May 8, 2009

ஆந்திர‌ அர‌சிய‌ல்: இதி சாலா ஹாட் ம‌ச்சி!

ஊறுகாய் அல்லது கோங்குரா சட்னியை வெறும் சாதத்தில் பிசைந்து மூக்கில் காரம் ஏற சாப்பிட்டால்தான் ஆந்திரக்காரர்களுக்கு சாப்பாடு, சாப்பாடு மாதிரி இருக்கும். உணவு என்றில்லை, இங்கு சினிமா, அரசியல் என்று அனைத்துமே காரமாகத்தான் இருக்கிறது. சினிமாவில் ஹீரோ தன் ஷூ காலில் வற மிளகாயை மிதித்து வில்லன் முகத்தில் ஓங்கி உதைக்க வேண்டும் அல்லது ஒரே படத்தில் முன்னூறு பேர்களையாவது படம் முடிவதற்குள் வெட்டியோ, சுட்டோ சாகடிக்க வேண்டும். இத்தகைய படங்களைத்தான், ஹீரோ அணிந்த உள்ளாடை உட்பட அனைத்தையும் காப்பியடித்து தமிழில் 'போக்கிரி' போன்ற‌ படங்களை எடுக்கிறார்கள்.

அரசியல் காரம் அதை விட அதிகம். தேர்தல் சூடு ஆந்திராவில் பொறி பறக்கிறது. தமிழகத்தைப் போன்ற கூட்டணி குழப்பம் எல்லாம் பெரிதாக எதுவும் இல்லை. காங்கிரஸ் ஒரு இசுலாமியக் கட்சியுடன்(எம்.ஐ.எம்) கூட்டணி வைத்திருக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி(டி.ஆர்.எஸ்) மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட்களை இணைத்து ஒரு கூட்டணி அமைத்து 'மெகா கூட்டணி' என்று பெயர் சூட்டியிருக்கிறது. புதிதாக உருவாகி இருக்கும் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் தனித்து நிற்கிறது. தமிழகத்தை போலவே, பா.ஜ.கவை எல்லோருமே கழட்டி விட்டிருக்கிறார்கள்.

இந்த அரசியல் அரங்கில் சில‌ காமெடி காட்சிக‌ளும் உண்டு. என்.டி.ராம‌ராவை அவ‌ர‌து க‌டைசி கால‌த்தில் திரும‌ண‌ம் செய்து கொண்ட‌ ல‌ட்சுமி சிவ‌ பார்வ‌தி ஒரு க‌ட்சியை ந‌ட‌த்துகிறார். அனேக‌மாக‌ ப‌திவு செய்து சின்ன‌ம் பெற்ற 'ஒரு ந‌ப‌ர்' க‌ட்சி ஆந்திராவில் இதுவாக‌த்தான் இருக்க‌ முடியும். ந‌டிகை விஜ‌ய‌சாந்தி த‌னிக் க‌ட்சி தொட‌ங்கி கொஞ்ச‌ம் நாட்க‌ளில் தாக்கு பிடிக்க‌ முடியாம‌ல் தெலுங்கானா ராஷ்டிரிய‌ ச‌மிதியில் ஐக்கிய‌மாகியிருக்கிறார்.

வழக்கத்தை விடவும் இந்தத் தேர்தலில் மேக்கப் போட்ட சினிமா முகங்கள் அரசியல் மேடைகளில் அதிகமாக வலம் வருகின்றன. சிரஞ்சீவி த‌ன் க‌ட்சி ஊர்வ‌ல‌ங்க‌ளில் தொடையைத் த‌ட்டி எதிர் க‌ட்சியின‌ருக்கு ச‌வால் விட‌, அவ‌ர‌து த‌ம்பியும் ஆந்திர‌ க‌தாநாய‌க‌னுமான‌ ப‌வ‌ன் க‌ல்யாண் மீசையை முறுக்கி அடுத்த‌வ‌ர்க‌ளை மிரட்டுகிறார். காங்கிரஸ் ஆளும் இந்த மாநிலத்தின் முத‌ல‌மைச்ச‌ரான‌ ராஜ‌சேக‌ர‌ ரெட்டி 'ப‌ற‌க்கும் முத்த‌ங்களை' கூட்ட‌த்தின‌ருக்கு கொடுத்து சூடு கிளப்புகிறார்.

இந்த இரு அணியினரும் அட்டகாசம் செய்ய, ச‌ந்திர‌பாபு நாயுடுவுக்கு என்ன‌ செய்வ‌து என்று பெரும் குழ‌ப்பம். இதுவ‌ரைக்கும் இவரிடம் விறைத்துக் கொண்டு நின்ற‌ என்.டி.ராம‌ராவின் வாரிசுக‌ளான‌ ம‌கன்கள் பால‌கிருஷ்ணா,ஹ‌ரி கிருஷ்ணா(இவ‌ருக்கு சிம்ர‌ன் ஜோடியாக‌ ந‌டித்து ஆந்திர‌வாலாக்க‌ளுக்கு சிரிப்பூட்டினார்), பேரன்கள் ஜூனிய‌ர் என்.டி.ஆர், க‌ல்யாண் ராம் என்ற‌ சினிமா ந‌ட்ச‌த்திர வாரிசுகளிடம் கெஞ்சிக் கூத்தாடி, க‌ள‌மிற‌க்கி ச‌ண்டைக்கு தயாராகிவிட்டார்.

சந்திரபாபு என்.டி.ஆரின் குடும்பத்துக்கு வெளியாள் இல்லை. என்.டி.ஆரின் மகளைத் திருமணம் செய்திருக்கிறார். என்.டி.ஆர் லட்சுமி சிவபார்வதி திருமணம் நடந்த சமயத்தில், கோபமடைந்த சந்திரபாபு, எம்.எல்.ஏக்களை திரட்டி, கட்சியைத் தன்னால்தான் காப்பாற்ற முடியும் என்று முதலமைச்சர் ஆனார். தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக முதல்வராகவும் இருந்தார்.

என்.டி.ஆரின் இன்னொரு மகளான புரண்டேஸ்வரி தற்பொழுது காங்கிரஸில் மத்திய அமைச்சராக இருக்கிறார். இவர், யாரும் சந்திரபாபு நாயுடுவை நம்ப வேண்டாம் என்றும், அவர் ஒரு துரோகி என்றும், தன் சகோதரர்கள் அவரை நம்பக் கூடாது என்றும் அடிக்கடி அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் யாரும் பெரிதாக சட்டை செய்வதாக தெரியவில்லை. குடும்பமே தெலுங்கு தேசம் என்றாலும் இந்த 'சின்னம்மா' தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நிற்கிறார். குடும்பமே திரண்டு அந்தத் தொகுதியில் ஆதரவளிக்கிறது.

இவையெல்லாம் இப்படியிருக்க, ந‌டிகை ரோஜாவின் அல‌ப்ப‌ல் தான் ஆந்திர அரசியலின் 'டாப்ட‌க்கர்' வ‌கைய‌றா. பெண்க‌ளை கூட்ட‌ம் சேர்த்துக் கொண்டு ஒயின்ஷாப்க‌ளை அடித்து நொறுக்குவ‌து, மேடைக‌ளில் எதிர்க‌ட்சியின‌ரின் அந்த‌ர‌ங்க‌க‌ளை வ‌கை தொகையில்லாம‌ல் கிழித்து தொங்க‌விடுவ‌து என்று தொட‌ர்ச்சியாக‌ ப‌த்திரிக்கைக‌ளில் த‌ன் முக‌த்தை வ‌ர‌ வைத்துக் கொண்டிருந்த‌வ‌ரை தெலுங்கு தேச‌ம் இந்த‌ முறையும் வேட்பாள‌ராக்கியிருக்கிற‌து.

தெலுங்கு தேசம் என்.டி.ஆரின் வாரிசுகளை களமிறக்க, (ஜூனியர் என்.டி.ஆர் செல்லுமிடங்களில் எல்லாம் பெண்கள் கூட்டம் அள்ளுகிறது என்று ஆந்திர பத்திரிக்கைகள் எழுதுகின்றன), பிரஜா ராஜ்ஜியம் கட்சியே நடிகரால் நடத்தப்பட, காங்கிரஸ் மட்டும் அரிதாரமில்லாத முகங்களை வைத்துக் கொண்டிருப்பதற்கு விரும்பவில்லை.

'இது தாண்டா போலீஸ்', 'எவனாயிருந்தா எனக்கென்ன‌' போன்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த படங்களின் கதாநாயகன் டாக்டர்.ராஜசேகரை பயன்படுத்த காங்கிரஸ் முயன்றது. அவரும் ஆளுங்கட்சியின் ஆதரவிருப்பதாக நினைத்துக் கொண்டு ஆந்திராவின் உட்பகுதியில் நடந்த ஒரு கூட்டத்தில் சிரஞ்சீவி குறித்து எக்குத்தப்பாக பேசிவிட்டார். அடுத்த நாள் அதிகாலையில் ஹைதராபாத் வந்த அவரது காரை, சிரஞ்சீவியின் ரசிகர்கள், ஏர்போர்ட்டில் துவங்கி அவரது வீடு வரைக்கும் துரத்தி துரத்தி அடித்தார்கள். கட்டுகளோடு மருத்துவமனையில் படுத்திருந்த அவரை சிரஞ்சீவி சென்று பார்த்து மன்னிப்புக் கேட்டார். இது சிரஞ்சீவிக்கு 'ரொம்ப நல்லவர்' என்ற பட்டத்தை வாங்கிக் கொடுப்பதற்கான அனைத்து முகாந்திரங்களையும் அமைத்துக் கொடுத்தது. உஷாரான காங்கிரஸ், ராஜசேகரை அதற்கு பிறகு முன்னிலைப்படுத்தவில்லை. கனவு நாயகனான மகேஷ் பாபு மட்டுமே இப்பொழுது காங்கிரஸில் இருக்கும் முக்கியமான நடிகர்.

சினிமாக்காரர்கள் கிடைக்கவில்லை என்ற நிலையில் வலைவிரித்த காங்கிரஸிடம் அசாரூதின் என்ற மீன் சிக்கிக் கொண்டது. இசுலாமியர்கள் அதிகம் இருக்கும் ஒரு தொகுதியில் நிற்க வைக்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், இப்பொழுது அவர் உத்தரப்பிரதேசத்தில் நிற்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் ஹைதராபாத்தை குறி வைத்ததாக தெரிகிறது. பரம்பரைச் சொத்தாக ஹைதராபாத்தை வைத்துக் கொண்டிருக்கும் எம்.ஐ.எம் அந்தத் தொகுதியை விட்டுக் கொடுக்கும் என்று தோன்றவில்லை.

ஆந்திரப் பிரதேசத்தை மூன்று மண்டலங்களாக பிரிக்கலாம். ஸ்ரீகாகுளம், மசூலிப்பட்டணம் உள்ளிட்ட 'கோஸ்டல் ஆந்திரா', வெடி குண்டு தயாரிப்பதே குடிசைத் தொழிலாக இருக்கும் கடப்பா, கர்நூல் உள்ளிட்ட 'ராயலசீமா', விஜயவாடா உள்ளிட்ட கிருஷ்ணா நதி பாயும் வளமான 'ஆந்திரா'. இவை தவிர்த்த வறண்ட பகுதியான தெலுங்கானா. இந்தத் தெலுங்கானாவில் தான் ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன. அறுபது ஆண்டுகளாக தெலுங்கானாவை ஆளுங்கட்சிகள் எதுவுமே கண்டு கொள்ளவில்லை என்றுதான் இந்தப் பகுதியை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி இந்தப் பகுதி மக்கள் போராடுகிறார்கள்.

வறுமைக்கும், செல்வத்துக்குமான வித்தியாசம் தமிழகத்தை விட ஆந்திராவில் அதிகம். அமெரிக்காவில் டாலர்களை சம்பாதிக்கும் இந்தியர்களிலும், எம்.எஸ் போன்ற‌ உயர்கல்வி படிக்கும் இந்தியர்களிலும் விகிதாச்சார அடிப்படையில் ஆந்திரர்களே அதிகம். இன்னொரு பக்கத்தில் திரைப்பட நட்சத்திரங்களை பார்த்து உருகும் மக்களின் எண்ணிக்கை ஆந்திராவில் மிக அதிகம்.இதனால்தான் ஆந்திர கட்சிகளின் கூட்டங்களில் சினிமாத்தன்மை மிக அதிகமாக இருக்கிறது. சினிமாவில் கதாநாயகன் பேசும் மிக ஆக்கிரோஷமான வசனங்களை கூச்சமே இல்லாமல் அரசியல் மேடைகளில் பேசுகிறார்கள். மக்களும் மிக ஆரவாரமாக கை தட்டுகிறார்கள்.

ஊழல் குற்றச்சாட்டுகளும் வாரிசு அரசியலும் ஆந்திர அரசியலின் மிகச் சாதாரணமான காட்சிகள்.சத்யம் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜூவின் ஊழலில் இவருக்கு தொடர்பு இருப்பதாக அவரும், அவருக்கு தொடர்பு இருப்பதாக இவரும், சந்திரபாபுவும், ரெட்டியும் மாற்றி மாற்றி தூற்றிக் கொள்கிறார்கள். சந்திரபாபுவின் குடும்பம் பால்பண்ணை போன்ற பிசினஸ்களை கோடிக் கணக்கில் செய்து கொண்டிருப்பதாகவும், ராஜசேகர ரெட்டியின் குடும்பத்துக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலமும், மீடியா பிசினஸ்களும் இருப்பதாக அறிக்கைகள் வருவது சர்வசாதாரணம். யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அரசியல்வாதி என்றால் ஆயிரம் கோடி என்பது சாதாரண தொகை என்ற மனநிலை மக்களுக்கு எப்பவோ வந்திருக்கிறது. ரெட்டியின் மகன் ஜெகன் இந்தத் தேர்தலில் லோக்சபாவிற்கு போட்டியிடுகிறார். சந்திரபாபுவின் மகன் லோகேஷ் இதுவரைக்கும் மேடையேறவில்லை. அன்புமணி எந்த‌ மேடையேறி மத்திய அமைச்சர் ஆனார்?

கொள்கை, சேவை என்ற‌ சொற்க‌ளை ம‌ட்டுமே உச்ச‌ரித்துக் கொண்டு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெய் பிர‌காஷ்நாராயண் 'லோக் ச‌ட்டா' க‌ட்சியை ந‌ட‌த்தி வ‌ருகிறார். அவ‌ர் கட்சி வெல்ல‌ வேண்டும், குறைந்தபட்சம் அவர்(ஜெ.பி) மட்டுமாவது வெல்லட்டும் என்று நிறைய‌ நப‌ர்க‌ள் பேசுவ‌தைக் கேட்க‌ முடிகிற‌து. ஆனால் 12 ச‌தவீத‌ வாக்குக‌ளுக்கு மேல் அவரது கட்சிக்கு ஏன் வ‌ருவ‌தில்லை என்றுதான் தெரிய‌வில்லை. த‌மிழக‌த்தின் த‌ர‌ம் தாழ்ந்த‌ அர‌சிய‌லுக்கு எந்த‌ வ‌கையிலும் ஆந்திர‌ அரசிய‌ல் குறைந்த‌த‌ல்ல‌ என்ப‌தால் ப‌ண‌ம், வ‌ன்முறை, ஆள் ப‌லம் போன்ற‌ வ‌ஸ்துக‌ளை மீறி முழுக்கை ச‌ட்டை, ஷூ அணிந்து சாதுவாக, தொடர்வண்டிகளில் வாக்கு சேக‌ரிக்கும் ஜெ.பி எல்லாம் ஜெயிப்ப‌து மிக‌ச் சிரம‌மான‌ விஷ‌ய‌ம் தான்.

0 எதிர் சப்தங்கள்: