகவும் இருக்கிறது. நேற்று ஆச்சரியமும் மகிழ்ச்சியும்.