Jan 5, 2010

ஹிட்லர்


ஒரு நாள் காலை தன் நிலைக்கண்ணாடியில்
சாப்ளினின் முகம் தெரிவதைக்கண்டு
அதிர்ச்சியில் உறைந்தான் ஹிட்லர்
விரைத்து நின்றபடி முகமன்கூறும்
அவன் சகாக்கள் யாவரிடமும்
ஒரு ரகசியப் புன்னகையின் கீற்று
நெளிந்து கொண்டிருப்பதாக சந்தேகப்பட்டவன்
அரண்மனையில் இருந்த தன்னுடைய படங்கள்
அனைத்தையும் அகற்றிவிட உத்தரவிட்டான்
அன்று மாலை நடந்த
மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில்
உணர்வுப்பூர்வமான எழுச்சியுரையாற்றி கொண்டிருக்க
கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுவதை
கவனித்தபோதுதான் உணர்ந்தான்
மெல்லத் தன் குரல்
சாப்ளின் குரல் போல் மாறியிருந்ததை
ஒரு சிறுவன் சாப்ளின் எனக் கத்திய போது
வெடித்து எழுந்தது சிரிப்பலை ஆத்திரம் தாளாது
உக்கிரத்தோடு மேடையில் இருப்பவர்களை பார்த்தான்
அவன் தளபதிகளில் ஒருவனுக்கு
தவறு செய்துவிட்டு விழிக்கும்
சாப்ளினின் அப்பாவி தோற்றம் அந்த முகத்தில் தெரிய
பெருங்குரலெடுத்து சிரித்துவிட்டானவன்
திடீரென...
நான் சாப்ளின் இல்லை ஹிட்லர்... அடால்ப் ஹிட்லர்
எனத் திரும்ப திரும்ப கத்தியவாறு
மேடையைவிட்டு ஒடத்துவங்கினான்
சாப்ளின்...சாப்ளின்... என குழந்தைகள் துரத்த
பெர்லின் நகர வீதிகளில்
பைத்தியம் போல் ஒடிக் கொண்டிருந்தான்
அப்போது அவன் நடையும் ஒட்டமும்
உண்மையாகவே சாப்ளினைப் போல் இருந்தது


இது இளங்கோ கிருஷ்ணனின் காயசண்டிகை தொகுப்பில் இருக்கும் ஒரு கவிதை. முந்தைய விமர்சனத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். நண்பர் சிவராமனின் ஹிட்லர் ரிடர்ன்ஸ்-பார்ட் 2 உடன் இணைத்து வாசிக்க வேண்டியதில்லை என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது.

9 எதிர் சப்தங்கள்:

அண்ணாமலையான் said...

சொன்னதற்கு நன்றி......

நந்தாகுமாரன் said...

:)

ROSAVASANTH said...

நான் நீங்கள் எழுதிய கவிதை என்று நினைத்து வாசித்து வேறு உணர்வுகளுக்கு ஆளானேன்.

(சாப்ளின் ஹிட்லராக நடித்த படத்துடன் இணைத்து இந்த வாசிக்கப்பட வேண்டியது என்று எனக்கு தோன்றுகிறது.)

sathishsangkavi.blogspot.com said...

புதிய தகவல்....

ROSAVASANTH said...

̀கவிதை' என்ற வார்த்தை விடுபட்டுவிட்டது,

/சாப்ளின் ஹிட்லராக நடித்த படத்துடன் இணைத்து இந்த கவிதை வாசிக்கப்பட வேண்டியது ..../ என்றிருக்க வேண்டும்

நேசமித்ரன் said...

ஆஹா பிறகான சொற்களிலிருக்கிறதா சாப்-லர் கதை

:)

Anonymous said...

Dear fellow
First read the history of Hitler and Mein Kampf (enadhu poraattam). Avaradhu nadavadikkaikal thavarudhaan. avardhu aalumai yaarukkum varaadhu. Don't copy paste.

Vaa.Manikandan said...

நண்பர்களுக்கு நன்றி. ரோசாவசந்த், படைப்பையும் எழுதுபவரின் குணத்தையும் இணைத்துப் பார்க்கும் போது வேறு வேறான உணர்வுகள் வருவதுண்டு.அது இயல்பானதும் கூட. ஆனால் இணைத்துப் பார்க்கும் போது வாசகனுக்கான பரப்பு சுருங்கி விடுவதில்லையா?

நேசமித்திரன், 'பிறகான சொற்களில் இருக்கிறதா' என்ற பிரயோகம் புரிந்து கொள்ள கடினமானதாக இருக்கிறது.

அனானிமஸ், "இது கவிதை". வேறொன்றுமில்லை.

Anonymous said...

where can i download " Enathu porattam " book... can you give me the link...