
காற்றில் மிதந்து வந்த
பாலீத்தின் பை
அறைந்ததில்
இறந்து போனான் ப்ரனீத்
யாரோ பறக்கச் செய்த
பட்டத்தின் கயிறு
சத்யாவின்
கழுத்தை அறுத்திருக்கிறது
தூக்கிலிட்டுக் கொண்டவன்
விஷம் அருந்தியவனை விட
அதிர்ஷ்டசாலி
உறக்கத்தில் இறந்தவனுக்கு
நல்ல சாவு
வாய்த்திருக்கிறது
கழுத்தில் செருகப்பட்ட கத்திகளை
விட
நெஞ்சில் பாய்ந்த கத்திகள்
கருணை மிக்கவை
லாரியில் தலை நசுங்கியவனும்
நீருள் மூழ்கி இறந்தவனும்
மின்சாரம் தாக்கி மறைந்தவனும்
இறுதி மூச்சுக்கு முந்தைய மூச்சில்
நினைத்தவற்றை கவிதைகளாக்கலாம்
கொலை செய்யப்பட்டவர்களும்
நோய்மையில் மரணித்தவர்களும்
அலையும்
தெருக்களில்தான்
குழந்தைகள்
விழுந்து
காயம் பெறுகின்றன
விடுவிக்கப்படாத மரணத்தின்
புதிர்கள்
இறந்தவனின் புதைகுழி மீதும்
எரித்த சாம்பலின் நுனியிலும்
ஒட்டிக் கொள்வதாக சொல்கிறார்கள்.
9 எதிர் சப்தங்கள்:
ஆகா அருமை
//இறுதி மூச்சுக்கு முந்தைய மூச்சில்
நினைத்தவற்றை கவிதைகளாக்கலாம்//
நன்றாக உள்ளது...உங்கள் கவிதையும், புதிய வலைத் தோற்றமும்...
கழுத்தில் செருகப்பட்ட கத்திகளை
விட
நெஞ்சில் பாய்ந்த கத்திகள்
கருணை மிக்கவை
:)
உங்க புது வலையமைப்பு அருமை எளிமையா நல்லாயிருக்கு
சொல்ல வார்த்தை இல்லை
நன்றி தியாவின் பேனா, கென், முத்து, திகழ்.
அன்று உங்களை சந்திக்க முடியவில்லை...கவிதை கத்தி போல் ஷார்ப்
//கொலை செய்யப்பட்டவர்களும்
நோய்மையில் மரணித்தவர்களும்
அலையும்
தெருக்களில்தான்
குழந்தைகள்
விழுந்து
காயம் பெறுகின்றன//
அப்படியா?
நன்றி தண்டோரா. பிறிதொரு நாளில் சந்திக்கலாம் :)
அசோக்,நன்றி. இந்த "அப்படியா?" கேள்வி யாருக்கு? எனக்காக இருப்பின்..
கவிதையின் வரிகளை அதே பொருளில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அது வாசிப்பவரின் புரிதலை பொறுத்திருக்கிறது.
சிறு பிராயத்தில் நான் கீழே விழும் இடங்களை ஓங்கி மிதித்து அதன் மீது எச்சிலை துப்புவார் என் அமத்தா. ஒரு துளி மண்ணை எடுத்து நெற்றியிலும் வைப்பார்.
அதன் அர்த்தம் எனக்குத் தெரிந்ததில்லை. அது ஒரு அனுபவம் மட்டுமே.
சம்மதமெனில் இந்த வரிகளோடு எனது அனுபவத்தை கோர்த்து வாசிக்கலாம்.
Ennapa pudu kavithai master, unakku konjam valuthu solRaen nan.
Thangapandi.
Post a Comment