Mar 3, 2008

புதரோரம் பூத்திருக்கும் பிச்சிப்பூ- பாவ‌ண்ண‌ன் க‌விதைக‌ள்


மனித வாழ்வின் சிக்கல்களையும், திடுக்கிடல்களையும், சுகதுக்க கணங்களையும் எவ்வித அரிதாரமுமில்லாமல் படைப்பாக்கும் கலையை பெற்றிருக்கும் கலைஞன் வாசக மனதின் நுண்ணிடுக்குகளில் எளிதாக பயணம் செய்துவிடுகிறான்.

பாவண்ணன் அத்தகைய ஒரு படைப்பாளி.

பாவண்ணனின் கவிதைகளை சமீபத்தில் அந்திமழை.காம் இணைய சஞ்சிகையில் வாசிக்க முடிந்தது. (http://andhimazhai.com/news/viewmore.php?id=6627&action_type=viewnews)

முத்த‌ங்க‌ள் குறித்தும், க‌ண்ணீர் குறித்தும், காத‌ல் குறித்தும் எழுத‌ப்பட்ட‌தாக‌ வாச‌க‌ப் ப‌ர‌ப்பிற்கு வ‌ரும் க‌விதைக‌ளின் பெருந்தாக்குத‌லில் ச‌லிப்புற்றிருப்ப‌வ‌னுக்கு 'தீராத‌ புத்த‌க‌ம்' மிக‌ முக்கிய‌மான‌ ஒரு க‌விதை. மிகுந்த ஆசுவாசம் அளிப்பதாக இருக்கிறது. புறக்கணிப்பின் துக்கத்தை ஏற்றுக் கொளவது, அதை மீறிச்செயல்படுதலும் மனித மனதின் நிலையான செயல்பாடாக இருக்கிறது. இதை தன்பாணியில் கவிதையாக்கியிருக்கிறார்.

சாக்கடையில் இறந்து போன தன் குழந்தையைத் தேடிக் கொண்டிருக்கும் பிச்சைக்காரி குறித்தான கவிதை மனித மனதின் மென்பகுதியை குறி வைத்து எழுதப்பட்டு பரிதாபத்தை எதிர்நோக்கும் சாதாரண கவிதையாக மாறியிருக்க வேண்டிய‌ ஒன்று.ஆனால் நக‌ர‌த்தின் காட்சியினை அடுத்த‌ இர‌ண்டு வ‌ரிக‌ளில் கொண்டு வ‌ந்து ம‌ன‌தை விம்ம‌ச் செய்கிற‌து க‌விதை.

ந‌க‌ர‌த்தின் ஆயிர‌க்கண‌க்கான‌ துக்க‌ங்க‌ள் கேட்ப்பாரில்லாத‌ குழ‌ந்தையின் ஒப்பாரியாக‌ தெருக்க‌ளில் உலா வ‌ருகின்ற‌ன‌. ந‌க‌ரின் இருள் சூழ்ந்த‌ துக்க‌ங்க‌ள் அனைத்தும் இக்க‌விதையை வாசித்த‌ க‌ண‌ம் என்னுள் வ‌ந்து போகிற‌து.

சாக்கடைக்குள் என்றோ/தவறி விழுந்து/இறந்துபோன குழந்தையை/காப்பாற்றச் சொல்லி/கதறி யாசிக்கிறாள்/பைத்தியக்காரி.

---
'அழ‌குச் சித்திர‌ம்' க‌விதை வாக‌ன‌த்தின் க‌ண்ணாடியில் ப‌தியும் 'ஒரு க‌ண‌ அழ‌கிய‌ல்' குறித்தான‌தாக‌ இருக்கிற‌து. கண நேரத்தில் நிகழ்கின்ற காட்சிகளை கவிதையில் கொண்டு வருவது என்னுள் மிகுந்த பாதிப்பினை உண்டாக்குகிறது.

"மலையுச்சிக்கும் மரணத்திற்கும் இடையிலான கணம்" என்ற வரிகளும் "மிகப்பெரிய தேவாலயம் ஒரு கணம் கார்க்கண்ணாடியில்" என்ற வரிகளும் அதிர்வுகளை உண்டாக்கியிருக்கின்றன. இந்த வரிகளை எழுதிய கவிஞர்களின் பெயர்கள் எனக்கு ஞாபகமில்லை. ஆனால் வரிகள் வாசகமனதில் நிற்கின்றன. அத்தகைய கவிதையாக 'அழகுச் சித்திரத்தை' என்னால் சொல்ல முடியும்.

----

மனிதன் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை பிரம்மாண்டமாக்கியும், மிக எளிதானதாக்கியும் சந்தோஷம்,துக்கம்,கவலைகள் என பல்வேறு உணர்ச்சிகளை போர்த்தி கொண்டிருக்கிறான். ஆனால் தனிப்பட்ட ஒருவனுக்கு எத்தகைய பிரம்மாண்டமான விஷயமும் மூன்றாம் மனிதனுக்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் ஒன்றுமேயில்லாத விஷயங்களாகக் கூடும்.

இந்த உலகம் எந்த மனிதனின் அல்லது சமூகத்தின் உணர்ச்சிகள் குறித்தும் விசனப்படாமல் நகர்ந்து கொண்டேயிருக்கிறது. மனிதன் மட்டுமே நிகழ்வுகளின் மீதான வெளிச்சத்தை பிரதானமாக்கிக் கொண்டிருக்கிறான்.

மர‌ண‌ம் ம‌னித‌ன் முக்கிய‌த்துவ‌ப்ப‌டுத்தும் நிகழ்வாக‌ இருக்கிற‌து. ம‌ர‌ணம் குறித்து யோசிப்ப‌வ‌னுக்கும் விர‌ல் வ‌ரையிலும் ந‌டுக்க‌மூட்டக் கூடிய‌ வ‌ரிக‌ளாக....

மரணம் விளையாடிக்கொண்டே இருக்கிறது/பழங்கள் தொங்கும்/கிளைக்குக் கிளைநகரும் அணில்போல

....அமைய‌க் கூடும். மர‌ண‌ம் ஒரு விளையாட்டாக‌வே இருக்கிற‌து. அது ஒரு குழ‌ந்தையைப் போல‌. ஆனால் யாரும் அதை விளையாட்டாக‌ ஏற்றுக் கொள்வ‌தில்லை. மர‌ண‌ம் உண்டாக்கியிருக்கும் பீதியை இக்க‌விதை வ‌ரிக‌ள் சாவ‌தான‌மாக‌ தாண்டிச் செல்கிற‌து.

----

"ஆவல் துடிக்கும் விரலொன்று/பறித்துச் செல்லுமென/புதரோரம் பூத்திருக்கிறது/பிச்சிப்பூ"

புதரோரம் பூத்திருக்கும் பிச்சிப்பூவின் ஆவல் கவிதையில் வரும் போது அதன் துக்கத்தையும் நிறைவேறாத ஆவலயும் உள்வாங்க முடிகிறது.மிக‌ச் சாதார‌ண‌ காட்சியொன்றை ப‌டைப்பின் மூல‌மாக வாச‌க‌னுக்கு உணர்த்தும் ப‌டைப்பாளி மிக‌ உன்ன‌த‌மான‌வன்.

----

பாவ‌ண்ண‌னின் முந்தைய‌ க‌விதை நூல்க‌ளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒரு நல்ல‌ க‌விதையின் வாச‌க‌னாக‌.

2 எதிர் சப்தங்கள்:

Unknown said...

வேண்டுதல் கவிதையும், பிச்சிப்பூ கவிதையும் எனக்குப் பிடித்திருந்தன. அறிமுகத்திற்கு நன்றி.

முபாரக் said...

நல்லா எழுதியிருக்கீங்க.

திண்ணையில் வந்த பாவண்ணனின் எனக்குப் பிடித்த கதை - வரிசை (புத்தக அறிமுகம்) ரொம்ப நல்லாருக்கும்

வாழ்த்துக்கள்