May 18, 2006

செம்பருத்தி உருண்டுவிழுகிறது உன் யோனியில்

கல்யாண்ஜியின் இந்த வரிகள் ஈர்ப்பதற்காக மட்டுமில்லை.

(1)
ட போல் மடங்கி கம்பளிப் பூச்சி
மூன்றாம் படியில் ஏறக்கண்டு
புறப்பட்டக் காலை ஒன்றாய் சேர்த்து
உற்றுப்பார்த்தேன்

அழகே நகரும்
அற்புதம் வியந்து
செருப்பைப் போட்டேன்

இரண்டாம் படியில் ஏறியபொழுது
நசுங்கும்படியாய்
வசமாய் மிதித்து
நடந்தேன் வெளியே
ஒன்றாம் படியோ
நிகழ்ந்ததைக் கண்டு
திடுக்கிட்டிருக்க.


எல்லோரும் ஏதாவது ஒரு கணத்தில் மிக கொடூரமானவர்களாக செயல் பட்டிருப்போம். மனிதத் தன்மை மீறப்படும் போது அதன் கோரத்தை இளப்பமானவர்களிடம் காண்பித்திருப்போம்.

இந்தக் கவிதை நமது மிருகத் தனமையை நினைவுபடுத்துவதாக அமைகிறது.

'சேடிஸ' மனப்பான்மையைக் கவிதையில் உணரமுடிகிறது என்னால். எந்தக் கொடூரத்திலும் மெல்லிய சந்தோஷத்தை உணரமுடியும். அப்படி ஒரு நிலையில் மட்டுமே அந்தக் காரியத்தை செய்ய முனைவு வரும்.

ஓனாணை அடித்து, முள் குத்தி, சிறுநீர் கழித்து துரத்துவதிலிருந்து, மனிதனைக் கொலை செய்வது வரை.

அதனையேதான் கவிதைசொல்லி ஒரு கம்பளியிடம் செய்திருக்கிறார்.

நினைவுகளைக் கீறிவிடும் கவிதை இது. ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவு-ஆனால் ஒரே கவிதை கொணர்கிறது.

(2)
கைப்பிள்ளையுடன் பேசிக்கொண்டே
கோலம் போடுகிறாள் அந்தப் பெண்.
நிபந்தனையற்ற அன்பில்
நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது
வாசல்.
குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லை.
கோலம் பார்க்கின்
துக்கம் இல்லை.


இது சொல்லவரும் கருத்தை விட, ஒரு காட்சியினைக் எளிதாக கொண்டு வந்துவிடுகிறது. எந்த வித பூசி மொழுகலும் வார்த்தை விளையாட்டுக்களுமின்றி. காட்சிகளை கவிதையில் கொண்டுவர வேண்டும் என்பதனை மிகத் தீவிரமாக ஆதரிக்கும் எனக்கு இந்தக் கவிதை பிடிக்கத் தான் செய்யும்.

காட்சியின் பின் புலத்தில் வேறு சிந்தனைகளும் முளை விட வேண்டும். அது கவிதையின் அழகு. இந்தக் கவிதையில் எனக்கு,மறைந்து கொண்டிருக்கும் ஒரு வழக்கம், அம்மா கோலம் போடும் போது பக்கத்து வீட்டு சித்தியின் கோலத்தை ஒப்பிடுவது என பலதும் ஞாபகத்திற்கு வருகிறது.

(3)
பலிச்சோறு படைப்பது போலிருக்கிறது
ஆவி பறக்கிற உன் காமம்.
பீரிட்டுக்கொண்டிருக்கிருக்கிற
வக்கிரம் அனைத்தையும்
உன் வெதுவெதுப்பான மார்பு கரைத்துவிடுகிறது.
காணாமல்போன சீப்பைமுன் வைத்து
நிலைக் கண்ணாடி உடைக்கிற என்கோபத்தை
உறிஞ்சிக்கொள்கிறது உன் ஆழ்ந்த முகம்.
மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்கு
நீர் வார்க்கிறது உன் முத்தம்.
விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலை
என் வாயோரங்களிலிருந்து துடைத்துக்
கொண்டிருக்கிறது உன் வெளிறிய விரல்கள்.
எஞ்சிய என் கருத்த கசடுகளின்
ரகசிய அம்பு எய்யப்படக்
காத்திருக்கிறது உன் உந்திச்சுழி.
குருவையும் கடவுளையும் பிரீதி செய்ததில்
செம்பருத்தி உருண்டுவிழுகிறது உன் யோனியில்.
அப்பழுக்கற்றதாக இருக்கிறதாகச்
சொல்கிறார்கள்.
வீட்டுக்கு வெளியில்
நான் விடுகின்ற மூச்சு.


மனைவி, கணவனின் அனைத்து குற்றங்களையும் பொறுத்துக் கொள்கிறாள். ஆணாதிக்கம் மிகுத்து ஒரு சீப்பு காணவில்லை என்பதற்காக கூட கண்ணாடியை உடைக்கிறான். அத்தனை கோபத்தையும் உறிஞ்சி எடுக்கும் முககம் அவளுடையது.

விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலை...
எல்லோரும் அமிலத்தை சுமந்து கொண்டுதானே திரிகிறோம்? வார்த்தைகளில் நெருப்பினை பற்ற வைத்துக் கொண்டு.

அத்தனைக்கும் அடங்கிப் போக வேண்டும் அவள். வஞ்சகம் நெஞ்சு முழுவதுமாக விரவிக் கிடக்கிறது அவனுக்கு.

ஊருக்குள் நல்ல பிள்ளை, உத்தமன்.

கவிதையை இன்னொரு முறை படியுங்கள்.சாதரணமாக நம் சமூகத்தில் உலவும் முகம் வந்துவிடுகிறது.நம்மையே கூட கொண்டு வரக்கூடும்.

40 எதிர் சப்தங்கள்:

பட்டணத்து ராசா said...

மிண்டும் கவிதைகளின் அறிமுகத்துக்கு நன்றி.

ரவி said...

கவிதை சரி...இது மாதிரி மொக்க தலைப்பு தேவையா ? பெண்கள் முகம் சுளிப்பது போல..

Vaa.Manikandan said...

செந்தழல் ரவி,
நான் யோசித்துப் பார்த்தேன். என் நண்பர் ஒருவரிடமும் ஆலோசனை கேட்டேன். அவரும் தங்களின் கருத்தை வலியுறுத்தின்னர்.

ஆனால் இதில் பெண்கள் முகம் சுளிப்பார்களா எனத் தெரியாது. அவர்கள் முகம் சுளிப்பார்கள் என சில ஆண்கள் சொல்லக் கூடும். பார்க்கலாம். ஏதெனும் ஒரு எதிர்ப்புப் பின்னூட்டம் பெண்களிடம் இருந்து வருகிறதா என. அப்படி வரும்பட்சத்தில் பெண்கள் முகம் சுளிக்கிறார்கள் என்று சொல்லலாம். தலைப்பையும் மாற்றிவிடலாம்.

இது கல்யாண்ஜியின் கவிதை வரி. நான் ஒன்றும் மெனக்கெட்டு யோசிக்கவில்லை.

'முலைகள்' எனப் புத்தகம் வெளியிட்ட குட்டிரேவதியும் பெண்தான், 'சவரம் செய்யப் படாத என் நிர்வாணம்' என எழுதிய சுகிர்த ராணியும் பெண்தான்.

பெண்களின் உறுப்புகளை பற்றி வெளிப்படையாக எழுதுவது ஒன்றும் பண்பாட்டுச் சீரழிவாகத் தெரியவில்லை. ஒரு பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு, அவளது யோனியில் செம்பருத்தி உருள்கிறது என்பதனைத் தப்பாக எடுக்கலாம். பொதுப் படையாக எழுதும் போது தவறென எனக்குத் தோன்ற வில்லை.

நாம் நவீனத்துவம், பின் நவீனத்துவம் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன்.

கார்திக்வேலு said...

Poems 1 and 3 are good selections (Is there a heading for this poems).
My reading of the poem as follows:-

First poem it more about the unpredictability of human mind and what lies in our subconscious and unconscious part of the mind which continiously influences and dominates our conscious decisions.

அழகை ரசிக்கும் மனமும் ,நசுக்கும் மனமும் ஒன்றே , அல்லது ஒன்றின் பல அடுக்குகளே.திடுக்கிட்டது ஒன்றாம் படி மட்டுமல்ல மிதித்தவரும் தான்

இந்த கவிதை நம் அளுமையில் உள்ள பிளவையே முன்னிறுத்துகிறது.


The third one is about the completly complementing relation between a man and women and the emotional depth human beings are capable of evoking.

அதிகம் சேர்ந்து அமையாத வார்தைகளை அருகில் நிறுத்தி வார்தைக்கு வெளியிலான ஒரு அர்த்தத்தை, அது தரும் உணர்வைப் படைத்திருக்கிறார்

"செம்பருத்தி" "யோனி" "உருளுதல்" ..இவை ஒன்றொடொன்று இயல்பாய் அமையாத சொற்கள் , இங்கு இவை மூன்றும் சேர்ந்து
ஒரு காமம் மறைந்த , சரணடையும் நிகழ்வையே சுட்டுகின்றன.

Ramya Nageswaran said...

The choice of the title is debatable only if you had chosen it for senstationalism/quick publicity.

குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லை.
கோலம் பார்க்கின்
துக்கம் இல்லை.

These lines are nice too!

If the reason behind is the choice is because only this line struck you as interesting, then I think that is fine.

In any case, it is your blog and your choice. I just thought as a woman, I will share my views.

Sorry for responding in English. Writing from work.

Vaa.Manikandan said...

நன்றி கார்த்திக்வேலு. தொடர்ந்து உற்சாகமூட்டுகிறீர்கள். உங்களின் கவிதையை புரிந்து கொள்ளும் திறனும், அதனை விளக்கும் முறையும் மிகுந்த மகிழ்ச்சியூட்டுவதாக உள்ளது.

பட்டணம், வேண்டுமென்றே எழுத்துப் பிழை உண்டாக்குறீர்களா? நன்றி.

Sridharan உங்களுக்கும் நன்றிகள்.

நன்றி ரம்யா. அந்த வரிகள் அதிர்ச்சியூட்டக் கூடியவை என்பதனாலேயே தேர்ந்தெடுத்தேன்.இனி அந்த வரிகள் பலருக்கும் நினைவில் இருக்கும் அல்லவா? கல்யாண்ஜியுடன் சேர்த்து.

பட்டணத்து ராசா said...

//பட்டணம், வேண்டுமென்றே எழுத்துப் பிழை உண்டாக்குறீர்களா?//
:-)

சிங். செயகுமார். said...

நண்பரே இங்க ஒருத்தரு ஊரிலிருந்து சிறப்பு விருந்தினரா வந்தவர் கல்யாண்ஜி கல்யாண்ஜின்னு புலம்பிட்டு இருந்தாரு. நானும் என்னமோ அதிசய கவி போல நினைத்தேன். இப்போ புரியுது என்னான்னு. அவரு கிடக்கிராரு வளரும் சமுதாயம் நாமாவது நல்லனவற்றை எடுத்து போடாலாமே!
இனியாவதுநண்பரே இங்க ஒருத்தரு ஊரிலிருந்து சிறப்பு விருந்தினரா வந்தவர் கல்யாண்ஜி கல்யாண்ஜின்னு புலம்பிட்டு இருந்தாரு. நானும் என்னமோ அதிசய கவி போல நினைத்தேன். இப்போ புரியுது என்னான்னு. அவரு கிடக்கிராரு வளரும் சமுதாயம் நாமாவது நல்லனவற்றை எடுத்து போடாலாமே!
இனி இந்த வேலையை விட்டுவிட்டு மனதிற்கு இதமாக நாலு வரி பதியுங்களேன்!

Chellamuthu Kuppusamy said...

//கல்யாண்ஜியின் இந்த வரிகள் ஈர்ப்பதற்காக மட்டுமில்லை.//
'ஈர்ப்பதற்காக இல்லவே இல்லை' எனப் பொய் சொல்லாத துணிச்சலுக்குப் பாராட்டு.

"2 ரூபாயில் அரிசி சாத்தியம்" என்ற (2 ரூபாய்த் திட்டம் தேவையானது, சமுதாய முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது என்றெல்லாம் புளுகாத) ப.சிதம்பரத்தின் வாசகத்தைப் போல இதுவும் ஒரு politically correct statement.

முழைமையாகப் படித்த பின்னர், உண்மையிலேயே 'ஈர்ப்பதற்கு மட்டுமில்லை' என்பதைச் சற்று உணரமுடியாமலுமில்லை.

நல்ல கவிதைகளை அடையாளம் காட்டும் உமது செயல் தொடரட்டும்.

-குப்புசாமி செல்லமுத்து

Vaa.Manikandan said...

நன்றி குப்புசாமி.

சிங்.ஜெயகுமார், நீங்கள் எதனைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று தெரியவில்லை. தலைப்பை மட்டும் வைத்து பின்னூட்டம் எழுதி இருப்பதாக உணர்கிறேன். எதோ சொல்லிவிட்டு போகிறீர்.

மனதிற்கு இதமளிக்கும் வரிகள் என்றால்?
புரியவில்லை. காதலை போட்டு 'கைமா' பண்ணிய கவிதை வேண்டுமா? தினபத்திரிக்கைகளின் வார இதழ்களின் பின்பக்க கவிதை வேண்டுமா?

எது? உண்மையைச் சொல்வாதானால் வேதனை உண்டாக்குகிறீர்.

சிங். செயகுமார். said...

நல்லதொரு முயற்சி நண்பரே !இதே போல நிறைய கவிதைகள் உங்களிடமிருந்து எதிர் பார்க்கின்றேன் .வாழ்த்துக்கள்!

கார்திக்வேலு said...

செயகுமார்

இப்படியும் கவிதை எழுதலாமா / எழுதுகிறார்களா / எழுதவேண்டுமா , இதுவெல்லாம் கவிதையா என்ற குழப்பமும் , கோபமும் எக்கரையில் இருப்பவர்க்கும் தோன்றக்கூடியதே.

கண்ணுக்கு எட்டிய தூரமே உலகம்
காலுக்கு எட்டிய தூரமே பயணம்

கவிதை ஒரு நெருக்கடியில் தோன்றி இன்னொரு நெருக்கடியை ( வாசகனை)சேர்ந்தடைகிறது. நெருக்கடியின் விதமும் தளமும் கவிதையின் தன்மையில் பிரதிபலிக்கும்.

நீங்கள் எப்போதும் போகும் பாதையை
விடுத்து ஒரு சந்தில் நுழைகையில்

நீங்கள் எப்பொதும் வணங்கும் சித்தி விநாயகர்
டீ ஆத்திக் கொண்டிருக்கலாம் :-)

Vaa.Manikandan said...

ஜெய குமார், 'டக்'னு மாறிட்டீங்க?

கார்த்திக் வேலுவின் பதில் உங்களுக்கு திருப்தியளிக்கும் என நம்புகிறேன்.

Anonymous said...

செம்பருத்தி உருண்டு விழும் யோனி என்ற வரி என்ன சொல்ல வருகிறதென்று புரியவில்லை. இதுதான் பின் நவீனத்துவமோ? யாராவது விளக்க முடியுமா? (கவிதையை விளக்கவெல்லாம் முடியாது என்றால் என் பதில்: "விளக்க முடியாததெல்லாம் கவிதையாகி விடாது என்பதுதான்")

வால்டர் said...

சல்மா, குட்டிரேவதி, ரமேஷ்பிரேம் வரிசையில் நல்ல அழகான காமப்பாடல்! வாழ்த்துகள்.

ரவி said...

மீண்டும் மீண்டும் உமது தலைப்பை பார்க்கையில் எரிச்சல் தான் வருகிறது..

சும்மா Controversy உருவாக்க வேண்டும் என்று இந்த மாதிரி உருப்படாத செயல்களில் தயவிட்டு ஈடுபடவேண்டாம்...

அதுவும் சொந்த சரக்கு கிடையாது...

எங்கே கொஞ்சம் சல்மா கவிதைகளையும் வெளியிடுங்களேன்...

உங்க வீட்டு பெண்கள் இணையத்தினை உபயோகப்படுத்துவதானால் இப்படி ஒரு வேண்டாத காரியத்தினை செய்வீரா..

முதலில் தலைப்பினை மாற்றவும்..பதிவை நீக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை..

நந்தன் | Nandhan said...

//குருவையும் கடவுளையும்... //
//செம்பருத்தி உருண்டு விழும்.... //

விளக்குங்களேன். கர்பம் தரிப்பதா?

நந்தன் | Nandhan said...

ravi, எனக்கும் வெறும் ஸ்டண்ட் என்றிக்குமேயானால் இந்த தலைப்பு பிடிக்கவில்லை. ஆனால் மாற்ற சொல்லமாட்டேன். அது அவர் விருப்பம், உரிமை.

பிடிக்கவில்லை, ஏன் பிடிக்கவில்லை என சொல்வதோடு முடிகிறது விமர்சனம் என நினைக்கிறேன்.

Vaa.Manikandan said...

நந்தா, அனானி

எனக்கும் அந்த வரிகளில் சிக்கல் இருக்கிறது. இந்த வரிகள் குறித்து கவிஞர் மனுஷ்ய புத்திரனின் விளக்கத்தினை தருவது பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறேன்.

'இதில் காமமும், இறைத்தனமையும் இணைக்கப் பட்டிருக்கிறது. மனிவியோடு உறவு கொள்வதனை ஒரு தியானம் போல கருதுகிறான், கவிதைசொல்லி. செம்பருத்தி விழுவதனை Physica; ஆக பார்க்காதீர்கள். இறைவனை வணங்கும் போது ஒரு மலர் விழுவது போல- தியான நிலை போல கருதுகிறான், கலவியின் உச்சத்தை'

இது அவரின் புரிதல். எனக்கு அனுபவம் அல்லது முதிர்ச்சியின்மை காரணமாக, அவரின் விளக்கத்தோடு நிற்க வேண்டியதாகிவிட்டது. Beyond that செல்ல முடியவில்லை.இந்த வரிகளுக்கு விளக்கம் தரும் போது மற்றவர்களின் சிந்தனைகளும் தடுக்கப் படலாம் என்று தவிர்த்திருந்தேன்.

எனினும் உங்களின் புரிதல்களைத் தாருங்கள்.

Vaa.Manikandan said...

ரவி,

உமக்கு எரிச்சல் உண்டாக்கவோ, எரிசலுக்கு நீர் ஊற்றிவிடவோ, நான் ஒன்றும் வலைப்பதிவில் எழுதி வருவதில்லை.

நான் உருப்படுவது,ஒழிந்து போவது குறித்தான தங்களின் அக்கறை என்னை புளாங்கிதம் அடையச் செய்கிறது. நான் உருப்படும் வழியினை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு எனக்கு 'கொஞ்சம்' அறிவு இருக்கிறது என்பதனை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பிட்ட கவிஞரின் கவிதையை வெளியிடு என உத்தரவிடுகிறீர். மிக்க மகிழ்ச்சி. பொறுத்துக் கொள்ளுங்கள் அய்யா. உங்களிடம் கூலி வாங்கி நான் எழுதுவதில்லை. 'அதை எழுது இதை எழுது' என்று எக்காளமிடும் உரிமையினை யார் கொடுத்தார்கள் என்றும் தெரியவில்லை.

விருப்பமிருந்தால், பிடித்திருந்தால் யாரின் கவிதையையும் பதிவிலுடுவேன்.

உன் அம்மா, உன் தங்கை, உன் அக்கா, உன் மனைவி....இதே பல்லவியினை எத்தனை நாளைக்கு கேட்பது...கேட்பதற்கு யாருமே இல்லையா?

கவிதையைப் புரிய முயலுங்கள். முடிய வில்லையா குறைந்த பட்சம் கூச்சலையாவது நிறுத்தலாம்.

மற்றபடி நான் எழுதியதை மற்றவரின் கவிதை என்று வெளிப்படையாகத் தெரிவித்துதான் எழுதுகிறேன்.

நல்ல இலக்கியம் படித்து மீள வாழ்த்துக்கள்.

Anonymous said...

Excellent explanation by Mr.Manushya puththiran.

Chellamuthu Kuppusamy said...

கீழ்த்தரமான தலைப்பு என வாதிடும் நபர்களுக்கு!

தலைப்பு சுண்டி இழுக்குமாறு இருந்தால் தான் பரபரப்பு ஏற்படும் என மணிகண்டன் எண்ணியிருக்கக் கூடும். அதை நாம் அனைவரும் புரிந்துகொள்ளத்தான் செய்கிறோம். அது ஒரு புறம் இருக்கட்டும்.

முழுதும் படித்து விட்டு முகம் சுழிப்பவர்கள், எரிச்சல் அடைபவர்கள் எல்லாம் தலைப்பைக் கண்டவுடனே இதைப் படிப்பதைத் தவிர்த்திருக்கலாமே? எதோ மேட்டர் இருக்குங்கறதால தானே வந்து படிச்சீங்க? அதன் பின்னென்ன? பெண் விளம்பரத்தில் வந்தால் மட்டுமே சவரக் களிம்பு வாங்குகிறோம். அது போலத் தானா இது?

//உங்களிடம் கூலி வாங்கி நான் எழுதுவதில்லை. 'அதை எழுது இதை எழுது' என்று எக்காளமிடும் உரிமையினை யார் கொடுத்தார்கள் என்றும் தெரியவில்லை. //

என்ன கோபம்? கூலி என்பது இங்கே கரன்சி நோட்டுகள் மட்டும் தானா? இல்லவே இல்லை. உமது பதிவிலே கிடைக்கும் மறுமொழிகள், அவை தொடக்கி வைக்கும் விவாதங்கள், அதன் மூலம் கிடைக்கப் போகும் விளம்பரம் எல்லாமே கூலி தான். Belive me I am not trying to judge you; but it is human nature. இருந்தாலும் படைப்பாளியை அல்லது பிரிதொரு படைப்பாளியின் சக படைப்பை விமர்சிப்பபனை (இந்தப் பதிவில் மணிகண்டன் செய்வது போல) விமர்சிக்க யாருக்கும் உரிமையுண்டு. விமர்சனத்தைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் கண்டிப்பாக அவனுக்கு இருக்கும். ஏனென்றால் அவனும் அதைத்தானே செய்கிறான்?

//ஏதெனும் ஒரு எதிர்ப்புப் பின்னூட்டம் பெண்களிடம் இருந்து வருகிறதா என. அப்படி வரும்பட்சத்தில் பெண்கள் முகம் சுளிக்கிறார்கள் என்று சொல்லலாம். தலைப்பையும் மாற்றிவிடலாம்.//

இதை விட அவனிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?

-குப்புசாமி செல்லமுத்து

கார்திக்வேலு said...

ரவி
நீங்கள் இட்ட பின்னூட்டத்தை நீங்களே மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.

நந்தா,அனானி
உள்ளபடி இந்தக் கவிதையில் தங்கள் புரிதல்/உணர்தல் என்ன என்று அறிய ஆவலாய் உள்ளேன்.கவிதையின் வேறு சாத்தியங்களையும்,ஒரு கவிதையின் வலு அல்லது வலுவின்மை என்ன என்று பிரித்தறிய இது உதவும்

Anonymous said...

மனுஷ்ய புத்திரனின் நல்ல விளக்கம்தான். ஆனால் படிப்பவர் மனதில் வெவ்வேறு படிமங்களை எழுப்பவல்ல வரிகள். ஆனால் முலையென்று எழுதாமல் மார்பு என்றும் மற்றும் கருத்த கசடு, ரகசிய அம்பு என்ற வகையிலும் சொல்லிக்கொண்டு வந்து விட்டு சட்டென யோனி எனச் சொல்வது அதிர்ச்சி மதிப்பிற்காகவே என எண்ணத் தோன்றுகிறது.

Vaa.Manikandan said...

குப்புசாமி அண்ணா, இது கோபமா என்று சொல்லத் தெரியவில்லை. இருந்தாலும் ஒரு 'கடுகடுப்பு' இருக்கத்தான் செய்தது. தங்களின் கருத்துக்களை முழுவதுமாக எற்றுக் கொள்கிறேன்.

கார்த்திவேலு, நானும் அவர்களின் கருத்தினை அறிய ஆவலாக இருக்கிறேன்.

Anony,மார்பில் சாய்ந்து கொள்வதும் கூட, வக்கிரம் அடங்குவதற்கான வழியாகப் படும்போது, 'முலை' என்பது தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

Anonymous said...

மற்ற இடங்களில் மறை பொருளாகச் சொன்னவர், இடுப்புக்குக் கீழே வந்ததும் அடக்க முடியாமல் நேரடி வார்த்தையில் காமத்தை ஸ்கலிதம் செய்ததையே சொல்லுகிறேன். மற்றொன்று அறியவும் ஆசை (இது போன்ற கவிதைகளுடன் அதிகம் பரிச்சயமில்லாதவன் என்ற disclaimer-உடன்) ஆண் உறுப்புகளை refer செய்தும் இப்படிப்பட்ட கவிதைகள் எழுதப்படுகின்றனவா... அல்லது வாரப்பத்திரிகை நடுப்பக்கம் போல பெண்ணுறுப்புகளுக்கு மட்டும்தான் ஏகபோகமா?

நந்தன் | Nandhan said...

எல்லாரும் சொல்வது தான், எழுதியவனின் உணர்ச்சி அவனுக்கு மட்டுமே. முழுக்க முழுக்க loss lessஆக ஒரு கலைப் படைப்பு உணர்ச்சிகளை வாசகனுக்கு கொண்டு செல்ல முடியாது.

சில நேரங்களில், வார்த்தை வந்து விழுந்துவிடும், எந்தவொரு Background அர்த்தமும் இன்றி, சில நேரம் வார்த்தைகள் சில எண்ணங்களுக்காக தேர்வு செய்யபட்டிருக்கும். வாசகனாய் நாம் இவ்வார்தைகளை அடையாளம் காண்பதே அனுபவம்.

மனுஷ்யபுத்திரன் சொன்னது போல செம்பருத்தி,முதல் வகையை சார்ந்தது என என்னுகிறேன். ஏன் செம்பருத்தி என்ற கேள்விக்கு எனக்கு பதில் இல்லை என்பதால் இருக்கலாம்

மார்பு, வெளிறிய என்ற மென்மையான பதங்களை அவளுக்கும்,
அமிலம், பலிசோறு போன்ற கடுமையான பதங்ககளை அவனுக்கும் ஏற்றி சொல்லியிருப்பது இரண்டாம் வகை சொற்களை சார்ந்ததாக இருக்கலாம்

அவனது கருப்பு பக்கத்திற்கு வடிகாலாய் அவள் இருக்கிறாள். எல்லா மனிதனுக்கும் இருப்பது போல. தனது உள்மன வக்கிரங்களையெல்லாம் அவளின் நதியில் கழுவி விட்டு தன்னை புனிதபடுத்தி கொள்கிறான்.
உருண்டுவிழும் செம்பருத்தி, அந்த பாவம் களையப்பட்டத்தை சொல்கிறது என நினைக்கிறேன்.

//குருவும் கடவுளும்// மனுஷ்யபுத்திரனின் விளக்கத்தோடு நிற்க வேண்டியது தான்...என்னிடம் ஏதுமில்லை.

எனக்கு ஒன்று சொல்லுங்கள், அந்த இருவரிகள் இல்லாமல் பொருள் எப்படி மாறுகிறது எனப் பாருங்கள். பாவம் களையப் பட்டதுக்கான அறிகுறியே இல்லை.

மென் பதங்களை உயயோகப் படுத்தி வந்து திடிரென யோனி என்று நின்றது அந்த பாவம் மாற்றி வைக்கபட்டதாலா?

இதில் எனக்கு அவனின் வடிகால் தான் தெரிகிறது. ஆணாதிக்கம் இல்லை. அவளே வலிந்து செய்வதாய் தானே இருக்கிறது மணி, இவன் கட்டாயபடுத்தவதால் இல்லையே. அப்படியொரு வடிகாலாய் இருந்து அவனை சமூகத்திற்கு நல்லவனாய் தருவதை அவள் விரும்பிகிறாள் என்றே படுகிறது.

Vaa.Manikandan said...

மிக அற்புதமாக உள்வாங்கியிருகிறீர்கள் நந்தா. மிகுந்த மன நிறைவைத் தருகிறது உங்களின் விளக்கம். கவிதையின் பரிமாணங்களின் பிரமாண்டம் தெளிவடைய ஆரம்பிக்கிறது. நன்றி.

அனானி,
நந்தா வின் விளக்கம் தங்களின் கேள்விக்கு பதிலாக அமையும் என நம்புகிறேன்.

ஆணின் உடலியல் குறித்தான கவிதைகளும் நிறைய இருக்கின்றன. இனிவரும் கட்டுரைகளில் எழுதுகிறேன்.

கார்திக்வேலு said...

குப்புசாமி சொன்னது போலே ..இது விரிவான விவாதத்திற்கு இட்டுச் செல்லும் என்பதே கவிதை வரும்பும் அனைவரின் அவா. விதண்டாவாத்ததிற்கு என்றே பல பதிவுகள் உள்ளன.

அதே சமயம் ஒரு கவிதையின் தரத்திற்கும் அது புரிகிறதா இல்லையா என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.படிகட்டி பன்ச் லைன் வைப்பது மட்டும் கவிதை இல்லை மீண்டும் நான் முன்பு கூறியது போல கவிதை எல்லோருக்கும் புரிய வேண்டும் என்ற அவசியமோ தேவையோ கிடையாது.
உரைநடை மற்றும் கவிதை உருவங்களில் உள்ள சாத்தியக்கூறுகளின் வித்தியாசத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதே சமயம் ஒரு கவிதை புரியவில்லை அல்லது உணர முடியவில்லை என்பது ஒருவரின் இலக்கிய ரசனை மீதான மதிப்பீடோ அல்லது கவிதையின் முழுமையற்ற தன்மையைய் சுட்டுவதாகவோ ஆகாது.சொல்லுக்கும் பொருளுக்குமான சிக்கலான உறவை புரிந்துகொள்ளுதல் ,கவிதையை அனுக மிகவும் உதவும்.

அனானி
(dont know if u are the same person on various persons,you are in a unique position to provide gender unbiased views :-) )

கவிதைக்குக் கோனார் நோட்ஸ் போட முடியாது என்றாலும்,since we have come so far கவிதையை இன்னும் கூட சற்று நெருங்கிப் பார்கலாம்,அதன் சாதியக்கூறுகளை குறுக்காமல்.

செம்பருத்தி ..என்பது பொதுவாக பூசையில் கடவுளுக்குச் சாற்றப்படும் மலர், வாசனை வசீகரமற்றது

உருளுதல் ...என்பது passive movement/non directed, பூ எப்போது நம் மேலே உருளும் ? தலையில் தூவப்படும்போதோ , அல்லது காற்றில் தன்னிச்சையாய் விழும்போதோ.

"உருண்டு விழுவதற்கும்" காமம் சார்ந்த எந்த ஒரு நிகழ்வுக்கும் ஏதேனும் சம்மந்தம் உள்ளதா ?

யோனி ...என்பதை காமம் சார்ந்த ஒரு குறியீடாகக் கொள்ளலாம் (இதற்கு வேறு பல குறியீடுகள் இருந்தாலும்)

இது கவிதையின் ஒரு வரிதான் , இந்த வரிக்கு நம்மை இட்டுச் செல்லும் மற்ற வரிகளைப் பாருங்கள்.இங்கு அன்பு அல்லது பிரியம் என்ற நிகழ்வு எவ்வளவு மெலிதாய் வரிகளினூடே படர்ந்து உள்ளது என்று.

அந்தக் காமத்தின் வேகத்தை, உக்கிரத்தை ,அதோடு எழும் சிறுமைகளை ,வக்கிரங்களை பிரியம் எவ்வளவு எளிதாய் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது .இப்படி பிரியத்தினூடெ புகுந்து வரும் காமம் இறுதியில் ஒரு செம்பருத்திப் பூவைப் போல உன்னை வந்தடைகிறது.

இப்படி அன்பினூடே அனைத்தையும் கரைத்து விட்டபின் ,மூச்சுக் காற்று கூட அப்பழுக்கற்றதாய் இருப்பதில் என்ன ஆச்சரியம் :-)


இதே வரிகளை "மல்லிகைப்பூ வெடித்துச் சிதறும் உன் யோனி" என்று வருகிறது என்று வையுங்கள்
வெகு சுலபமாக அது சொல்ல வரும் காமத்தை நாம் இனம் காணலாம்.

"உருப்பு" என்ற படிமத்திலேயெ நின்று விட்டால் கவிதைக்குள் நாம் எப்போது புகுவது.அதை கடப்பவர்கள் கடந்து வாருங்கள் ,தாண்டுபவர் தாண்டி வாருங்கள்,சுற்றி வருபவர் சுற்றி வாருங்கள்.

வாசலிலேயே நின்னா எப்படி :-)

நியோ / neo said...

ஆண்குறி, மயிர் என்பது போலவெல்லாம் சொற்கள் ஏற்கெனவே தலைப்புகளில் இடம்பெற்றனவே? இப்போது யோனி என்பதற்கு மட்டும் ஏன் இத்தனை விமர்சனம்? கவிதையை அறிமுகம் செய்துவைக்கிற மணிகண்டனின் ஆர்வத்தை பார்க்காமல் - அதன் காரணமாக அவர் வைத்த தலைப்பை மட்டுமே இத்தனை தூரம் விமர்சிப்பது நியாயமில்லை.

கார்த்திக்வேலு சொல்வதை ஏற்கிறேன் - மற்றபடி பூடகமான 'வேறு' உள்நோக்கங்கள் இல்லாத இந்த (கவிதை அறிமுக) பதிவை வரவேற்கிறென் :)

Anonymous said...

very good explanation by nandhaa indeed.

"மிக அற்புதமாக உள்வாங்கியிருகிறீர்கள் நந்தா. மிகுந்த மன நிறைவைத் தருகிறது உங்களின் விளக்கம். கவிதையின் பரிமாணங்களின் பிரமாண்டம் தெளிவடைய ஆரம்பிக்கிறது. நன்றி".

I agree.

"ஆணின் உடலியல் குறித்தான கவிதைகளும் நிறைய இருக்கின்றன. இனிவரும் கட்டுரைகளில் எழுதுகிறேன்".

I will be eagerly expecting :)


"அனானி
(dont know if u are the same person on various persons,you are in a unique position to provide gender unbiased views :-) )"

Yes indeed.

By

The same anony.

Vaa.Manikandan said...

கார்திக்வேலு,
இந்த விவாதங்களில் தங்களின் பங்களிப்பு மிகுந்த உற்சாகமூட்டும் செயல். அற்புதமான செயல்பாடு. உங்களைப் போன்றவர்களின் நுண்ணிய கவனம், எனது பார்வையை இன்னும் கூர்படுத்தும். ஏதோ ஒரு கட்டுரை எனப் பதித்து தங்களைப் போன்றோரின் ஆர்வங்களைக் குலைக்க விரும்பவில்லை. அது ஒரு துரோகம் கூட. நன்றி கார்த்திக்.

நியோ,
தங்களின் பிரபலமான-பரபரப்பான பின்னூட்டங்கள் குறித்து கேள்விப் பட்டிருக்கிறேன்.
ஆதரவிற்கு நன்றிகள்.

நன்றி அனானி. தொடரலாம். இயலுமெனில் தங்களின் பெயருடனே எழுதுங்கள்(இது வற்புறுத்தல் இல்லை. வேண்டுகோள்) :-).

Anonymous said...

அடுத்த 'ஜிகிடி' எப்போ?

Vaa.Manikandan said...

ஆகா....ஒரு மார்க்கமாத்தான் இருக்காங்கா!

கார்திக்வேலு said...

நந்தா /அனானி / நியோ /குப்புசாமி...
தங்கள் கருத்துக்களை, புரிதல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

சில எதிர்பாராத வார்த்தை அமைப்பும் உடல்மொழி பயன்பாடும் நம்மை திசை திருப்பி இருந்தாலும் பெரும்பாலும் கவிதை பற்றி கருத்து உரைத்தவர்களின் கவிதையை அனுகிய முறை மிகுந்த நம்பிக்கை தருவதாகவே உள்ளது.

மணி கூறியது போல் இது கவிதைக்குரிய லட்சணங்கள் சில அமைந்து வந்த ஒரு நல்ல கவிதை அவ்வளவே.

தாங்கள் தொடர்ந்து தங்கள் புரிதல்களையும் , உள்ளீடுகளையும் அளித்து வருவீர்களென நம்புகிறேன் .ஓருவருடைய புரிதல் அடுத்தவருக்கு inspiration ஆக இருக்க முடியும்

ஒருவருக்கு பிடிபடாத சூட்சமம் அனுபவம் அடுத்தவருக்கு ஏளிதில் அமையலாம்.இன்னும் பல கவிதை ஆர்வலர்களும் வாசகர்களும் நம்மிடையே உள்ளனர் அவர்களும் வாய்ப்பு அமையும் பொழுது பங்கு பெற வேண்டும்

மணி பாசாங்கற்ற எந்த கலை முயற்சியும் ,அதை உணரும் முயற்சியும் வரவேற்கத் தக்கதே.

For further glimpse of the current poetic endeavours checkout the links at kalachuvadu

http://kalachuvadu.com/issue-77/kavithai1.htm
http://kalachuvadu.com/issue-77/kavithai2.htm

This link just an FYI.

வெற்றி said...

அன்பின் மணிகண்டன்,
நல்ல கவிதைகளை அறிமுகப்படுத்தி அவற்றிற்கு விமர்சனமும் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

தங்களிடம் இருந்து இன்னும் இப்படிப் பல தரமான பதிவுகள் வரும் எனும் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.

நன்றிகள்.

அன்புடன்
வெற்றி

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

hi... dears.... it is a nice argument.... this is my first time to share the ideas with u....

Unknown said...

very good argument and conversatin...... this is my first time to read this. superbbb..... continue it..... jack.

Unknown said...

i il introduce this blog to my classmates.... it il take us for a new and healthy growth. Thanks for all...... jack.