Nov 27, 2017

தினகரனின் ஸ்கோர்

பாண்டே தினகரனுடன் நடத்திய நேர்காணலை ஊரில் ஒரு டீக்கடையில் பார்த்தேன். பொழுதைப் போக்குவதற்காக தேநீர் அருந்தச் சென்றிருந்த போது தினகரன் பேட்டி ஒளிபரப்பானது. கடையில் ஏழெட்டுப் பேராவது பார்த்திருப்பார்கள். உண்மையிலேயே தினகரன் அட்டகாசமாகக் கையாண்டார். 

நேர்காணல் முடிந்த பிறகு அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் பேசியதை ஒன்றைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் போதும் அதற்கு முன்பாக சசிகலா பொதுச்செயலாளர் ஆவதற்கான முஸ்தீபுகளைத் தொடங்கிய போதும் அந்தக் குடும்பத்தின் மீது இருந்த வெறுப்பு கணிசமாகத் தணிந்திருக்கிறது. கடந்த ஜனவரி பிப்ரவரி மாதங்களில் அதிமுக சசிகலா வசமாகிறது என்ற போது திரும்பிய பக்கமெல்லாம் அவரது பேனர்கள் தென்பட்டன. பதவியில் இருந்தவர்கள் வைத்திருந்தார்கள். தியாகத் தலைவி என்ற அடைமொழியுடன் அந்த பதாகைகள் மீது இரவோடு இரவாக சாணத்தை எறிந்திருந்தார்கள். ப்ளேடு போட்டுக் கிழித்திருந்தார்கள். பதவியில் இருந்தவர்கள் எல்லோரும் சின்னம்மா என்று சொல்லி ஜால்ரா தட்டியபோது மக்கள் எதிர்மனநிலையுடன் இருந்தார்கள். இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் அந்தக் குடும்பத்தை முற்றாக ஒதுக்கி வைத்திருக்கும் போது தினகரன் ஸ்கோர் அடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இந்த ஸ்கோர் மட்டுமே தினகரன் அரசியலில் தமக்கான ஸ்திரத்தன்மையை அடைவதற்கு போதுமானதாகத் தெரியவில்லை. இப்போதைக்கு மக்கள் அவரைத் திரும்பிப் பார்க்கிறார்கள். அவ்வளவுதான். முதல் அடியை வைத்திருக்கிறார். இதை தினகரனுக்கான மக்களின் ஆதரவாகவோ அந்தக் குடும்பத்தின் மீதான வெறுப்பு முற்றிலும் நீங்கிவிட்ட தாகவோவெல்லாம் கணக்கெடுத்துக் கொள்ள முடியாது. 

ஒரு விஷயம் தமிழக அரசியலில் முக்கியமானது. ஒருவர் எவ்வளவுதான் திறமையாளனாகவோ அல்லது நல்லவனாகவோ இருந்தாலும் தேர்தலில் வெல்வது என்பதன் கணக்கே வேறு. ‘அவன் ரோடு போட்டான் சரி; பள்ளிக்கூடம் கட்டினான் சரி- எங்கயோ என்னவோ பண்ணிட்டு போறான்..அதனால எனக்கு என்ன பலன்?’ என்கிற கேள்விதான் நம்மூர் வாக்கு அரசியலின் அடிநாதம். தனிப்பட்ட முறையில் தனக்கான பலன் என்பதைப் பார்த்துவிட்டு வாக்களிக்கும் மக்கள்தான் எண்பது சதவீதத்துக்கும் மேலாக இருக்கிறார்கள். கருணாநிதியும் ஜெயலலிதாவும் இந்தக் கணக்குத் தெரிந்தவர்கள். டிவி, மிக்ஸி, கிரைண்டர் என அள்ளிக் கொடுத்ததன் பின்னணி இதுதான். பசுமை வீடு என்ற திட்டத்தில் சோலார் அமைக்க ஐந்தாயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்திருந்தால் போதும். அந்த மனிதருக்கு கவுன்சிலர் தேர்தலில் கடைசி வரைக்கும் வாக்களிப்பார்கள். ‘தனிப்பட்ட பலன்’ என்பதுதான் கடந்த ஐம்பது வருடங்களாகத் தமிழக அரசியலை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.

நல்லவர்களுக்கே இதுதான் நிலைமை. தினகரன் தன்னைத் திறமையாளனாக மட்டும்தான் காட்டியிருக்கிறார். ‘என்ன இருந்தாலும் மன்னார்குடி குடும்பம்தானே?’ என்கிற பிம்பம் ஒட்டிக் கொண்டேதான் இருக்கும். வெறும் திறமையாளன் என்ற பிம்பத்தை மட்டும் வைத்துக் கொண்டு ‘தனிப்பட்ட பலன்’ அரசியலில் வாக்குகளைப் பெறுவது எவ்வளவு அசாத்தியமானது என்பது அவருக்கும்தான் தெரிந்திருக்கும். 

இந்த அடிப்படையை அசைத்துப் பார்க்காமல் விஜயகாந்த் வந்தாலும் சரி; ராகவா லாரன்ஸ் வந்தாலும் சரி. கமல்ஹாசனை ஊடகங்கள் தூக்கிப் பிடித்தாலும் சரி; ஹிப் ஹாப் ஆதிக்கு ஒத்து ஊதினாலும் சரி. பருப்பு வேகாது. எண்பத்தைந்து சதவீதம் போக மீதமுள்ள பதினைந்து சதவீதம் பேர்களில் ‘மாத்தித்தான் ஓட்டுப் போட்டுப் பார்ப்போமே’ என்று எட்டு முதல் பத்து சதவீதம் பேர் வாக்களிப்பார்கள். மதிமுகவும் தேமுதிகவும் தங்களது முதல் தேர்தலில் வாங்கிய சதவீதக் கணக்கை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. கமலும் ரஜினியும் சேர்ந்தே கட்சி ஆரம்பித்தால் கூட இதுதான் நிலைமையாக இருக்கும். அதைத் தாண்டி துரும்பையும் அசைக்க முடியாது. தினகரன் மட்டும் விதிவிலக்கா என்ன?

எழுபது முதல் எண்பது சதவீத வாக்காளர்களை அதிமுகவும் திமுகவும் வளைத்து வைத்திருக்கின்றன. உதயசூரியனும் இரட்டை இலையும்தான் அவர்களுக்கு.  பாஜக இதைப் புரிந்து வைத்திருக்கிறது. அதிமுக என்கிற கட்சியை நீர்த்துப் போகச் செய்யாமல் காலூன்ற முடியாது என்கிற கணக்கில்தான் ஒவ்வொரு காரியமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை 2019 பொதுத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருமானால் இன்றைக்கு அதிமுக எதிர்கொள்ளும் சவால்களைவிட பன்மடங்கு சவால்களை திமுக எதிர்கொள்ளக் கூடும். திமுகவும் அதிமுகவும் இல்லாத தமிழகத்தில்தான் இன்னொரு சக்திக்கு வாய்ப்பு கிடைக்கும்.

பாஜகவின் இத்தகைய போக்குதான் தினகரனுக்கு சமூக ஊடகங்களிலும் படித்தவர்கள் மத்தியிலும் இன்றைக்குக் கிடைத்திருக்கும் கவனத்துக்கு மற்றுமொரு காரணம் என்றும் புரிந்து கொள்ளலாம். ‘எதிர்த்து நின்று விளையாடக் கூடிய ஆள்’ என்கிற பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ‘மிஸ்டர் கூல்’ என்பதைத் தாண்டி ‘அந்தாளுக்கு செமத் தெனாவெட்டு’ என்று பேச வைத்திருக்கிறார். தமிழக அரசியலில் தமக்கு போட்டியாக இருக்கக் கூடிய அன்புமணி ராமதாஸ், ஸ்டாலின் ஆகியோரைக் காட்டிலும் தன்னைச் சாதுரியமானவராகக் காட்டிக் கொள்ள தமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அவர் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார். 

பாண்டேவுடனான நேர்காணலை ‘லைவ்ல வைங்க’ என்று சொன்னதில் ஆரம்பித்து அவர் பதில் சொல்வதில் இருந்த இறுமாப்பு வரையிலும் இது தெரிந்தது. அர்னாப் கோஸ்வாமி மீது எப்படி எரிச்சல் இருக்கிறதோ அதற்குக் கொஞ்சமும் சளைக்காத எரிச்சல் நிறையப் பேருக்கு பாண்டே மீது இருக்கிறது. அவர் குத்தும் அறையும் வாங்கும் போதெல்லாம் குதூகலிக்கிறார்கள். அதைத் தினகரன் சரியாகச் செய்து முடித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களிலும் வாட்ஸப்பிலும் கொண்டாடப்படுவதும் தூற்றப்படுவதும் ஒருவிதமான மாயை. இங்கே கொண்டாடப்படுகிறவர்கள் களத்தில் இறங்கினால் டெபாஸிட் கூட வாங்க முடியாது. அதே போலத்தான் தூற்றப்படுவதும்.  செல்லூர் ராஜூவை இவ்வளவு கலாய்க்கிறார்கள். அவரால் வெல்ல முடியாது என்று நினைக்கிறீர்களா? நாளைக்கே தேர்தல் நடந்தாலும் எப்படி மக்களை வளைக்க வேண்டும் என்பது செங்கோட்டையனுக்கும் ஜெயக்குமாருக்கும் செல்லூர் ராஜூவுக்கும் தெரியும். ‘உதயச்சந்திரனை டம்மி ஆக்கிட்டீங்களே’ என்பது சமூக ஊடகங்களில் எடுபடும். ஊருக்குள் அதைப்பற்றி எந்தச் சலனமும் இருக்காது. இதைப் புரிந்து வைத்தவர்கள்தான் சரியான அரசியல்வாதிகள். அவர்கள் தோற்கவே மாட்டார்கள் என்று சொல்லவில்லை. திமுகவைத் தோற்கடிக்க அதிமுகவோ அல்லது அதிமுகவைத் தோற்கடிக்க திமுகவோ தேவை. 

மூன்றாவது ஒரு ஆள் இவர்களைத் தோற்கடிப்பது என்பது சாதாரணக் காரியமில்லை. ஒருவேளை ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் அதிமுகவை விடவும் கூடுதலாக வாக்குகள் பெற்றால் கட்சியை அவரால் சுவீகரிக்க முடியும். தினகரன் கைக்கு கட்சி செல்வது நல்லதுக்கில்லை என்பது மேலிடத்து ஆட்களுக்குத் தெரியும். திமுக வெல்வது என்பது தற்போதைக்கு அவர்களுக்குப் பிரச்சினையாகவே இருக்காது. இரட்டை இலையைவிட தினகரன் அதிக வாக்குகளை வாங்கிவிடக் கூடாது என்பதுதான் முக்கியமான நோக்கமாக இருக்கும். அவருக்கு எதிராக அத்தனை காய்களும் நகர்த்தப்படும். காவல்துறையும் உளவுத்துறையும் அவருக்கு எதிராகக் களமிறங்கும். ஜெயலலிதாவின் மரணம் பற்றிய பேச்சுக்கள் கிளறப்படும். தினகரனால் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முடியாது. பணமில்லாமல் நம்மூரில் வாக்குகளை வாங்குவது நடக்கக் கூடிய காரியமா என்று தெரியவில்லை. பிற இடைத் தேர்தல்களைப் போல ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இருக்காது.

ஊடகங்கள் வேறு; களம் வேறு- என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கலாம்.

16 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

மிகப்பெரும் அரசியல் விமர்சராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமென்பது இப்போது எழுதுபவர்களுக்கு காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அந்த விமர்சனத்தில் தன்னை அறிவு ஜீவியாக நிலைநிறுத்தும் பிம்பத்தை கட்டமைப்பது ஒரு மாயை நோய். .............

ADMIN said...

//பணமில்லாமல் நம்மூரில் வாக்குகளை வாங்குவது நடக்கக் கூடிய காரியமா என்று தெரியவில்லை// ஹிம்... அதே ...அதே...!

சேக்காளி said...

//ஜெயலலிதாவின் மரணம் பற்றிய பேச்சுக்கள் கிளறப்படும்.//
அதே நேரம் இப்போது நடந்த சோதனைகளை பற்றி மாற்றுக் கோணத்தில் யோசித்தால்?
வருமான வரி சோதனையினால் கண்டெடுக்க முடியாத ஆதாரங்கள் தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் பலத்தை குறைக்க வெளியிடப் படலாம்.

சேக்காளி said...

// கமல்ஹாசனை //
கட்சி ஆரம்பித்த மற்ற நடிகர்களோடு ஒப்பிடும் போது கமலின் அரசியல் பாதை புதிதாக தானே இருக்கிறது.

சேக்காளி said...

//எனக்கு என்ன பலன்//
2006ல் அதிமுக வெற்றி பெற்றதும், இப்போது மத்தியில் ஆளும் பிஜேபி வெற்றி பெற்றதும் இதனால் தானா?

சேக்காளி said...

// கொஞ்சமும் சளைக்காத எரிச்சல் நிறையப் பேருக்கு பாண்டே மீது இருக்கிறது.//
அந்த நேர்காணலில் இதன் பாதிப்பு கூட இருக்கலாம்

சேக்காளி said...

//நல்லவர்களுக்கே இதுதான் நிலைமை//
நல்லவர்கள் ஆண்டால் அரசியல் இத்தனை சுவராசியமாக இருக்குமா?

Vaa.Manikandan said...

அனானிமஸ்ண்ணா, நாமொரு ஆல் இன் ஆல் அழகுராஜாங்கண்ணா...அப்படி இப்படி எழுதி நாளைபின்ன ஒரு நோபல் பரிசு வாங்கிடோணும்ன்னு நெனப்புல திரிஞ்சுட்டு இருக்குறேன்..நீங்க என்னடான்னு பொசுக்குன்னு சொல்லிட்டீங்க!

Vinoth Subramanian said...

புதிதாய் ஒரு புரிதல்.

Anonymous said...

அண்ணனுக்கு பொட்டி வந்துருச்சு போல!!!!

Anonymous said...

அண்ணனுக்கு ஜட்டிக்கே வழி இல்லை இது'ல பொட்டியா???
போங்க அனொனிமாஸ்... வேற எங்கையாவது போய் விளையாடுங்கள்!!

Hari Krishnan said...

அன்புள்ள அநந்யமோஸ் அவர்களுக்கு,
திரு. மணிகண்டன் அவர்களுடைய எழுத்தை வாசிப்பவர்களுக்கு அவரை பற்றி நன்றாக தெரியும். அவருடைய கருத்தில் முரண்பட்டால் அதை பதியலாமே ? அதை விட்டு விட்டு, அவதூறு கிளப்பவுதால் என்ன நன்மை? அதிலும் 'அனொனிமாஸ்' என்ற முகமூடிக்குள் ஒளிந்து கொண்டு?

Packirisamy N said...

//அண்ணனுக்கு பொட்டி வந்துருச்சு போல!!!!//

யாருன்னே சொல்ல வெட்கப்படுறியே. ரொம்ப பாவப்பட்ட ஜென்மம் போல.

Jaypon , Canada said...

பொட்டி கொண்டாந்தவரு பின்னாலேயே நீங்க வந்தத நான் பாத்துட்டேனே..அனானிமஸ்காரு

சேக்காளி said...

//// கொஞ்சமும் சளைக்காத எரிச்சல் நிறையப் பேருக்கு பாண்டே மீது இருக்கிறது.//
ஒரு வேள மொத கமெண்ட அனானிமசு பேருல பாண்டே எழுதிருப்பாரோ?

raja said...

நானும் அந்த நேர்காணலை கண்டேன், வடிவேலு ஒரு படத்தில் 'என்ன கைய பிடிச்சு இழுத்தியா' என்று எதிர் தரப்பை பேச விடாமல் செய்வார். அது ஒரு நகைச்சுவை காட்சி. எனக்கு இரண்டிற்கும் வித்தியாசம் தெரியவில்லை.

இப்போது இந்த பேட்டியை வைத்து தினகரனை திறமையை மெச்சுபவர்கள், உண்மையில் பாண்டேவை மடக்கியதற்கு மட்டுமே.