Sep 28, 2005

நடுங்க ஆரம்பித்திருக்கும் இந்திய அரசு.

21 பில்லியன் டாலர் மதிப்பு,25 ஆண்டுகள்,ஒரு பேரல் 31 டாலர் மட்டுமே.ஒரு மாபெரும் திட்டம் நாசம் அடைந்திருக்கிறது.ஈரான் இந்தியா இடையிலான திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு(குழாய் மூலம்) திட்டம் நிறுத்தப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்திருக்கிறது.ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அவசரமான,பயந்த மனநிலையில் கடந்த செப்டம்பர் 24 ஆம் நாள் உலக அணு அற்றல் மையத்தில்,ஈரானுக்கு எதிராக வாக்களித்ததன் எதிர்வினை இந்நிகழ்வு.

அமெரிக்கத் தலையீட்டுடன் இந்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.குழாய் எரிவாயு திட்டம் ஆரம்பிக்கும் போது அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பு கிளம்பியது.முன்பு இந்த திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என அறிவித்த இந்தியா,கான்டலீஸா ரைஸ் இந்தியா வந்த போதும்,மன்மோகன் சிங் அமெரிக்கா சென்ற போதும் பின் வாங்க ஆரம்பித்தது.

உலகின் எண்ணை வளத்திலும்,அணு வணிகத்திலும் தன் கையே ஓங்கியிருக்க வேண்டும் என்னும் அமெரிக்காவின் எண்ணத்திற்கு வலு சேர்க்கக் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தில்,அடிபணிந்து வக்களித்து,இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளிலும்,தனது தனித்தன்மையிலும் பெரும் பின்னடைவைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது இந்த அரசு.

தனது அற்றல்(மின்) தேவைக்காக,அணுவைப் பயன்படுத்தும் உரிமை ஒரு தேசத்திற்கு முழுமையாக இருக்கிறது.இதுவரை ஈரானின் அணு ஆயுத தயாரிப்புக்கான எந்த வித ஆதாரமும் யாரிடமும் இல்லை.ஐ.ஏ.ஈ.ஏ பொது இயக்குநர் கடந்த செப்டம்பர் 2 ஆம் நாள்,அணு குறித்த விவகாரங்களில் ஈரான் முழு ஒத்துழைப்பு தருவதாகவும்,விவகாரங்கள் சுமூகமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்னும் நிலையில்,புஷ் மூலமாக ஒரு கட்டாயத்திற்கு ஈரான் இழுத்துச் செல்லப்படுகிறது.

இந்த பிரச்சினையில் எந்த வித விவாதமும் இல்லாமல் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறது நடுவண் அரசு.எந்த தேசத்தையும் பார்த்து பயப்படத் தேவை இல்லை,அதற்கான பொருளாதாரமும்,ஆற்றலும் நம்மிடம் இருக்கிறது எனச் சொல்லி வந்த அரசு இப்போது நடுங்க ஆரம்பித்திருப்பதாகவே தோன்றுகிறது.

ஈரானை எதிர்ப்பதால் இந்தியாவிற்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை.அமெரிக்கா வழக்கம் போலவே இந்தியாவுடன் நட்பு எனச் சொல்லி,பாகிஸ்தானுக்கு ஆயுதம் விற்கும்.ஈரானுடனான உறவை இழப்பது மட்டுமே இந்தியாவுக்கான பயன்.

எதிர்த்து வாக்களித்ததனால் திட்டத்திற்கு எந்த பாதிப்பு வராது எனச் சொன்ன இந்திய அரசுக்கு பதில் சொல்லும் முகத்தான்,தனது அரசியல்,பொருளாதார விவகாரங்கள் இணைந்தே இருக்கும் என தீர்க்கமாக அறிவித்திருக்கிறது ஈரானிய அரசு.

அமெரிக்கா மீண்டும் ஒரு முறை தடியெடுக்க முயல்கிறது.இந்தியா சலாம் போட ஆரம்பிக்கிறது.

1 எதிர் சப்தங்கள்:

Voice on Wings said...

//ஈரான் இந்தியா இடையிலான திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு(குழாய் மூலம்) திட்டம் நிறுத்தப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்திருக்கிறது.//

இங்கு பார்க்கவும்.