Jan 3, 2008

நிராக‌ரிப்பை போர்த்திக் கொண்ட‌வ‌னின் ம‌ர‌ண‌ம்தொடர்ச்சியான நிராகரிப்புகளாலும் துக்கத்தின் கசப்புகளாலும் கசங்கியிருந்தவனிடம் மரணத்தின் துர்வாசனை குறித்துப் பேச ஆரம்பிக்கிறார்கள். இரவின் தீராத படிகளில் விடியலை நோக்கி ஏன் நடப்பதில்லை என்று வின‌வுகிறார்க‌ள். பதில்களால் நிரம்பியிருக்கும் இந்த உலகின் காற்றிலிருந்து ஒரு பதிலை பறித்துத் தரச் சொல்கிறார்க‌ள்.
திற‌மைக‌ளை எடைபோடுப‌வ‌ர்க‌ளை நினைத்துப்பார்த்தான். இவ‌ர்க‌ளின் நீதிச‌பையில் வ‌ல்ல‌வ‌ர்க‌ள் நிர்மாணிக்க‌ப்ப‌டுகிறார்க‌ள். அவ‌ர்க‌ளோடு நீங்க‌ள் கொண்டிருக்கும் உற‌வின் நுட்ப‌த்தை பொறுத்து உங்க‌ளுக்கான‌ இட‌ம் நிர்ண‌யிக்கப் ப‌டுகிற‌து என‌ச் சொல்ல‌ நினைத்த‌வ‌ன் த‌ன்னிர‌க்கப் பேச்சாக‌ அமையும் என‌ சொற்க‌ளை சுருட்டி வைத்தான்.

மேதாவித்த‌ன‌ம் நிர‌ம்பியவனை யோசித்தான். நெருப்பின் கிளைக‌ளை எழுத்தின் வ‌டிவிலும் உள்வாங்கியவனாகவும், ம‌ர‌த்தின் அங்க அசைவுக‌ளில் வார்த்தைக‌ளை பிரித்து எடுப்ப‌வனாகவும் இருந்தான். எதிர்நிற்ப‌வ‌ன் மீதான‌ அல‌ட்சியப்பார்வையை எறிப‌வனாய் இருந்த அவன், பெண்ணின் முலை ரேகையில் ஊர்ந்து திரிந்தான். சிரித்துக் கொண்டு அடுத்த‌வள் குறித்து யோசித்தான்.

காத‌லை நிர‌ம்பாத‌ கிண்ண‌ங்க‌ளில் ஊற்றுப‌வ‌ளாக‌ இவ‌னிட‌ம் நெருங்கிய‌வ‌ள் தென்ப‌ட‌ ஆர‌ம்பித்தாள். அவளின் சிரிப்பின் துணுக்குக‌ளில் சிக்குண்டு வெளியேற இயலாம‌‌ல் அலைந்த‌ க‌ண‌ங்க‌ளை நினைத்தான். சொற்க‌ளின் இடுக்குக‌ளில் இருவ‌ரும் அம‌ர்ந்து பேசிய‌தை குத‌ப்ப‌த்துவ‌ங்கினான். துரோக‌த்தின் விஷ‌ முள்ளை கண் விழிக்குள் ஏற்றிய‌வ‌ளாய் உருமாறினாள். வார்த்தைக‌ளுக்கு ப‌ச்சை நிற‌ம் த‌ட‌வி அவ‌ள் குறித்துப் பேசினான்.

த‌ன் நினைவு சிதைந்த‌வ‌னாய், காய‌த்தில் குத‌ம்பி வ‌ரும் குருதியின் மீதாக‌ எச்சிலை த‌ட‌விய‌வ‌னாய், வேத‌னையின் பெருக்கெடுப்பில் க‌ண்ணீரை வெறுப்ப‌வ‌னாய், உல‌க‌ம் ஒதுக்கி வைக்கையில் பிச்சை கேட்டு நிற்ப‌வ‌னாய் தன்வ‌டிவ‌ம் பெற‌த்துவ‌ங்கினான்.

த‌ன் துக்க‌த்திற்கு வ‌டிவ‌மில்லை. க‌த‌ற‌லுக்கு எந்த‌ச் செவியும் ம‌டுப்ப‌தில்லை. நிராக‌ரிப்பை போர்த்திக் கொண்ட‌வ‌னின் ம‌ர‌ண‌ம் அர்த்த‌ம் பெறுவ‌தில்லை என்ற புள்ளியில் சிந்த‌னையை நிறுத்தினான்.

உல‌க‌ம் இருளால் சூழ்ந்திருந்தது. குரூர‌த்தின் ந‌க‌ங்க‌ள் கீறித்த‌ள்ளுவ‌த‌ற்கு த‌யாராக‌ இருக்கின்ற‌ன‌. ச‌தியின் ப‌ற‌வைக‌ள் ஆகாய‌ம் முழுவ‌துமாக‌ சுற்றித் திரிகின்ற‌ன‌. இர‌த்த‌ச் சுவை தேடிய‌லையும் க‌ழுகுக‌ள் தோள்க‌ளின் மீது அம‌ர்கின்ற‌ன‌.

வினாவெழுப்பிய‌வ‌ர்க‌ளைப் பார்த்து அழ‌ நினைத்தான். இவ‌னின் துக்க‌த்தை ம‌துக்கோப்பையில் பிடித்துக் கொள்வார்க‌ள். ச‌ந்தோஷ‌த்தின் சிற‌குக‌ளை அவ‌ர்க‌ளுக்கு அது த‌ரும். கோடையின் கொடூர சாலைகளில் ச‌ந்தோஷப் பாட‌லை இசைப்பார்க‌ள். இந்த‌ப்பாட‌லுக்கான‌ வ‌ரிக‌ளுக்காக‌ இவ‌னைத் தேடி வ‌ந்திருக்கிறார்க‌ள். ஞாப‌கத்தின் காய‌ங்க‌ளை ஆறிவிடாம‌ல் பார்த்துக் கொள்வ‌த‌ற்காக‌ இவ‌னை நெருங்கியிருக்கிறார்க‌ள்.

கொதிக்கும் சுடும‌ண‌லில் மென்பாத‌ங்க‌ள் வ‌த‌ங்கிப் போக‌ வ‌ழிதெரியாம‌ல் அலையும் பூனையென‌ இற‌க்க‌த்துவ‌ங்கினான்.
(வ‌டிவ‌மில்லாத‌ ஒரு வ‌டிவ‌ம்)

4 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

சொற்கள் உங்களுக்கு வசப்படுகின்றன.

மது பாபு

மஞ்சூர் ராசா said...

வடிவமில்லாமல் இருந்தாலும் வடிவமாக வடிந்துள்ளது.

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

கவிதைக்கான வார்த்தைகளில் அமையும் உரைநடையின் பாணி என்பது மிக சந்தோஷமான ஒரு வாசிப்பு அனுபவத்தை உண்டாக்க கூடியது. உங்கள் கருத்துகளில் உள்ள தீவிரம் அத்தகைய வார்த்தைகளில் மிகவும் அருமையாக வெளிப்படுகிறது. நல்ல ஒரு பதிவு...

LakshmanaRaja said...

வார்த்தையின் ஆளுமை மிக அதிகம்.
வாழத்துக்கள்.