Sep 16, 2019

அஞ்சும் எட்டும் பதினெட்டு

உலகிலேயே மிகச் சிறந்த கல்வியை எந்த நாடு தருகிறது என்று துழாவினால் பின்லாந்துதான் வரும். ரோமாபுரி ஒரே நாளில் கட்டப்பட்டதில்லை என்பார்கள் அல்லவா? அப்படித்தான் பின்லாந்தும். மெல்ல மெல்ல மாற்றங்களைச் செய்து, தமது கல்வித்துறையை புனரமைத்து இன்றைக்கு உலகின் மிகச் சிறந்த கல்வியை வழங்கும் நாடாகியிருக்கிறது. நமது கல்வியமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து சென்றதும், அங்கே பியானோ வாசித்ததும் உள்ளபடியே உள்ளூர்க்காரனாக மகிழ்ச்சியானதாகத்தான் இருந்தது. அமெரிக்காவும் கூட பின்லாந்தைப் பார்த்துதான் தமது கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பார்கள். அப்பேர்ப்பட்ட பின்லாந்தில் அமைச்சருக்கு ஒன்றிரண்டு நல்ல விஷயங்களாவது தட்டுப்படாதா என்றுதானே நமக்கு யோசிக்கத் தோன்றும்? ஒன்றையாவது நம் ஊரில் செயல்படுத்தினால் போதும் என்பதுதான் எதிர்பார்ப்பும் கூட.

ஆனால், திரும்பி வந்த தடத்தின் ஈரம் காய்வதற்குள் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்திருக்கிறார். மிக அதிர்ச்சியளிக்கக் கூடிய அறிவிப்பு இது. நமது கல்வியமைச்சர் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டு பிறகு வெளியில் தெரியாத காரணங்களினால் படிப்படியாக பதவிகள் பறிக்கப்பட்டு அமைதியாக்கப்பட்டார். அதன் பிறகு 2016 தேர்தலில் வென்றாலும் கூட அமைச்சராகும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடத்தப்பட்ட திரைமறைவு செயல்பாடுகளில் ஒன்றாக அவரிடம் கல்வித்துறை ஒப்படைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் அவர் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு கல்வித்துறையில் சில சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்ட அத்துறையின் செயலாளர் உதயச்சந்திரன் டம்மியாக்கப்பட்டு பிறகு இடமாற்றம் செய்யப்பட்டார்.

தமிழகக் கல்வித்துறை பற்றிய பிம்பங்கள் தொடர்ச்சியாக ஊதிப்பெருக்கப்பட்டது. ‘இந்தியாவே திரும்பிப்பார்க்கும்’,‘நாடே திரும்பிப் பார்க்கும்’ என்று அமைச்சரால் அடிக்கடி சொல்லப்பட்டு கல்வித்துறைதான் தமிழகத்திலேயே சிறப்பாகச் செயல்படும் துறையாக பிரஸ்தாபிக்கப்பட்டது. பொதுமக்களும் கூட, இருப்பதிலேயே கல்வியமைச்சர் பரவாயில்லை என்று பேசினார்கள். தம்மை மீறி ஒரு துறை சிறப்பாகச் செயல்படுகிறது என்ற செய்திகள் எடப்பாடியை உறுத்தியிருக்கக் கூடும். ஆனால் அவரால் இதற்காக எந்த எதிர்வினையும் புரிய முடியவில்லை. எய்தவன் எங்கேயோ இருக்க அம்பை நொந்து என்ன பலன் என்று அவருக்கும் புரிந்திருக்கும். அவருடைய நெருக்கடிகள் அப்படிப்பட்டவை. 

இந்த வெளிச்சத்தில்தான் தமிழக கல்வித்துறை சத்தமில்லாமல் சிதையத் தொடங்கியது. நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுக்கவும் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று கோடிக்கணக்கான தொகை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் முடிவு என்னவென்று நமக்குத் தெரியும். மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அறிவிக்கப்பட்டு அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  பல்லாயிரக்கணக்கான மாணவர்களை RTE என்ற போர்வையில்  தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கான தீவிரம் காட்டப்பட்டது. அதே சமயம் அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகம், ஆசிரியர்கள் மோசம் என்ற பிம்பமும் மக்களிடையே திரும்பத் திரும்ப பரப்பப்பட்டது. கல்வித்துறையின் அத்தனை சீரழிவுகளுக்கும் ஆசிரியர்கள்தான் காரணம் என்று சொல்லிவிட்டு அரசாங்கம் தப்பிக்க முயற்சிக்கிறது.  இதன் அரசியல், பின்னணி பற்றியெல்லாம் தமிழகத்தின் பொதுவெளியில் எந்தவிதமான விவாதங்களும் இல்லை. இவையெல்லாம் திட்டமிட்ட சதிகளா என்றும் புரியவில்லை. இதன் தொடர்ச்சியாகத்தான் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்திருக்கிறார்கள்.

மேற்சொன்னவற்றை ஒவ்வொன்றாகக் கோர்த்துதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 

பின்லாந்து சென்று வந்த அமைச்சருக்கு அங்குள்ள ஒரு முக்கியமான விஷயம் பிடிபட்டதா என்று தெரியவில்லை. அவருக்கு அந்தளவுக்கு கல்வித்துறை பற்றிய புரிதல் இல்லையென்றாலும் உடன் சென்றிருந்த அதிகாரிகள் சொல்லிக் கொடுத்திருக்கலாம். பின்லாந்தைப் பொறுத்தவரையிலும் தேர்வு முறைகளில் கவனம் செலுத்துவதில்லை. மாணவர்கள் புரிந்து கொண்டார்களா அடிப்படையை என்பதுதான் அதன் சித்தாந்தம். நாற்பதாண்டுகளுக்கு முன்பாகவே ‘மையப்படுத்தப்படுத்தப்பட்ட, தேர்வு எழுதி தேர்ச்சி அடையும் முறையை அடிப்படையாகக் கொண்ட கல்வித்துறை நமக்கு சரிப்பட்டு வராது’ என்று உணர்ந்து கொண்டார்கள். அதில் இருந்துதான் அவர்கள் வெளிச்சத்தை நோக்கியும் நகர்ந்தார்கள். ஆனால் இன்றைய தமிழகக் கல்வித்துறையின் போக்கு அதற்கு முற்றிலும் எதிரானதாக ‘Centralized, Evaluation based’ ஆகச் சென்று கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் ஒரே கல்வி, நாடு முழுவதும் ஒரே தேர்வு- எப்படி சாத்தியமாகும்?

கங்கை, யமுனை, பிரம்மபுத்திராவைவிடவும் நொய்யலையும் தாமிரபரணியையும் தமிழகத்து மாணவன் தெரிந்து கொள்வதுதான் அவசியம். இமயமலை பற்றி புரிந்து கொள்வதைவிடவும் மேற்குத் தொடர்ச்சி மலையையும், பொதிகை மலையையும் அவன் புரிந்து கொள்ள வேண்டும். அவன் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, மனனம் செய்து வாந்தியெடுக்கக் கூடாது. ஆனால் நாம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். பாடங்கள் மையப்படுத்தப்பட்டவையாக, பத்து வயது மாணவர்களுக்கு தேர்வுகள் என்ற பெயரில் அவர்களை வாட்டுவதாக கல்வித்துறையின் இருண்டகாலத்தை நோக்கி மிக வேகமாக விரைந்து கொண்டிருக்கிறோம்.

பின்லாந்து கல்வித்துறையின் சிறு பகுதியைப் புரிந்திருந்தாலும் கூட இவ்வளவு அவசரமாக அறிவித்திருக்கமாட்டார்கள். அமைச்சர் அங்கே சென்று, பேண்ட் சர்ட் அணிந்து, பியானோவெல்லாம் வாசித்து படத்தை எடுத்து தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்ததெல்லாம் வெற்று விளம்பரம்தான் என்று நினைக்கும் போது ஆயாசமாக இருக்காதா? எப்பொழுதுமே மக்கள் ‘அடடா சூப்பர்’ என்று சொல்லிக் கொண்டேயிருக்க மாட்டார்கள். பட்டிக்காட்டான் மிட்டாயை வேடிக்கை பார்த்த கதையாக எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வந்து பிஞ்சு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு என்று அறிவிக்கிறார்.

நடுத்தர, நகர்ப்புற வர்க்கத்தினர் சிலர் உடனே கிளர்த்தெழுந்து ‘அதில் என்ன தவறு? வடிகட்டுதல் அவசியமில்லையா?’ என்கிறார்கள். யாரை வடிகட்டுவது அவசியம்? ஐந்தாம் வகுப்பு மாணவியையா? ‘பெயிலா போய்ட்டா...படிச்சது போதும்...வீட்டு வேலை பழகட்டும்’ என்ற சொற்றொடர் கடந்த இருபதாண்டுகளாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்திருக்கிறது. அதை மீண்டும் அமலுக்குக் கொண்டு வருவதுதான் வடிகட்டுதல் முறையா?  தேர்வுகள், வடிகட்டுதல் என்று அழுத்தத் தொடங்கினால் பள்ளிகளில் இடைநிறுத்தம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். அது அவர்களின் அறிவு சம்பந்தப்பட்ட விஷயம் என்று நம்பினால் அது நம் அறியாமை. குடும்பம், பெற்றோரின் கல்வியறிவு, ஊரின் சூழல் என பல காரணிகள் உள்ளடங்கியிருக்கும். 

உள்ளடங்கிய கிராமத்தில் இருக்கும் அருக்காணியும், பூங்கோதையும், சாமியாத்தாவும் சென்னையிலும் கோவையிலும் படிக்கும் வர்ஷினிக்கும், ரக்‌ஷிதாவுக்கும் எந்தவிதத்திலும் சமமில்லை என்று நிரூபிப்பதுதான் வடிகட்டுதல் முறையா? ஐந்தாம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பிலும் படித்து தேர்வு எழுவதைவிடவும் புரிந்து உணர்வதைக் கற்றுத் தருவதாகக் கல்வி இருக்க வேண்டியதில்லையா? 

இதையெல்லாம் விட்டுவிட்டு ‘எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பது முன்னாடியே கூட இருந்துச்சு’ என்று பேசுகிறவர்கள், ‘எங்கப்பாரு காலத்துல திண்ணைப்பள்ளிக்கூடம் இருந்துச்சு’ என்று சொல்ல எத்தனை காலம் ஆகிவிடும்? திண்ணைப்பள்ளிக்கூடம், சாதி வாரியான படிப்பு, சாதி வாரியான தொழில் என்று பின்னோக்கி செல்வதுதான் வளர்ச்சி. இல்லையா? அப்படி சொல்ல வைப்பதன் தொடக்கம்தான் இவையெல்லாம் என்று ஆணித்தரமாக நம்பலாம். ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையுமில்லை’ என்று சொல்கிறவர்கள் மாநகரங்களைத் தாண்டி வருவதில்லை. தமிழகத்தில் பனிரெண்டாயிரத்துக்கும் அதிகமான கிராமப்பஞ்சாயத்துகள் இருக்கின்றன. பத்து கிராமங்களை இணைத்து கூட ஒரு பஞ்சாயத்து செயல்படும். அப்படியெனில் ஒவ்வொரு கிராமமும் எவ்வளவு சிறியது என்று புரிந்து கொள்ளலாம். அங்கேயிருக்கும் பிஞ்சுக்குழந்தைகளை மனதில் வைத்துப் பேசினால் கல்வித்துறையில் இவர்கள் செய்து கொண்டிருக்கும் அழிச்சாட்டியங்களும், ஆதிக்க மனப்பான்மையும் புரியும். இது வெறுமனே தேர்வு சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமில்லை. சமூக அடுக்குகளின் சிக்கல்களை எல்லாம் எந்தவிதத்திலும் பொருட்படுத்தாமல், மிகப்பெரிய குகையின் இந்தப்பக்கத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் சில வருடங்களில் குகையைத் தாண்டிச் சென்றால் எதிர்முனையில் இருக்கும் நிறம் புரியும் நமக்கு.

9 எதிர் சப்தங்கள்:

மதன் said...

கல்யாணம் காதுகுத்துனா வர்றாரு. மொய் செய்யராறு. எங்க ஆளுனுதான் ஓட்டுப்போட்டேன் என்று பி.இ என்கூட படித்த ஒரு முட்டாள் சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு. இப்ப நாலாவது படிக்கிற அவனோட பையனுக்கு அடுத்த வருடம் பொதுத்தேர்வு. இப்ப புலம்புற அவன்கிட்ட நான் சொன்னது இதுதான் - தன்வினை தன்னைச் சுடும்.

தமிழ்ப்பூ said...

Hats off to you. This article is an eye opener for all.

அன்புடன் அருண் said...

இப்படி நீங்க வெளியிலேயும், நாங்க உள்ளுக்குள்ளேயும் புலம்பிக்கிட்டு இருக்கும் போதே, அடுத்த 24 மணி நேரத்துல (சம்மந்தமே இல்லாத) வேற ஒரு breaking news வந்து , இந்த செய்தியை மறக்கடிச்சிட்டு போயிரும்...

Kamal said...

அடுத்த எலேச்டின் எப்பனு கொஞ்சம் ஞாபகப்படுத்தனும் போல .. இதுக்கெல்லாம் கேஸ் போட முடியாதா ?

சேக்காளி said...

//தமிழகத்தின் பொதுவெளியில் எந்தவிதமான விவாதங்களும் இல்லை//
விவாதிக்க வேண்டியவர்கள் என்ன செய்கிறார்கள்?

Kumaran said...

நாம் கற்பனை செய்ய இயலாத அளவு கல்வி நிலை தரம் குறைந்து கொண்டு வருகிறது. இதனை சீர்படுத்தி நன்னிலை நோக்கி நகரும் நாள் வர வேணும் என விரும்புகிறேன் .

AP said...

Dear Mani,
The current system does not evaluate students every year which used to be the case until late 90's. Where it is common to see people fail during annual exams. With a blanket ban on all pass until 8th or 9th the kazhagams have diluted the whole education system. In my opinion these are good milestones that need to be implemented for overall improvement in education and general understanding of subjects. This is based on the condition of students who study in our own school in Erode.Your opinion is more of an emotional response. If we have to improve anything there need to be checks and boundaries.

M.Selvaraj said...

முன்பெல்லாம் எங்களூரில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பையன்கள் (இத்தனைக்கும் வீட்டின் அருகிலேயே பள்ளிகூடமிருந்தும்) ஆண்டிறுதியில் தோல்வியடைந்து விட்டால் திரும்பவும் அதே வகுப்பில் படிக்க விருப்பப்படுவதில்லை அந்த வருடமே கொத்தனாருக்கு கையாளாக போய் விடுவார்கள். நிச்சயம் இப்படியான முட்டாள்தனமான நடைமுறைகளால் இடை நிற்றல் அதிகரிக்கும்

kailash said...

Now the next announcement for 11/12th standard students , only five subjects are compulsory and in that first two papers are language so they can take three subjects alone . Choice is now limited for students who would like to pursue both medicine/engg stream depending on the marks they are scoring in final exams . Govt will say that if students want they can opt sixth paper as optional but which school will be ready to allot staff for sixth paper they will simply shut the student saying studying compulsory papers are enough . Before making such announcements views are not being heard from students , teachers , parents and educationists .