Jun 1, 2006

உயிர்மை.

எனது கவிதையொன்று ஜூன் மாத உயிர்மை இதழில் பிரசுரமாகியுள்ளது. உங்களின் பார்வைக்காக.

Photobucket - Video and Image Hosting

நிலாப் பாட்டியை இழுத்துச் செல்வதற்காக யோசிக்கிறேன்.

கீழே இறக்குவது சுலபமில்லை. கூனி
விழுந்து இடுப்பை முறித்துக் கொள்வாள்.

நான் திண்டில் அமர,
சாக்கடை நீரில் மிதக்கிறாள்.
துப்பும் எச்சிலிலும், நகரும் கொசுவிலும்
கலங்கிக் கொண்டு.

சுடும் வடையின் எண்ணெய்ப் புகை நிலவினைச்
சூழும் போது நிலாவோடு சேர்ந்து நகர ஆரம்பித்துவிடுகிறாள்.

மெதுவாக உடன் நகர்ந்து வீட்டு வாசலில்
சேர்த்து விட்டேன்.

அக்காவின் குழந்தையை வெளியே கூட்டிவரும்போது

தம்பி சொன்னான்.
"நிலாப் பாட்டியை வீதி நுனிச்
சாக்கடையிலிருந்து கூட்டி வருகிறேன்".


*****************************************************************
கவிதையின்பால் ஆழ்ந்த பிடிப்பு கொண்டவர்கள் பின்வரும் விளக்கத்தினைப் படித்து உங்களின் பார்வையினை சுருக்கிக் கொள்ள வேண்டாம். புரிந்த பின்பு எனது பார்வைக்கும், உங்களின் பார்வைக்குமான வேறுபாட்டினை ஒப்பிடலாம், விவாதிக்கலாம்.

*******************************************************************
இது ஐதராபாத்தின் ஒரு சாக்கடை திண்டின் மீதாக அமர்ந்திருந்த போது தோன்றிய கவிதை. எனது அக்காவின் குழந்தை தனக்கு பிறந்த நாள் பரிசு அனுப்பி வைக்க என்னிடம் கேட்கப் போவதாக சொன்னாள் என்று சொன்னார்கள்.

என்ன வாங்கித் தருவது என்று முடிவு செய்ய முடியவில்லை. யோசித்துக் கொண்டிருந்த போதுதான், சாக்கடை நீரில் மிதங்கிய நிலா குறித்து எழுதினேன்.

என்னைக் காட்டிலும், எனது சகோதரன் மீது அவளுக்கு பாசம் அதிகம். நான் நிலவினைக் கொண்டு சென்றால் கூட அவனது சிரிப்பில் அது ஒன்றுமில்லாமல் போய்விடக் கூடும் அவளிடம்.

எனது பார்வையும் எனது சகோதரனின் பார்வயும் ஒன்று போலவே இருப்பதனை 'சாக்கடை' குறித்து எழுதும் இடத்தில் குறித்திருக்கிறேன்.

சுடும் எண்ணெய் என்பது- காலம் காலமாக நிலாப் பாட்டி சுடும் வடையினால்.

**********************************************************
இன்னும் வேறு பார்வைகள் இருப்பினும் அதனை விளக்க விரும்பவில்லை. படைப்பவனை விட படிப்பவனிடம் அதிக தாக்கத்தை உண்டாக்க வேண்டும். அதுதான் நல்ல கவிதையின் அம்சம். உங்களின் பார்வைகளை முன் வையுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

என் கவிதையின் முழு விளக்கத்தையும் நானே கொடுத்து விடுவதனை விட வேறு அபத்தம் ஒன்று இருக்க முடியாது.

23 எதிர் சப்தங்கள்:

நாமக்கல் சிபி said...

உள்ளேன் ஐயா!
முழுதும் படித்து விட்டு பிறகு பின்னூட்டமிடுகிறேன்.

பட்டணத்து ராசா said...

நல்லா இருக்கு மணி, வாழ்த்துக்கள்.

Badri Seshadri said...

அமுதசுரபி இந்த மாத இதழில் உங்களது 'ஹெரால்ட் பிண்ட்டர்' கட்டுரை வெளிவந்துள்ளது.

Anonymous said...

இது கவிதை மாதிரியே தெரியலையே!! கட்டுரை படிச்ச மாதிரி இருக்கு!

Vaa.Manikandan said...

சிபி,
நல்ல 'மூட்'ல தானே இருக்கீங்க?

நன்றி பட்டணம்.

பத்ரி சார் தகவலுக்கு நன்றி. ஐதராபாத்தில் அமுதசுரபி அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. முயன்று பார்க்கிறேன்.

கண்ணன் அது கட்டுரைதான். 'கவிதை' என பிழையோடு தட்டச்சு செய்துவிட்டேன். கவிதை என்று வருமிடத்து 'கட்டுரை' என மாற்றிப் படித்து, கட்டுரை நன்றாக இருக்கிறதா என்று சொல்லுங்கள் ;)

Chellamuthu Kuppusamy said...

மன்னிக்கவும் மணிகண்டன். நான் பார்த்தவரை நான்கு இடங்களில் 'கவிதை' என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். தட்டச்சுப் பிழையென்று பின் வாங்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு படைப்பாளி விமர்சகனுக்காக வளைந்து போவதாகத் தெரிகிறது.

அதே மாதிரி நாலைந்து தடவை வாசித்தால் மட்டுமே புரிவது மாதிரி எழுதுவது மட்டுமே கவிதை என்பதும் சரியல்ல. வைரமுத்து மாதிரி ஆக முயற்சிப்பவர்களில் பாதிப்பேர் கூட கண்ணதாசனாக முயற்சிப்பதில்லை.

'இரசனை கெட்ட ஜென்மமாக நான் இருக்கலாம். ஆனால் என் இரசனைக்கு நீங்கள் கீழே இறங்கி வரத் தேவையில்லை' இது வி.கண்ணன் சொல்வதாக இருக்கிறதோ இல்லையோ, நான் மொழிகிறேன்.

(தனி நபர் தாக்குதலாக மேலே கண்ட வாசகங்கள் கருதப்படாது என்பதே எனது எண்ணம். ஏனெனில் அது தான் உண்மை.)

-குப்புசாமி செல்லமுத்து

Vaa.Manikandan said...

குப்ஸ் நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க....
அது பின்வாங்கல் இல்லை...நக்கலு....

தரமான இலக்கியப் பத்திரிக்கையான உயிர்மை இதழே அதனை கவிதை என ஏற்று பிரசுரித்துவிட்ட பின்பு நான் ஏன் பின் வாங்க வேண்டும்....அப்படி அது பிரசுரிக்கப் படாமல் இருந்திருந்தாலும் கூட யார் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளவில்லையென்றாலும் எனக்கு அது கவிதைதான்.

இப்போது திரும்பப் படியுங்கள் என் நக்கல் தென்படுகிறதா என!!! :)

நாமக்கல் சிபி said...

//சிபி,
நல்ல 'மூட்'ல தானே இருக்கீங்க?
//

Romba Imsai Pannittano!?

:-))))

Radha N said...

மீசையில மண்ணு ஒட்டலையா?

(அது நக்கலுன்னா ... இதுக்குபேரும் அதுதாங்க!)

Anonymous said...

நக்கல் ராசா! ஒருத்தன் விமர்சனம் பண்றான்னா அது எதனாலன்னு மொதல்ல யோசி ராசா!!

“நான் திண்டில் அமர துப்பும் எச்சிலிலும், நகரும் கொசுவிலும்
கலங்கிக் கொண்டு சாக்கடை நீரில் மிதக்கிறாள்”

இந்த வாக்கியத்த பிச்சி பிச்சி போட்டுட்டா கவிதை நடையா?

கவிதைன்னா ஒரு நயம் இருக்கணும்!
"ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு! நீ கெணத்துக்கடவு நண்டு"ன்னு சொன்னானே ஒருத்தன், அவன் கவிஞன்!!

Vaa.Manikandan said...

Sibi,
இம்சை எல்லாம் இல்லைன்னு சொல்ல பயமா இருக்கு.

என் அறையில் இருக்கும் ஒரு நண்பர் இதே போலத்தான் கேட்பார்.
ஆமாம் என்று சொன்னால், 'அப்படி சொன்னா மட்டும் விட்ருவோமா'னு சொல்லுவார்.

இல்லை என்று சொன்னால், 'அப்போ இம்சை இல்லயா?' என்று கேட்பார்...

நீங்களும் அவர் மாதிரி இருந்துட்டா? :)

நாகு,
எனக்கு மீசையில எதுக்கு மண் ஒட்டணும்? நான்தான் விழவே இல்லையே? சரி விடுங்க நக்கலாவே இருந்துட்டுப் போகட்டும்.

கண்ணன்,
//நான் திண்டில் அமர துப்பும் எச்சிலிலும், நகரும் கொசுவிலும்
கலங்கிக் கொண்டு சாக்கடை நீரில் மிதக்கிறாள்//

இது நன்றாக இல்லையா? நான் என்ன நீங்க மிதக்கறீங்க என்றா சொன்னேன்?

நிலா மிதக்கும் காட்சி அது.

அது எப்படிக் கலங்கும்?

நான் நாற்றம் தாளாமல் சாக்கடையினுள் துப்பும் எச்சில், கொசுவின் அலைதலில், நீர் கலங்க, நிலாப்பாட்டி அதனில் கலங்கி மிதக்கிறாள்.

இதில் வேறு என்ன தேவை?.

//கவிதைன்னா ஒரு நயம் இருக்கணும்!
"ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு! நீ கெணத்துக்கடவு நண்டு"ன்னு சொன்னானே ஒருத்தன், அவன் கவிஞன்!! //

அது....பட்டாசு கிளப்பறீங்க போங்க!! :)

Muthu said...

mani.

if you feel any comment is sarcastic..pls ignore it..

we know the importance of your writings..

Muthu said...

மணி,

சிலர் தங்களுடைய தாழ்வு மனப்பானமையை இப்படி வெளிப்படுத்துவார்கள்.

மற்றபடி மாற்று கருத்து இருந்தாலும் தரத்தை இலக்கியத்தை ரசிப்பவர்கள் உங்களை தவறாக எண்ண வாய்ப்பில்லை

ஆகவே கிண்டல் பின்னூட்டங்களை ளெியிடுங்கள்.ஆனால் அதற்கு பதில் சொல்ல வேண்டாம்

பொன்ஸ்~~Poorna said...

கவிதை நல்லா இருக்கு மணி. "சுத்தமான பால் நிலவு" மாதிரியான கற்பனைகளை விட்டு, சாக்கடைகளிலும், எச்சிலிலும் நிலவு தெரிவதாகச் சொல்வது நன்றாக இருக்கிறது..

பிம்பங்களை மட்டுமே பார்த்து ஏற்படுத்திக் கொள்ளும் எண்ணங்கள் சரியாக இருப்பதில்லை.. நிலவை நிமிர்ந்து பார்த்தால் அதன் அழகு தெரியும். ஆனால், சாக்கடைக்குள் இருக்கும் பிம்பத்தை மட்டும் பார்த்து கருத்துகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது.

ஒரு வழியாக பிம்பத்தின் உண்மையை நீங்க புரிந்து, வீட்டு வாசலில் அப்பழுக்கற்ற நிலாவாகக் கொண்டு வந்து சேர்த்த போதும், உங்க தம்பி அதை ஒப்புக் கொள்ளாமல், தன் புரிதலை மீண்டும் சாக்கடையிலிருந்து துவங்குகிறான்..

இது தான் இந்தக் கவிதையின் என்னுடைய புரிதல்..

ரொம்ப வெளக்கிட்டேனா? :)..

நிலவைச் சுற்றிய மேக வட்டத்தை வடை சுடும் போது எழும் புகைக்கு ஒப்பிட்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

Vaa.Manikandan said...

முத்து, தங்களின் ஆதரவிற்கு நன்றி.

பொருளுடன் சுட்டிக் காட்டும் போது தவறு எனில் ஏற்றுக் கொள்ளலாம். ஏனோ தானொவென்று தங்களின் 'இலக்கிய முதிர்ச்சி'யைக் காட்ட முயலும் போது சரியான பதில் கொடுத்தால் அடங்கிவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. தங்களின் கருத்தும் நினைவில் நிறுத்தப்பட வேண்டியதுதான்.

நன்றி பொன்ஸ்.

//ரொம்ப வெளக்கிட்டேனா? :).. //

அழகாக விளக்குகிறீர்கள். ரொம்ப என்ன குறைவென்ன? மிகுந்த மகிழ்ச்சி. மீண்டும் நன்றிகள்.

அருண் said...

tamil font illa...mannikkanum!

oru nalla kavidhai karpanai ya thoondanum.....

padicha 5 nimishathukku adhaiyey nenaikka vekkanum.....

summa.....nilavu malarnnu ezhudina podhaadhu....
"In the perspective lies the poet's talent"
enbadhu adiyenoda karuthu!

andha vagayil kavidhaikku 100 marks...
well done mani

கார்திக்வேலு said...

பாரட்டுக்கள், மணி.
வலையில் கவிதை வாசிப்புக்கும் , புத்தக கவிதை வாசிப்புக்கும் உள்ள
வேறுபாடுகளை பற்றி முன்னமே கூறியது போல.
புத்தகம் வாங்குபவர் ,யார் எழுத்தாளர், என்ன புத்தகம் என்று தெரிந்தே
தனது ரசனைக்கு ஏற்றவாறு வாங்குவார் ,அங்கு ஒரு கவிஞனுடைய
வேலை மிக எளிதாக ஆகிவிடுகிறது .

இணைய ஊடகத்தில் வாசிப்பவர் ஆழ, அகலங்கள் மிகப்பெரிய அளவில்
மாறுபடும்,இதை பல கவிதை தொடர்பான பதிவுகளிலும் , பின்னூட்டங்களிலும் கண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

கவிதை எழுத தூண்டிய பின்னனியில் உள்ள கவித்துவம் ,முழுதும் கவிதையைச் சென்றடையவில்லை என்பதே என் ஏண்ணம்.
வார்த்தை ஒழுங்கும் , வடிவ அமைதியும் இயைந்து அமையாது
கவிதையை dilute செய்தது போல் ஆக்கிவிட்டது என்று தோண்றுகிறது.

(KS comments is just a case of mis communication / misunderstanding, I think)

Vaa.Manikandan said...

நன்றி அருண்.

தங்களின் ஆங்கிலப் பதிவினை படித்திருக்கிறேன். தங்களின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்களுக்கும் மதிப்பெண்ணுக்கும் நன்றி. ஆமாம் எத்தனைக்கு 100 மதிப்பெண்? :)(அதிக பட்ச மதிப்பெண்)

தங்களின் கருத்தினை வெளிப்படையாக சொன்னதற்கு நன்றி கார்திக்.

Chellamuthu Kuppusamy said...

மணி, முத்து மற்றும் கார்த்திக் வேலு. சற்று வேகமாக வாசித்ததால், மணி பின் வாங்குவதாக நினைத்து விட்டேன். கார்த்திக் சொன்னது போல புரிதலில் ஏற்பட்ட கோளாறு. அதனால் எழுந்த ஆவேசம்.

இருப்பினும் //வைரமுத்து மாதிரி ஆக முயற்சிப்பவர்களில் பாதிப்பேர் கூட கண்ணதாசனாக முயற்சிப்பதில்லை.// வரிகளை திரும்பப்பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மணி இதனைப் புரிந்து கொள்வார்.

//சிலர் தங்களுடைய தாழ்வு மனப்பானமையை இப்படி வெளிப்படுத்துவார்கள்// முத்து என்னைக் குறிப்பிட்டுச் சொன்னதாக நினைக்கவில்லை. அப்படியே இருந்தாலும், அதுபற்றிய கவலை எனக்கில்லை என்பதை அவர் பாராட்டத்தான் செய்வார்.

I caused all the confusion & regret gentlemen :-)

Vaa.Manikandan said...

திரு.குப்புசாமி எனக்கு உங்களைப் பற்றி நன்கு தெரியும். என்ந்த விதமான விமர்சனம் உங்களிடம் இருந்து வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வேன். என்னுடைய நலம் விரும்பிகளில் நீங்களும் ஒருவர் என்பதும் தெரியும். ஏதோ சாணம் எறிய வேண்டும் என்பதாகவெல்லாம் உங்களின் விமர்சனம் இருக்காது என நன்கு அறிவேன்.

இன்னொன்று. முத்து நிச்சயமாக உங்களைக் குறிப்பிடவில்லை. தயவு செய்து வந்துள்ள பின்னூட்டங்களை திரும்பப் படியுங்கள். அவர் குறிப்பிட்டது யாரை எனத் புரியும். நன்றி.

Muthu said...

குப்பு,

நான் உங்களை சொல்லலை சாமி. (இதுக்கு நீங்க மங்களூர் வந்து என்னை ஒரு அடி அடிச்சிறலாம்):))

வெற்றி said...

அன்பின் மணிகண்டன்,
நிலாவை இளம்பெண்ணாக, காதலியாக பல கவிஞர்கள் வர்ணித்ததைப் படித்திருக்கிறேன். நீங்கள் மிகவும் வேறுபட்ட கோணத்தில் உங்கள் கற்பனையைச் சிறகடிக்கவிட்டு , நிலாவைப் பாட்டியாக வர்ணித்து மிகவும் அருமையான கவி ஒன்றைப் புனைந்துள்ளீர்கள்.

//கூனி
விழுந்து இடுப்பை முறித்துக் கொள்வாள்.

நான் திண்டில் அமர,
சாக்கடை நீரில் மிதக்கிறாள்.
துப்பும் எச்சிலிலும், நகரும் கொசுவிலும்
கலங்கிக் கொண்டு.//

நல்ல வித்தியாசமான கற்பனை.

நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

நன்றி.

அன்புடன்
வெற்றி

Chellamuthu Kuppusamy said...

//நான் உங்களை சொல்லலை சாமி//

Thatz what I also meant Muthu. //முத்து என்னைக் குறிப்பிட்டுச் சொன்னதாக நினைக்கவில்லை.//
:-)