Feb 12, 2018

தேர்தலில் நிற்கலாமா

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது நண்பனொருவன் களமிறங்குவதாகச் சொன்னான். அரசியல் மாற்றத்தை உருவாக்குவதற்கான அல்லது உருவாகக் விரும்பிய ஓர் அமைப்பு வேட்பாளர் நேர்காணலை நடத்தியது. அதில் கலந்து கொண்டு தேர்வாகியிருந்தான். அவர்களுக்கும் வேறு வழியில்லை. 234 தொகுதிகளிலும் ஆள் சிக்குவதே பெரிய காரியம்.

‘என்னை வேட்பாளரா அறிவிக்கப் போறாங்க’ என்றான். 

‘சந்தோஷம்டா....எந்தக் கட்சி?’

பெயரைச் சொன்னான். ‘அப்படியொரு கட்சி இருக்கா?’

‘இப்போத்தான் எலெக்‌ஷன் சமயத்துல ஆரம்பிச்சிருக்காங்க...கோபிக்கு நான் தான் கேண்டிடேட்’

கட்சியைத் தொடங்கிய இளைஞர்கள் கார்போரேட் நிறுவனங்களில் வேலை செய்கிறவர்கள். ஃபேஸ்புக், ட்விட்டர் உலகவாசிகள். இருநூற்றைம்பது லைக் வாங்கினால் தேர்தலில் வென்றுவிடலாம் என்று நம்புகிறவர்கள். ‘ஆமாமா..நெறைய லைக், நெறைய ஷேர்..எப்படியும் ஜெயிச்சுடலாம்’ என்பதுதான் அவர்களைப் பொறுத்த வரையிலும்  அரசியலுக்கான அடித்தளம். மூன்று திரைப்படங்கள் வெற்றியடைந்தால் ‘வருங்கால முதல்வர்’ என்று கோஷம் போடுகிற கரகாட்ட கோஷ்டியைப் போல. 

நேற்று ஊரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. பழைய காங்கிரஸ்காரர் ஒருவருக்கான நினைவேந்தல் கூட்டம். அதிமுக, திமுக, காங்கிரஸ் என சகல கட்சியினரும் மேடையேறினார்கள். ஜெயலலிதா இருந்திருந்தால் அதிமுகவினர் ஒருத்தரும் எட்டிப் பார்த்திருக்கமாட்டார்கள். அவரது மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் இந்த ஒரு நல்ல மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏவும், அமைச்சரும் பக்கத்து பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். நல்ல விஷயம்தானே? அது இருக்கட்டும்.

கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். ஒருவர் பேசி முடித்துவிட்டு எழுந்து போனால் பெருங்கூட்டமே எழுந்து பின்னால் ஓடுகிறது. கிட்டத்தட்ட எல்லாக் கட்சி ஆட்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். களத்தில் ஆட்களைச் சேர்த்து வைத்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளுக்கு ஒவ்வொரு பூத்திலும் ஆட்கள் உண்டு. தேர்தல் வரும் போது பணத்தை நறுக்கென்று இறக்குகிறார்கள். கடைசி வாக்காளர் வரைக்கும் பணத்தைக் கொண்டு சேர்க்க ஆட்கள் இருக்கிறார்கள். என்னதான் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் புரட்சி செய்தாலும் அவர்களை அசைக்கவே முடியாது என்பது அரசியல்வாதிகளுக்குத் தெரியும். திடீர் புரட்சியாளர்களுக்குத்தான் இது தெரிவதில்லை.

தேர்தலில் நிற்க விரும்பிய அந்த நண்பனிடம் ‘எவ்வளவு பூத் இருக்குன்னு கணக்கு இருக்கா?’ என்றேன். அவனுக்குத் தெரியவில்லை. ‘எத்தனை கிராமப் பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி தொகுதிக்குள்ள வருதுன்னாலும் கணக்கு எடுத்து வை’ என்றேன். நூற்றுக் கணக்கில் இருந்தது. ‘ஒரு கிராமத்துக்கு ஓர் ஆளாவது நமக்கு வேலை செய்ய வேணும். குறைஞ்சது நூறு பேரு..ஆள் சேர்க்க முடியுமான்னு பாரு..உங்க கட்சி ஆளுங்க இருக்காங்களா?’ என்றேன்.

கனவில் இருந்தவன் உடைந்து போனான். ‘பைக் எடுத்துட்டு ஒவ்வொரு ஊரா போனா ஜெயிக்க முடியாதா?’ என்றான். தொகுதியில் இரண்டரை லட்சம் வாக்காளர்களில் எத்தனை பேர்களை அப்படிச் சந்திக்க முடியும் என்று நினைத்திருந்தான் என்று தெரியவில்லை. நிலவரத்தைப் புரிய வைத்த பிறகு ‘சரி நிக்கல’ என்று ஒதுங்கிக் கொண்டான். 

சமீபத்தில் கன்னடத்தில் ஒரு படம் வெளியானது. ‘ஹம்பிள் பொலிட்டிசியன் நாக்ராஜ்’. பெங்களூரு நகராட்சியின் ஊழல் உறுப்பினர் நாக்ராஜ், தனது தொகுதியின் எம்.எல்.ஏவை கவிழ்த்துவிட்டு தமது கட்சியில் சீட் வாங்கித் தேர்தலில் நிற்பான். அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி பணியாற்றிக் கொண்டிருக்கும் அருண் பாட்டீல், உள்ளூர் அரசியலின் காரணமாக பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு தேர்தலில் நாக்ராஜை எதிர்த்து சுயேட்சையாக நிற்பான். இருவருடைய களப்பணியும் வேறு மாதிரியாக இருக்கும். கடைசியில் தகிடுதத்தங்களைச் செய்து நாக்ராஜ் வென்றுவிடுவான். க்ளைமேக்ஸில் அருண் பாட்டீலிடம் ‘சிட்டிஸனா இருக்கிற வேலையை நீ பாரு..அரசியலை நான் பார்த்துக்கிறேன்’ என்று நாக்ராஜ் சொல்வான். அருணுக்கு முகம் தொங்கிப் போகும். 

நல்லதொரு எண்டர்டெயினர் படம். அமேசான் ப்ரைமில் இருக்கிறது. 

படத்தைப் பார்த்த போது தேர்தல் வரும் போதெல்லாம் புரட்சி மோடுக்குச் செல்கிற இளைஞர்களின் ஞாபகம் வந்தது. அவர்களைக் குறை சொல்லவில்லை. தேர்தலில் மாற்றத்தை உருவாக்குதல் என்பது நல்ல நோக்கம்தான். ஆனால் தேர்தல் களம் என்பது இன்ஸ்டண்ட் காபி இல்லை. எம்.ஜி.ஆரிலிருந்து எல்லோருக்குமே முன் அரசியல் அனுபவம் உண்டு. கள நிலவரத்தைத் தெரிந்து வைத்திருந்தார்கள். ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் தேர்தல் களத்தில் பெரிய பொருட்டே இல்லை. தேர்தலுக்கு முந்தய நாள் இரவில் பத்து மணிவாக்கில் மின்சாரம் தடைபடும். அந்த ஒரு மணி நேரப் பட்டுவாடா போதும். தம் கட்டி வைத்திருந்த அத்தனை பிரச்சாரங்களையும் தவிடு பொடியாக்கிவிடும்.

செங்கோட்டையனும், செல்லூர் ராஜூவும் எந்த சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்திருக்கிறார்கள்? அவர்களைத்தான் சமூக வலைத்தளங்களில் இஷ்டத்துக்குக் கலாய்க்கிறார்கள். அவரவர் தொகுதியில் அவர்கள் ஜெயிக்கமாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? தேர்தல் களம் என்பது முற்றிலும் வேறானது. அங்கே நிறைய விளையாட்டுக்கள் உண்டு. பணம் விளையாடுகிற இடத்தில் பணமும், சாதி விளையாடுகிற இடத்தில் சாதியும், கட்சி விளையாடுகிற இடத்தில் கட்சியும் விளையாடும். ‘மாற்றத்தைக் கொண்டு வருவோம்’ என்று பொத்தாம் பொதுவாகப் பேசினால் ‘அவர் எனக்கு இருநூத்தம்பது தந்தாரு..நீ எவ்வளவு தருவ?’ என்று பொடனி அடியாக அடித்துத் துரத்திவிடுவார்கள்.

தேர்தல் வரப் போகிறது. அரசியலில் விளையாடிப் பார்க்க விரும்புகிற இளைஞர்கள் இப்பொழுதிருந்தாவது வேலைகளைத் தொடங்க வேண்டும். தேர்தலுக்கு பதினைந்து நாட்கள் முன்பாக பார்ட்- டைம்மாகப் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தால் துரும்பைக் கூட அசைக்க முடியாது. 

டிடிவி தினகரனைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு ஊராகச் செல்கிறார். பணம் கைவசம் இருப்பது பெரிய காரியமில்லை. அதைச் சரியான வழியில் செலவழிக்க களத்தில் ஆட்கள் வேண்டும். அந்த அமைப்பைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ‘தேர்தல் வரும் போது பார்த்துக்கலாம்’ என்று வீட்டில் அமர்ந்திருக்கவில்லை. நல்லவரோ கெட்டவரோ- தேர்ந்த அரசியல்வாதிகளிடமிருந்து அடுத்த தலைமுறையினர் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன.

வெறுமனே ‘தேர்தலில் மாற்றத்தைக் கொண்டு வருவோம்’ என்றெல்லாம் பேசியும் எழுதியுமிருந்தால் தொகுதிக்கு ஆயிரம் பேர் கூட மாற்றி வாக்களிக்கமாட்டார்கள். தேர்தல் அரசியலில் மாற்றங்கள் தேவை என பெரும்பாலான தமிழக இளைஞர்களுக்கு நல்ல எண்ணமுண்டு. ஆனால் அதை எப்படிச் செயல்படுத்துவது என்று புரியாமலே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அலுவலகக் கேண்டீனில் ‘பிஜேபி- காங்கிரஸ்’ என்று யாராவது பேச்சை எடுத்தால் காது கொடுத்துக் கேட்டுப் பார்த்தால் மத்திய பட்ஜெட் பற்றிப் பேசுகிறார்கள். மோடி-ராகுல் பற்றிப் பேசுகிறார்கள். ‘அதெல்லாம் மேல்மட்ட அரசியல். உங்க வார்டுக்கு யார் பொறுப்பாளர்’ என்று கேட்டால் தெரிவதில்லை. 

அரசியலில் மாற்றம் என்பது எம்.எல்.ஏ ஆவதும் அமைச்சர் ஆவதுமில்லை. அப்படியொரு நினைப்பில் இளைஞர் பட்டாளம் இருந்தால் எந்தக் காலத்திலும் இந்த அரசியல்வாதிகளை அசைக்கவே முடியாது. இன்றைக்கு இருக்கிற அரசியல்வாதிகளின் அதே குணநலன்களைக் கொண்டவர்கள்தான் அடுத்த ஐம்பதாண்டுகளுக்குப் பிறகும் நம் மண்ணை ஆண்டு கொண்டிருப்பார்கள். அரசியலிலும் களத்திலும் மாற்றத்தை உருவாக்க வேண்டுமானால் கீழ் மட்டத்திலிருந்து சலனத்தை உருவாக்க வேண்டும். நம் தெருவிலிருந்து, நம் வார்டிலிருந்து, நம் பஞ்சாயத்திலிருந்து...

11 எதிர் சப்தங்கள்:

sankar said...

அருமையான கட்டுரை இன்றைய தமிழகத்திற்கு தேவையான நபர்கள் தங்கள் பகுதியில் தங்கள் மக்களின் பிரச்சனைகள் தேவைகளை உடனுக்குடன் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணும் சேவகர்கள் தான்.

kailash said...

தங்கள் வீட்டிலும் , வசிக்கும் தெருவிலுமே மாற்றம் கொண்டு வர முடியாதவர்கள் எப்படி அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நம்புகிறார்கள் .என் தெருவில் 50 வீடுகள் உள்ளன ஒரு மாதமாக சின்டெக்ஸ் தொட்டி நீர் ஒழுகிக் கொண்டு இருக்கிறது , நானும் தெருவில் இருக்கும் ஒரு பாட்டியும் மட்டுமே அதை பற்றி பேசிக் கொண்டு மெட்ரோ வாட்டர் அலுவலகத்துக்கு படை எடுத்துக் கொண்டு இருக்கிறோம் ஆனால் தண்ணீர் வந்தவுடன் பிடிக்க உடனே வருவார்கள் .மின் விளக்கு , குப்பை அள்ளுதல் , நாய்த் தொல்லை இப்படி பல பிரச்னைகளிலும் தலையிடாமல் எவனோ ஒருத்தன் பார்த்துக்குவான் என்று இருப்பது . அதே வாய் அரசியல்வாதி சரி இல்லைங்க சிஸ்ட்டத்தை மாற்றனும் அப்படினு சொல்றது . முதலில் உங்களை சுற்றி மாற்றத்தை கொண்டு வாருங்கள் , ஒவ்வொன்றாக சரி ஆகும் . நான் சொல்வது பண பலம் , கட்சி பலம் , சாதி பலம் இல்லாமல் அரசியலில் தொபுக்கடீர்னு குதிக்கணும் என்று நினைப்பவர்களுக்கு

raja said...

ஞானோதயம் அளித்ததற்கு நன்றி. ஏற்கனவே "நம்ம ஆளு" கட்டுரையில் நிலவரத்தை சொல்லி மக்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்று எளிமையாக விளக்கினீர்கள். நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பி வைத்தேன்.

கமலும் ரஜினியும் தோற்பதை ஏற்று கொள்ளுவது கஷ்டமாக இருக்கிறது. இயக்குனர் மிஷ்கின் சொல்வது போல் "ஒரு 5 வருடம் இவர்கள் அனைத்து போராட்டங்கள், அறிக்கைகள், மக்கள் பணிகள் என சகலத்தையும் செய்யட்டும். தொடர்ந்து செய்யட்டும், செய்ய வேண்டும்". அப்புறம் பார்க்கலாம். இந்த கருத்தில் நியாயமும் இருப்பதை உணர்ந்த பிறகு மனம் ஆறுதலும் அடைந்தது.

அதே நேரத்தில் மக்களுக்காக உழைத்த, உழைக்கின்ற மார்க்சிஸ்ட் வாசுகி, துணை வேந்தர் வசந்தி தேவி, வாழும் காமராஜர் நல்லகண்ணு போன்ற மனிதர்களை புறக்கணிக்கும் மக்கள் அந்த தவறை திருத்தி கொள்ளாதவரை தினம் தினம் கஷ்டத்தில், பரிதாபத்தில் வாழத்தான் செய்வார்கள். இது வெறும் அவர்கள் அறியாமை என்று ஒதுக்கி விட முடியாது.

'The enemy is not the other, the enemy is you'

அவ்வளவுதான். இதற்கு மேல் என்ன சொல்ல!!

Rathinasamy said...

சரியான நேரத்தில் எழுதப்பட்ட கட்டுரை.
ஒரு வார்த்தை மாறாமல் அப்படியே உடன்படுகிறேன்.

சேக்காளி said...

//மக்களுக்காக உழைத்த, உழைக்கின்ற மார்க்சிஸ்ட் வாசுகி, துணை வேந்தர் வசந்தி தேவி, வாழும் காமராஜர் நல்லகண்ணு போன்ற மனிதர்களை புறக்கணிக்கும் மக்கள்//
இவர்களை பற்றி மக்களிடம் சொல்ல வேண்டும். இவர்களை போன்றவர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். தேர்தலில் நின்று வென்று தான் அரசியல் செய்யவேண்டுமா என்ன?.நான் என்ற தலைக்கனத்தை தூக்கி தூர எறிந்து விட்டு அரசியலில் இருக்கும் நல்லவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தோள் கொடுத்து அவர்களோடு மக்களுக்காக உழைப்பதும் அரசியல் தான்.

சேக்காளி said...

// அப்படியொரு நினைப்பில் இளைஞர் பட்டாளம் இருந்தால் எந்தக் காலத்திலும் இந்த அரசியல்வாதிகளை அசைக்கவே முடியாது.//
மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களுக்கு,
எக்காலத்திலும் அரசியல் வாதிகளை அசைக்கவே முடியாது என்று முடிவு செய்து விட்ட படியால் நாம் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாது என்பது உறுதியாகி விட்டது. "தல" யின் 'நம்ம ஆளு' கட்டுரையின் பின்னூட்டத்தில்
"STRAIGHT ஆ எவனாவது சிக்கினா வித்துரலாமே" என அறிவுறித்தியதை பரிசீலனை செய்து பார்த்து வித்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.
மேலும் நமக்கு இருக்கும் தொடர்புகளும் தொடுப்புகளும் மிக மிக குறைவு என்பதனால் "STRAIGHT ஆ எவனும் சிக்க மாட்டான். ஆகவே இந்த தரகு வேலையை சிறந்த முறையில் செய்து கொண்டிருக்கும் உலகம் சுற்றும் வாலிப வயோதிகரிடம் இந்த யாவாரத்தை ஒப்படைக்கலாம் என்றிருக்கிறேன். அதற்காக சகோதரி டுமீலிசை யிடம் நேர்காணலுக்கான நேரம் வாங்கி தரும்படி கேட்டுள்ளேன்.அவரும் இரு கைகளாலும் கேக்கை பிசைந்து ஊட்டியாவது காரியத்தை சாதித்து தருகிறேன் என உறுதியளித்துள்ளார்.

சேக்காளி said...

// அமேசான் ப்ரைமில் இருக்கிறது. //
HD பிரிண்டு டொரண்ட் ல இருக்கு

Anonymous said...

சேக்காளி,

வாசுகி (தென் சென்னை), வசந்தி தேவி (ஆர் கே நகர்), நல்லகண்ணு பல தேர்தல்களில் நின்றவர்கள். தெரு தெருவாக மக்களிடம் பேசியவர்கள். இருந்தும் மக்கள் இவர்களை தோற்கடித்தார்கள்.

நாம் சென்றுதான் அறிமுகம் செய்ய வேண்டியதில்லை!!

சேக்காளி said...

//தெரு தெருவாக மக்களிடம் பேசியவர்கள்//
வணக்கம் திரு அனானிமஸ் அண்ணன் அல்லது அண்ணி,
அவர்கள் மட்டும் பேசி பலன் கிடைக்கவில்லை. நாமும் அவர்களைப் பற்றி பேச வேண்டும்.
ஒரே ஒரு கேள்வி மேலே குறிப்பிட்டுள்ள நபர்களை பற்றி உங்கள் (அல்லது என்) வீட்டிலுள்ளவர்களுக்கு தெரியுமா?
தெரியாவிட்டால் அதற்கான காரணம் என்ன?
அவர்களுக்கு ஓட்டளிக்க விருப்பமில்லை. சரி.விரும்பி ஒட்டு போட்டோமே அதற்கான காரணம் என்ன? என்று என்றாவது யோசித்திருக்கிறோமா?.நாம் எதிர்பார்த்தது போல் அவர் செயல் படவில்லை என்றால் என்ன செய்வது என யோசித்திருக்கிறோமா?
திருமண வரன் தேடும் போது என்னவெல்லாம் யோசிக்கிறோம்?.அதே போல் நம்மை ஐந்தாண்டு ஆளப்போகிறவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று யோசிக்கிறோமா?.இல்லை. முக்கிய காரணம் அவர்கள் எடுக்கும் தவறான முடிவுகள் நம்மை பாதிக்கும் என்று உறைப்பதே இல்லை.

செந்தில்குமார் said...

முற்றிலும் உன்மையான கட்டுரை இதற்க்கு நல்ல உதாரணம் சொல்லாம் 2016 திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினராக திரு K.R. பெரியகருப்பன் வெற்றி பெற்றார 2016 தேர்தல் முந்திய இரு நாட்களுக்கு முன்பு ஒரு காணொளி வெளியிடப்பட்டும் அதையும் மீறி வெற்றி பெற்றார்

raja said...

"திருமண வரன் தேடும் போது என்னவெல்லாம் யோசிக்கிறோம்?.அதே போல் நம்மை ஐந்தாண்டு ஆளப்போகிறவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று யோசிக்கிறோமா?.இல்லை. முக்கிய காரணம் அவர்கள் எடுக்கும் தவறான முடிவுகள் நம்மை பாதிக்கும் என்று உறைப்பதே இல்லை" -> மிகவும் சரியான கருத்து, சேக்காளி.

நாம் இதை சகித்து கொள்ள மாட்டோம் என்று மக்கள் முடிவு எடுத்து விட்டால் யார் தடுக்க போகிறார்கள்!!

நமக்கு சிறிதளவும் இதை பற்றி அக்கறை இல்லை என்பதுதான் உண்மை. நீங்கள் சொல்வது போல் நம்மை பாதிக்கும் என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நாம் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி விட்டோம்.

சிலர் முதுகு, பல், கால் அல்லது நாள்பட்ட உடல் வலியை பொறுத்து கொண்டு வாழ பழகி விடுவார்கள். சும்மா தற்காலிக வலி நிவாரணி மருந்துகளை போட்டு கொண்டு, நாளடைவில் உடம்பும் மனமும் பழகி விடும்.

அதே போல்தான் இருக்கிறது இந்திய மக்களின் அன்றாட வாழ்வு!!