Dec 20, 2018

கடனும் உழவனும்

விவசாயக்கடன் தள்ளுபடி குறித்து நிறைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். ஒரு வடக்கத்திக்காரர் ‘எனக்கு வீட்டுக்கடனும், கார் கடனும் இருக்கிறது. அதை எப்படி விவசாயக்கடனாக மாற்றுவது’ என்று கேட்டிருந்தார். எவ்வளவு எகத்தாளம்? விவசாயிகளின் விவகாரத்தில் காங்கிரஸ் செய்தது, பாஜக செய்யவில்லை என்ற வாதங்களையெல்லாம் தள்ளி வைத்துவிட்டுத்தான் கடன் சம்பந்தமான விவாதத்தை அணுக வேண்டும். 

உழவர்களின் பிரச்சினைகள் மிகச் சிக்கலானவை. நீர் பற்றாக்குறை, வேலைக்கு ஆட்கள் கிடைக்காமை, விலை நிர்ணயமின்மை, இயற்கை சார்ந்த பாதிப்புகள் என பிரச்சினைகளின் பரப்பு மிகப் பெரியது. மேம்போக்காக இருந்து பார்த்தால் நம்மால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதவை.

எங்கள் பகுதியில் கடந்த சில வருடங்களாக நீர் இல்லாமல் விவசாயமே நடைபெறவில்லை. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் காய்ந்து கிடந்தன. உழவர்களிடம் பேசினால் இருக்கும் துக்கத்தையெல்லாம் மறைத்துவிட்டு ‘வயல் காய்ஞ்சு கிடந்துச்சுன்னா அடுத்த முறை வெள்ளாமை நல்லா வரும்’ என்றார்கள். இந்த வருடம் காவிரியில் நீர் பெருகி, பவானியிலும் நீரோட நெல்லும் நன்கு விளைந்திருந்தது. ஆனால் பரவலாக நோய்த்தாக்குதலுக்குள்ளாகிவிட்டது என்கிறார்கள். விலையுமில்லை. வேளாண்மை பற்றித் தெரியாதவர்கள் ‘அதுக்கென்ன, புல்லுக்கு கூட இந்த வருஷம் கன கிராக்கி’என்பார்கள்- எப்பொழுதோ இருந்த கிராக்கியை மனதில் வைத்துக் கொண்டு. ஒரு வருடம் கிராக்கி உருவாகி இரண்டு லட்ச ரூபாய் சம்பாதித்துவிட்டால் அடுத்த பல வருடங்களுக்கு அடி மேல் அடி வாங்குகிறார்கள்.

இப்படித்தான் விவசாயமிருக்கிறது. வளையலை அடமானம் வைத்து வெறும் மூன்றாயிரம் ரூபாய் கடன் வாங்கி அந்தத் தொகைக்கு உரம் எடுத்து வருகிறவர்கள் இருக்கிறார்கள். 

மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறவனுக்குக் கூட குறைந்தபட்ச உத்தரவாதம் என்றிருக்கிறது. வேளாண்மையில் மட்டும்தான் அப்படி எதுவுமேயில்லை. கஜா புயலில் பார்த்தோம் அல்லவா? எவ்வளவோ கனவுகள் இருந்திருக்கும்- அடுத்த கட்டமாக இறக்கவிருக்கும் தேங்காய்களின் வருமானத்தில்தான் மகனுக்கும் மகளுக்கும் கல்லூரிக் கட்டணம் கட்டுவதாக முடிவு செய்து வைத்திருப்பார்கள். ஒரே காற்று அடித்து வீசி எல்லாவற்றையும் அழித்துவிட்டது. ‘பிற தொழில்களில் மட்டும் பாதிப்பில்லையா?’ என்று கேட்பார்கள். இதற்கான பதிலை நான் சொல்லவில்லை. பார்த்து வந்தவர்களுக்குத் தெரியும்- எத்தனை வருட உழைப்பு, எத்தனை வருடங்களுக்கான கனவு அது என்று.

விவசாயத் தொழிலைப் புனிதப்படுத்தவில்லை. அது அவசியமுமில்லை. ஆனால் ‘எனக்குப் பிறகு தனது சந்ததி விவசாயத்துக்குச் செல்லட்டும்’ என்று ஏன் எந்தவொரு உழவனும் சொல்வதில்லை என்று சிந்தித்தால் போதும். அதில் அவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன.

இன்றைய காலகட்டத்தில் சுயமாகச் சம்பாதிப்பவர்களில் மிக மோசமாகச் சீரழிக்கப்படும் ஜீவன் என்றால் அவன் விவசாயிதான். தான் கோடிகளில் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்யக் கோருவதில்லை. இரண்டு லட்ச ரூபாயைத் தள்ளுபடி செய்யச் சொல்கிறான். அவ்வளவுதான். திணறிக் கொண்டிருக்கும் அவர்கள் ஒரு முறை சுவாசித்துக் கொள்கிறார்கள். 

‘விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வது தவறான முன்னுதாரணம்’ என்று பேசுகிறார்கள் என்றால் அவர்களுக்கு நம் தேசத்தின் கிராமப் பொருளாதாரம் பற்றி எந்தவொரு புரிதலுமில்லாத மேட்டுத்தட்டு அறிவுஜீவி என்று நிச்சயமாகச் சொல்லிவிட முடியும். புள்ளிவிவரங்கள், கணக்கு வழக்குகள் எதுவும் வேண்டியதில்லை. எப்பொழுதாவது நேரம் வாய்க்கும் போது உழவர் சந்தையிலோ அல்லது காய்கறி கட்டி எடுத்துவரும் உழவனிடமோ கால் மணி நேரம் பேச்சுக் கொடுத்தால் புரிந்து கொள்ள முடியும்.

எங்கள் தாய்மாமன் விவசாயி. பத்து ஏக்கர் நிலத்தில் பூஞ்செடி போட்டிருக்கிறார்கள். அறுபது வயதை நெருங்கிவிட்டது. காலையில் நான்கு மணிக்கு எழுந்துவிடுகிறார்கள். நான்கைந்து மூட்டைகள் பறித்தவுடன் வண்டியில் கட்டி பத்துக் கிலோமீட்டர் இருசக்கர வாகனத்தில் சென்று கோயமுத்தூர் செல்லும் வண்டியில் ஏற்றிவிடுவார். ஒரு நாளுக்கு ஐந்தாறு முறை செல்ல வேண்டும். முதலில் செல்லும் மூட்டைக்கு நல்ல விலை. நேரம் கடந்து செல்லச் செல்ல விலை குறைந்து கொண்டேயிருக்கும். மகளுக்குத் திருமணம் செய்துவிட்டார். மகன் வேலைக்குச் சென்றுவிட்டான். ‘ஏன் இவ்வளவு சிரமப்படுறீங்க’ என்கிற கேள்விக்கான பதில் ‘நான் விவசாயி’ என்பதுதான். காலகாலத்துக்கும் கஷ்டப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். இந்தச் சமூகத்தில் ஓரளவுக்கேனும் மரியாதை கிடைக்க வேண்டுமென்றால் அப்படி உழைத்தால்தான் உழவனுக்கு சாத்தியம். ஒரு வருடம் சம்பாதிப்பதை அடுத்த மூன்று வருட வேளாண்மை விழுங்கிவிடும்.

பத்து ஏக்கர் விவசாயத்தை விட்டுவிடலாம். அரை ஏக்கரிலும் முக்கால் ஏக்கரிலும் வேளாண்மைத் தொழிலைச் செய்து கொண்டிருப்பவர்களுக்கான வருமானம் என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்? ஆடு, மாடு மேய்த்து பால் கறந்து ஊற்றித்தான் பெரும்பாலானவர்கள் அவர்களது தினசரி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் கடனைத் தள்ளுபடி செய்வதால் இந்த தேசம் குறைந்துவிடப் போவதில்லை. 

கடந்த ஒன்றிரண்டு நாட்களாக இதை எதிர்த்துப் பேசுகிறவர்களின் வாதங்களில் கண்களில்பட்டபடியே இருக்கிறது. மாதம் ஒரு லட்ச ரூபாய் வருமானத்தைத் தாண்டிய குடும்பங்கள் கணிசமாகிவிட்ட நம் தேசத்தில் ‘இந்தக் கடனையெல்லாம் தள்ளுபடி செஞ்சா நாடு நாசமா போய்டும்’ என்று பேசுகிறவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகத்தான் இருக்கும். 

6 எதிர் சப்தங்கள்:

Sriram said...

I support farm loan waiver. But is it the only solution to the farmer woes?. The day he gets profit after deduction of expenses for a sustainable living is the happiest day for him. organised workforce form unions for wage hike. But can farmers make a strike. Govt should take concrete steps for the farmer to realise his price for the produce and remove middlemen and correct the supply chain. That is the solution. We pay 20/kg for tomato but the farmer gets RS 1 or so. How pathetic it is. Farm loan waiver is temp solution.
Miga nalla pathivu. Nanri

பழனிவேல் said...

மிக சரியாக சொல்லி உள்ளீர்கள் அண்ணா...

Asok said...

விவசாயிகள் கடன் தள்ளுபடி என்பது சுலபம், அதை ஒரு சில விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து கூட்டு கொள்ளை அடித்து மற்ற விவசாயிகளை ஏமாற்றி விடுகிறார்கள். விவசாயிகளுடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, கூட்டுறவு சங்க தேர்தலில் சரியான தலைவர்களை தேர்ந்தெடுத்தால், இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கலாம்.

சேக்காளி said...

//ஒரு லட்ச ரூபாய் வருமானத்தைத் தாண்டிய குடும்பங்கள் கணிசமாகிவிட்ட நம் தேசத்தில் ‘இந்தக் கடனையெல்லாம் தள்ளுபடி செஞ்சா நாடு நாசமா போய்டும்’ என்று பேசுகிறவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகத்தான் இருக்கும்.//
சும்மா எப்படி இருப்பது என தெரியாமல் திரும்ப திரும்ப ஒவ்வொரு போகமும் நட்டப் பட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தால் சரி

வி. நாராயணசாமி said...

நியாயமாக தள்ளுபடி செய்யப்பட வேண்டிய விவசாய கடன்கள் தவிர, தள்ளுபடிக்குத் தகுதியற்ற கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதும் நடக்கிறது. இதத் தவிர்க்க வழியே இல்லையா?

Anonymous said...

There is truth in the comments against waiver, the unknown or the real question that's hidden in such blanket loan waiver is : Can't we have a system to reach out to people who deserve aid/help/waiver rather than a blanket waiver. Such waiver resulted in expectation of education loan waiver, small and medium enterprises waiver, corporate soft write off... And we keep justifying waiver. Economically though it lessens the burden of farmers, it doesn't relieve them of the economic shackles woven by the middle man and corporates. It's like, Irrespective of his all that credibility that shri.manikandan holds is the bank statement he publishes (which no one bother to go through though) and sincerely proclaims his inability to answer questions that the not so poor asks for help from his foundation. The effort Shri.Manikandan puts in and draw system and strategy to identify and deliver the needs of the help seekers makes Manikandan as MONEYKANDAN. Hand over a blank cheque to Mani and sleep peacefully, for MONEYKANDAN will find out how much I really need to run my family and fill the cheque accordingly. Where is such accountability from govt who goes for waiver. They do not know how many went bankrupt because of fraught, natural calamities, who are they, how to fill their packets with money directly etc...like the Manikandan thinks.. We need to create and accept a mechanism (if it's Aadhar let it be so) to distribute wealth to the needy. We have one such excellent system in Andhra Pradesh. It can be implemented to whole of India too...