காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் செவ்வியல் பதிப்பாக வெளிவந்திருக்கும் அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை பல பாராட்டுகளை பெற்றுத் தந்துகொண்டிருக்கிறது. மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உணர்கிறேன்.
பின்வரும் கடிதம் இன்று கிடைத்தது. இன்னுமொரு துளி மகிழ்ச்சி.
****
அன்பின் மணிகண்டன்,
புத்தத்திற்கு தங்கள் முன்னுரை அருமை. புத்தகம் இரண்டாம் முறை தற்போது படித்தேன். மிக சுவாரசியமாக இருந்தது. முதல் முறை சற்று போரடித்த கிரிக்கட் வர்ணனைகள்(நான் கிரிக்கட் ரசிகனல்ல)கூட இம்முறை ஒரு சிறுவனுடைய பார்வையில் மிக நன்றாக இருந்தது. அதுதான் அசோக மித்திரன் ஞானி கூறுவதுபோல் படிக்கப் படிக்கத்தான் சுவைகூடும் ரகுமான் ம்யூசிக் போல.
உங்கள் எழுத்துக்களை எங்கு படிக்கலாம்? எங்கோ படித்த ஞாபகம் இருக்கிறது.ஒரு நல்ல எழுத்துக்கும் ஒரு தேர்ந்த ரசிகன் அறிமுகமோ, விமரிசனமோ(?) தேவைப்படுகிறது. உங்கள் முன்னுரைஅதைச் செய்கிறது. மிக அருமை
உங்களைப்பற்றி விவரம் தரமுடியுமா?
நான் ராதாகிருஷ்ணன். ரிடையர்டு எஞ்சினியர் மதுரை நகரில் வசிக்கிறேன். புத்தகங்கள் படிப்பதும், வலைத்தளங்கள் மேய்வதுமே பொழுது போக்கு. பிடித்த எழுத்துக்கள் தேவன், தி.ஜா,அ. மோ.,லா.ச.ரா., மற்றும் பலர்.
அன்பின் திரு.ராதாகிருஷ்ணன் அய்யா,
வணக்கம்.
தங்களின் மின்னஞ்சலுக்கு நன்றி. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
நாவல் உட்பட எந்த இலக்கியப்பிரதியும் மறுவாசிப்பின் போது வேறொரு பரிமாணத்தை வாசகனுக்கு கொடுக்கிறது.
இதுவரை ஒருமுறையேனும் கூட வாசித்திராத எழுத்துக்களின் எண்ணிக்கை குவியல் மலைப்பைத் தந்துகொண்டேயிருக்கிறது. இந்த மலைப்பை மீறி மறுவாசிப்பு செய்வதற்கான சாத்தியம் குறைவாகவே இருக்கிறது. மறுவாசிப்பு செய்யத்தூண்டும் எந்த படைப்பும் அந்த குறிப்பிட்ட வாசகனளவில் வெற்றிபெற்ற படைப்பாகிவிடுகிறது. எழுப்பட்ட அத்தனை எதிர்மறை விமர்சனங்களை மீறி வெற்றியடைந்த 18வது அட்சக்கோடு நாவல் தன் வாசகனை தன்னை நோக்கி ஈர்த்துக் கொண்டேயிருப்பதாக உணர்கிறேன்.
இந்த நாவல் எழுதப்பட்ட காலத்திலும், பிரசுரிக்கப்பட்ட காலத்திலும் நான் பிறந்திருக்கவில்லை. செவ்வியல் பதிப்பாக வெளிவரும் சமயத்தில், அசோகமித்திரன் என்ற ஆளுமையின் நாவலுக்கு முன்னுரை எழுத எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பினை அங்கீகாரமாக கருதிக் கொண்டாலும் எனது தகுதியின் மீது எப்பொழுதும் ஒரு சந்தேகப்பார்வையை வைத்துக் கொள்வதற்கான சாத்தியத்தையும் இந்த வாய்ப்பு உருவாக்கியிருக்கிறது.
18வது அட்சக்கோடு நாவலுக்கு எழுதிய முன்னுரை எதிர்பாராத திசைகளிலிருந்து முகம் தெரியாதவர்களிடமிருந்து பாராட்டுக்களை பெற்றுத் தந்து கொண்டிருக்கிறது. அதற்கான நன்றி காலச்சுவடுக்கும் உரித்தானது.
எழுத்து சார்ந்த என் பங்களிப்புகளின் விவரத்தை www.nisaptham.com என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
தங்களின் அன்பிற்கும் நேரம் ஒதுக்கி பாராட்டியமைக்கும் நன்றி.
அன்புடன்,
வா.மணிகண்டன்.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment