Jul 31, 2006

இவனைப் போன்ற கவிதை

இந்த வரிகள் கவிதை எழுதுவதாகாச் சொல்லிக் கொள்ளும் யாருக்கும் பொருந்தக் கூடியவை. கவிதை என்பதையும் தாண்டி, எதாவது எழுதுபவர்களுக்கும் அல்லது எழுதாதவர்களுக்கும் பொருந்தும்.

கல்யாண்ஜியின் கவிதை ஒன்று ஏற்கனவே இந்தப் வலைப்பக்கத்தில் இட்டிருந்தாலும், இக்கவிதையும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

**********

இந்தக் கவிதை எழுதுகிறவன்
எத்தனை சொற்கள்
மனதாரப் பேசுகிறான்
அவன் மனைவியிடம்,பிள்ளைகளிடம்
அடுத்த, பக்கத்து வீட்டுக் காரனுடைய
மூக்கும் முழியும்
அடையாளம் சொல்ல முடியுமா
நெஞ்சில் கை வைத்து

*****

இந்தக் கவிதை எழுதுகிறவன்
பீங்கான் கழிப்பறையில்
பிளாஸ்டிக் குவளைகளில்
கொட்டிய தண்ணீரில்
கோடியில் ஒரு பங்காவது
ஊற்றியிருப்பானா
ஒரே ஒரு செடி
வேரடி மண்ணில்

*****

இந்தக் கவிதை எழுதுகிறவன்
முண்டியடித்து ஏறி
அமர்ந்த பேருந்தில்
எப்போதாவது சமீபத்தில்
எழுந்து இடம் கொடுத்திருக்கிறானா
இன்னொரு தள்ளாதவருக்கு.
குதிகால் நரம்பு தென்னிய
சைக்கிள் ரிக்ஷாகாரனிடம்
கூலி பேரம் பேசாமல்
இருக்க முடிகிறதா இவனால்.

எப்போதாவது எப்போதாவது
பாடைக்கு வீசிய பூவை
கூச்சமற்று
குனிந்து எடுத்துக்
கையில் வைத்துக்
கசிந்தது உண்டா?

இவனைப் போலத்தானே
இருக்கும்
இவனுடைய கவிதையும்

*****************

இதனில் கவிதை எழுதுவதை நேரடியாகக் குறிப்பிடுவது போலத் தோன்றினாலும், அவசர வாழ்க்கையின் அவலங்களையும், மரணிக்கும் கருணையும் கவிதை முழுவதும் விரவிக் கிடப்பதை உணர முடியும்.

தன்னை பரிகாசித்துக் கொள்வது போல்- சுயம் சார்ந்திருந்தாலும், தான் சார்ந்திருக்கும் சமூகத்தினைச் சாடுவது சுவாரசியமானது.

பாடைக்கு வீசிய பூ ஒன்றினை குறித்து எழுதப்பட்டிருப்பது வேறுபட்ட பார்வை.

5 எதிர் சப்தங்கள்:

கார்திக்வேலு said...

படைப்பையும், படைப்பவனையும் பிரித்தறிய விழையா மயக்கம் எல்லா
வாசகனுக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் ஏற்படுவதே.இந்தப் பாகுபாடு
அவ்வளவு எளிதில் அறுதியிட்டுச் சொல்ல முடியாத ஒன்றும் கூட.
அந்த "மாய பிம்பமே", படைப்பின் வெற்றியாகவும், அதன் நிலையான தன்மையாகவும்கூட சில படைப்பாளிகள் கருதுகின்றனர்.

//இவனைப் போலத்தானே.....//
வரிகள், நாம் படிக்கும் தொனியும், சொந்த கருத்தாக்கங்களையும் பொறுத்து
sarcastic ஆகவோ , இயலாமையை ஏற்பது போலவோ
தோற்றமளிக்கும்.

உலகின் ஆகச் சிறந்த கவிதையாகிய ஒன்று கூட, யாருக்கும் ஒரு துரும்பை
கிள்ளிப்போட்டதில்லை , அது கவிதையின் வேலையும் அல்ல.
A poet need not be an activist or an ethicist,saying that it doesn't mean there won't be people like that and infact such people are the ones who made tremedous impact on the lifes of others.
Idealism in life is as attractive to some creators as its repelling to others.

இந்த பல காரணங்களாலேயே கலை/கவிதைக்கும் நடைமுறை வாழ்க்கையில் ஒரு glass ceiling வந்து விடுகிறது.

அன்பு,அறிவு,ஆற்றல் (கடமை) இவை மூன்றும் ஒன்றுக்கொன்று எந்த விதத்திலும் சளைத்தது அல்ல .

நல்ல தேர்வு மணி.

Dubakoor said...

I like the stlye. Lke karthik said...
not every poet need to be as what he writes. Its just an art form.

Some food are delicious with no good and some are healthy with bitter taste.

கோவி.கண்ணன் said...

//"இவனைப் போன்ற கவிதை" //
இந்த கவிதை எழுதியவர் நிச்சயம் அது ஏதோ ஒன்றை செய்திருப்பார் :)

Vaa.Manikandan said...

நன்றி கார்திக், டுபாக்கூர்.

கோவிக்கண்ணன்,
அது கல்யாண்ஜியைத்தான் கேட்க வேண்டும்

Anonymous said...

Really a very good one. Those who writes never does.