Jan 3, 2019

திருவாரூர்

கோவில்களுக்குச் செல்வது அரிது. ஆனால் எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் குறைந்தபட்சம் ஒரு நாளாவது அங்கேயிருக்கும்படி ஒதுக்கிக்  கொள்வேன். ஆத்திர அவசரத்தில் நேரடியாக சந்நிதிக்குள் நுழைந்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு திருநீறோ, குங்குமமோ நெற்றியில் தேய்த்துக் கொண்டு வருவதில் அப்படியொன்றும் ஆத்ம திருப்தி வருவதில்லை. குறிப்பாக பழைய, பெரிய கோவில்களில். பழங்காலக் கோவில் என்பது ஆன்மிக நம்பிக்கையைத் தாண்டி ஒருவிதமான மனநிம்மதி. 

இந்த இடத்துக்குக் காலங்காலமாக ஆயிரமாயிரம் மக்கள் வந்து செல்கிறார்கள் என்பதை நினைக்கும் போது ஒரு மெல்லிய அதிர்வு பாயும். அதுதான் கோவிலுக்கும் நமக்கும் உண்டாகக் கூடிய உறவு. எத்தனையோ பேரின் வேதனைகளை, கதறல்களை, பிரார்த்தனைகளை எந்தவிதச் சலனமுமில்லாமல் உள் வாங்கிக் கொண்டேயிருக்கின்றன.

சில காலத்துக்கு முன்பாக, நண்பரொருவர் ‘மதுரை சொக்கநாதர் சன்னதியில் போய் கொஞ்ச நேரம் அப்படியே உக்காந்துக்குங்க’என்றார். அப்பொழுது கொஞ்சம் குழப்பமான மனநிலையில் இருந்தேன். குழப்பமான தருணங்களில் பொறுமையாக அமர்வது என்பது தெளிவைக் கொடுக்கும். அவர் சொல்வது சரியெனப்பட்டது. நண்பருக்கு மதுரைக் கோவிலில் ஒரு முக்கியஸ்தரைத் தெரியும். அவர் மூலமாக அங்கேயிருக்கும் காவலர்கள், பிராமணர்களிடம் பேசி அரை மணி நேரம் உட்கார அனுமதி வாங்க வேண்டியிருந்தது. மதுரையில் கூட்டம் அப்படி. கசகசவென்று ஆட்கள் வந்து போனபடியே இருக்கிறார்கள். நாம் அமர்ந்திருப்பதைப் பார்த்தால் ‘உக்காந்துட்டு போவது ஒரு சம்பிரதாயம் போலிருக்கிறது’ என்று ஆளாளுக்கு அமர ஆரம்பித்துவிடுவார்கள்.

மதுரையில்தான் அப்படி. தமிழகத்தில் பெரும்பாலான பெரிய, பழைய சிவன் கோவில்களில் இந்தப் பிரச்சினையெல்லாம் இருக்காது. படுத்துக் கொண்டாலும் கூட கேட்க ஆளிருக்காது. திருவாரூர் கோவில் அப்படியானதுதான். கடவுளின் சிலைகளுக்கு வெகு அருகாமையிலேயே அமர்ந்து கொள்ளலாம். கோவிலில் இருக்கும் தியாகராஜர், வன்மீகநாதர், கமலாம்பாளைக் காட்டிலும் அந்தக் கோவிலின் சில சூட்சமங்கள் நம்மைக் கிளரச் செய்வன. வன்மீகநாதர்தான் பழைய சிவன். மூலவர். புற்றுக் கோவில் அது. பக்கத்திலேயே தியாகராஜருக்கும் சந்நிதி உண்டு. உற்சவர். தியாகராஜருக்கு ஏன் பக்கத்திலேயே சந்நிதி என்ற கேள்விக்கு ஒரு புராணக் கதையைச் சொல்கிறார்கள். 

பாற்கடலில் படுத்திருந்த போது பெருமாள் தமது மார்பு மீது தியாகராஜர் சிலையை வைத்திருந்தாராம். வெகு காலத்திற்குப் பிறகு அந்தச் சிலையை இந்திரன் வாங்கிக் கொள்கிறான். இந்திரனுக்கு ஒரு போரில் உதவும் முசுகுந்தச் சக்ரவர்த்தி தனக்கு பிரதியுபகாரமாக இந்திரனிடமிருக்கும் தியாகராஜர் சிலையைக் கேட்கிறார். முதலில் ஒத்துக் கொள்ளும் இந்திரன் ஆனால் முழுச் சம்மதமில்லாமல் தியாகராஜரைப் போலவே சிலை ஒன்றைச் செய்து அதைத் தந்துவிடுகிறார். இப்படி ஆறு முறை ஏமாற்றி ஏழாவது முறையாகத்தான் திருவாரூரில் இருக்கும் தியாகராஜர் சிலையை முசுகுந்தனிடம் இந்திரன் வழங்குகிறார். திருவாரூரைச் சுற்றிலும் ஆறு இடங்களில் அந்தச் சிலைகள் நிறுவப்பட்டு கோவில்களாகியிருக்கின்றன. திருவாரூரில் இருப்பது மூலம். அதனால் இந்த ஊரை மூலாதாரம் என்கிறார்கள். ஏழு இடங்களையும் சேர்த்து சப்தவிடங்கம் (சப்த-ஏழு) என்று பேர்.

இப்படி சிலையை வாங்கி வைத்தால் போதுமா? சிவனை அழைக்க வேண்டுமல்லவா? அதற்காக கோவிலின் பக்கத்தில் இருக்கும் பெரிய குளத்தின் (கமலாலயம்) மேற்குக் கரையில் இருக்கும் யக்னேஸ்வரர் ஆலயத்தில் வைத்து யாகங்களைச் செய்து சிவனை அழைத்து வந்தார்களாம். 

இது ஒரு கதை ஆயிற்றா?

கோவிலில் அசலேஸ்வரர் என்றொரு சிவன் சந்நிதி இருக்கிறது. செருந்துணை நாயனார் அந்தச் சந்நிதியில்தான் பூமாலை கட்டி சிவனுக்கு அணிவிப்பார். ஒரு சமயம் கழற்சிங்க நாயனார்- இவர் ஒரு மன்னர். தனது மனைவியுடன் கோவிலுக்கு வருகிறார். மனைவி சங்காதேவி ஒரு மலரை எடுத்து நுகர்ந்துவிடுகிறார். செருந்துணையாருக்கு கனகோபம் வந்துவிடுகிறது. சிவனுக்கு வைக்க வேண்டிய மலரை நீ நுகர்ந்து பார்ப்பதா? என்று அவளது மூக்கை அறுத்துவிடுகிறார். கழற்சிங்க நாயனார் தன் பங்குக்கு வாளை உருவி ‘முதலில் மலரை எடுத்தது கரம்தானே’ என்று அவளது கரத்தை வெட்டிவிடுகிறார். இரண்டு பேருமே அறுபத்து மூன்று நாயன்மார்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டவர்கள். 

நமிநந்தி அடிகள் என்றொரு இன்னொரு நாயனார் கதையும் இதே கோவிலில்தான் நடந்திருக்கிறது. அவர் விளக்கு ஏற்றுவதற்காக எண்ணெய் கேட்டுச் சமணர்கள் வீடுகளுக்குச் செல்கிறார். அவர்கள் ‘உங்க சாமிக்கு தண்ணியில் விளக்கு ஏத்து’ என்று சொல்லிவிட இவருக்கு ஒரே வருத்தம். அசலேஸ்வரனை வணங்க, ‘நீ ஏன் தம்பி கவலைப்படுற? சங்கு தீர்த்தத்தில் தண்ணீரை எடுத்து விளக்கை ஏற்று’ என்று சொல்லிவிட்டார். நமிநந்தியடிகளும் அவ்வாறே தண்ணீரில் விளக்கு ஏற்றி நாயனார்களில் ஒருவர் ஆகிவிட்டார். சமணர்கள் வில்லனாகிவிட்டார்கள்.

இன்னமும் சில நாயன்மார் கதைகள் திருவாரூரை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. 

இப்படியான நாயன்மார் கதைகளையெல்லாம் திரட்டி, திருத்தொண்டத் தொகையாக எழுதிய சுந்தரமூர்த்தி நாயனாரின் அம்மாவும் திருவாரூரில் பிறந்தவர்தான். அறுபத்து மூன்று நாயன்மார்களில் அவரும் ஒருவர். அவரது கணவரும் ஒருவர். இந்த திருத்தொண்டத் தொகையை எழுதக் காரணமாக இருந்த விறன்மிண்ட நாயனாரும் ஒரு நாயன்மார் ஆகிவிட்டார். நாயன்மார் கதைகளில் பெரும்பாலானவை புனைவுதான். சமயத்தைச் செழிக்கச் செய்வதற்காக நிறைய இட்டுக் கட்டி எழுதி அதை இறை புராணமாக்கிவிட்டார்கள். நாயன்மார் வரலாற்றை அப்படியே நம்ப வேண்டியதில்லை. கருவூர் ஈழத்து அடிகள் எழுதிய பெரிய புராண ஆராய்ச்சி என்ற நூலை ஒரு முறை வாசித்துவிடலாம். 

திருவாரூர் கோவில் பற்றி நினைக்கும் போது ஆடகேஸ்வரர், கமலாம்பாள், கமல முனி சித்தர், செங்கழுநீர் பூ என வரிசையாக நினைவில் வந்து போகின்றன.

புராணகாலத்தில் நடந்தவை எனச் சொல்லப்படுகிற பெரும்பாலானவை கதைகள்தான். அவையொன்றும் சிலிர்ப்பூட்டுவதில்லை. ஆனால் கோவிலின் சில பகுதிகளை செம்பியன்மாதேவி கட்டிக் கொடுத்தாள் என்று அறிந்து கொள்ளும் போது அவள் இந்தப் பாதை வழியாக வந்திருப்பாள் எனத் தொடங்கி அவளது காலத்தின் சோழ மண்டலம் மனதில் விரியும் போது சிலிர்க்கிறது. ராஜேந்திர சோழன் வந்திருப்பான், ராஜராஜ சோழன் வந்திருப்பான் என்றெல்லாம் நினைத்துக் கொள்ளத் தோன்றுகிறது. ஆயிரம் ஆண்டுகள் என்றாலும் கூட முப்பது நாற்பது தலைமுறைகளாக முன்னோர்கள் வந்து போன தலமிது. நம்பகமான வரலாறுகள், கட்டிடக் கலைகள், கல்வெட்டுகள் என எல்லாமும் கண் முன் விரிகின்றன. என்னவெல்லாம் வேண்டியிருப்பார்கள்? என்ன உடை தரித்திருப்பார்கள்? செதுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில் மெல்ல விரல் வைத்துத் தேய்க்கும் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்தறிந்த தமிழன் கொத்திய எழுத்துகள் இவை என நினைக்கும் போது அது கொடுக்கும் அதிர்வுதான் கோவில் கொடுக்கும் ஆனந்தம். எல்லாவற்றையும் மேவி காவி வர்ணமடிப்பதுதான் ஆன்மிகம் என்றாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

கடந்த முறை திருவாரூர் சென்றிருந்த போது கோவிலில் ஒரு சிவனடியார் புற்களைக் கொத்திக் கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்த போது  ‘ஆடகேஸ்வரனைப் பார்த்தியா?’ என்றார். சந்நிதியில் சிவலிங்கமே இருக்காது. நாகபிலம்தான். ஒரு குழி. பிலம் என்றால் பள்ளம்தானே? அதைச் சுற்றிலும் இருக்கும் லிங்கங்கள் யாவும் தியானத்தில் இருக்கின்றனவாம். ‘பார்த்தேன்’ என்றேன். சிரித்தார். ‘சும்மா சொல்லாத..பார்த்திருந்தீன்னா ரெண்டு மூக்குலேயும் ஒரே சமயத்துல மூச்சு வரும்’ என்றார். திரும்பிச் சென்று பார்த்தேன். குண்டலினி எழும்பினால் அப்படி இரண்டு மூக்கிலும் ஒரே சமயத்தில் மூச்சு வரும் என்று எழுதி வைத்திருந்தார்கள். அந்த சிவனடியாருக்கு குடும்பம் உண்டு. மனைவி இறந்ததும் காவியைக் கட்டிக் கொண்டு கோவிலுக்கு வந்துவிட்டார். கோவிலுக்கு வருகிறவர்கள் பத்திருபது என காசு கொடுப்பதை வாங்கிக் கொள்வார். பேசுவதெல்லாம் இல்லை. அப்படிப் பேசினால் இப்படியான கதைகளைச் சொல்வார். இப்பொழுது உயிரோடு இருக்கிறாரா என்று தெரியவில்லை. 

திருவாரூர் இடைத்தேர்தல் பற்றித்தான் எழுதியிருக்க வேண்டும். வருடம் தொடங்குகிறது. முதல் பதிவு. தியாகராஜரை வைத்தேத் தொடங்கிவிடலாம் என மனம் மாறிவிட்டது. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

18 எதிர் சப்தங்கள்:

Muralidharan said...

இதை வாசிக்கும்போது சிறு வயது நகைச்சுவை நினைவு வருகிறது ...

ஆசிரியர் தென்னை மரம் பற்றி குறிப்பு எழுத சொன்னார்கள் ., மாணவன் ஒருவன் பசு மாடு பற்றி மட்டுமே படித்து உள்ளான். அதனால், அவன் பசு மாடு பற்றி எழுதிவிட்டு இந்த பெருமையை கொண்ட பசு மாட்டை தென்னை மரத்தில் காட்டுவார்கள் என்று முடித்து உள்ளான்.

அப்படி இருக்கு உங்களுடைய திருவாரூர் பதிப்பு :)

Vaa.Manikandan said...

பக்தி கமழ ஹேப்பி நியூ இயர் சொல்லியிருக்கேன் சார் :)

Anonymous said...

Very good to read...

thiru said...

சப்த விடங்க ஸ்தலங்களில் 7 நடராஜர் சிலைகள் இருப்பது சரிதான். ஆனால் விடங்கம் என்றால் உளியால் செதுக்கப் படாத எனப் பொருள் கொள்ளவேண்டும். ஆக இந்த 7 கோயில்களிலும் சுயம்பு மூர்த்தியைக் காணலாம்.

திருவாரூர் - தியாகராசப்பெருமான்
திருநள்ளாறு - நாகவிடங்கர்
நாகைக்காரோணம் - சுந்தரவிடங்கர்
திருக்காராயில் - ஆதிவிடங்கர்
திருக்குவளை - அவனிவிடங்கர்
திருவாய்மூர் - நீலவிடங்கர்
வேதாரண்யம் - புவனிவிடங்கர்

BalajiS said...

"நாயன்மார் கதைகளில் பெரும்பாலானவை புனைவுதான். சமயத்தைச் செழிக்கச் செய்வதற்காக நிறைய இட்டுக் கட்டி எழுதி அதை இறை புராணமாக்கிவிட்டார்கள். நாயன்மார் வரலாற்றை அப்படியே நம்ப வேண்டியதில்லை."

காசா பணமா அடிச்சு விடுங்க மணி ! யார் உங்கள கேள்வி கேக்க இருக்கா ?

Vaa.Manikandan said...

பாலாஜி சார், அதான் நீங்க கேட்டுட்டீங்களே!

1) முதலை விழுங்கி இறை அருளால் துப்பப்பட்ட போது வளர்ந்தவனாக இருந்தான் - சுந்தரமூர்த்தி நாயனார்.
2) குழந்தையை கறி செய்து கடவுளுக்குப் படைத்தார்கள். குழந்தை மீண்டும் உயிர் பெற்றது- சிறு தொண்ட நாயனார்.

என...

சாத்தியமில்லாத/நம்பத் தகுந்ததாக இல்லாத நாயன்மார் கதைகளை நான் சொல்கிறேன். சாத்தியம்தான் என்று உங்களால் சொல்ல முடியுமென்றால் சொல்லுங்கள். காசும் வேண்டாம்; பணமும் வேண்டாம்.

thiru said...

3. ஏழுவயதில் இறந்த பூம்பாவையின் சாம்பலில் இருந்து 12 வயது பெண்ணாக உயிர்ப்பித்தார் - திருஞானசம்பந்தர்

நாடோடிப் பையன் said...

An interesting post. Thanks.

senthilkumar said...

மணி அவர்களே, நாயன் மார் கதை புனைப்பட்டதா இல்லையா என்பதை விளக்க முற்படுகிறோம். ஆனால் பெரிய புராணம் ஆராய்ச்சி நூலை பெரியார் பதிப்பகம் வெளியிட்டு கடவுளையும், நாயன்மார்களின் உண்மை தன்மையை அறிய முற்படுவதுதான் பெரிய புனைவு. நம்மிடம் இருந்து அழிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளை யார் அழித்தார்கள்,எதற்காக அழித்தார்கள்,பின்பு வரலாறு எப்படி மாற்றி புனையப்பட்டது என்ற தேடலை தொடங்குகள் அது சொல்லும் உண்மை என்னவென்று.

அன்பே சிவம் said...

ஸ்தல புராணமெல்லாம் இருக்கட்டும். தல இப்ப நேரமிருந்தும் அப்பால பாத்துக்கலாமுன்றீங்களா.தேரத் தள்ளி விட்டு அமைதியாக கெடப்போன்றீங்களா.

Anonymous said...

Sir, I read 4 pages of that book (periyapuraana aaraaichi)...I think, by the end of one's read, one will loss their hope on saivam and vainavam...The wonder is that the book was written in 1940's...But very good suggestion sir..

senthilkumar said...

நமது கோயில்களும்,சிலைகள் என வெவ்வேறு மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. கண்டிப்பாக, கடவுளின் சிறப்பை உணராமல் அவர்கள் இவ்வளவு கோயில்களையும் அதன் சிறப்பை உணராமல் கட்டியிருக்கமாட்டார்கள்.இதையும் பல்வேறு படையெடுப்புகளில் அழித்தது,பின்னர் வந்த ஆட்சியாளர்களின் அக்கறையின்மையால் பல கோயில்கள் சிதிலமடைய வைத்தார்கள்.ஒருவகையில் இதை முழுவதுமாக அழிக்காமுடியாமல் இன்று குறைந்தபட்சம் நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர்களின் துணையோடு ஏன் இந்த சிலைகள் கடத்தப்பட்டது, வெறும் பணம் மட்டுமே குறிக்கோளா? ஏன் இதை விசாரிக்கும் பொன் மணிக்கவேல் அவர்களின் செயலுக்கு திராவிட கட்சிகள் சமத்துவம் கொண்டு பாராட்டாமல் மெளனமாக உள்ளனர்? இவருக்கு ஏன் பல்வேறு வகையிலும்,துறை வாரியாகவும் இவ்வளவு அழுத்தத்தை கொடுக்க ஒன்று சேர்கிறார்கள்?

Selvaraj said...

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

////பழங்காலக் கோவில் என்பது ஆன்மிக நம்பிக்கையைத் தாண்டி ஒருவிதமான மனநிம்மதி./// உண்மை தான். நானும் அப்படி உணர்ந்திருக்கிறேன் - தாமரை

Anonymous said...

////பழங்காலக் கோவில் என்பது ஆன்மிக நம்பிக்கையைத் தாண்டி ஒருவிதமான மனநிம்மதி./// உண்மை தான். நானும் அப்படி உணர்ந்திருக்கிறேன் - தாமரை

Anonymous said...

என்னைப் பொறுத்தவரை நமது கோவில்கள்,அவை உருவாக்கப்பட்டிருக்கும் அளவீடுகள்[scales],அவற்றின் கட்டுமானங்கள் அதில் இழைந்தோடும் கலை நயங்கள்,சிற்பங்கள் தரும் பிரமிப்பு,ஆங்கே ஒளிந்திருக்கும் சூக்குமங்கள்,அவை தரும் பரவசம் பொருந்திய ஆச்சரியங்களுக்கு ஈடுஇணையே இல்லை.
புத்தாண்டின் அருமையான பதிவு.

உங்களின் இப்படியான ஒரு பக்கம் எனக்கு மற்றுமொரு ஆச்சரியம்.

ந.அழகம்பெருமாள்

அன்புடன் அருண் said...

(தற்போது போன்ற) தொழில்நுட்ப வசதி இல்லாத காலங்களில், கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோயில்களின் மீது, கட்டிட நிபுணர்கள் மீது, கட்டிட தொழிலாளர்களின் மீது எனக்கும் ஒரு மரியாதை மற்றும் காதல் உண்டு..

(ஆங்கிலப்) புத்தாண்டு சீரோடும் செழிப்போடும் அமையட்டும்!!

Anonymous said...

//ஆனால் கோவிலின் சில பகுதிகளை செம்பியன்மாதேவி கட்டிக் கொடுத்தாள் என்று அறிந்து கொள்ளும் போது அவள் இந்தப் பாதை வழியாக வந்திருப்பாள் எனத் தொடங்கி அவளது காலத்தின் சோழ மண்டலம் மனதில் விரியும் போது சிலிர்க்கிறது. ராஜேந்திர சோழன் வந்திருப்பான், ராஜராஜ சோழன் வந்திருப்பான் என்றெல்லாம் நினைத்துக் கொள்ளத் தோன்றுகிறது. ஆயிரம் ஆண்டுகள் என்றாலும் கூட முப்பது நாற்பது தலைமுறைகளாக முன்னோர்கள் வந்து போன தலமிது. நம்பகமான வரலாறுகள், கட்டிடக் கலைகள், கல்வெட்டுகள் என எல்லாமும் கண் முன் விரிகின்றன. என்னவெல்லாம் வேண்டியிருப்பார்கள்? என்ன உடை தரித்திருப்பார்கள்? செதுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில் மெல்ல விரல் வைத்துத் தேய்க்கும் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்தறிந்த தமிழன் கொத்திய எழுத்துகள் இவை என நினைக்கும் போது அது கொடுக்கும் அதிர்வுதான் கோவில் கொடுக்கும் ஆனந்தம்.//

உண்மை.. மாபெரும் அரசர்கள் நடந்த இடங்கள் தரும் சிலிர்ப்பு விளக்க முடியாது.. :)

-சரவணன்