Jun 2, 2012

மின்னல் கதைகள் குறித்து- கடிதம்

அன்புள்ள மணி,

மின்னல் கதைகளின் வரிசையைப்பற்றி என் அபிப்பிராயத்தை சொல்வதானால் அது படைப்புத்திறமையின் மற்றுமொரு பிம்பம். மொத்தமாக கதைத் தொகுப்புகளுக்கு வேறு பெயர் கொடுத்துவிட்டதால் அது சிறுகதை என்கிற வடிவத்திலிருந்து மாறுப்பட்ட மற்றொரு வடிவம் என்று ஆகிவிடுகிறது. நவீனக் கவிதைகள் எழுதும் ஒருவர் வெகுஜன கதைகளைக் கையாள்வது என்பது அக்குறிப்பிட்டவரின் பன்முக மன அமைப்பைப்  பற்றியது. அதில் சுஜாதா தெரிகிறார் இதில் பாலகுமாரன் தெரிகிறார் என்பது வாசிப்பைப் பொருத்தது.

இப்படி எடுத்துக்கொண்டால் சுஜாதா கூட 'நகரம்','ஆட்டக்காரன்' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளில் மற்ற சிறுகதைத் தொகுப்புகளைப் பார்க்கும்போது தனது பிரதியின்மையைக் காட்டினார். நாஞ்சில் நாடன் 'கும்பமுனிக் கதைகள்','கல்யாணக்கதைகள்' என்று வேறு சில பெயர்களில் சிறுகதைகள் அல்லாத கதைகளை எழுதினார். அது அவரது யதார்த்த எழுத்திலிருந்து வேறுபட்டிருந்தது.

உங்களின் கவிதைகள் மூலம் நீங்கள் வெளிப்பட்டதை பரந்த உலகுக்கு சென்றுசேரும் கதைகள் மூலம் வெளிப்படுவது வாசகர்களுக்கு சற்று நெருடலாக இருப்பதுபோல் தோன்றுமே தவிர இது போன்று முயற்சிப்பது என்பது எத்தனை பேர் செய்வார்கள் என்ற வினாவிற்கு உரியதே. 

பொதுவாகவே ஆங்கிலத்திலிருந்து நம்மவர்கள் கறந்து இந்திய தமிழக கலாச்சாரத்தின் சாயம் கலந்து படங்களை எடுப்பதும் அதற்கு ஆதாரமாக ஒரு ஒப்பீட்டுப் பட்டியல் மின்னஞ்சல்களிலும் வார இதழ்களிலும் உலாவுவதும் அனைவரும் அறிந்தது. அப்படி சில வருடங்களுக்கு முன் "The Life of The David Gale" என்ற ஆங்கிலத் திரைப்படம் பார்த்தேன். அது நமது விருமாண்டியை நினைவூட்டினாலும் அதில் நம்மவர் எடுத்துக்கொண்ட ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசோவா பாணியும் கதையின் தெளிவும் குறிப்பிடத்தக்கதாகவும் நான் கண்ட படத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகவும் இருந்தது. உலக முயற்சிகளிலேயே இது போன்ற பின்பற்றுதல்,சாயல்தன்மை இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால் சரக்கு எப்போதும் நம்முடையதாக இருக்கிறது.

நவீன இலக்கியத்தை அடைவதற்கு இத்தகைய முயற்சிகள் ஒரு படிக்கட்டாக அமையும்போது மற்ற சிலரும் மணிகண்டனின் சாயலையொத்த கதையினை எழுத ஆரம்பிப்பார்கள் என்பதே என் கருத்து. 


அன்புடன்
ஆ. கிருஷ்ணகுமார்
                                                        ***

அன்புள்ள கிருஷ்ணகுமார்,

வணக்கம்.

முதலில் இந்தக் கடிதத்தை என்னால் பாராட்டுக்கடிதமா அல்லது வசவுக்கடிதமா என்று தரம் பிரிக்க முடியவில்லை. அது அவ்வளவு முக்கியமுமில்லை. ஒருவர் மெனக்கெட்டு மற்றவரின் படைப்பு குறித்து சில
வரிகளை எழுதுகிறார் என்பதே மகிழ்ச்சியைத் தரக்கூடிய நிகழ்வு. அதுவே அந்த எழுத்திற்கான அங்கீகாரமும் கூட.

கவிதையோ, கதையோ, விமர்சனமோ- ஏதோ ஒன்றை எழுதி முடித்த இரவு மகிழ்ச்சியாக உறங்க முடிந்தால் அதுவே என்னளவில் திருப்தியான தருணம். 
அதைத்தான் சமீப காலங்களில் மின்னல்கதைகள் எனக்குத் தந்து கொண்டிருக்கின்றன. க்ளிஷேவாகச் சொன்னால் ஆத்மதிருப்தி. இந்தக் கதைகளை என் உரைநடை எழுத்தை கூர் தீட்டிக் கொள்வதற்காகவே எழுதத் துவங்கினேன்.

ஆனால் இந்தச் சின்னஞ்சிறு கதைகள் பெற்றுத்தந்து கொண்டிருக்கும் எதிர்வினைகள் தொடர்ந்து எழுதச் செய்வதற்கான உத்வேகத்தைத் தருகின்றன. இவை எதிர்பாராத மனிதர்களிடமிருந்து கிடைக்கும் எதிர்பாராத பாராட்டுகளாகவோ அல்லது குட்டுக்களாகவோ இருக்கின்றன.

“சுவாரசியம்” என்ற ஒரு அம்சத்தைத் தவிர தற்சமயத்தில் வேறு எந்த நோக்கமும் இந்தக் கதைகளில் இல்லை. நகர்ந்து கொண்டிருக்கும் போது அவை தமக்கான சரியான திசையைக் கண்டறிந்துவிட முடியும் என நம்புகிறேன்.

உங்களின் மின்னஞ்சலுக்கு உளப்பூர்வமான நன்றிகள். தொடர்ந்து வாசித்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்.
மணிகண்டன்
01-06-2012 11.24 pm