Sep 28, 2017

ஏன் யாவரும்?

சில பணிகளைச் சிலருடன்தான் தொடர்ந்து செய்ய முடியும். நாம் ஒவ்வொருவரும் காட்டாற்று வெள்ளம்தான். அவரவர் போக்கில் போய்க் கொண்டிருக்கிறோம். சில மனிதர்கள் இலைகளாகவும் தழைகளாகவும் மலர்களாகவும் நம்முள் விழுகிறார்கள். நம் போக்கு பிடித்தவர்களும் ஒத்துக் கொண்டவர்களும் நம்மோடு தொடர்ந்து பயணிக்கிறார்கள். பிடிக்காதவர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். சிலர் அமைதியாக ஒதுங்குகிறார்கள். சிலர் சத்தமிடுகிறார்கள். அடுத்தவர்கள் சத்தமிடுகிறார்கள் என்று திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தால் நம் திசை மாறிப் போய்விடும். போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான். 

‘எப்பவுமே ஏன் யாவரும் பதிப்பகத்திலேயே புத்தகத்தைக் கொடுக்கிறீர்கள்?’ என்ற கேள்வியை யாராவது எப்பொழுதாவது கேட்டுவிடுவார்கள். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. ‘ஒன்பதாயிரத்து எந்நூறு ரூபாய் ராயல்ட்டி பணம் நாங்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது. எப்பொழுது வாங்கிக் கொள்கிறீர்கள்?’ என்று மூன்றாவது முறையாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். இது வெறுமனே பணம் சார்ந்த விஷயம் மட்டுமில்லை. அவர்களின் பொருளாதார நிலைமை நன்றாகவே தெரியும். சமீபத்தில்தான் போர்ஹேயின் புத்தகத்தை (பிரம்மராஜன் மொழிபெயர்ப்பு) வெளியிட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாயை அதற்காகச் செலவிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு புத்தகத்திலும் வருகிற வருமானத்தை எடுத்து கொஞ்சம் கைக்காசை போட்டு அடுத்த புத்தகத்தைத் தயார் செய்கிறவர்கள் அவர்கள். போர்ஹேயின் புத்தகத்தை வெளியிடுவதற்காகக் கொஞ்சம் கடனும் வெளியிடங்களில் வாங்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது. எழுத்துக்கும் புத்தகத்துக்குமாக உழைக்கின்ற இவர்களிடம் எப்படி பணம் கேட்க மனம் வரும்? ‘வைங்க...வாங்கிக்கிறேன்’ என்றுதான் சொல்லியிருந்தேன். 

‘புத்தகம் எவ்வளவு வித்துச்சு’ என்ற ஒரேயொரு கேள்வியைக் கேட்டால் கூட வாய்ப்பு கிடைக்கிற இடங்களிலெல்லாம் தம்மிடம் புத்தகம் போட்டவனை கீழே தள்ளி கலாய்த்துக் கொண்டிருக்கிற பதிப்பாளர்கள் உலாவருகிற ஊர் இது. ஒதுங்கியிருந்தாலும் விடமாட்டார்கள். பொதுவாகவே எனக்கு ஒரு முகராசியுண்டு. ‘திமிர்பிடித்தவன்’என்று எதிரில் இருப்பவர் நினைத்துக் கொள்வார். ‘நல்லாத்தானே பேசினேன்’ என்றுதான் நினைத்துக் கொண்டிருப்பேன். சமீபத்தில் கூட இரண்டு பேராசிரியர்களைச் சந்தித்துப் பேச வேண்டியிருந்தது- அவர்களில் ஒருவர் நன்கு அறிமுகமானவர். இன்னொருவர் புதியவர். புதியவர் பழையவரிடம் ‘அவர் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை’ என்றாராம். ‘he is not happy' என்றார் பழையவர். இப்படி எல்லாவற்றையும் தாண்டித்தான் நட்புகள் உருவாகி வலுப் பெறுகின்றன. அதனால்தான் நட்புகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. கரிகாலனிடமும் கண்ணதாசனிடமுமான நட்பு அப்படி உருவானதுதான்.

‘பணம் உங்களுக்குன்னா மெதுவா தரலாம்..அதை வாங்கி நல்ல காரியம்தானே செய்யப் போறீங்க?’ என்று கேட்டு ராயல்ட்டி தொகையைத் தந்துவிடுவதில் உறுதியாக இருக்கிறார்கள். ஒன்பதாயிரத்து எந்நூறு ரூபாய் ராயல்ட்டி தொகை. சில நாட்களுக்கு முன்பாக ஒரு அறிவிப்பைச் செய்திருந்தோம். ஆயிரம் ரூபாய்க்கு ரோபோஜாலம் புத்தகத்தை வாங்கினால் பத்துப் பிரதிகளுக்கு ஐநூறு ரூபாய் புத்தகத்தின் அடக்கவிலை. மீதமிருக்கும் ஐநூறு ரூபாயை தக்கர் பாபா வித்யாலயாவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பு அது. தக்கர் பாபா வித்யாலயா தலித் குழந்தைகளுக்கான விடுதி. ஜி.எஸ்.லட்சுமண அய்யர் என்கிற சுதந்திர போராட்ட தியாகியால் உருவாக்கப்பட்டது. அவர்களிடம் பேசிய போது ஐஸ்க்ரீம் கடைகளில் இருக்கும் உறைபெட்டி (Freezer box) ஒன்றுதான் அவர்களின் தேவை. காய்கறிகள், மீதமாகும் உணவுப் பொருட்களை வைத்துக் கொள்வதற்குப் பயன்படும் என்றார்கள். அக்கம்பக்கத்து விவசாயிகள் தானமாக வழங்கும் காய்கறிகள் சில சமயங்களில் அழுகிப் போவதுண்டு எனவும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவை யாராவது வழங்கினால் அதைச் சரியாகப் பயன்படுத்த முடியவில்லை என்றார்கள்.

ரோபோஜாலம் புத்தகத்தை பாண்டியராஜ், மாதேஸ்வரி, ஹரி ஆகியோர் தலா பத்துப் பிரதிகள் வாங்கினார்கள். அகிலா முப்பது பிரதிகள் வாங்கினார். முத்து கெளசிக் நூறு பிரதிகள் வாங்கினார். இப்படி ஒரு தொகை கிடைத்தது. எல்லாமே எழுத்து வழியாக வந்த பணம். சமீபத்தில் தாயுமானவன் வந்திருந்தான். பள்ளி நண்பன். இலண்டனில் இருக்கிறான். தக்கர் பாபா விடுதிக்கு உதவுகிற விவரத்தைச் சொன்னேன். அவன் ஒரு தொகையைத் தருவதாகச் சொன்னான். எல்லாவற்றையும் சேர்த்து முப்பத்து மூன்றாயிரம் ரூபாய்க்கு 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட வோல்டாஸ் ஃப்ரீஸர் பெட்டிக்கு ஏற்பாடு செய்தாகிவிட்டது. இன்னும் இரண்டொரு தினங்களில் விடுதியை அடைந்துவிடும். காந்தி ஜெயந்தியன்று காந்தியவாதி உருவாக்கிய விடுதிக்கு எங்களால் முடிந்த சிறு உதவி.

லட்சுமண அய்யர் பற்றிச் சொல்ல வேண்டும். அவரது தந்தையார் டி.எஸ் பெரும் பணக்காரர். பல நூறு ஏக்கர் சொத்துக்களுக்கான அதிபதி. அந்தக் காலத்தில் டி.எஸ் வங்கி என்று தனியாகவே ஒரு வங்கியை நடத்திக் கொண்டிருந்தவர். லட்சுமண அய்யர் அத்தனை சொத்தையும் இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தாரை வார்த்தார். எங்கள் அப்பா எஸ்.எஸ்.எல்.சி முடித்த வயது- எங்கேயோ நடந்து கொண்டிருந்த போது அய்யர் அவர்கள் பார்த்து ‘ஏன் செருப்பில்லாம நடக்குற?’ என்று கேட்டிருக்கிறார். அப்பா சிரித்திருக்கிறார். ‘நீ எந்த ஊரு?’ என்றாராம். கரட்டடிபாளையம் என்றதற்கு ‘அங்க ஒரு ஏழு செண்ட் இருக்குது..எழுதிக்கிறியா?’ என்று கேட்டிருக்கிறார். யோசித்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. எந்த யோசனையுமில்லாமல் இடங்களையும் சொத்துக்களையும் அள்ளி வழங்கிச் சென்ற வள்ளல். ஒரு முறை நகராட்சி சேர்மேனாக இருந்தார். இன்னொரு முறை பாராளுமன்ற தேர்தலில் ஜனதா தள வேட்பாளராக நின்றார். தோற்கடித்தார்கள். இன்றைக்கு அவரது மகன் அவர் கட்டிய பள்ளியில் தற்காலிக ஆசிரியராக இருக்கிறார்.

மனிதர்கள் எப்படியெல்லாமோ வாழ்ந்திருக்கிறார்கள். 

அய்யரின் பணியை ஒப்பிடும் போது இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்றே தெரியும். இருப்பினும் இச்சிறு பணியைச் சாத்தியப்படுத்திய யாவரும் பதிப்பகத்துக்கும் துணையாக இருந்த நண்பர்களுக்கும் நன்றி.

6 எதிர் சப்தங்கள்:

Unknown said...

உன் முடிவை வரவேற்கிறேன் மணி. எனினும் உன்னுடைய புத்தகங்களை 'நிசப்தம் அறக்கட்டளை' வெளியிட விற்கும் உரிமையை மற்றவர்களுக்குக் கொடு. அது யாவரும் இருக்கலாம்.

Anonymous said...

Many that for the info abt Lakshmana Iyer. Best wishes for your services.


For more info abt Lakshmana Iyer:

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/article8266914.ece

சேக்காளி said...

//எல்லாவற்றையும் சேர்த்து முப்பத்து மூன்றாயிரம் ரூபாய்க்கு 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட வோல்டாஸ் ஃப்ரீஸர் பெட்டிக்கு ஏற்பாடு செய்தாகிவிட்டது. இன்னும் இரண்டொரு தினங்களில் விடுதியை அடைந்துவிடும். //
நல்லது . வாழ்த்துக்கள்.

Vaa.Manikandan said...

அறக்கட்டளைக்கு வரக் கூடிய நிதி என்பது பிறருக்கு உதவுவதற்காக. அதுவும் கல்வி, மருத்துவம் மற்றும் சமூகம் சார்ந்த செயல்பாடுகளுக்கானது. அதை எனக்காகப் பயன்படுத்திக் கொள்வதும் ஒருவகையிலான முறைகேடுதான். ஒருபோதும் செய்யமாட்டேன் கிருஷ்ண பிரபு.

Selvaraj said...

கடன் வாங்கிய பணமாக இருந்தாலும் திரும்ப கேட்டால் கொடுக்கலாம் என்ற மனநிலை இருக்கும் இந்த காலத்தில் பணத்தை எப்போது வாங்குகிறீர்கள் என்று கேட்கும் ‘யாவரும்’ பதிப்பகத்தார் பாராட்டுக்குரியவர்கள். 'இன்றைக்கு அவரது மகன் அவர் கட்டிய பள்ளியில் தற்காலிக ஆசிரியராக இருக்கிறார்'. லட்சுமண அய்யர் தன் மகனுக்கும் கொஞ்சம் தேவையான அளவு சொத்துக்களை வைத்துவிட்டு மற்றவற்றை நாட்டு மக்களுக்கு தரை வார்த்திருக்கலாம். தலித் குழந்தைகளுக்கான விடுதியை உருவாக்கியவர் ஒரு ஐயர் என்பது ஆச்சரியப்படுத்துகிறது

amuthan said...

Tamil Documentary about Gobichettipalayam Lakshamana Iyer
https://www.youtube.com/watch?v=zkKljuB4fwg