Mar 31, 2010

குழிவண்டுகளின் அரண்மனை

வாசித்த புத்தகத்தை பற்றி எழுதும் போது இரண்டு விதமாக எழுதுகிறார்கள். ஒன்று விமர்சனக் கோட்பாடுகள் சார்ந்து எழுதுதல். மற்றொன்று ரஸனை சார்ந்து எழுதுதல். ரஸனை சார்ந்து எழுதுகிறேன் பேர்வழி என்பது 'இது என் பார்வை' என்று சொல்லித் தப்பி விடுவதற்கான வழியை எளிதாக்குகிறது என்றாலும், ரஸனை சார்ந்து பேசுவதில் கிடைக்கும் சுவையும், இன்பமும் வடிவம்-கட்டமைப்பு என்ற கோட்பாடுகளின் வழியான பேச்சில் எனக்கு கிடைப்பதில்லை.

நான் எழுதி முடித்திருந்த கவிதை விமர்சனம் ஒன்றை படித்த நண்பர், அந்தக் கவிதைகளை நான் வாசித்து முடித்திருந்த புள்ளியில் இருந்துதான் வாசிக்கவே துவங்க வேண்டும் என்றார். இதற்கான பதில் எதுவும் என்னிடமில்லை. இனி அடுத்த கவிதையை வாசிக்கும் போதும் எனக்கு பிடிபடும் இடத்தில் இருந்துதான் துவங்க முடியும். அந்தப் பிடிபடும் புள்ளி என்பதுதான் கவிதையில் நான் அடைந்திருக்கும் பயிற்சி. வேறொரு புள்ளிக்கு நகர்ந்து செல்வதென்பது அத்தனை எளிதில் சாத்தியமில்லை. அதற்கு இன்னும் பல நூறு கவிதைகளும், உறக்கம் தொலைத்த நள்ளிரவு வாசிப்புகளும் தேவைப்படலாம்.

கவிதை தன் ரசிகனோடு நிகழ்த்தும் உணர்ச்சி விளையாட்டை தோராயமாகவே வார்த்தைகளாக்க முடிகிறது. பெரும்பாலும் அந்த வார்த்தைகள் நிகழ்ந்த விளையாட்டை பதிவு செய்யாமல் நேர் எதிர்மாறானதாக இருந்துவிடுகிறது. இதே நினைப்புகளில்தான் த.அரவிந்தனின் 'குழிவண்டுகளின் அரண்மனை' என்ற தொகுப்பை வாசித்தேன்.

சோற்றுக்கு எந்தப் பஞ்சமும் இல்லாத ஒருவன், ஒரு சந்தர்ப்பத்தில் உக்கிரமான வெம்மை அவனது தோலை சுட்டெரிக்க உணவும் நீரூமின்றி நாவறண்டு பொட்டல் வெளியில் அலைந்து திரியும் போது அடையும் ஒரு பித்து மனநிலையையும், பின்னர் வெகு நாட்கள் கழித்து அந்த அலைந்த அனுபவத்தை நினைக்கும் போது கிடைக்கும் ஒரு விதமான திருப்தியான பூர்ணத்துவத்தையும் இந்தத் தொகுப்பினை வாசிக்கும் போதும் பின்னர் மூடி வைத்த போதும் அடைந்ததாக உணர்கிறேன்.

கவிதைகளுக்கு என எந்தச் சிக்கலும் இருப்பதில்லை, அவை வெளிப்பட்ட கணத்திலிருந்து பிறகு எப்பொழுதும் ஸ்திதியாகவே இருக்கின்றன. அதனை நெருங்கும் மனமும் விலகும் மனமும் எதிர் கொள்ளும் புற/ அகச் சிக்கலுக்கு ஏற்ப கவிதை சிக்கலானதானவோ அல்லது எளிமையானதாகவோ உருவம் பெறுகிறது. இந்த ஸ்திதி நிலையில் தன் கவிதையை நிலை நிறுத்த ஒரு வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் கவிஞன் தேடுகிறான். இந்தத் தேடலை சிக்கல் இல்லாமல் நிகழ்த்தும் ஒரு படைப்பாளி தனித்துவமான படைப்பை நோக்கி இயல்பாக நகர்கிறான். இந்த தனித்துவத்தை அரவிந்தன் இந்தத் தொகுப்பில் அடைந்திருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

பெரும்பாலான நவீன கவிதைகள் தட்டையாக நகர்ந்து கடைசி வரிகளில் ஒரு பெரும் திருப்பத்தை தன்னுள் வைத்திருக்கின்றன என்று யாரோ கவிதையியல் பற்றி சொன்னது ஞாபகத்தில் இருக்கிறது. இந்த திருப்பம் கவிதைக்கு மிக அவசியமானதா என்பது வேறு விஷயம், ஆனால் கவிதையில் துருத்தலில்லாத ஒரு திருப்பம் இருக்குமெனில் அது வாசகனை ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு நகர்த்திவிடுகிறது. இந்த தளம் மாற்றுதலும், திருப்பமும் அரவிந்தனின் கவிதைகளில் மிக இயல்பாக இருக்கின்றன.

குழிவண்டோடு/மண்ணுக்குள்/ஊடுருவி/அதன் அரண்மனையைச்/சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்/ஒரு சிறுமி.எப்படியும்/மேலே/வரவழைக்க
வேண்டுமென/குழியில்/எச்சிலை/வெள்ளமாக/ஒழுகிக் காத்திருந்தாள்/வேறொரு சிறுமி.

முதல் பகுதியில் குழிவண்டோடு சுற்றும் ஒரு சிறுமியின் குழந்தைமை தெரிகிறது. அதே இடத்தில், அதே நேரத்தில் ஒரு குழி வண்டை மேலே வரவழைக்க அதனை மரணத்தின் நுனிக்கு கொண்டு செல்லும் ஒரு சிறுமியின் குரூரமான மனநிலை தெரிகிறது. இந்தக் கவிதை இரு வேறு தளங்களுக்கு நகர்கிறது. ஆனால் பெரும் திடுக்கிடல் எதுவுமில்லாமல். இன்னும் சற்றே நுட்பமாக வாசிக்கும் போது குழந்தைகளுக்கு மட்டுமே சாத்தியமான விசித்திர உறவுகளின் ஒரு பகுதியில் வாசகனை இந்தக் கவிதை நிறுத்துகிறது. இது, இந்தக் கவிதையில், இந்த இரவில் எனக்குக் கிடைக்கும் அனுபவம். இந்தக் கவிதை தன் வாசகனுக்கு தருவதற்காக இன்னமும் எண்ணற்ற வாசிப்பனுவங்களை தனக்குள் கொண்டிருக்கிறதாகவே எனக்குப் படுகிறது. இப்படியான கவிதைகளை இந்தத் தொகுப்பில் தொடர்ந்து கடக்கிறோம்.

13 ஸ்தனங்கள் என்ற கவிதையை தவிர்த்துவிட்டு இந்தத் தொகுப்பைப் பற்றி பேச முடியும் என்று தோன்றவில்லை. இந்த ஒரு கவிதைக்குள் பதின்மூன்று சிறுகவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது.
தகிக்க இயலா உணர்ச்சியில்/அல்குலைக்/காட்டி/கொடுத்துவிட்டு
/வேடிக்கை/பார்க்கின்றன்/ஸ்தனங்கள்
-என்று ஒரு கவிதை. ரஸனையாக இருக்கிறது.
இந்தக் ஸ்தன கவிதைகள் மிக இயல்பான மொழிநடையில் வெளிப்பட்டிருக்கின்றன.பன்னிரெண்டு கவிதைகள் எனக்கு மிக விருப்பமானதாக இருக்கின்றன. ஒன்றைத் தவிர.
பருத்து தளும்பும்/மேல் சதையிடம்/கற்பு பேசுகின்றன/நடிகையின் ஸ்தனக் காம்புகள்
-என்றொரு கவிதை. கற்பு என்பதை உடல் சம்பந்தப்பட்டதாக மட்டுமாக, நடிகைகளுக்கும் கற்புக்கும் சம்பந்தமில்லை என்ற சாதாரண மனநிலையில் மட்டுமே வைத்து இந்தக் கவிதையை வாசிக்க வேண்டியிருப்பதால் அரவிந்தனின் இந்த வரிகள் எனக்கு உவப்பானதாக இல்லை.

சில கவிதைகள் Snap ஆக எந்த விதமான உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் ஒரே ஒரு காட்சியை மட்டும் தெறிக்கும். அற்புதமான நிழற்படத்தை பார்க்கும் ஒருவன் தனக்கேயான அனுபவங்களை பெறுவது போலவே இந்த Snap கவிதைகள் வாசகனுக்கான அனுபவங்களை தருபவையாக இருக்கும். இப்படியான நல்ல Snap கவிதைகளை இந்தத் தொகுப்பில் வாசிக்க முடிந்தது. பின் வரும் கவிதை நான் சொல்ல வருவதை தெளிவாக்கக் கூடும்.
தட்டுப்படும்/விரல்களின் குறிப்புகளுக்கேற்ப
/ஏற்ற இறக்கத்துடன்/அவளை/அப்படியே பாடுகிறது/எரிந்து/வறட்டி.

இந்தத் தொகுப்பின் பக்கங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக புரட்டும் போது தட்டுப்படும் ஒரு விஷயம், கவிதையின் வடிவங்களில் கவிஞன் முயன்றிருக்கும் முயற்சிகள். இவை எனக்கு மிக முக்கியமான முயற்சியாகப் படுகிறது. பெரும்பாலும் ஒரே விதமான வடிவத்தில் இருக்கும் கவிதைகளை தொகுப்புகளில் எதிர்கொள்ளும் போதும் உண்டாகும் அயற்சியை தவிர்க்க முடிவது மட்டும் காரணமில்லை. கவிதையின் உள்ளடக்கத்திற்கான தேடலுடன் சேர்த்து, வடிவங்களுக்கான தேடலையும் தொடர்ச்சியாக கவிஞன் மேற்கொள்ளும் போது வாசகனுக்கு புதுப்புது அனுபவங்களை அவனால் தொடர்ந்து அளிக்க முடிகிறது என்பதனை உறுதியாக நம்புகிறேன்.

சில சிறு கவிதைகள் கவிதை உணர்ச்சியை தராமல் ஒற்றைக் காட்சியமைப்பாக இருக்கின்றன என்ற குறையை தவிர்த்துவிடும் போது ஒரு கவிதை ரசிகனாக என்னால் இந்தத் தொகுப்பில் உற்சாகமாக பயணிக்க முடிகிறது. "மாம்பழ எழுத்துக்கள்" என்ற கவிதையை உதாரணமாகச் சொல்வேன்.

"மாம்பழத்திலிருந்து/வடியும் பால்/என்னை பார்த்து
/ஏதோ ஒன்றை/அழுத்தமாக எழுதுகிறது
/உறுதியாகச் சொல்கிறேன்/அது/என்னைப் பார்த்துதான் எழுதுகிறது/வண்டின் ரீங்காரத்தால்/எப்படியும் அதைப் படிப்பேன்"

மாம்பழத்திலிருந்து வடியும் பாலை காட்சியாக பார்த்துக் கொண்டிருக்கும் வாசகனை தொடர்ந்து வரும் வரிகள் அதே வேகத்தில் கவிஞனை நோக்கி இழுக்கிறது. வண்டு மலரோடு தனக்கு இருந்த உறவை ரீங்காரத்தால் சொல்கிறதா?மலருக்கும் பழத்திற்குமான உறவைத்தான் வடியும் பாலிலிருந்து படிக்கிறாரா? என்று கவிதையை அணுகினாலும், வண்டின் ரீங்காரத்தால் உறுதியாகப் படிப்பேன் என்ற முரட்டுவாதமே கவிதையிலிருந்து என்னை விலகிப் போகச் செய்கிறது. இப்படி வாசகனை கவிதையிலிருந்து விலகிச் செல்லுதலை கவிஞன் கவிதைக்குள் உருவாக்க வேண்டியதில்லை என்று சொல்வேன்.

"ஒரு சொல்" என்ற தலைப்பிலான கவிதை இந்தத் தொகுப்பில் துருத்திக் கொண்டிருக்கிறது. சொற்களைப் பற்றி ஏற்கனவே நிறைய கவிதைகளை எதிர் கொண்டிருக்கிறோம் அதை விடவும் இந்தக் கவிதையின் வடிவம் வேறு சில கவிஞர்களின் வடிவங்களை நினைவுபடுத்துகிறது.

இப்படி குறைகளை குறிப்பிட்டு சுட்ட முடிகிறதே தவிர்த்து பொதுவான குறைகளாக சுட்டமுடியாமல் இருப்பது தொகுப்பாக இக்கவிதைகளின் வெற்றியாகப் படுகிறது.

குழிவண்டுகளின் அரண்மனை தொகுப்பை மிக முக்கியமான/ கவனம் பெற தகுதியுடைய கவிதைத் தொகுப்பாக தயங்காமல் முன் வைக்கிறேன்.

குழிவண்டுகளின் அரண்மனை/த.அரவிந்தன்/அருந்தகை, E-220,12வது தெரு,பெரியார் நகர், சென்னை 600082

4 எதிர் சப்தங்கள்:

சென்ஷி said...

:)

நீங்க எழுதிட்டீங்க தலைவரே.. நான் இன்னும் அந்தக் கவிதைகளைப் படிச்சு வெளிவர முடியல..

விரைவில் விமர்சனத்தில் இணைகிறேன்.

கார்த்திகேயன் said...

உங்க படைப்புகள் அற்புதமா இருக்குங்க ...மணிகண்டன் .எந்த துறைய
எடுத்தாலும் நல்லா எழுதுறிங்க....நல்லா விமர்சனம் .வளர்க நன்றி.
அப்படியே எனக்கும் எழுதுங்க .

Vaa.Manikandan said...

நன்றி சென்ஷி.

நன்றி கார்த்திகேயன். உங்களின் கவிதைகளோடு ஏதோ ஒரு விதத்தில் என்னால் தொடர்பு கொள்ள முடியுமெனில் நிச்சயம் எழுதுகிறேன். தற்சமயம் உங்கள் கவிதைகளில் இருந்து நான் வெகுதூரத்தில் இருக்கிறேன். முன்பாகவோ அல்லது பின்பாகவோ.

Unknown said...

வாங்கி வைத்திருக்கும் புத்தகத்தை உடனே படிக்கத் தூண்டும் நல்ல மதிப்புரை மணிகண்டன்.