Jan 19, 2010

எம்.ஜி.ஆர் பாடிக் கொண்டிருந்தார்


அன்று எம்.ஜி.ஆரின் 93 வது பிறந்தநாள் என்பதால் ஒவ்வொரு ஊரிலும் எம்.ஜி.ஆர் ஒலிபெருக்கியில் பாடிக் கொண்டிருந்தார்.சேவூரில் 'கடலோரம் வாங்கிய காற்று'சுற்று வட்டாரத்தை அதிரச் செய்தது. அவரது படத்துக்கு மாலையிட்டு தேங்காய்,பழம் படையலிட்டு இருந்தார்கள்.

வெயில் உச்சியேறிக் கொண்டிருந்தது. பைக்கில் வேகமாக மொட்டணம் அருகில் வந்து கொண்டிருந்த போது ஒரு முதிய பெண்மணி சாலையின் ஓரமாகக் கிடந்தார்.அவரை ஏதோ ஒரு வாகனம் முட்டித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றிருக்கிறது.இரண்டு செருப்புகள், ஒரு சுருக்குப்பை சிதறியிருக்க குப்புறக் கிடக்கிறார். உடலில் அசைவுகள் இல்லை. அந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்கின்றன. எல்லா வாகன ஓட்டிகளும் 'கருணை பொங்க' அந்தப் பெண்மணியின் உடல் மீது ஏறி விடாமல 'U' வடிவத்தில் வளைத்துச் செல்கிறார்கள். யாருமே இல்லாத சாலையில் இறங்கி அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தால் 'நீ தான் அடித்து இருக்கக் கூடும்' என்று பழிச் சொல் வருவதற்கான அனைத்து சாத்தியங்களும் நிரம்பிய ஆள் அரவமற்ற இடமாக அந்தப் பகுதி இருந்தது.

இதே பயம் தொற்றிக் கொள்ள நானும் 'U' வடிவத்தில் வளைத்து அந்தப் பெண்ணைக் கடந்தேன். இருநூறு மீட்டர் கடந்தவுடன் ஒரு முதியவர் சைக்கிளில் வைக்கோல் கட்டை வைத்து மிதித்துக் கொண்டு எதிரில் வந்து கொண்டிருந்தார்.அவரோடு சேர்ந்து கொண்டு அந்தப் பெண்ணுக்கு உதவினால் சிக்கல் எதிலும் நான் சிக்க வேண்டியிருக்காது என்று நம்பினேன். நான் அந்தப் பெண்ணை இடிக்கவில்லை என்பதை முதலிலேயே அவருக்கு தெளிவாக புரிய வைக்கும் நோக்கத்தில் தூரமாக நின்று கொண்டு "அந்த இடத்தில் ஒரு பெண் விழுந்து கிடக்கிறாள். அனேகமாக உள்ளூராக இருக்க வேண்டும், உங்களுக்கு யாரென்று தெரியுமா?" என்றேன். பதறியவர் அந்த இடத்தில் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு வேகமாக வந்தார்.

அவர் அந்தப் பெண்ணை நோக்கி நகரும் போதே அவசர உதவி எண் 108ஐ அழைத்தேன். இடம்,விபத்து நிகழ்ந்த நேரம் போன்றவற்றை வாங்கியவர்கள் என் பெயர்,தொலைபேசி எண்ணையும் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். என்னைப் பற்றிய தகவல்களைக் கொடுப்பதற்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது.

நான் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போதே ஓரிருவர் அந்த இடத்தை நோக்கி அருகில் வந்தார்கள். கார் அடித்துவிட்டுச் சென்றது என்றார்கள். அவர்கள் எல்லோரும் கார் அந்தப் பெண்ணின் மீது மோதுவதை பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். ஆனால் எதற்கு வம்பு என்று யாரும் வரவில்லை போலிருக்கிறது இப்பொழுது கொஞ்சம் கூட்டம் சேர்ந்தவுடன் ஓசியில் ஒரு படம் பார்க்கிறார்கள் என்று புரிந்தது.

என்னுடன் வந்த பெரியவர் குப்புறக் கிடந்த பெண்மணியின் முகத்தைத் திருப்பிப் பார்த்தார்.முகம் முழுவதுமாக உடைந்து ரத்தம் ஓடிக் கிடந்தது. முனகல் சத்தம் மட்டும் வந்து கொண்டிருந்தது.சத்தம் கேட்ட அந்தக் கணம் வரை அவர் இறந்துவிட்டார் என்றே நினைத்திருந்தேன்.அருகில் இருந்த வேறொரு பெண்மணியிடம் தண்ணீர் கொடுக்கச் சொன்ன போது தண்ணீர் எடுத்துவர தூரமாக நடந்து போக வேண்டும் என்றார்.காரணம் அது இல்லை. ஒரு வேளை அந்தப் பெண்மணி இறந்துவிட்டால் தண்ணீர் கொடுத்த வம்பு தனக்கு வரலாம் என்று அவர் மனதிலும் பயம் இருக்கிறது.

வைக்கோல் கட்டு பெரியவர் அந்தப் பெண்மணியை அடையாளம் கண்டவராக 'இவள் பிலியபாளையம் மூப்பச்சி' என்றார்.நல்ல கறவையாக இருந்த ஒரு எருமை மாட்டை காணவில்லை என்று நேற்று மதியத்திலிருந்து சோறு தண்ணீர் இல்லாமல் இவள் தேடிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். நேற்று இரவும் முழுவதும் அவள் எருமையைத் தேடிக் கொண்டிருந்ததால், அவளைக் காணாமல் அவளது மகன் தங்கமணி மினி ஆட்டோவை எடுத்துக் கொண்டு தன் அம்மாவைக் தேடினான் என்றும், அந்த எருமை மாடு பத்தாயிரம் ரூபாய் பெறுமானமுள்ளதாக இருக்கும் என்றும் சொல்லி கூட்டம் ஒரு கிளைக்கதையை உருவாக்க வழி செய்தார்.

அவளது மகனுக்கு தகவல் கொடுத்துவிட வேண்டும் என்று முதியவரை ஏற்றிக் கொண்டு பைக்கில் அந்தப் பெண்மணியின் வீட்டுக்குப் நானும் அவரும் கிளம்பினோம். தண்ணீர் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்ட வறண்ட பூமியில் அவளது குடிசை மட்டும் தனியாக இருந்தது. பைக்கில் ஒற்றையடிப்பாதையில் போகும் போது புழுதி கிளம்பியது. வீடு பூட்டப்பட்டிருந்தது. இந்தப் பெண்மணியின் வீட்டிலிருந்து ஐந்நூறு அடி தூரத்தில் இருந்த பெட்டிக் கடையிலும் எம்.ஜி.ஆர் பாடிக் கொண்டிருந்தார். அந்தக் கடையில் இருந்த பெண்மணியிடம் தகவல் சொன்னபோது எம்.ஜி.ஆரின் சப்தத்தை மீறி எங்கள் செய்தி அவர் காதில் விழவில்லை. பின்னர் சத்தமாகச் சொன்ன போது நெஞ்சை பிடித்துக் கொண்டவர் டவுனுக்குள் இருக்கும் ஆட்டோ ஸ்டேண்டில் பெண்மணியின் மகன் இருப்பார் என்றார்.

மீண்டும் பெரியவர் பைக்கின் பின்புறமாக ஏறிக் கொள்ள புழுதி கிளப்பினேன்.ஆட்டோ ஸ்டேண்டில் பெண்மணியின் மகன் இல்லை. அவனது நண்பர்களிடம் தகவல் கொடுத்துவிட்டு அவர்களையும் எங்களுடன் கிளம்பி வரச் சொன்னோம்.அந்தப் பெண்மணி கிடந்த இடம் நோக்கி வண்டியை ஓட்டிய போது அந்தப் பெண்ணைப் பற்றி இப்பொழுது என்னவெல்லாமோ தோன்றியது. பத்தாயிரம் ரூபாய்க்காக இரண்டு நாட்களாக சோறு தண்ணீர் இல்லாமல் அலையக் கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பதும், எந்த வசதியும் இல்லாத அந்தக் குடிசையில் இருக்கும் அவர் அந்த பணத்தை வாங்கி என்ன செய்வார் என்றும் கேள்விகளாக முளைத்தன.

அடித்து வீழ்ந்ததில் ரத்தத்தில் கசங்கிய துணியாகக் கிடக்கும் அவர் பிழைத்திருப்பாரா என்றும் ஒருவேளை இறந்திருந்தால் இறக்கும் தருவாயில் கொஞ்சம் தண்ணீராவது ஊற்றியிருப்பார்களா என்றும் தோன்றியது.

இடத்திற்கு வந்த போது உயிரோடுதான் இருந்தார். இன்னமும் ஆம்புலன்ஸ் வரவில்லை. அருகில் இருந்த ஒருவன் ஆம்புலன்ஸ்காரர்கள் உடனடியாக வரமாட்டார்கள் என்றும் கலெக்டர் அல்லது எஸ்.பி அலுவலகத்தில் அனுமதி கிடைத்த பிறகே வருவார்கள் என்றான். மீண்டும் 108 ஐ தொடர்பு கொண்ட போது, ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் ஐந்து நிமிடங்களில் இடத்திற்கு வந்துவிடும் என்றார்கள்.அவனைப் பார்த்தேன்,சும்மா சொல்கிறார்கள் என்றான்.அருகில் இருக்கும் கல்லை எடுத்து அந்த 'ஆல் இன் ஆல்' அழகுராஜாவை அடித்துவிடலாம் என்று தோன்றியது.

அந்தச் சமயத்தில் அந்தப் பெண்மணியின் மகன் இன்னொரு மினி ஆட்டோவில் வேகமாக வந்தார். நம்மை நசுக்கிவிடுவாரோ என்று கூட கூட்டத்தில் இருப்பவர்கள் சற்று அதிர்ந்தார்கள். மிக வேகமாக இறங்கி வந்தவர் முகத்தில் அதீத படபடப்பு இருந்தது. நன்றாக வியர்த்தும் இருந்தது. நேராக பெண்மணியின் அருகில் வந்தவர் ஓங்கி அவளை உதைத்தவனாக சில கெட்ட வார்த்தைகளை உதிர்த்துவிட்டு "செத்திருந்தா டீசலை ஊற்றி இங்கேயே கொளுத்திவிடுகிறேன்" என்றான். "எருமையை போய் இவ*****" என்றெல்லாம் அவன் சொல்லத்துவங்கிய போது தொடர்ந்து அங்கிருக்கத் தோன்றவில்லை.

அந்தப் பெண்ணை திரும்பிப் பார்த்தேன்.ரத்தம் நிற்கவில்லை,முனகல் குறைந்திருந்தது.நான் அந்த முதியவரிடம் மட்டும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

குருமந்தூர் மேட்டில் வேகமாக பைக்கில் வந்த போது எம்.ஜி.ஆர் அங்கும் பாடிக் கொண்டிருந்தார். "கடவுள் ஏன் கல்லானான்".....
நன்றி: உயிரோசை

7 எதிர் சப்தங்கள்:

பிச்சைப்பாத்திரம் said...

வாழ்க்கை பல சமயங்களில் குரூரமானது. வேறென்ன சொல்ல? அந்த மகன் உதைத்ததைப் பற்றியே மனம் திகைப்புடன் யோசித்துக் கொண்டிருக்கிறது. ஓநாயின் பார்வையில் யோசித்தால் அங்கும் ஒரு துளி நியாயம் இருக்குமோ?

ரொம்பவும் disturb செய்த பதிவு.

CS. Mohan Kumar said...

மனதை உலுக்கும் பதிவு. நீங்கள் இந்த அளவு முயற்சி எடுத்தது மனிதம் இன்னும் எங்கோ சில இடங்களில் உயிருடன் இருப்பதை காட்டுகிறது

இராஜ ப்ரியன் said...

நீண்ட நாட்களுக்கு பிறகு, என் நெஞ்சை உலுக்கிய ...............

இனியாள் said...

மனதை உலுக்கும் பதிவு...

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

கடவுள் ஏன் கல்லானான்?

மனம் கல்லாய்போன மனிதர்களாலே!.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

நாள்தோறும் கிராமங்களி்ல் இதுபோல சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வயதான பெரியவரை வசைபாடுவதும், தடியெடுத்து அடிப்பதும் சகஜமாக நடக்கிறது. முதியவர்கள் சுமையாக போனது வேதனையானது.

எழுத்தின் ஆற்றல் இந்த சம்பவத்தினை மனதில் பதிய வைத்துவிட்டது.

Anonymous said...

hi mani this is karupps and i would like to say about ur story like MGR padikondu irunthar it was distrupted me also....