Jan 4, 2010

கொல்லப்பட வேண்டியவர்களின் பட்டியல் தயாரிப்பவன்-காயசண்டிகை விமர்சனம்

காயசண்டிகை தொகுப்பை சில நாட்களுக்கு முன்பாக வாசித்திருந்தேன். அப்போதைய சூழலில் ஆழ்ந்து வாசித்ததாக ஞாபகமில்லை, அங்கொன்றும் இங்கொன்றுமாக கொத்தியிருந்த கவிதைகள் மனதின் அடுக்குகளை அரித்துக் கொண்டிருந்தன. அது விட்டகுறை தொட்டகுறையாக நீளும் கவிதைக்கும் வாசகனுக்குமான உறவின் சரடு. தன்னை மீண்டும் வாசிக்கக் கோரும் கவிதையும், வாசிக்க விரும்பும் வாசக மனதின் பரிதவிப்பும் ஒரு புள்ளியில் இணையும் ரசவாதம் அது. மீண்டும் ஒரு முறை அந்தக் கவிதைகளை வாசிப்பது அந்த வாசகனுக்குள்ளாக வேறொரு அனுபவத்திற்கான துவக்கமாகிறது.

காயசண்டிகையை புரட்டத் துவங்கும் மனதிற்கு இன்னும் சில மணி நேரங்களில் இன்னொரு வருடம் காலண்டரில் உதிக்கிறது என்பது தெரிந்தே இருக்கிறது. சாமனியனுக்கு நேற்று போலவேதான் இன்றும் இருக்கிறது. ஒரு புதிய வருடம் உருவாகிறது என்பதை நடைபாதையில் சுருண்டு கிடப்பவனும், விடியாப்பொழுதில் கொஞ்சம் மது அருந்திவிட்டு அழுக்குத் துணியோடு நகரத்தின் குப்பை மேடுகளில் பொறுக்கிக் தன் வாழ்நாளை கழிப்பவனும் பொருட்படுத்துவதில்லை. எந்தப் புதிய வருடமும் அவர்களுக்கான வாழ்வியல் ரகசியங்களை தேவதைகளைக் அனுப்பித் தரச் செய்வதில்லை. இந்த விளிம்புநிலை மனநிலையுடையவனுக்கான கவிதைகள்தான் காயசண்டிகை கவிதைகளோ என்று இவற்றை வாசிக்கும் போது தோன்றுகிறது. சரியாகச் சொன்னால் விளிம்பு நிலை இல்லை, அதனை விட ஒரு படி மேல்நிலை வாழ்க்கையுடயவனின் குரலாக இந்தக் கவிதைகள் இருக்கின்றன.


வாழ்வின் கசப்புகளை புகார்களோடும் சலிப்புகளோடும் புலம்பியும் கொண்டாடியும் திரியும் சாமானியனின் கவிதைகள்தான் 'காயசண்டிகை' கவிதைகள். இந்த உலக வாழ்வு நம்மைச் சுற்றிலும் உருவாக்கும் இருள்வெளியில் எந்த சங்கடமும் இல்லாமல், அல்லது சங்கடங்களை ஏற்றுக்கொண்டு தன்னை நகர்த்திக் கொள்ளும் சாதாரணமானவனின் சொற்களை இளங்கோ கிருஷ்ணன் கவிதைகளாக்குகிறார்.

கடவுளை கொலை செய்வதற்காக கூரிய கத்தியையும், கொஞ்சம் சொற்களையும் சுமந்து திரிபவனை இந்தக் கவிதைகளில் காணலாம். 'கவிதையாம் மயிராம்' என்று தன் கவிதைகள் இளக்காரமாக்கபடுவதை ஏற்றுக் கொண்டு கவிதையில் உழலும் கவிஞனை சந்திக்கலாம். 'ஒரு கரப்பானையோ/சிறு செடியொன்றையோ இம்சி'க்கும் சாமானிய சாத்தான் இந்தக் கவிதைகளில் எதிர்படுகிறான். இந்த 'சாதாரணர்களே' கவிதைகள் முழுவதுமாக விரவி சிண்டுகளாகிக் கிடக்கும் வாழ்வின் அபத்த முடிச்சுகளை அவிழ்க்கிறார்கள்.

'..புத்தனின் பல் நுனியில்/ரத்தத் துளியொன்று/துடைக்கத் துடைக்க அரும்பிக் கொண்டிருக்கிறது' என்பதைக் காண்பவனும், இந்த உலகின் வக்கிரங்களையும் வன்முறைகளையும் மிக இயல்பாக எதிர்கொள்பவனும் கவிதைகள் முழுவதுமாக அலைகிறார்கள். இவர்களை நேற்றோ அல்லது போன மாதமோ, சலூன் கடையிலோ, முட்டுச் சந்திலோ அல்லது மீன் கடையிலோ நாம் சந்தித்திருக்கிறோம். அவர்கள்தான் இந்தக் கவிதைகளுக்குள்ளாக இருக்கிறார்கள்.

பாக்தாத் நகர வீதிகளில் தோற்றுப்போன வியாபாரத்தின் கசப்போடு பாலையின் கொதிமணலில் வறண்ட நாவோடு நகரும் முல்லாவின் கரங்களை கடவுள் பற்றுகிறார். கடவுளின் கரங்களை பார்த்துவிட்டு இந்தக் கரங்களை எனக்கு ஏற்கனவே தெரியும் எனச் சொல்லும் முல்லாவிடம் எப்படித் தெரியும் என வினவும் கடவுளுக்குத் தன் பதிலாக, 'என் கால்களுக்கு அடியில்/முள் வைத்துக் கொண்டே போகும் கரங்களை நன்கறிவேன்' என்கிறார். இந்த நவீன உலகம் இடைவெளியின்றி பாய்ச்சும் கூரிய அம்புகளில் சிக்கிக் கொள்ளும் மனிதர்களின் பிரதிநிதியாகவே இந்தக் கவிதையில் முல்லாவை நிறுத்துகிறார் இளங்கோ கிருஷ்ணன். கால்களுக்கடியில் வைக்கப்படும் இந்த முற்களைத்தானே குருதியொழுகும் ரணங்களோடு ஒவ்வொரு நவீன மனிதனும் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்கிறான்.

'கடவுளின் பற்கள்' என்ற வேறொரு கவிதையில் மனிதனைக் கொன்று தின்று, குறைந்து வரும் தனது கருணையை கூட்டிக் கொள்ளும் கடவுளின் முகம் காட்டப்படுகிறது. இந்தக் கவிதைகளை கடக்கும் போது தன் அரிதாரமும் முகமூடியும் கலைந்துவிட்ட துக்கத்தில் வாடிய கடவுளர்கள் கண் முன்னால் வந்து போகிறார்கள். எனக்கு பாலியல் சர்சைகளில் சிக்கி முகம் தொங்கிக் கிடக்கும் நவீன கடவுளர்களான அரசியல்வாதிகளின் முகங்களும் வந்து போகின்றன. இந்த சாதாரணத்தன்மையும் எளிமையும் இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகளை பாய்ச்சலோடு நகர்த்துகின்றன.

கவிதை என்பது ஒரு உச்சத்தை நோக்கி நகரும் பல சொற்களின் கூட்டுப் பயணம் என்று சொல்வதுண்டு. ஒவ்வொரு கவிஞனும் இதைத்தான் செய்ய முயல்கிறான் என்றும் தோன்றுகிறது. வசனகவிதையிலும் கூட கவிதையின் நகர்வு இந்த உச்சத்தை நோக்கியே இருக்கிறது. உச்சத்தை நோக்கி நகரும் இந்தப் பயணத்தில் சொற்களின் கூட்டு சரியாக அமையாத தருணத்தில் கவிதை தன் வலுவை இழக்கிறது. இந்த நுண் நுட்பம் பெரும்பாலான கவிதைகளில் இளங்கோவுக்கு எளிதாகியிருக்கிறது.

இளங்கோ கிருஷ்ணன் வசனகவிதைகளின் உச்சத்தை சில கவிதைகளில் அனாயசமாக தொட்டுச் செல்கிறார். 'சொற்களாகத் தேய்ந்துபோன கவிஞனின் நகரத்தில்' ஆத்மாநாமை சந்திக்கும் கவிஞனின் அனுபவம் என்னை மிக உற்சாகமடையச் செய்கிறது. ஆத்மாநாமின் ரோஜா பதியன்களையும் பிரம்மராஜன் தொகுத்த கறுப்பு அட்டையிட்ட தொகுப்பையும் மிக இயல்பாக கவிதைக்குள் எதிர்கொள்ளும் தருணம் கொஞ்சம் சிலிர்ப்படைய வைக்கிறது என்று சொல்வது கூட மிகையில்லாமல் பொருந்தும். ஆத்மாநாம்மின் ரோஜாபதியன்கள் கவிதையை சிலாகிக்கும் எந்த ஒரு கவிதை மனதிற்கும் இந்த அனுபவம் நேரலாம். தன் கவிதைகளால் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கவிஞனை வேறொரு கவிஞனும், ஒரு வாசகனும் சந்தித்து பிரியும் இந்தக் கவிதை தருணம் தரும் அனுபவம் ஒரு நாள் முழுவதற்குமான உற்சாகத்தைத் தருகிறது.

'நிலாக்கனி' என்னும் கவிதையில் ஒரு மரத்தின் அடிக்கிளையில் தொங்கிக் கொண்டிருக்கும் நிலாவை பறிக்கத் தாவுகிறது ஒரு குரங்கு. குரங்கின் ஒவ்வொரு தாவலிலும் இன்னொரு கிளைக்கு நிலா நகர்கிறது. நிலாவை பிடிக்க இயலாமல் சரிந்து பள்ளத்தில் விழும் குரங்கின் கண்களுக்கு மீண்டும் நிலா அடி மரக்கிளையில் தொங்குவது தெரிகிறது. இந்தக் கவிதை வெறும் நிலா-குரங்கு விளையாட்டோடு நின்று கொள்ள வேண்டியதில்லை. இந்தக் கவிதைக்கான புரிதல் சாத்தியங்கள் மிக அதிகம். ஒவ்வொரு வாசகனும் தன் அனுபவத்தை இந்த விளையாட்டில் நிகழ்த்தலாம். இந்த கவிதையின் உச்சமாக, இறுதி வரிகளைச் சொல்வேன். குரங்கின் துக்கமும் நிலாவின் பரிகாசமும் ஒரே வரியில் தென்படும் இந்த வரி இந்தக் கவிதையில் ஒன்றியிருக்கும் வாசகனை இன்னொரு உலகத்தில் நிறுத்துகின்றன.

இந்த உச்சத்தை 'காயசண்டிகை'யில் சில வசனகவிதைகள் பெறவில்லை என்பது என் அபிப்பிராயம். மரப்பாச்சி என்றொரு கவிதையில் மிகுந்த காதலோடு தன் பெயரை மரப்பாச்சி பொம்மைக்கு வைக்கும் இரண்டாவது வரியில் கவிதையின் தளம் மிக முக்கியமான புள்ளியை நோக்கி நகர்கிறது. பின்னர் ஒவ்வொரு வரிகளும் மெல்லிய அதிர்வுடன் வாசகனை நெருங்குகின்றன. மரப்பாச்சி காணாமல் போய்விடுவது வரை உருவாகும் கவிதானுபவம் 'திடீரென காணாமல் போவது எப்படியென' கேட்க விரும்பும் கவிஞனின் கேள்வியில் உதிர்ந்து விடுகிறது. எனக்கு இந்த கேள்வி எந்த விதமான திருப்தியையும் தரவில்லை. இந்தக் கேள்வி முக்கியமானதாகவும் படவில்லை. இந்தத் தொகுப்பில் என் மனதில் தோன்றும் குறையாக ஓரிரண்டு கவிதைகளில் இந்த 'உதிர்ந்து' விடும் கவிதானுபவங்களைச் சொல்வேன். இன்னொன்று 'ரூபாய் நோட்டிலிருந்து இறங்கி வந்த கானுறை வேங்கை' போன்ற சில பழகிய படிமங்கள் மிக அரிதாக சில கவிதைகளில் தென்படுகிறது. இது கவிதையில் புழங்கும் மனதில் எந்தவிதமான சலனத்தையும் உண்டாக்குவதில்லை.

'தன் குறியின் நிறத்தில்/குளிர்பான பாட்டிலொன்றை பிடித்தவாறு' என்ற வரிகளை விட்டு நகர எனக்கு கொஞ்ச நேரம் தேவைப்படுகிறது. நாளை பெப்ஸி, கோக் குடிக்கும் யாதொரு மனிதனும் எனக்கு இந்த வரிகளை நினைவுபடுத்தக் கூடும் என்பது வேடிக்கையாக இருக்கிறது.

ஹிட்லர், சாப்ளினாக உருமாறி பெர்லின் நகர வீதிகளில் ஓடும் காட்சி ஒரு கவிதையில் இருக்கிறது. மேலோட்டமான வாசிப்பிற்கு எள்ளலாக தெரிந்தாலும், ஒரு குரூர மனிதனுக்குள் இருக்கும் குழந்தமையை பிரதியாக்குவதான வாசிப்பாகவே இக்கவிதையை உள்வாங்குகிறேன். மனம் என்பது கல் போன்ற ஸ்திதி. எதிர்படும் மனிதர்களாலும், சூழ்நிலைகளாலுமே அந்த மனதின் வடிவங்கள்- குரூரனாக, பைத்தியமாக,சர்வாதிகாரியாக,அப்பாவியாக,காமுகனாக என பல வகைகளில் வடிவமைக்கப்படுகின்றன என்ற ஆழ்ந்த நம்பிக்கையின் வழியாகவே இந்தக் கவிதையை நெருங்குகிறேன். இந்த நெருக்கம் மனதின் இயங்குதல் குறித்தான வியப்புகளை மையப்படுத்துகிறது. இந்த சில வியப்புகளின் கதவுகளை திறந்துவிடுவதும் கவிதையின் ஒரு பண்புதானே.

காயசண்டிகை தொகுப்பு முழுவதும் கவிதையின் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் பல்வேறு பரிசோதனைகளை நிகழ்த்தியிருக்கும் இளங்கோ கிருஷ்ணன் பலவற்றில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்தத் தொகுப்பு தமிழ்கவிதையின் அடுத்த கட்ட நகர்வுக்கான சாத்தியங்களை உள்ளடக்கியிருக்கிறது என்றே நினைக்கிறேன். தமிழ்க் கவிதையின் சாதாரண வாசகனாக இந்த சாத்தியங்கள் மீதான விவாதங்கள் நிகழ்த்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இதுவரையிலான காயசண்டிகை பற்றிய 'பேச்சு' போதாதென்றும் உறுதியாகச் சொல்வேன்.

vaamanikandan@gmail.com

3 எதிர் சப்தங்கள்:

anujanya said...

உடனே படிக்கும் ஆசையைத் தூண்டுகிறது உங்கள் கட்டுரை. இது புத்தக விழாவில் கிடைக்குமா மணி?

அனுஜன்யா

பாம்பாட்டிச் சித்தன் said...

vanakkam,

It is an important collection for the contemporary tamil poetry,long way ahead for elango krishnan,even though I conveyed the message personally to him,yet another best wish for his future collection (I dont have tamil fonts in my PC sorry,Mr.Manikandan,ungalin vimarsanamum kavanathitkuriyathu)

Nandri

நிலாரசிகன் said...

நல்லதொரு விமர்சனம் மணி.

கடைசி இரண்டு வரிகளில் முழுவதுமாய் உடன்படுகிறேன்.