Mar 19, 2008

கவிதை எழுத சில குறிப்புகள்

நண்பர் ஹரன் பிரசன்னா மிகுந்த பணிகளுக்கிடையில் "கவிதை எழுத சில குறிப்புகள்" என்ற பெயரில் எனக்காக நேரம் ஒதுக்கி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

பிறருக்கும் உதவக்கூடும் என்பதால்.......
-----
இது நான் அனுப்பியது.
------
எல‌க்கிய‌வாதிக்கு,
ந‌ம‌ஸ்கார‌ம‌ண்ணே.

க‌வுஜை அனுப்பி இருக்கேன் பாருங்க‌...இங்க‌ வெயில் ம‌ண்டைய‌ பொள‌க்குது. ரெண்டு நாளா குப்புற‌ ப‌டுத்து, த‌லைகீழா நின்னு எழவெடுத்துப் பார்த்தேன். ஒண்ணும் வேலைக்காக‌ல‌.

ந‌ம்ம‌ பின்ந‌வீன‌த்துவ‌'வியாதி'ங்க‌ க‌விதை த‌ன்னைத்தானே எழுதிக்கும்ன்னு சொன்னாங்க‌...நான் பேப்ப‌ர் மேல‌ பேனா வெச்சுட்டு ப‌டுத்துட்டேன். காத்தால‌ பார்த்தா ஒரு புள்ளிய‌க்கூட‌ காணோம். அப்புற‌ந்தான் தெரிஞ்சுது நான் பேனா மூடிய‌ க‌ழ‌ட்டி வெக்க‌லைன்னு. நான் ஒரு வெள‌ங்காத‌வ‌ன்.

எப்ப‌டியோ அங்க‌ இங்க‌ பொறுக்கி ஒரு க‌வுஜைய‌ என்ர‌ ரேஞ்சுக்கு ரெடி ப‌ண்ணிட்டேன்.

எல‌க்கியவாதியாக இன்னும் வ‌ள‌ர‌ வாழ்த்துக்க‌ள். சாப்பாட்டை கொஞ்ச‌ம் குறைங்கண்ணா. இல்லைன்னா எல‌க்கிய‌வாதியா ம‌ட்டுமில்லாம் அக‌லமாக‌வும் வ‌ள‌ர்ந்துடுவீங்க‌.

பிரிய‌த்துட‌ன்
வா.ம‌ணிகண்டன்.
கொல்ட்டி தேச‌ம்.
-------
கவிதை எழுத சில குறிப்புகள்:
இளவல் வாம,

தலைகீழெல்லாம் நிக்கக்கூடாது, தலைகீழாகத் தொங்கவேண்டும். அப்போது உடலின் சகலபாகத்திலும் உள்ள வார்த்தைகள் பிதுங்கி வாய்க்கு வந்துவிடும். அப்போது நீங்கள் துப்பினால்கூட அது கவிதையாக வரும். பாரதி வீட்டிலும் கம்பர் வீட்டிலும் எப்போதும் ஒரு தாம்புக்கயிறு தயாராக இருக்கும். (கம்பருக்கு தொங்கர் என்று மரூஉப் பெயரும் உண்டு என்பது தாங்கள் அறிந்ததே.)

எந்தப் பொருளைப் பார்த்தாலும் கூர்ந்து அவதானிக்கவேண்டும். (பார்க்ககூடாது. பார்த்தல் என்பது பின்நவீன உலகில் போணியாகாது. அவதானித்தல் என்பது முக்கியம்.)

எவனோ நகத்தை வெட்டிப் போட்டுப் போயிருந்தால்கூட அதை ஒரு படிமாக யோசிக்கவேண்டும். மூச்சு விட மறந்தாலும் படிமம், உள்ளுறை, அழகியல், யதார்த்தம் போன்ற வார்த்தைகளை மறக்கக்கூடாது.

காதல் கவிதை எழுதுவதென்றால் தனியான டெம்ப்ளேட் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஒரு பெண்ணைப் பார்த்து உடனே மோகம் கொண்டு நாலு வரி எழுதிவிட்டு, யோனி, முலை, அல்குல் என்றெல்ல்லாம் அங்கங்கே தூவிவிடவேண்டும். காதல் கவிதை ரெடி.

முக்கியமான விஷயம், யாருக்கும் புரியக்கூடாது. உண்மையில் யாருக்கும் புரியாமல் யாராலும் எழுதிடமுடியாது. அதனால் புரியும் கவிதை ஒன்றை எழுதி, அதற்கு இணையான கொடுந்தமிழ் வார்த்தைகளை இணையத்தில் தேடி, பெயர்க்கவேண்டும். (மாற்றவேண்டும் என்கிற சொல்லும் பிநவீன உலகில் போணியாகாது என்பதை நீங்கள் உடனே புரிந்துகொள்ளவேண்டும்.) நீங்கள் எழுதிய கவிதை என்று உங்களுக்கே புரியவில்லையோ அன்று நீங்கள் பீடத்திற்குப் போகிறீர்கள். ஒரு உதாரணம் சொல்கிறேன்.

சூரியன் எழுகிறது/மலர்கள் விழிக்கின்றன/நேற்றுப் பெய்த மழையில்/ஊறிக்கிடக்கும் தவளைகளின் குரலில்/திறக்கிறது என் வீட்டுக் கதவு.

இது அழகியல் கவிதை.

இதில் என்ன இருக்கிறது என்று சொல்லி, உங்களை வானம்பாடிக் கவிஞர்களாக்கிவிடுவார்கள். அதனால் இப்படி ஒன்றை எழுதிவிட்டு, இப்படி மாற்றவேண்டும்.

இரவெல்லாம் எங்கோ புணர்ந்து திரிந்த சூரியன்/தன் குறி தவழ உலகை வெறிக்கிறான்/தொடர் மகரந்தச் சேர்க்கையில்/சோபையிழந்த பூக்கள்/கண்கள் திறக்கின்றன/சூரிய பயத்தோடு/நேற்றுப் பெய்த மழையில்/என் படுக்கையெங்கும்/துள்ளித் திரிந்த தவளைகள்/இரவின் வெம்மையைத் தேடிகத்தி அலைய/திறக்கிறது எனக்கான வெளி. /

இதில் என்ன சொல்ல வருகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. அப்படியானால் இதை நீங்கள் கவிதையாக்கிவிடலாம். அதிலும் கீழே ஒரு பெண் பெயரைப் போட்டுவிட்டால் அது பெண்ணியக் கவிதையாவதைப் பாருங்கள். அல்லது கீழே ஒரு சின்ன குறிப்பு, நந்திகிராம பிரச்சினை என்றோ, விவசாயிகள் தற்கொலை தாங்காமல் எழுதியது என்றோ எழுதிவிட்டால், நீங்கள் முற்போக்குக் கவிஞராவதைப் பாருங்கள். முக்கியமான விஷயம், எவன் கேட்டாலும் விளக்கம் மட்டும் சொல்லிடாதீங்க, மாட்டிக்குவீங்க.
வாழ்க வளர்க.

அன்புடன்
பிரசன்னா.
---
(குறிப்பு: ஆட்டோ அனுப்புபவர்கள் என்னையும் அணுகவும். என்னுடைய பங்களிப்பும் உண்டு.)

7 எதிர் சப்தங்கள்:

குசும்பன் said...

செம கலக்கல்:)))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நானும் முயற்சிக்கிறேன். எனக்கும் எலக்கியவாதி ஆகும் ஆசையிருக்கிறது :)

வேளராசி said...

ரெண்டு கவிதையுமே சூப்பர்

கிருத்திகா ஸ்ரீதர் said...

நல்ல யோசனைதான்... இன்று தான் உங்கள் பதிவிற்கு வந்தேன் வாசிக்க அநேகம் உள்ளது. வாழ்த்துக்கள்.

வவ்வால் said...

//தலைகீழெல்லாம் நிக்கக்கூடாது, தலைகீழாகத் தொங்கவேண்டும். அப்போது உடலின் சகலபாகத்திலும் உள்ள வார்த்தைகள் பிதுங்கி வாய்க்கு வந்துவிடும். அப்போது நீங்கள் துப்பினால்கூட அது கவிதையாக வரும்.//

அப்போ என்னை தவிர எவனும் சிறப்பாக பின்/முன் நவீன கவித எழுத முடியாது.... துப்பினா என்ன நான் தும்மினா கூட கவித தான்! நானே உலகின் சிறந்த எலக்கிய கர்த்தா(படைப்பாளினு சொன்ன பி.ந. ஏற்காதாமே)

அப்புறம் நீங்க போட்ட பி.ந கவித சரியா அந்த ஸ்கேலுக்கு வரலை எனவே சில திருத்தங்கள்( ஆசிரியர் இறந்து விட்டார் எனவே நான் படைப்பை திருத்தலாம் தானே)

"இரவெல்லாம் எங்கோ புணர்ந்து திரிந்த சூரியன்/தன் குறி தவழ உலகை வெறிக்கிறான்/'

இது வரைக்கும் ஓகே,

ஆனால் பிறகு

தொடர் மகரந்தச் சேர்க்கையில்/சோபையிழந்த பூக்கள்/கண்கள் திறக்கின்றன/

இந்த இடத்தில் கண்கள் திறக்கின்றனவுக்கு பதிலாக

"புணர்ந்து களைத்த யோனியைப்போல விரிகின்றன"

என்று வந்தா சூப்பர் பி.நவாக இருக்கும் :-))

//சூரிய பயத்தோடு/நேற்றுப் பெய்த மழையில்///

இந்த இடத்தில்
"நேற்றுப்பெய்த மழையில் நனைந்த முலைகள் முகிழ்கின்றது"
என்ரு வந்தா இன்னும் சூடேத்தும் பி.ந ஆகிடும்!

//என் படுக்கையெங்கும்/துள்ளித் திரிந்த தவளைகள்/இரவின் வெம்மையைத் தேடிகத்தி அலைய/திறக்கிறது எனக்கான வெளி. ///

இரவின் வெம்மையை தேடி என்பதற்கு பதிலா

"புணர்வின் வெம்மையை தேடி " போட்டா போதும் அக்மார்க் பி.ந கவித ஆகிடும்!

எல்லாத்தையும் சேர்த்து படிச்சிட்டு அப்படியே எல்லாருக்கும் போன் போட்டு இந்த பி.ந கவித பத்தி சொல்லிடுங்க :-))

Vaa.Manikandan said...

நன்றி குசும்பன்,சுந்தர்,வேளராசி,கிருத்திகா.

//எல்லாத்தையும் சேர்த்து படிச்சிட்டு அப்படியே எல்லாருக்கும் போன் போட்டு இந்த பி.ந கவித பத்தி சொல்லிடுங்க :-))//

சொல்லி விடுகிறேன் வவ்வால். :)

ஒரு பின்னூட்ட‌த்தை ம‌ட்டுறுத்துகிறேன்.

Unknown said...

unmaithaan! pala samayangalil sila marabu kavithaikal num thaaimozhiyil irunthaalum,athan iyalbu mozhi namakke vilanga villai.