
தீராத உக்கிரத்துடன்
இறங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவுப் பெருமழை-
முடிவுறாத கதைகளை
கேட்க யாருமில்லாத
நகரத்தின் நிசப்தத்தில்
நடுங்கிக் கொண்டிருக்கிறது
கான்கிரீட் கட்டிங்கள்
தன்
இசையைத் தின்றுவிட்ட வெறுப்பில்
மழை
நகரத்தின் ஜன்னல்களை ஓங்கி அறைகிறது
திரைகளிடப்பட்ட ஜன்னலுக்குள்ளான
சல்லாப சண்டைகளை
நிறுத்த முடியாத கோபத்தை
மண் மீது பொழிய
வெறுமை குழைந்த நகரத்து மண் குதித்துப் பழிக்கிறது
காற்றை எதிர்த்து அடிக்கிறது மழை
முறிந்த மரங்களில் இருந்து எழும் பச்சை வாசனையோடு
விசிறத் துவங்கிய காற்று
தன் பலத்தைத் திரட்டி மழையுடன் மோதுகிறது
உக்கிரமான ஈரப்போர்
துளி குருதி இல்லை
ஒரு மரணம் இல்லை
ஆழ்மன வன்மம் இல்லை
ஆனால்
மழை நிகழ்த்த விரும்பும் பிரளயத்தில்
அதிர்ந்து கொண்டிருக்கின்றன
வானமும் பூமியும்
எதையும் கவனிக்காத இந்நகரத்தின்
சோடியம் விளக்குகள்
கண்களை மூடிக் கொள்கின்றன
நகரம் இருளில் மூழ்குகிறது
நடுநிசியில்
விழித்துக் கொண்ட நாய்கள் ஒடுங்குகின்றன
மழைக்கு சலனமுறாத நகரத்தின்
சில வீடுகளில் யு.பி.எஸ்ஸில் இருந்து
கசிகிறது வெளிச்சம்
தொகுப்பு வீடுகளில்
ஜெனரேட்டரை ஓட விடுகிறார்கள்
திரைகள் விலகிய ஜன்னல்களில்
டிவி ஒளிரத் துவங்கிய போது
தன் தோல்வியின் துக்கத்தில்
துவண்டு
அமைதியடைந்தது மழை
போக்கிடமில்லாத மழை
முறிந்த பிரியமென
நகரச் சாலையின் குட்டைகளில் கொஞ்சமாகவும்
தங்க மீன் நீந்தும்
இந்த ஹார்லிக்ஸ் பாட்டிலுக்குள்
மீதமாகவும்
அடைந்து கொண்டது
5 எதிர் சப்தங்கள்:
கவிதை படிக்கும் போதே இங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. நீங்கள் சொல்வது போலவே. நல்லா இருக்கு மணி.
அனுஜன்யா
கவிதை படிக்கையில் மழையில் நனைந்த சுகம்!
அடிச்சு ஒய்றதுன்னா இதுதான்!! என்னா மழை!!
மழையின் துளிகள் வார்த்தைகளில் சிதறி கிடக்கின்றன அருமை.
ஐயோ...பிரமாதங்க...
Post a Comment