Nov 9, 2009

பெங்களூர் புத்தகக் கண்காட்சி

பெங்களூரில் புத்தக திருவிழா தொடங்கியிருக்கிறது.

கிழக்கு பதிப்பகத்தில் இருந்து மின்னஞ்சலும், கூரியரில் ஒரு தபாலும், ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தார்கள். கண்டோண்ட்மெண்ட் அருகில் இருக்கும் பேலஸ் மைதானம்தான் திருவிழா நடைபெறும் இடம். நிற்க. நானறிந்த வரையில் சென்னையில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் சமயத்தில் நடைபெறும் நிகழ்விற்கு மட்டுமே புத்தகத் திருவிழா என்ற சொல் பொருந்தும். மற்றவை எல்லாம் புத்தகக் கண்காட்சிதான்.

ஞாயிற்றுக்கிழமையின் சாரலில் பேலஸ் மைதானத்திற்கு போய்ச் சேர்ந்தேன். முடிந்தவரையில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனியாக போவதுதான் வழக்கம். நம் விருப்பத்திற்கு சுற்ற முடியும். உடன் வருபவருக்கு பசிக்குமா கால் வலிக்குமா என்பது பற்றி யோசித்துக் கொண்டு இருக்கத் தேவையில்லை.

கேண்டீன் வழியாக நுழைந்தேன். டிக்கெட் இல்லாமல் புத்தகக் கண்காட்சி நடத்தும் பெங்களூர்காரர்கள் நல்லவர்கள் என்று நினைத்துக் கொண்டே ஒரு மசால் தோசையை உள்ளே தள்ளிவிட்டு நகரலாம் என்பது திட்டம். வழக்கமான கண்காட்சிகளைப் போலவே கேண்டீனில் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது.

கண்காட்சியில் பெரும்பாலும் ஆன்மிக புத்தகக் கடைகளாக தென்பட்டன. ரவிசங்கர், சத்குரு, நித்யானந்தர், சச்சிதானந்தர் போன்ற தமிழ் மக்களுக்கு பரிச்சயமான சாமியார்கள் கடை விரித்திருந்தார்கள். இவர்கள் தவிர்த்து ராமகிருஷ்ண மடம் போன்றவர்களும், எனக்கு தெரியாத இன்ன பிற காவிகளும் அதோடு சில இசுலாமிய அமைப்புகளும் கூட்டங்களை இழுத்துக் கொண்டிருந்தார்கள்.

தமிழ் பதிப்பகங்கள் கண்ணில் அதிகம் படவில்லை. ஆனந்தவிகடனில் கூட்டம் அதிகம். அடுத்தபடியாக கிழக்கு பதிப்பகத்தில் கூட்டம் இருந்தது. கடைகளை பார்த்துக் கொண்டே வேகமாக நடந்ததில் திருமகள் பதிப்பகம் தென்பட்டது. இன்னும் சில தமிழ் பதிப்பகங்கள் இருந்தன. ஆனால் நான் போகவில்லை.

சில ஆங்கில புத்தகங்களும், கிழக்கில் ஒரு புத்தகமும் வாங்கிக் கொண்டு, காலச்சுவட்டில் இசை, இளங்கோ கிருஷ்ணன், ஆனந்த் ஆகியோரின் கவிதை தொகுப்புகளும் பா.திருச்செந்தாழையின் சிறுகதை தொகுப்பும் வாங்கி வந்திருக்கிறேன்.

உடனடியாக படிக்கத் துவங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆங்கிலத்தில் குரானும் வாங்கியிருக்கிறேன்.

கடைகள் முடியும் கடைசி வரிசைக்கு சென்ற போது டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுதுதான் நான் டிக்கெட் வாங்காமல் உள்ளே நுழைந்துவிட்ட Back door Party என்று உணர்ந்தேன். திரும்ப கேண்டீன் வழியாகவே வெளியேறிவிட்டேன். யாரும் கேட்கவும் இல்லை.

வெளியே வரும் போது, ஒரு பெண் புடவைக்கு அணியும் வெள்ளை ஜாக்கெட்டும் 'லோஓஓஓஓ ஹிப்பில்' கருப்பு பேண்ட்டும் அணிந்திருந்தாள். இரண்டு துணிகளுக்கு இடையேயான இடைவெளி எத்தனை செ.மீட்டரில் இருக்கும் என_______ கோடிட்ட இடத்தை நிரப்புக.

இளைஞர்களும் பெண்களும் இன்ன பிற தாத்தாக்களும் அலேக்காக அவளின் இடுப்பை நோட்டம் விட்டார்கள். நான் பார்க்கவில்லை என்று பொய் சொல்ல வேண்டிய சூழ்நிலைக் கைதியாக இருக்கிறேன்.

3 எதிர் சப்தங்கள்:

Marimuthu Murugan said...

துணிகளுக்கு இடையேயான இடைவெளி = அவளின் 'இடை'வெளி. (மொக்கையா இருந்ததால் மன்னிக்கவும்)

Nathanjagk said...

வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கு ​பேலஸ் க்ரவுண்ட்.. இன்னும் நான் ​போகலே.
எனக்கும் New Horzonல் இருந்து கூரியர் வந்திருந்தது.
நாளைக்கு (14 நவம்பர் - சனி) இதுதான் 2வது வேலை!
வாங்கிய புத்தகங்களின் ​பெயர்களையும், படித்திருந்தால் பரிந்துரையும் செய்யலாமே?
என் அலைபேசி : 98868 14327

Vaa.Manikandan said...

நன்றி மொக்கமாரி, ஜெகநாதன்