Dec 22, 2009

படைப்பிலக்கியத்தில் வாரிசு என்னும் நகைச்சுவை

அரசியல்வாதியின் வாரிசு, தொழிலதிபரின் வாரிசு என்பது போல இலக்கியவாதியின் வாரிசு என்று சொன்னால் சிரிப்பு வந்துவிடுகிறது.

எழுத்தாளன் எதற்காக வேறொருவரின் வாரிசாக இருக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது? படைப்பாளியை யாரும் உருவாக்குவதில்லை. அவன் தன் வாழ்வியல் அனுபவங்களை தன் எழுத்தில் கொண்டு வருகிறான். அவன் யாருடைய கால்தடத்தையும் பற்றிக் கொள்ள வேண்டியிருப்பதில்லை. அவன் உருவாக்கும் தடங்களின் ஆயுள் அவனது எழுத்தின் வலிமையையும் ஆழமும் பொறுத்தே இருக்கிறது.

இது மட்டுமே நிதர்சம்.

எந்த ஒரு படைப்பாளியாலும் வேறு ஒருவனை தன் படைப்பு சார்ந்த வாரிசாக உருவாக்க முடியாது.

தன் எழுத்துக்களால் கவனம் பெற முடியாத எழுத்தாளன் தன் பெயரை நிலை
நிறுத்துவதற்கான சில அண்டர்கிரவுண்ட் வேலைகளின் மூலமாக கொஞ்ச நாட்களுக்கு காலத்தை ஓட்ட முடியுமே தவிர்த்து அவனால் எந்த விதத்திலும் கால ஓட்டத்தில் தொடர்ந்து நிலைக்க முடியாது.

தன் எழுத்துக்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படும் போது அந்த நிராகரிப்பின் வலியை ஏற்றுக்கொள்ள முடியாதவன் சில சூட்சுமங்களால் தன் பெயரை பிரசுரத்தில் பார்க்கிறான். இந்த சூட்சுமங்கள் சில நாட்களில் அவனுக்கு மனச்சோர்வை தந்து அவனாகவே இலக்கிய செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கிக் கொள்ளச் செய்கின்றன. செயல்பாடுகள் நிற்கும் போது அவனது பெயர் இலக்கிய வட்டாரத்தில் காணாமல் போகிறது. அவனது படைப்புகளும் இல்லாமல் போகின்றன.

மற்றபடி இவன் என் வாரிசு என்று ஒரு இலக்கியவாதி அறிவிப்பதை பம்மாத்து என்றோ அல்லது வெற்று ஸ்டண்ட் என்றோ சொல்லிவிடுவேன். தான் தன்னைச் சுற்றி உருவாக்கிக் கொள்ள விரும்பும் அதிகார மையத்திற்கான ஆரம்பப்புள்ளிதான் தன் வாரிசை அறிவிப்பது.

எப்படி இளம் எழுத்தாளனுக்கு ஒரு பற்றுக்கோல் தேவைப்படுவதாக அவன் உணர்கிறானோ அது போலவே மூத்த எழுத்தாளன் தன் படைப்பின் மீதான நம்பிக்கை இழக்குமிடத்தில் சில அரசியல் செயல்பாடுகளை மேற்கொள்கிறான். இதுதான் வாரிசு, பள்ளிக்கூடம் என்ற சொற்பிரயோகங்களுக்கான அடிப்படை என்று நான் நினைக்கிறேன்.

எழுத்தின் நீட்சி என்பதற்கும், எழுத்தின் வாரிசு என்பதற்கும் அடிப்படை வித்தியாசம் இருக்கிறது. சுகுமாரனோ அல்லது கலாப்ரியாவோ தொட்டிருக்கும் புள்ளியிலிருந்து அடுத்த கட்டத்திற்கு தன் கவிதையின் மூலமாக ஒரு கவிஞன் நகர்வது என்பது அவர்களின்(சுகுமாரன்/கலாப்ரியா) எழுத்தின் நீட்சி. முன்னோடிகள் நடந்த திசையில் நடக்கலாம். ஆனால் அதற்கு அவர்களின் எழுத்துக்கு வாரிசு என்று பொருளில்லை.

இந்த உருப்படியற்ற சித்து விளையாட்டுக்கள் பற்றி முழுமையான புரிதலை ஒரு உண்மையான வாசகன் வைத்திருப்பான் என்னும் நம்பிக்கை இருக்கிறது. இந்த சால்ஜாப்புகள் அவனை எந்த விதத்திலும் நெருங்க முடிவதில்லை. மேலோட்டமான வாசிப்பும் அரைகுறையான புரிதலும் உடைய சிலரை எதிர்நோக்கி நிகழ்த்தும் உள்ளீடற்ற இந்த இலக்கிய அரசியல் காலி டப்பா மட்டுமே.

படைப்பில் வாரிசு என்று எதை வைத்துச் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. ஒரு வேளை நகலைச் சொல்கிறார்களோ?. தனக்கென தனித்துவம் இல்லாத ஒரு படைப்பாளியை வாசகன் எதற்காக வாசிக்க வேண்டும். அசல் இருக்கும் போது வாசகனுக்கு நகல் எதற்கு தேவைப்படுகிறது? எனக்கு குழப்பமாக இருக்கிறது.

சரி அதை விடுங்கள். அடுத்த கிரிக்கெட் போட்டி எப்பொழுது?

5 எதிர் சப்தங்கள்:

அகநாழிகை said...

ரசித்தேன்.

- பொன்.வாசுதேவன்

ஷங்கி said...

வாரிசுகள்...
பின்நவீனத்துவத்தின் மற்றுமொரு கட்டுடைப்பு என்று எனக்குத் தோன்றுகிறது.

Vaa.Manikandan said...

நன்றி வாசுதேவன்,ஷங்கி.

ஷங்கி,

கட்டுடைப்பா? எந்த அர்த்தத்தில் சொல்ல வருகிறீர்கள். பின் நவீனத்துவத்தில் வாரிசு என்ற கோட்பாடு இருப்பதாக தோன்றவில்லையே.

ஷங்கி said...

நீங்கள் சொன்ன மாதிரி எழுத்தாளனுக்கு/இலக்கியவாதிக்கு ஏது அல்லது எதற்கு வாரிசு? நிகழ்கால எழுத்தாளர்கள்தான் வாரிசு தேடுகிறார்கள். எதற்கென்ற காரணங்களை விட்டு விடுகிறேன்.

அதனால்தான் அவர்கள் பாணியி்லேயே...
அவர்கள் கட்டுடைத்துள்ளார்கள் என்று சொன்னேன்.
:)

சென்ஷி said...

:-)

நடத்துங்க..