Jun 30, 2006

ஹைதராபாத்

மிக வேகமாக தனக்கு அரிதாரம் பூசிக் கொண்டிருக்கிறது ஹைதராபாத் நகரம். கடந்த பத்து பதினைந்து வருடங்களாகவே மற்ற தென்னிந்திய நகரங்களுடன் போட்டியிட்டாலும் மிகச் சமீபமாக பிரம்மாண்ட வளர்ச்சியை நோக்கி நடக்கிறது இந்த நகரம். Fab city எனப்படும் மின்னணுவியல் பொருட்களுக்கான தொழிற்பூங்கா, International Airport(ஷம்ஷாபாத்) போன்ற முக்கியமான திட்டங்கள், இந்தச் சமயத்தில்தான் அறிவிக்கப் பட்டிருக்கின்றன. மென்பொருள் நிறுவனங்களால் நிறைந்து வழியும் ஹைடெக் சிட்டி, உயிர் தொழிநுட்பம் மற்றும் மருந்துத் தொழில்களுக்கான தொழிற்பூங்கா போன்றவற்றால் ஏற்கனவே மாறியிருக்கும் நகரத்திற்கு, இத்திட்டங்கள் மிட்டாய் வாங்கிய குழந்தைக்கு ஐஸ்கிரீமும் கொடுப்பது போல ஆகிவிட்டது.
Photobucket - Video and Image Hosting
மூன்றாண்டுகளுக்கு முன்பாக இங்கு பணிபுரிந்த நண்பர், கடந்த மாதம் வந்திருந்தார். சிகந்தராபாத் தொடரூர்தி நிலையத்தில் இருந்து நகரப் பேருந்தில் மியாப்பூர் செல்ல வேண்டும். நகர பேருந்து என்னும் போது ஒன்றினைக் குறிப்பிட வேண்டும். மூன்று வகையான பேருந்துகள் உண்டு. முதல் வகை 'வீரா'. சற்று சொகுசுப் பேருந்து வகை. கட்டணமும் அதிகம். அதிக இடங்களில் நிறுத்தம் இல்லாது சற்றே வேகமாகச் செல்பவை. அடுத்த வகை 'மெட்ரோ'. 'வீரா'வை விட தரம், வேகம், கட்டணம் போன்றவற்றில் குறைந்தவை. மூன்றாவது வகை சாதாரண பேருந்து.

நண்பரும் நானும் பேருந்தில் இருக்கும் போது சொன்னார். "இது எல்லாம் என்ன ஊரு?, சென்னைதான் ஊர்". நானும் "ஆமாம்" போட்டுவிட்டேன். பிறகு மதியம் அவருடன் இரு சக்கர வாகனத்தில் அவர் பணி புரிந்த ஹைடெக் சிட்டியில் பயணம் செய்த போது, அவரின் வியப்பினை குறித்து எழுத தனியொரு கட்டுரை வேண்டும். சாலைகள், கட்டடங்கள், கடைகள் என அனைத்திலும் மாற்றம் இருப்பதனை உணர்ந்தவராக தொடர்ந்து பேசி வந்தார். இங்கு வந்து ஒரு வருடத்திற்குள்ளாக என்னாலும் கூட உணர முடிந்தாலும், நண்பரின் ஆச்சரியம்- பல வருடங்களுக்கு முன்பாக பிரிந்த உறவொன்றின் மாறிய முகத்தைப் பார்த்ததற்கு இணையானது.

இந்த மென்பொருள் காலகட்டத்தில் ஒரு நகரம், அதுவும் பெரிய தென்னிந்திய மாநிலத்தின் தலைநகரம் மாறத்தானே செய்யும் என்றால், அதுவும் சரிதான். ஆனால் வளர்ச்சி விகிதம்தான் என் ஆச்சரியம். 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ.3300 ஆக இருந்த வாடகை தற்போது ரூ.4500. ரூ.15 க்கு நாகரீகமான கடையொன்றில் Plate meals சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதே உணவு, அதே சுவை, அதே அளவு. ஆனால் இப்பொழுது ரூ.23. ஹைதராபாத்தின் வேகத்தை உணர்த்த இந்த இரண்டு ஒப்பீடுகளும் போதுமானது என நினைக்கிறேன்.

ஒரு நகரம் மாறுவதை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு ரசனையானது. அதே நகரத்தின் நன்கு வளர்ச்சியடைந்த பகுதிகளில் தங்கி இருந்தால் தெரிந்து கொள்வது சிரமம். அவைகள் ஏற்கனவே வசதிகளைப் பெற்றிருக்கும் நிலையில்- வேகம் குறைவானதாக இருக்கக் கூடும். outskirt எனப்படும் நகரின் எல்லையில் இருக்க வேண்டும். மழை நகர்வதைப் போல நம்மைத் தாண்டி நகரம் நகர ஆரம்பிக்கிறது. நசுக்கப்படும் அமைதி, மெதுவாக தொற்றிக் கொள்ள ஆரம்பிக்கும் பரபரப்பு, இரவு தொலைக்க ஆரம்பிக்கும் உறக்கம், இதுவரையிலும் இல்லாத காவல்துறை வாகனத்தின் ரோந்துப் பணியின் சைரன் அலறல் அத்தனையும் மெதுவாக நம்மை அசைக்க ஆரம்பிக்கிறது. மெதுவாக விரல்களினூடாக பரவும் நடுக்கத்தைப் போல.

இதுவரையில் எதெற்கெடுத்தாலும் நகரின் மையப் பகுதி நோக்கி ஓட வேண்டிய நிலை மாறி, அதன் கடைவீதிகள் சுற்றுலாத் தளம் போல எப்பொழுதேனும் செல்லும் இடங்களாக மாறுகின்றன. நம்மைச் சுற்றிலும் வசதிகள் கடை விரிக்கின்றன. திருவிழாவொன்றிற்கு முதன் முதலாக பயணிக்கும் குழந்தையின் மனநிலை வர ஆரம்பிக்கிறது. நம்மை விடாது துரத்தும் நகரத்தின் வாசம், அடையாளமற்ற சந்தோஷம் ஒன்றினையும் நமக்காக சுமந்து திரிவதை பார்க்க முடிகிறது.

ஹைதராபாத் நகரத்தின் வாழ்வியல் அனுபவம் மற்ற நகரங்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமானது. பழமை, புதுமை இரண்டும் சரிவரக் கலந்து கிடக்கிறது. சுல்தான் காலத்திற்கும் போக முடிகிறது ஷாரூக்கான் காலத்திற்கும் போக முடிகிறது. ஒரு இஸ்லாமிய நாட்டின் நகர வீதிகளில் சுற்றும் அனுபவமும் கிடைக்கும். தீவிர இந்து மத மடத்தின் வாயிலில் அலைவதைப் போலவும் உணர முடியும். எதனைப் பற்றியும் அறிந்து கொள்ளாத மரத்துப் போன தெருவொன்றையும் அறியலாம்.
Photobucket - Video and Image Hosting

முகத்திரை அணிந்து வரும் பெண்களும், திருமண ஊர்வலங்களில் நடைபெறும் குத்தாட்டமும், திருவிழாக்களில் கூடிப்பாடும் உறவுக்காரப் பெண்களின் வழக்கமும், இந்த சுழன்றடிக்கும் இந்த வளர்ச்சிக் காற்றில் நிலைக்குமா எனத் தெரியவில்லை. ஆந்திர மக்கள், தாங்கள் மாறினாலும் தங்களின் முறைகளையும், பழக்கவழக்கங்களையும் இறுக்கிப் பிணைந்திருப்பவர்கள் என்பது என் யூகம்.

6 எதிர் சப்தங்கள்:

பொன்ஸ்~~Poorna said...

நல்லா எழுதி இருக்கீங்க மணி.. மிக வேகமாக வளர்ந்து வரும் நகரத்தில் ஒன்று ஹைதராபாத்.. அதுவும் நீங்க இருக்கிற மியாப்பூர் ஏரியா நல்ல உதாரணம்..

கட்டுரை இவ்வளவு நல்லா எழுதறீங்க.. இன்னும் அடிக்கடி எழுதலாம்ல?

Kuyilosai said...

ஐதராபாத் பற்றிச் சொல்வதற்கு எத்துணையோ விஷயங்கள் உள்ளன! கடந்த பல வருடங்களாய் ஆந்திர மாநிலம் முன்னேறியதோ இல்லையோ, ஐதராபாத் பன் மடங்கு முன்னேறியுள்ளது.

பரந்து விரிந்த சாலைகள், மக்கள் நடந்துச் செல்ல நடைபாதைகள், நன்கு பராமரிக்கப்படும் பூங்காக்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்!

தென்னிந்தியாவில் இருக்கும் மூன்று பெருநகரங்களுள் ஐதராபாத் மற்றவைகளை விட பல படி மேல் தான். ஒரு சிறிய மேற்கோள்! முக்கியமான சாலைச் சந்திப்பு ஒன்றில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறதென்று கடைகளை இடித்து அப்புறப்படுத்தியது மாநகர வளர்ச்சிக் கழகம். கணிசமானத் தூரத்திற்கு மேற்கொள்ளப்பட்ட இவ்வேலை 1-2 நாட்களில் சடுதியில் செய்து முடிக்கப்பட்டது. இதுவே சென்னையாக இருந்திருந்தால் வழிப்பிள்ளையார் கோவில், கட்சிக்காரனுடைய வணிக வளாகம் எனப் பலப் பிரச்சினைகளில் மாட்டி காலா காலத்திற்கும் அப்பணி இரண்டுங்கெட்டான் நிலைமையில் தொங்கியிருக்கும்! பெங்களூரிலும் இதே நிலைமை தான்!

பொதுமக்கள் பயன்பெறும் விதம் அறிமுகம் செய்யப்பட்ட E-SEVA முறையும் பாராட்டத்தக்கவை. எல்லாவிதமான வரிகள், கட்டணச் சீட்டுக்கள் (மின்சாரம், குடிநீர், தொலைப்பேசி முதலியன) ஆகியவற்றை செலுத்துதல், வரிகள்/கட்டணங்கள் பற்றிய கேள்விகளுக்குப் பதில் பெற்றுக்கொள்ளுதல், இன்ன பிற சேவைகள் அனைத்தையும் ஒரே சாளரம் வழியாக முடித்துக் கொள்ளும் வசதி வரவேற்கத் தக்கது.

எனது சொந்த அனுபவம் ஒன்று! ஐதராபாத்தில் இருக்கும் போது வாங்கிய 2 சக்கர வாகனத்தை பணி மாறுதல் காரணமாக சென்னைக்கு எடுத்துச் செல்லும் பொழுது NOC (No Objection Certificate) எனப்படும் ஆவணத்தினை பெற நேர்ந்தது. தமிழக RTO அலுவலகங்களின் அனுபவத்தை வைத்து அந்த ஆவணத்தை பெற பெருமுயற்சி செய்ய நேருமென கருதினேன். ஆனால், நான் செலவிட்ட நேரம் மிகக் குறைவு, செலவு செய்தத் தொகை மொத்தம் 51 ரூபாய். RTO அலுவலகத்தினுள் நுழைந்தவுடன் எல்லோருடைய கண்ணிலும் படும் விதத்தில் ஒரு கூடம். அதில் பல்வேறு சேவைகளை பெற படிப்படியான (Step by step)வழிமுறைகளை கொண்ட தகவல் குறிப்பேடுகள் (Information brochure) ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதை பின்பற்றினாலே போதும், வேலை எளிதாக முடிந்து விடும்! புரோக்கர்களுக்கு அங்கு வேலையும் இல்லை, அவர்களிடம் செல்வது ஊக்குவிக்கப்படுவதும் இல்லை! இதே சேவையை தமிழகத்தில் பெற செலவிடும் நேரம், பணம் ஆகியவற்றை நினைத்துப் பார்த்தால் ஐதராபாத் சொர்க்கம்.

இவையெல்லாம் சுமார் 2-3 வருடங்களுக்கு முன்னருள்ள நிலவரம். மீண்டும் அங்கு செல்வதற்க்கான வாய்ப்புக் கிடைக்க வில்லை. தற்போதய நிலவரம் பற்றி மணிகண்டன் தான் கூற வேண்டும்!

Chellamuthu Kuppusamy said...

கூடவே சேர்ந்து ஊரைச் சுற்றிப் பார்த்த உணர்வு வருது மணி.
//அவர் பணி புரிந்த ஹைடெக் சிட்டியில் பயணம் செய்த போது//
அங்கே ஒரு போகுவரத்துக் சிக்னல் புதிதாக இருப்பது தெரியாமல் பைக்ல போயிருப்பாரே? :-)

செந்தில் குமார் ஆர்.டி.ஓ. அலுவகத்துப் பதிகமே பாடிவிடுவார் போல இருக்கிறது. ஒரு முறை வேலை முடிந்து வெளியே வரும் போது, "Do you have one rupees, please?" என அலுவலர் கேட்டார். இலஞ்சமே வாங்காத அலுவலகத்தில் ஒரு ரூபாய் அடையாள அன்பளிப்புப் போல இருக்கிறது என நினத்துக் கொண்டே தந்தேன். இறுதியாகப் பார்த்தால் அது லேமினேசன் அட்டைகான காசு. நாயுடுகாரு புதிய இந்தியாவின் முன்னோடி என எங்கும் அடித்துச் சொல்வேன். அப்துல் கலாமைக் குடியரசுத் தலைவராக்கியவரே அவர் தானே!!

நாமக்கல் சிபி said...

வந்துட்டம்ல!

Vaa.Manikandan said...

antharu ki chaala thanks andi! :)

கார்திக்வேலு said...

//ஒரு நகரம் மாறுவதை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு ரசனையானது//

அதே சமயம் ஒரு வித அமைதியின்மையையும், விவரிக்க முடியாத இழப்பையும் உணர்த்தும்.

ஒவ்வொரு குழி தோண்டலும், இருப்பை விரைந்தழித்து முளைக்கும் புது மினுக்கும் ஒரு வித மெல்லிய அலைச்சலைத் தருவனவே.

ஒரு பெருநகரம்,ஒரு பெருமிருகம்.

I was in Hyd in the Banjara Hills area for a short time ...and it used to contrast everday the ..struggle of needy and the indifference of the greedy.

நல்ல பதிவு மணி.