Jun 12, 2005

பொறியியல் கல்வியில் புதிய சாத்தியங்கள்

மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வந்துவிட்டது. தங்களின் 12 ஆண்டு கால உழைப்பினைக் கொண்டு எதிர்காலத்திற்கான நல்ல படிப்பினைத் தேர்ந்தெடுக்க வேண்டிய முக்கிய தருணம் இது. படிப்புகளை விட பொறியியல் பாடத்தைத் தேர்ந்தெடுப்பதில் நிறையக் குழப்பம் இருக்கிறது.  ஏற்கனவே பெற்றோர்களும், மாணவர்களும் குழம்ப ஆரம்பித்துவிட்டார்கள். 250 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சுமார் 1,00,000க்கும் அதிகமான இடங்கள் இருக்கின்றன.

கல்லூரி முக்கியமா? அல்லது பாடப்பிரிவு முக்கியமா? என்னும் வினா எழும் போது இரண்டும் முக்கியம் என பதில் வரினும், இரண்டில் கல்லூரிக்கு முக்கியத்துவம் தருதல் இன்றியமையாத ஒன்று. உள்கட்டமைப்பு, ஆய்வக வசதி, நூலகம், ஆசிரியரின் திறன் போன்றவை இவற்றில் உள்ளடங்கும். வளாக நேர்முகத் தேர்வுக்கு வருகின்ற நிறுவனங்களும் இதைத் தான் முக்கியமாக கவனிக்கின்றன. ஒரு நல்ல மாணவன் மோசமான கல்லூரியில் நிறைய மதிப்பெண் பெற்று வேலையின்றித் தவிப்பது நிகழ்ந்தேறிக் கொண்டுதான் இருக்கிறது. நல்ல கல்லூரியில் சுமாரான மதிப்பெண்ணுடன் தேறும் மாணவனுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அடுத்து பாடப் பிரிவு. பெரும்பாலான மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, ECE  போன்ற சில பாடங்களே தெரிகின்றன. அதுவும் கடந்த சில ஆண்டுகளில் வேலைச் சந்தை மென்பொருள் துறையில் நன்றாக இருப்பதனால் இதற்கான டிமாண்டும் அதிகமாகவே இருக்கும். பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும், அவர் எந்த பாடப்பிரிவு எனினும் மென்பொருள் துறையில் நுழைவதையே குறிக்கோளாக கொண்டிருக்கின்றனர்.

உடனடியாக கிடைக்கக் கூடிய அதிக சம்பளமும், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பும் மாணவர்களை அதிகம் கவர்கின்றன. இந்தத் துறை பத்து ஆண்டுகளுக்கு பின்னர் எப்படி இருக்கும் என்பதனையும் சற்று யோசித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இத்துறையில் நான்காண்டுகளுக்கு முன்னர் ஐந்தாண்டு அனுபவம் மிக்க ஒரு வல்லுனருக்கு ஒரு லட்சம் வரையிலும், அதற்கு மேலாகவும் ஊதியம் தரப்பட்டது. இன்று அது ஐம்பதிலிருந்து அறுபது ஆயிரம் என குறைந்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இது மேலும் குறையக் கூடும்.

இதற்கான காரணங்களை அலசும் போது, நான்காண்டுகளுக்கு முன்னர் இத்துறையில் அறிவு பெற்றோர் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆனால், அவர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. நிறுவனங்களும் அதிக ஊதியம் கொடுத்து அவர்களை பணிக்கு அமர்த்தத் தயாராக இருந்தன. இன்று சூழல் மாறிக் கொண்டிருக்கிறது. எந்தப் பாடப் பிரிவில் இருப்பவரும், மென்பொருள் துறையில் நுழைவது என்றாகிவிட்ட நிலையில், தேவையின் அளவிற்கு ஆட்களும் இருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் ஒருவர் ரூ.20 ஆயிரத்துக்கு செய்யும் வேலையை இன்னொருவர் ரூ.15 ஆயிரம் என்னும் அளவில் செய்ய தயாராக இருப்பர்.

இன்று வரையில், இத்துறையில் இந்தியாவிற்கு போட்டியாக வேறு எந்த நாடும் பெரிய அளவில் செயல்படவில்லை. அதற்கு நமது ஆங்கில அறிவும் ஒரு முக்கிய காரணம். சீன அரசு ஆங்கில அறிவுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்து இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் மற்ற துறைகளைப் போலவே இத்துறையிலும் நமக்கு சீனா கடும் போட்டியை உண்டு பண்ணும் எனலாம்.

வேறு துறைகளில் நல்ல பணியிடங்கள் காலியாகவும், பணியிடங்கள் தகுதியற்றவர்களாலும் நிரம்பி இருக்கின்றன. ஆட்டோமேஷன், உற்பத்தி, தரக்கட்டுப்பாடு போன்ற துறைகளில் அனுபவம் பெறுகின்ற எவருக்கும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் நல்ல எதிர்காலம் இருக்கும். இன்று இத்தகைய துறைகளில் அனுபவம் பெற்ற பணியாளர்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. நம் நாட்டில் இப்போது தான் உற்பத்தி நிறுவனங்கள் நன்கு கால் பதிக்க ஆரம்பித்துள்ளன என்பது கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.

பாடப் பிரிவினை தேர்ந்தெடுக்கும் போது இரண்டு அல்லது மூன்று துறைகளில் வாய்ப்பு உள்ள பாடப் பிரிவினை எடுக்கலாம். உதாரணமாக EEE எடுக்கும் மாணவர்கள் மின்னியல், மின்னணுவியல் அல்லது மென்பொருள் துறைகளில் செல்லலாம். இது போன்று பல பாடப் பிரிவுகள் உள்ளன.

மெக்கானிக்கல், சிவில் போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் குறைவு என்னும் போதிலும், இப்படிப்புகளுக்கு எப்போதும் நல்ல மவுசு உள்ளது. இத்துறை பொறியாளர்களுக்கான தேவை என்றும் ஒரே அளவில் இருந்து கொண்டிருக்கும். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல் போன்ற துறைகள் மிக முக்கியமானவை. வேதியியல் தொழிலகத்தில் இருந்து விண்வெளி ஆராய்ச்சி வரையிலும் இவற்றிற்கான தேவைகள் இருக்கின்றன.

டெக்ஸ்டைல் துறை சார்ந்த படிப்புகள் குறைவான கல்லூரிகளில் மட்டுமே இருக்கின்றன. ஆனால், இத்துறையில் நிபுணர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. மெரைன், ஏரோநாட்டிக்கல், ஜியோ இன்பர்மேட்டிக்ஸ், ஆட்டோ மொபைல் போன்ற துறைகளை மாணவர்களும், பெற்றோர்களும் பரிசீலிக்கலாம்.

பாலிமர், பிரிண்டிங், மைனிங் போன்ற துறைகள் குறைவான கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. குறைவான கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகளுக்கு குறைவான வேலை வாய்ப்பே இருக்கும் என்றாலும், அதற்கு போட்டியும் மிக குறைவாகவே இருக்கும்.

சில துறைகளில் மேற்படிப்பு படித்து தனிப்பட்ட பாடத்தில் தகுதியை வளர்த்துக் கொள்ளலாம். இது வல்லுனர்களை தனிப்படுத்திக் காட்டும். கல்லூரிகள் மாஸ்டர் பட்டம் பெற்றவர்களுக்கு விரிவுரையாளர் பணிகளை தருகின்றன.

உடனடியாக கை நிறைய சம்பளம் என ஒரே துறையில் நுழைய வேண்டியதில்லை. அதில் விருப்பம் உள்ளவர்கள் செல்லலாம். கல்லூரியில் சேரும் முன்னரே மாணவர்களின் விருப்பத்தினை நன்கு ஆலோசிக்க வேண்டும். படித்த பின்னர் அவர் ஆராய்ச்சியில் ஈடுபட விருப்பம் கொண்டுள்ளாரா, தொழில் துவங்க விருப்பம் உள்ளவரா அல்லது பணிக்கு செல்பவர் எனில், எந்திரங்களை கையாள அல்லது மின்னணுவியல் பொருட்களில் அல்லது வாகனங்களில் அல்லது கணினியில் என தெளிவான முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

ஆராய்ச்சி போன்றவற்றை தேர்ந்தெடுக்கும் போது படித்து முடிக்கும் வரை கடின உழைப்பு தேவைப்படும். ஆனால் விஞ்ஞானிகளுக்கான தேவை என்றும் இருந்து கொண்டே இருக்கும். பெரிய நிறுவனங்கள் தங்களுடைய ஆராய்ச்சிக்காக கணிசமான தொகையை செலவிடுகின்றன.

எதில் விருப்பமோ அதற்கான துறையை தேர்ந்தெடுக்கலாம். வீட்டிற்கு அருகில் உள்ளது என்பதற்காக மோசமான கல்லூரியில் சேர்ப்பது மோசமான விளைவுகளை உண்டாக்கும். எந்தப் பாடப்பிரிவும் மோசமானது இல்லை. படிக்கின்ற மாணவனின் ஆர்வம், திறமையை பொறுத்தே மாறுபடும்.

தகுதி வாய்ந்த எல்லா மாணவருக்கும் எல்லாத் துறையிலும் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.தனது ஆர்வத்தை கண்டுணர வேண்டியது மாணவனின் கடமை. தங்களது ஆர்வத்தை மாணவன் மீது திணிக்காது இருத்தல் பெற்றோரின் கடமை.

வா.மணிகண்டன்

நன்றி:திணமணி/இளைஞர்மணி-06.06.2005

6 எதிர் சப்தங்கள்:

Ganesh Gopalasubramanian said...

மணி! நேர்த்தியான நிதர்சனமான கட்டுரை.

// தங்களது ஆர்வத்தை மாணவன் மீது திணிக்காது இருத்தல் பெற்றோரின் கடமை.//
//வீட்டிற்கு அருகில் உள்ளது என்பதற்காக மோசமான கல்லூரியில் சேர்ப்பது மோசமான விளைவுகளை உண்டாக்கும்.//

அழகான அர்த்தமுள்ள அலசல்.

இத்தனை நாளாக ஆளைக் காணோம்.
தினமணிக்கு சென்றுவிட்டீர் போல.

சிலவற்றை தெளிவு படுத்துங்கள்....

// உடனடியாக கிடைக்கக் கூடிய அதிக சம்பளமும், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பும் மாணவர்களை அதிகம் கவர்கின்றன. //
மாணவர்களை மட்டுமா? மொத்தமாக இந்த விஷயத்தில் உலகமே அடக்கம்.

கட்டுரை ஆரம்பத்தில் இருந்த தமிழ் பற்று போக போக குறைந்த மாதிரி தெரிகிறதே. எனக்கும் இது போல அடிக்கடி நிகழ்கிறது. என்ன செய்யலாம். என்னால் முடிந்தது சிடாக் வழங்கிய ஆங்கிலம் - தமிழ் அகராதியை நிறுவியிருக்கிறேன். ஓரளவிற்கு இப்பொழுது பரவாயில்லை முன்னேறி வருகிறேன் என்றே தோன்றுகிறது. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

உள்கட்டமைப்பு - infra structure
ஆய்வக வசதி - lab facilities
வளாக நேர்முகத் தேர்வுக்கு - campus interview

இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஈசிஈ, டிமாண்டும், ஆட்டோமேஷன்

Ganesh Gopalasubramanian said...

அப்புறம் இந்த "இந்தவார நட்சத்திரம்" இதெல்லாம் ரொம்ப அதிகம்...
நான் இதப்பத்தியெல்லாம் இன்னும் நினைக்கவே ஆரம்பிக்கலை......
இப்போதைய லட்சியம் வாரத்திற்கு நான்கு முதல் ஐந்து பதிவு அவ்ளோதான். நீங்கள் முயலுங்கள்

வீ. எம் said...

நல்ல பதிவு மணி அவர்களே !
வீ எம்

Ganesh Gopalasubramanian said...

வலைப்பதிவுகளில் புத்தக மீமீ நடப்பது தங்களுக்கு தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன். தங்களின் பெயரை நானும் பரிந்துரை செய்கிறேன்.தங்களின் அனுபவங்களையும் புத்தகங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
கோ.கணேஷ்

என்னுடைய பதிவுக்கு இங்கே சுட்டவும்

Anonymous said...

பொறியியல்

Unknown said...

தமிழ் தரவுத்தாள் தளம்
www.tamildata.co.cc
தமிழின் முதல் மின்னணுவியல் கருவூலம்