Apr 27, 2005

ஜெயகாந்தனை இகழலாமா?

Image hosted by Photobucket.com
Image hosted by Photobucket.com
"..ஜெயகாந்தன் கடந்த கால் நூற்றாண்டாக குறிப்பிடும்படியாக எதையும் எழுதவில்லை.அவருடைய பல அரசியல்,சமூகக்கருத்துக்கள் சகிக்க முடியாதவை.அவருடைய கதைகளின் வடிவம் மற்றும் அழகியல்,பல்வேறு பலவீனங்களைக் கொண்டவை..."-"உயிர்மை" இதழில் ஜெயகாந்தனை வாழ்த்திய கவிஞர் மனுஷ்ய புத்திரன்,கூடவே இப்படி ஒரு விமர்சனக்குட்டும் வைத்துள்ளார்!சக எழுத்தாளர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள்?

அசோகமித்திரன் :
ஜெயகாந்தனின் இலக்கியச் செல்வாக்கையும்,பிற எழுத்தாளர்கள் மீதான அவரது பாதிப்பையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.கிட்டத்தட்ட 20,25 வருடங்களாக,தமிழ் இலக்கிய உலகத்தில் அவர் இயங்கி வந்திருக்கிறார்.இன்றைய நவீன எழுத்தாளர்களிடம் கூட ஜெயகாந்தனின் பாதிப்பு இருக்கவே செய்கிறது.இவ்வாறிருக்க,ஜெயகாந்தனுக்கு கிடைத்திருக்கிற ஞானபீட விருதினால் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும் .அதுதான் சரி.
அப்படியானால் அவரது படைப்புகள் மீது விமர்சனம் செய்யவே கூடாதா?அவரது பங்களிப்பைப் பற்றி விவாதிக்கக் கூடாதா?கட்டாயம் செய்யலாம்.ஆனால்,அதற்கான சமயம் இதுவல்ல.அவருக்கு அளிக்கப்பட்டுள்ள விருது ஒரு முக்கிய சமூக நிகழ்வு.இது ஒரு திருமணம் போல.இந்தச்சமயத்தில் நாம் அவரை வாழ்த்துவதுதான் சரியான செயல்.இந்த மகிழ்ச்சியான சமயத்தில்,"மாப்பிள்ளையின் சுண்டு விரல் சரியல்ல" போன்ற விமர்சனங்களால் எந்த விதப்பயனும் கிடையாது.
திருப்பூர் கிருஷ்ணன் :
ஓர் எழுத்தை நாம் புரிந்துகொள்ளும் விதத்தில் வேண்டுமென்றே இட்டுக்கட்டி தாக்குவதென்றால்,எவ்வளவு வேண்டுமென்றாலும் தாக்கலாம்.தமிழில் வெளிவந்த நாவல்களில் ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன்,ஒரு வீடு,ஒரு உலகம்' குறிப்பாகச் சொல்லப்பட வேண்டியது.சிறுகதை,கட்டுரை,நாவல் என்ற மூன்று துறைகளிலும் சாதனை படைத்தவர் ஜெயகாந்தன்.அவரது அரசியல்,சமூகக் கருத்துக்கள் ஒரு சிலருக்கு உவப்பு இல்லாததாக இருக்கலாம்.ஒரு எழுத்தாளரின் அரசியல் நிலைப்பாட்டை எல்லாக்காலத்திலும் எல்லோரும் ஏற்றுக்கொள்ள முடியும் என்று சொல்ல முடியாது.படைப்பிலக்கியத் துறையில் அவர் மாபெரும் சாதனையாளர் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.அவர் எழுதியதற்க்குத்தான் இந்த விருது.இப்பொழுதும் எழுதிக் கொண்டிருக்கிறாரா போன்ற வாதம் தேவையற்றது.
இரா. முருகன் :
நல்ல வேளையாக எம்.டி. வாசு தேவன் நாயரும்,காப்ரியல் மார்வேஸும் தமிழர்களாக பிறக்கவில்லை.ஒருவேளை அப்படி அவர்கள் பிறந்திருந்தால்,இப்பொழுது கிடைத்திருக்கக்கூடிய அங்கீகாரம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.ஏனென்றால்,எந்த விதத்தில் யாரிடம் என்ன குற்றம் கண்டுபிடிக்கலாம்,குற்றம் கண்டுபிடித்து,எப்படித் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ளலாம் என்கிற ரீதியில்தான் பலர் இங்கு செயல்பட்டு வருகிறார்கள்.
உறங்கி கிடந்த தமிழ் இலக்கியத்தை,கைப்பிடித்து எழுப்பி நிற்க வைத்து ஒரு புதிய பாதையை கண்டுபிடித்துக் கொடுத்தவர் ஜெயகாந்தன்.அவருடைய 'ஒரு மனித,ஒரு வீடு, ஒரு உலகம்' புத்தகத்திற்கு மட்டுமே ஒரு நோபல் பரிசைக்கொடுக்கலாம்.என்னைக்கேட்டால்,இது காலம் தாழ்ந்து அவருக்குக் கிடைத்திருக்கிற அங்கீகாரம் என்றுதான் சொல்வேன்.
பாரதி பாலன் :
மனுஷ்ய புத்திரன் கூறியது எப்படி விமர்சனமாகும்?அவரின் இலக்கியக்கொள்கை என்ன?ஜெயகாந்தன் மீது அவர் தொடுக்கும் குற்றச்சாடுகளுக்கு என்ன ஆதாரங்களை சொல்கிறார்?ஒன்றுமேயில்லை.மேம்போக்காக ஏதேனும் ஒன்றைச் சொல்வதுதான் விமர்சனமா?
புத்தகங்களை வைத்து மட்டும் தான் ஓர் எழுத்தாளர் மதிப்பிடப்பட வேண்டுமா?ஜெயகாந்தனை எடுத்துக்கொண்டால் அவர் எப்பொழுதும் மக்களிடமிருந்து விலகி இருக்கவில்லை.அவர்களுடன் கலந்து அவர்களைப்பற்றித்தான் எழுதி வந்திருக்கிறார்.அதிரடியாக,பிறரை வியக்க வைக்க வேண்டும் எனும் எண்ணத்துடன் மனுஷ்ய புத்திரன் போன்றோர் முன் வைக்கும் விமர்சனங்களால் பயன் ஏதும் இல்லை.
இது இந்த வார கல்கி யில் வந்துள்ள விவாதம்,இனி இது இணயத்தில் உலவுகிறவர்களுக்காக!

6 எதிர் சப்தங்கள்:

பிச்சைப்பாத்திரம் said...

Thanks for this post, mani.

Ganesh Gopalasubramanian said...

ஜெயகாந்தனின் சமூகக் கருத்துக்கள் வெளிப்படையாக இருப்பதால் சமூக எதிரிகள் அவருக்கு அதிகம். ஆனால் அவரது கருத்துக்கள் ஆழமானவை. இதில் சர்ச்சையைக் கிளப்புவதற்கோ குற்றம் கூறவோ எதுவுமில்லை. அவருக்கு கிடைத்த அங்கீகாரமும் காலம் தாழ்ந்து கிடைத்த ஒன்றாகவே நான் கருதுகிறேன்.

Ganesh Gopalasubramanian said...

ஜெயகாந்தன் சமஸ்கிருத சமிதியில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ் தமிழ் என்று கூறுபவர்கள் தன்னைத் தானே நக்கிக் கொள்ளும் நாய்கள் என்று கூறியிருக்கிறார். அவரது எழுத்து தரம் தாழ்ந்து போய்விட்டது.

Muthu said...

சில வருடங்கள் ஒருவர் எழுதவில்லையென்றால் அவர் மறக்கப்பட்டுவிடும் சூழ்நிலையில் 20 வருடத்துக்குமேல் எழுதாமல் இருக்கும் ஒருவரை தமிழ் இலக்கிய உலகமும் வாசகர்களும் இன்னும் மறவாமல் இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

கொஞ்சநாட்களாய் அவருக்கு நேரம் சரியில்லை, நுணல்.... அப்படின்னு ஏதோ ஒரு பழமொழி உண்டு சரியாய் நினைவில்லை.

முத்துகுமரன் said...

ஜெயகாந்தன் அவர்களுக்கு விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி.அவருடைய ஆளுமை மதிக்கத்தக்கது. ஆனால் ஒரு படைப்பாளி சமூகத்தை பிரதிபலிப்பவன்.தன் சமுகம் மீது தாழ்ந்த கருத்தை உடையவரின்சிந்தனைப் பிறழ்வு வருந்தத்தக்கது. தான் வெளிப்படையானவன், முரண்பாடுகளின் முடிச்சு என்று சொல்லிக் கொண்டு இவர் சொல்லும் அபத்தங்களை கண்டிக்கவும் வேண்டும்.

நெல்லை கண்ணன் சொன்னது போல கம்பீரமானவரின் முகத்தை இறந்த பின் பார்ப்பதை தவிர்ப்பது போல நான் ஜெயகாந்தனைத் தவிர்க்கிறேன்.
பொழச்சு போங்க அண்ணாச்சி...

கமலேஷ் said...

thanks for this post it was very usefull.