Jul 11, 2018

இனி ஐ.டி. அவ்வளவுதானா?

எங்கள் அலுவலகத்தில் கடந்த வருடம் ஒருவரை மேலாளர் ஆக்கினார்கள். மேலிடத்தில் நல்ல செல்வாக்கு அவருக்கு. எப்படியும் பல வருடங்கள் இருப்பார் என்று அவரைப் பார்த்தாலே பம்முகிறவர்கள் அதிகம். கடந்த வாரம் எல்லோரையும் அழைத்து ராஜினாமா செய்துவிட்டதாகச் சொன்னார். பலருக்கும் அதிர்ச்சி. 'உன்னை இங்க நல்லாத்தானய்யா வெச்சு இருந்தாங்க' என்பதுதான் பலருக்குள்ளும் ஓடுகிற கேள்வியாக இருந்தது. 'எனக்கு இங்க எந்தக் குறையுமில்லை' என்று சொல்லிவிட்டு கடந்த சில வருடங்களாக 'டேட்டா அனலிடிக்ஸ், பிக் டேட்டா' ஆகியவற்றை படித்துக் கொண்டிருந்தாராம். புதிய நிறுவனமொன்றில் வாய்ப்பு வந்திருக்கிறது. எட்டிக் குதித்துவிட்டார். 'இப்போ நல்லா இருக்கிறேன் என்பதைவிடவும் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறேன்' என்று கணக்குப் போட்டிருக்கிறார் மனுஷன். இனி பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு இந்த புதிய நுட்பத்தில் குப்பை கொட்டிவிடுவார். 

மென்பொருள் துறை என்றில்லை பொதுவாகவே இன்றைக்கு பணியில் இருப்பவர்கள் பலருக்கும் 'அடுத்தது என்ன?' என்றோ அல்லது 'எதில் அப்டேட் செய்து கொள்வது' என்றோ குழப்பம் இருக்கும். நேற்று ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. மேற்சொன்ன விஷயம்தான் ஒரு அமர்வில் விவாதப் பொருள்.  படித்துவிட்டு உடனடியாக வேலை மாறுகிறேன் என்றெல்லாம் மண்டை காய வேண்டியதில்லை. அடுத்த மூன்று முதல் ஐந்து வருடங்களில் கவனிக்கப்படும் தொழில் நுட்பம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை குறித்தான ஆராய்ச்சியைத் தொடங்கி அதில் கற்றுக் கொள்ளத் தொடங்குங்கள் என்று பேசினார்கள். புதிய நுட்பத்தைக் கற்றுக் கொள்ளும் கால கட்டத்தில் தினசரி அரை மணி நேரம் ஒதுக்கி வார இறுதிகளில் சற்று அதிகப்படியான நேரத்தை ஒதுக்கினால் ஆறு மாதம் முதல் ஓராண்டு காலத்தில் தெளிவாகப் படித்துவிட முடியும். அதன் பிறகான ஓராண்டு காலம் நாம் கற்றுக் கொண்டவற்றில் நிபுணர் ஆவதற்கான வேலைகளைச் செய்யலாம். பிறகு அந்த நுட்பம் கோலோச்சும் காலம் வரைக்கும் நமக்கான தேவை இருந்து கொண்டேயிருக்கும். அதிகபட்சம் முப்பதாண்டுகள் இந்தத் துறையில் இருப்போமா? இப்படி இரண்டு அல்லது மூன்று முறை பாம்பு சட்டையை உரிப்பது போல உரிக்க வேண்டியிருக்கும். 

துறை மாற வேண்டும் என்று கூட அவசியமில்லை. குறைந்தபட்சம் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளவாவது இந்த சட்டையுரித்தால் மிக அவசியம்.

படிப்பது சரி; எதைப் படிப்பது என்பதுதானே குழப்பமாக இருக்கிறது என்று கேட்கிறவர்களுக்கு சொல்ல ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. கூகிளே கண்கண்ட தெய்வம்.

கிட்டத்தட்ட முப்பது துறைகள் செம ஹாட் அல்லது என் துக்கினியூண்டு மூளைக்கு அவைதான் தெரிகின்றன. துறைகள் என்றால் முதல் வரிசையில் இருப்பவை- ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ், க்ளவுட் மாதிரியான பெருமொத்தமானவை. இப்படி வேறு என்ன துறைகள் இருக்கின்றன என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளவே ஒன்றிரண்டு மாதங்கள் பிடிக்கும். தெரிந்து கொள்வது என்றால் ஒவ்வொன்றைப் பற்றியும் ஐந்து நிமிடங்கள் பேசுகிற அளவுக்காவது நமக்கு தெரிய வேண்டும். அந்தப் புரிதல் உருவாகிவிட்டால் இவற்றில் நமக்கு எது பொருத்தமானது என்ற முடிவுக்கு வந்துவிடலாம். 

வெறும் துறை சார்ந்த அறிவு மட்டும் போதாது. உதாரணமாக வாய்ஸ் அசிஸ்டெண்ட்ஸ் என்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய இடத்தை பிடிக்கப் போகின்றன. கூகிள் அசிஸ்டென்ட் மாதிரி. இனி வரும் காலத்தில் பெரும்பாலான நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவையை அவைதான் பார்த்துக் கொள்ளும். நாம் ஏர்டெல்லுக்கோ அல்லது வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கோ அழைத்து கேள்வி கேட்டால் அவைதான் பதில் சொல்லும். மேம்போக்காக பார்த்தால் எளிமையாகத் தெரியும். இதில் எவ்வளவு நுட்பங்கள் இருக்கின்றன? ஒவ்வொரு வாடிக்கையாளருக்கு ஒரு குரல் இருக்கும். அதை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் ஒரே கேள்வியை வெவ்வேறு விதமாகக் கேட்கக் கூடும். இதை உள்வாங்கி, வகைப்படுத்தி, பதில் தேடி எடுத்து, அவர்களுக்கு பதில் கொடுக்க- Interfaces  chat bots, Natural Language Processing இப்படி நிறைய இருக்கின்றன. இதில் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக வல்லுநர் ஆக முடியும். அவற்றுக்கான டூல்கள் இருக்கின்றன. 

இப்படித்தான் கிணறு தோண்ட வேண்டும். இதே போல இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், மொபைல் நுட்பங்கள், சைபர் பாதுகாப்பு என்று ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. சி, சி++ மட்டும்தான் மென்பொருள் என்று நினைக்கிறவர்கள்தான் 'இனி ஐ.டி அவ்வளவுதான்' என்று நம்புகிறார்கள். உண்மையில் இனிமேல்தான் ஐ.டியின் அசுரத்தனமான வளர்ச்சி இருக்கப் போகிறது. 

எனக்குத் தெரிந்த ஒரு வங்கி மேலாளருக்கு ஐ.டி ஆட்கள் மீது என்ன வெறுப்போ தெரியாது- எப்பொழுது பேசினாலும் 'இன்னொரு பத்து வருஷம்..ஐ.டி அவ்வளவுதான் இல்லையா' என்பார். இத்தகைய அரைவேக்காட்டு ஆட்களைப் பார்த்தால் செம எரிச்சலாக இருக்கும். இப்படி நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். வங்கியில் தொடங்கி பள்ளிக்கூடம் வரைக்கும் பணியாளர்களே தேவையில்லாமல் அனைத்துமே தானியங்கி(ஆட்டோமேஷன்) ஆகும் காலம் வரலாம். ஆனால் இவற்றையெல்லாம் வடிவமைக்க, நிரல் எழுத என மென்பொருள் துறையில் ஆட்களுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கும். எழுதி வைத்துக் கொள்ளலாம்- மென்பொருள் துறை எந்தக் காலத்திலும் அழியாது. அது தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டேயிருக்கும். இதில் வேலை வாங்க வேண்டுமென்றால், தொடர வேண்டுமென்றால் நாம் நம்மை புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அவ்வளவுதான். 

11 எதிர் சப்தங்கள்:

Suresh said...

அருமையான அலசல். நன்றி.

சேக்காளி said...

இந்தா!!!!
பழைய பன்னீர்செல்வமா திரும்பி வந்துட்டாருல்ல
எங்க சின்னையா.

த. சீனிவாசன் said...

கணினித்துறை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வருகிறது. அதன் வளர்ச்சியோடு அனைவரும் இணையும் வகையில் தாய்மொழியில் அறிமுகம், பாடங்கள் இருத்தல் வேண்டும்.

எங்களால் ஆன ஒரு முயற்சியாக வளர்ந்து வரும் கட்டற்ற மென்பொருள் துறைகளை தமிழில் Kaniyam.com ல் எழுதி, பின் மின்னூலாகவும் வெளியிடுகிறோம்.

உதாரணம் -

எளிய தமிழில் Big Data
http://freetamilebooks.com/ebooks/learn-bigdata-in-tamil/

கணியம் குழுவினரின் பிற மின்னூல்கள் இங்கே

http://freetamilebooks.com/genres/computer-science/

http://kaniyam.com

இதுபோல பலதுறைகளிலும் தமிழில் அறிமுகங்கள், பாடங்கள், காணொளிகள் வர விரும்புகிறேன்.

vic said...

சேக்காளி இன்னுமா புரியலை அந்த மேலாளர் பதவி தனக்குதான்னு
நினைச்சுட்டார் அது மிஸ் ஆகின கவலை அமேரிக்க அதிபர் பதவி மிஸ் ஆகாதுன்னு மனச தேத்திகிட்டார்.

Jaikumar said...

போன வருசம் மேலாளார் பதவி உயர்வு பெற்றவர் கரட்டடிபாளையத்தாரா? இப்ப counter offer ஏற்றுக்கொள்வதா இல்லை புது வேளைக்கு போலாமான்னு கொழப்பமா?

Anonymous said...

தகவலுக்கு நன்றி Shrinivasan T
தல "மணி" போல் நீங்களும்(குழு) புகழ் பெற வாழ்த்துக்கள்.

சேக்காளி said...

//சேக்காளி இன்னுமா புரியலை அந்த மேலாளர் பதவி தனக்குதான்னு
நினைச்சுட்டார்//
அட ஆமா ய்யா இது புரியாமதான் கூமுட்டையா இருந்துருக்கேன்.

Vaa.Manikandan said...

எனக்கு மேனேஜர் வேலை எல்லாம் ஒத்து வராதுங்க...அங்க போய் சிக்கினால் மத்த வேலை எல்லாம் எப்படி பார்க்கிறது?

வெட்டிபையன் said...

This is the benchmark for IT field (About emerging/top paying tech)

https://insights.stackoverflow.com/survey/2018/

Will be useful for everyone including Students who would like to build their career.

Dineshkumar Ponnusamy said...

You can download free course materials for latest technologies. Similar to fmovies, there is a website called https://www.freetutorials.us/ . High valued content are available for cheap price and most of them are free. I recently found this website, it's helpful. Unlike some dummy sites, it provide valuable content. Hope it helps few people.

Anonymous said...

I like the valuable information you provide on your articles.
I'll bookmark your blog and check once more right here frequently.
I am somewhat certain I will learn lots of new stuff right here!

Good luck for the next!